Budha Pakoda

நார்த் ஈஸ்ட்-14 மோரே மணிப்பூருக்குள் ஒரு தமிழ்நாடு

மோரே ஒரு வித்தியாசமான ஒரு நகரம். இரு நாட்டு கலாச்சாரம் சங்கமிக்கும் நகரம்.

அங்கு ஒரு பர்மியர் தமிழ் பேசியதும் நாங்கள் இருவரும் பேய் அறைந்தது போல் நின்றோம். மணிப்பூரில் அதுவும் ஒரு மங்கோலிய மனிதரிடம் தமிழ் இப்படி சரளமாக வருகிறதே..!

ஆச்சரியத்தோடு சாந்தியை தேடிப்போனோம்.

சாந்தி என்றதும் தமிழ் பெண் என்று நினைத்தோம். ஆனால் வந்து நின்றது பர்மியப் பெண்.

“இங்க.. சாந்தி..?!”,

“நான்தான் சாந்தி உங்களுக்கு என்ன வேணும்?” அவரும் வேலூர் பக்கத்து தமிழில் பேசினார்.

பிரமிப்பு விலகாமல் “தோசை..” என்றோம். வீட்டின் ஒரு அறையை ஹோட்டல் போல் செட் செய்திருந்தார்கள்.

Shanthi - Babu in Moreh
சாந்தி – பாபு

“வாங்கண்ணா.. வாங்கப்பா.. உட்காருங்க கொண்டு வருகிறேன்.” என்று சுவையான தோசை கொண்டு வந்தார். சாந்திக்கு எப்படி தமிழ் தெரியும் என்று கேட்டதும் தனது கணவர் பாபு தமிழர் என்றும் அவரிடம் இருந்து தமிழ் கற்றுக்கொண்டேன் என்றும் சொன்னார்.

அதன்பின்தான் மோரே என்ற அந்த இடத்தின் வரலாறை தெரிந்து கொண்டோம். அதுவொரு பிரமிப்பான வரலாறுதான்.

மோரே

மணிப்பூர் மாநிலம் சாண்டல் மாவட்டத்தில் இருப்பதுதான் இந்த மோரே. கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இருக்கும் இரண்டுகெட்டான் ஊர். ஆனால் தரவுகள் இதை மலைக்கிராமம் என்கின்றன.

இங்கு குக்கீஸ் என்ற பூர்விகக்குடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்களின் எண்ணிக்கை குறைவு. இப்போது தமிழர்கள், நேபாளிகள், பஞ்சாபிகள் இங்கு அதிகம் வாழ்கிறார்கள்.

மோரேவின் மொத்த மக்கள்தொகை 30 ஆயிரம், இதில் தமிழர்கள் எண்ணிக்கை 17 ஆயிரம். ஆக பாதிக்கு மேல் தமிழர்கள்தான் இங்கு வாழ்கிறார்கள்.

தமிழர்கள் இங்கு வந்து சேர்ந்தது ஒரு தனிக்கதை.

இந்திய தேசியப்படை

மோரே தமிழர்களில் பாதிப்பேர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவர்களின் வாரிசுகள். இவர்களின் ரத்தத்தில் இன்னமும் அந்த தேசிய உணர்வு இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பர்மா, இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்தது. இந்தியர்கள் வியாபாரத்துக்காக பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை சென்று வந்தார்கள்.

அப்படி அவர்கள் போகும் போது அவர்களுக்கு இளைப்பாற ஒரு முக்கிய இடமாகவும், இந்தியா மற்றும் பர்மாவுக்குமான நுழைவிடமாகவும் மோரே இருந்திருக்கிறது. அப்போது இங்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைவு. அவர்கள் இங்கு வரும் இந்தியர்களுக்காக வாடகை வீடுகள், உணவகங்கள் நடத்தி வருவாய் ஈட்டினர்.

தமிழர்களின் எண்ணிக்கை இங்கு மளமளவென்று கூடியதற்கு 1962-ல் பர்மாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சியே காரணம்.

நாடு கடத்தியது

ராணுவம் இந்தியர்களை எல்லாம் அகதிகளாக நாடு கடத்தியது. இந்தியர்கள் பலரும் தாங்கள் சம்பாதித்த அனைத்தையும் விட்டுவிட்டு கட்டிய துணியோடு நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

பர்மாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த தமிழர்கள் பலரும் மோரேயில் தங்கிவிட்டார்கள். கப்பல் மூலம் சென்னை வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்தவர்களுக்கு இங்குள்ள வாழ்க்கை முறை ஒத்துப்போகவில்லை.

பர்மாவில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கும் இங்கு தமிழர்கள் வாழும் முறைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இந்த வாழ்வியலோடு அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை.

மீண்டும் பர்மிய சூழலுக்கு ஏற்ற இடத்தை தேடினார்கள். அவர்களுக்கு வசமாக சிக்கியதுதான் மோரே.

பழைய கனவு

மோரேவில் இவர்கள் குடியேறியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பர்மாவின் எல்லை அருகே இருந்தால், என்றாவது ஒருநாள் விதி தளர்த்தப்படும் தாங்கள் வாழ்ந்த இடத்துக்கு மீண்டும் போகலாம் என்ற கனவோடு மோரேவில் காத்திருந்தார்கள்.

வருடங்கள் உருண்டோடின. விதிகள் தளர்த்தப்படவே இல்லை. பர்மிய தமிழர்களும் இந்த வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டார்கள்.

இப்போது மீண்டும் பர்மா அழைத்தால் கூட அங்கு போகமாட்டார்கள். அந்தளவிற்கு பழைய கனவுகளையெல்லாம் மறந்து வருடங்கள் பல உருண்டோடிவிட்டன.

தமிழர்கள் இங்கு வந்து சேர்ந்த காலக்கட்டத்தில் மோரே நகருக்கு அருகே நாம்ப்லாங் என்ற சந்தையில் பண்டமாற்று முறையில் வியாபாரம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அங்குதான் முதலில் வேலையாட்களாக தமிழர்கள் சேர்ந்தார்கள்.

தமிழ்ச்சங்கம்

பின் அந்த தொழிலின் நெளிவு சுழிவுகளை தெரிந்துக்கொண்டனர். பர்மாவுக்கு ஆடையில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை அனைத்துமே இந்தியாவில் இருந்துதான் போனது. அதனைப் பயன்படுத்தி தமிழர்கள் வெகு வேகமாக முன்னேறினார்கள்.

தமிழர்களின் எண்ணிக்கை பெருக பெருக தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அங்கிருக்கும் தமிழர்கள் மோரே தமிழ்ச்சங்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதன் சார்பில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.

வழிப்பாட்டுக்காக அங்காளபரமேஸ்வரி கோயில் ஒன்றும் கட்டினார்கள். இதுதான் மணிப்பூரில் உள்ள இரண்டாவது பெரிய வழிப்பாட்டு தலமாகும். இப்படியாக மணிப்பூரில் தமிழர்கள் கிட்டத்தட்ட ஒரு சின்ன தமிழகத்தையே உருவாக்கிவிட்டார்கள்.

இந்தோ-மியான்மர் ஃபிரண்ட்ஷிப் கேட்
‘இந்தோ-மியான்மர் ஃபிரண்ட்ஷிப் கேட்’

வர்த்தக மையம்

சில ஆண்டுகளுக்கு முன்பு மோரே – மியான்மர் எல்லையில் தடையற்ற வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இரு நாட்டினரும் இணைந்து இங்கு வர்த்தகம் செய்து கொள்ளலாம். இதேபோல் மியானமர் நாட்டிலுள்ள தமு நகருக்கும் சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காலை டிபனை சுவையுடன் பரிமாறிய சாந்திக்கும் அவரது கணவர் பாபுவுக்கும் நன்றி சொல்லிவிட்டு பர்மா நோக்கி கிளம்பினோம்.

இரண்டு தேசங்களை இணைக்கும் சாலைபோல் அது இல்லை. மிக குறுகிய நகர்புறத்து நெருக்கடி நிறைந்த வணிக சாலை போல இருந்தது. நமது ஊர்களில் நினைவு வளைவுகள் இருப்பதுபோல் இங்கு இருந்தது.

அதில் ‘இந்தோ-மியான்மர் ஃபிரண்ட்ஷிப் கேட்’ என்றிருந்தது. இந்த ஆர்ச்தான் இந்தியாவின் எல்லை. இதனைக் கடந்து 100 அடி போனால் இந்தியா சார்பாக ஒரு சோதனைச் சாவடி உள்ளது.

இங்குதான் நமது பைகளை பரிசோதித்து பிரச்சனையை எதுவும் இல்லையென்றால் மியான்மர் பகுதிக்கு அனுப்புகிறார்கள்.

மியான்மர் எல்லைக்குள்

அங்கிருந்து ஒரு 100 அடி கடந்தால் மியான்மரின் சோதனைச் சாலை இருக்கிறது. அங்கும் சோதனை முடிந்தால் நம்மை மியான்மருக்கு அனுப்புகிறார்கள்.

நாங்களும் சோதனைக்காக இந்திய எல்லையில் வரிசையில் நின்றோம். என்னை சோதித்தவர் ஒரு தமிழர்.

பையில் கேமரா இருப்பதைக்கண்ட அவர், “கேமராவை சில நேரங்களில் பர்மாவில் அனுமதிக்க மாட்டார்கள். அப்படி எதுவும் சொன்னால் நீங்கள் மோரே சேகர் வீட்டுக்கு வந்திருப்பதாக சொல்லுங்கள். கேமராவை எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள்.” என்று மிக அவசியமான ஒரு தகவலைச் சொன்னார்.

இந்திய எல்லையைக் கடந்து மியான்மர் எல்லைக்குள் நுழைகிறோம். அங்கும் நமது பைகளை சோதனை செய்கிறார்கள். அதில் கேமரா இருப்பதைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் அனுமதிக்கிறார்கள்.

தமு

மியான்மருக்குள் நுழைவதற்கு முன் நாம் நமது ஒரிஜினல் அடையாள அட்டையைக் கொடுத்து, அதனுடன் ரூ.20 கொடுத்தால் ஒரு ரசீது தருகிறார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மாலை 5 மணிக்குள், (மியான்மர் நேரம்) நமது இந்திய நேரப்படி மாலை 4 மணிக்குள் திரும்பி வந்து விடவேண்டும். ரசீதை ஒப்படைத்து நமது ஒரிஜினல் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் வரக் காரணம் 

இந்த நேரத்திற்குள் நாம் மியான்மர் போய்விட்டு திரும்பி வரலாம். நம்மால் போகக்கூடிய இடம் தமு என்ற சிறிய நகரத்திற்கு போய்விட்டு வரலாம். பாஸ்போர்ட் விசா இல்லாமல் மியான்மர் தேசத்தில் நுழைகிறோம்.

-இன்னும் பயணிப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *