சுவாமி விவேகாநந்தரை சேதுபதி மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்…! அதன் நினைவாக உருவாக்கப்பட்ட மண்டபம்….!
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள, ராமநாதபுர சேதுபதி மன்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தான், அங்கு செல்வதை விட, இந்து சமயத்தைப் பற்றி, சகலமும் அறிந்த மகான் ஒருவர் சென்றால் நன்றாக இருக்கும், என்றெண்ணிய மன்னர், தன் சார்பாக, விவேகாநந்தர் என்ற இளம் துறவியை சிகாகோவிற்கு அனுப்பி வைத்தார்.
விவேகாநந்தர்
சிகாகோ மாநாட்டில், விவேகாநந்தர் ஆற்றிய உரை தான், அந்த மாநாட்டில் உயர்வானதாக பேசப்பட்டது. அது உலகப் புகழ் பெற்றது. விவேகாநந்தரைப் பற்றி, உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள அந்த மாநாடு உதவியது.
பின், சில காலம், அமெரிக்காவில் தங்கி இருந்த விவேகாநந்தர், கப்பல் மூலமாக தாயகம் திரும்பினார்.
தன்னை, சிகாகோவிற்கு அனுப்பிய சேதுபதி மன்னரை சந்திக்க அவர், கப்பலில், ராமேஸ்வரத்திற்கு வந்தார். அயல் நாட்டில், நமது இந்தியாவின் பெருமையையும், பண்பாடு, கலாச்சார மேன்மையை எடுத்துரைத்த, விவேகாநந்தர், திரும்ப தாயகத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டிய தருணம் வந்தது.
சேதுபதி மன்னர்
ராமேஸ்வரத்தில் கப்பல் வந்து நின்றவுடன், மேளதாளங்கள், பரிவாரங்களுடன் தயாராக இருந்தார் சேதுபதி மன்னர். விவேகாநந்தர், கப்பலை விட்டு, இறங்கி, தாயகத்து மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாக, தன் தலையில், அவரது பாதத்தை வைக்க வேண்டும், என்று, மன்னர், மண்டியிட்டு, குந்துகாலுடன், விவேகாநந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மன்னரின், மகத்தான அன்பை மெச்சிய விவேகாநந்தர், மன்னரின் வேண்டுகோளை நிராகரித்தார். அவரை, ஆரத் தழுவி அணைத்துக் கொண்டார்.
இந்து மதம் போற்றும், வீரத் துறவி விவேகாநந்தருக்காக, ராமநாதபுர மன்னர், குந்துகால் இட்டு வரவேற்ற இடம் சரித்திரப் புகழைப் பெற்றது. அதன் பின்னர் அந்த இடம் குந்துகால் என்றே அழைக்கப்பட்டது. விவேகாநந்தர் வந்து இறங்கிய போது கடற்கரை ஓரமாக நிறுவப்பட்ட பாலம் இப்போதும், காணக் கிடைக்கிறது.
இந்த இடத்தில் இருந்து ராமேஸ்வரத்தைச் சுற்றி உள்ள தீவுகளைச் சென்று பார்ப்பதற்காக, சுற்றுலாத் துறை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ராமகிருஷ்ண மடம்
அந்த இடத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் மண்டபம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக, இந்த அழகிய மண்டபம் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்தில் இருக்கிறது.
ராமகிருஷ்ண மடங்களின் கட்டிட அமைப்பு, இந்த மண்டபத்திலும், அப்படியே பிரதிபலிக்கிறது. அந்த மண்டபத்தில், விவேகாநந்தரின் சிலையும், அவரை வணங்கி நின்ற கோலத்தில் உள்ள சேதுபதி மன்னரின் சிலையும், தத்ரூபமாக நிறுவப்பட்டுள்ளது.
ராமகிருஷ்னரின் சீடர் விவேகாநந்தர் என்பதால், ராமகிருஷ்ணர் மற்றும் சாரதாதேவி அம்மையாரின் புகைப்படங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், விவேகாநந்தர் குந்துகாலில் வந்து நின்ற, அந்த வரலாற்று சம்பவத்தை, ஓவியமாகவும் வரைந்து கண்காட்சிக்காக வைத்திருக்கிறார்கள்.
தியானம்
இங்கு வருபவர்கள் இந்த மண்டபத்தில், அந்த அமைதியான கடற்கரை ஓர சூழலில், கண்களை மூடி தியானம் செய்கிறார்கள், இங்கு வரும் மக்கள். அப்போது, விவேகாநந்தர் குந்துகாலுக்கு வந்த சரித்திர நிகழ்வு அப்படியே, தோன்றுவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த மண்டபத்தின் முன்பாக, அழகிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. சுறா மீன் ஒன்றின் வாயினுள் சென்று பார்த்து வரும் அளவிற்கு, அற்புதமாக, சுறாமீன் சுதைச் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சுறாமீனின் வாய் வழியாக உள்ளே சென்று, வால் பகுதியில் வெளியே வரும் பாதை அமைப்புடன், வித்தியாசமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்தக் குந்துகாலை அடைவதற்கு, பாம்பன் பாலத்தைக் கடந்து, ராமேஸ்வரம் செல்லும் சாலையில், தெற்கு நோக்கி பாதை பிரிகிறது. அந்த இடத்தில், குந்துகால் மண்டபத்திற்குச் செல்லும் வழியைக் குறிப்பிடும், போர்டும் வைக்கப் பட்டுள்ளது.
குந்துகால்
தெற்கே பிரியும் அந்தச் சாலையில், 3 கி.மீ. தூரம் பயணித்தால், கடைசியாக குந்துகால் மண்டபத்தை அடைந்து விடலாம். பேருந்து போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாததால், வாகனத்தில் சென்று பார்த்து விட்டு வருவது நல்லது.
ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த குந்துகால் மண்டபத்தையும், தவறாது கண்டு செல்கிறார்கள்.
பல வெளி நாட்டவர்கள், இந்தக் குந்துகால் மண்டபத்தில், வந்து, விவேகாநந்தரின் சிலையைத் தொட்டு வணங்கிச் செல்கின்றனர்.
அது, மகத்தான ஒரு இந்தியத் துறவியின் வாயிலாக, நம் நாட்டிற்கு கிடைத்த, மிகப் பெரிய அங்கீகாரம்!