Sri Ragavendra

மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு

மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு

மந்திராலயம் மகான் ஸ்ரீ ராகவேந்திரரர் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடைசி அத்தியாயம் இது. தொடர்ந்து வாசியுங்கள்..!

சென்ற பதிவின் தொடர்ச்சி..!

பல வருடங்கள் ஓடின. சிறுவன் இளைஞானான்.

ஒருநாள் வழக்கம் போல் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். நல்ல வெயில் நேரம்.

பீஜப்பூர் சுல்தான்

அப்போது அந்த வழியாக பீஜப்பூர் சுல்தானின் சிற்றரசன் சித்திக் மசூத்கான் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அப்போது மற்றொரு குதிரையில் ஒரு போர் வீரன் வேகமாக வந்து சுல்தானிடம் ஒரு ஓலையை கொடுத்துவிட்டு சென்றான்.

அதை படிக்க ஆளைத் தேடினான். அரசனின் கண்ணில் வெங்கண்ணா பட்டான்.

உடனே அவனிடம் சென்று இந்த ஓலையைப் படித்து சொல் என்று அதிகாரத்துடன் கூறினான். வெங்கண்ணாவிற்கு கையும் ஒடவில்லை காலும் ஓடவில்லை.

தனக்கோ படிக்க தெரியாது. தன்னிடம் வந்து கேட்கிறாரே. இப்படி இக்கட்டில் மாட்டிக்கொண்டோமே. இதிலிருந்து தப்புவது எப்படி? என்று கையைப் பிசைந்து நின்று கொண்டிருந்தான் வெங்கண்ணா.

என்னை காப்பாற்றுங்கள்..!

அப்போது குரு ராகவேந்திரரின் முகம் அவன் நினைவுக்கு வந்தது. ஆபத்து காலத்தில் தன்னை நினைத்துக்கொள்ள சொன்னாரே என்று எண்ணியவன்.

‘சாமி, இந்த ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்..!’ என்று மனமுருக வேண்டினான்.

Sri Ragavendra

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

குரு ராகவேந்திரர் அருளால் வெங்கண்ணாவிற்கு எழுத்துக்கள் எல்லாம் ஸ்படிகமாக படிக்க முடிந்தது. அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் நவாப் வெற்றி பெற்ற செய்தி அதில் இருந்தது.

இந்த வெற்றி செய்தியை சொன்னதில் மனம் மகிழ்ந்த சுல்தான், அந்தப் பகுதியின் திவானாக வெங்கண்ணாவை நியமித்து கவுரவித்தான்.

எழுதப் படிக்க தெரியாது

அப்போது வெங்கண்ணா தனக்கு எழுதப் படிக்க தெரியாது என்றும், ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையினால்தான் தன்னால் படிக்க முடிந்தது என்றும் சுல்தானிடம் உண்மையை கூறினான். இதை நம்ப மறுத்த சுல்தான் ராகவேந்திரரை சோதித்துப் பார்க்க நினைத்தான்.

அதோனி ஊரில் இருக்கும் வெங்கண்ணாவின் வீட்டில் மூலராமருக்கு பூஜை செய்துகொண்டிருந்த ராகவேந்திரரை சந்தித்த சுல்தான், அவரிடம் மாமிசம் நிறைந்த ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்ப்பித்தான்.

ராமருக்கு பூஜை செய்து முடித்தபின் அந்த தட்டின் மீது தண்ணீர் தெளித்து சுல்தானிடம் திருப்பிக் கொடுத்தார் ராகவேந்திரர். மூடிய துணியை விளக்கிய நவாப்பிற்கு ஒரே அதிர்ச்சி.

மகிமை உணர்ந்தேன்

அந்த தட்டில் மாமிசத்திற்கு பதில் பழங்களும் மலர்களும் இருந்தன. ராகவேந்திரரின் மகிமையை உணர்ந்த சுல்தான் அவரை பணிந்து நின்றான்.

‘தங்கள் மகிமை உணர்ந்தேன். தாங்கள் தங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள். தருகிறேன்.’ என்றார்.

அப்போது ராகவேந்திரர் மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார்.

அதற்கு சுல்தான், ‘பாறைகள் நிறைந்த வறண்ட பூமி. இது உங்களுக்கு வேண்டாம். வேறு நல்ல வளமான பூமியை உங்களுக்கு தருகிறேன்.’ என்றார்.

அதனை மறுத்த ராகவேந்திரர், ஆன்மிக சக்தி நிறைந்த இந்தப் பகுதியே தனக்கு வேண்டுமென கேட்க, அதையே தானமாக வழங்கினான் சுல்தான். இப்படித்தான் இந்தப் பகுதி ராகவேந்திரருக்கு வந்து சேர்ந்தது.

ஆன்மிக ஒளி

இன்று அந்த இடம்தான் ஆன்மிக ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குரு ராகவேந்திரரின் அருளை பெற்றுச் செல்கிறார்கள்.

மந்திராலயத்தை பகலில் பார்ப்பது ஓர் அழகு என்றால், இரவில் தரிசிப்பது மற்றோர் அழகு. மின் விளக்க வெளிச்சத்தில் இரவில் மந்திராலயம் ஜொலிக்கிறது.

இரவில் இங்கு தினமும் தேரோட்டம் நடைபெறுகிறது. நான்குவிதமான தேர்கள். பிருந்தாவனத்தை சுற்றி வருகின்றன. இதனை காண்பதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மந்திராலயம் ஓர் அற்புதமான ஆன்மிக அனுபவத்தையும் பரவசத்தையும் தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேவேளையில் வர்ண பேதங்கள் அதிகமாக பார்க்கப்படுகிறது என்பதும் மறைக்க முடியாத உண்மை.

Leave a Reply

Your email address will not be published.