700 ஆண்டுகள் பிருந்தாவனத்துக்குள்ளே வாழ்வேன்-ராகவேந்திரர். சென்ற பதிவின் தொடர்ச்சி.. இது…
அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட 53 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுவொரு சிறிய நகரத்துக்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது.
நகரத்தின் மைய சந்திப்பில் நான்கு பக்கங்களிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் தரும் வகையில் நான்கு ராகவேந்திரா சுவாமிகள் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் காட்சி நம்மை பரவசப்படுத்துகிறது.
அதற்கடுத்து பெரிய நுழைவுவாயில் ஒன்று இருக்கிறது. இந்த நுழைவுவாயில் அமைந்திருக்கும் சாலைதான் கோயில் செல்வதற்கான சாலை என்பதற்கான அடையாளம்.
இந்த சாலையில் நடந்தால் சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமான கடைகள் இருக்கின்றன. இதுதான் இந்த ஊரின் முக்கியமான கடைவீதி.
கிருஷ்ணரின் லீலைகள்
சிறிது தூரம் நடந்தால்… இடது பக்கம் மீண்டும் ஒரு நுழைவு வாயில் தென்படுகிறது. அதன் அருகே உள்ள சுவர்களில் கிருஷ்ணரின் லீலைகள் படம் வரையப்பட்டுள்ளன. படங்கள் அமர்க்களமாக உள்ளன.
படங்களை ரசித்தபின் நுழைவாயில் வழியே சென்றால் நேராக கோவிலுக்கு செல்லலாம்.
சற்று நீண்ட பாதைதான்.
அதனாலென்ன எப்படிப்பட்ட வெயிலாக இருந்தாலும் வெயில் படாமல் நிழலில் செல்வதற்காக இரு பக்கமும் நிழலுக்கான வசதிகள் அமைத்திருக்கிறார்கள். அதனால், வெயில் கடுமையாக இருந்தாலும் நிழலில் செல்லலாம்.
பாதையின் நடுவே பசுமாடுகள் படுத்துக் கிடக்கின்றன. பக்தர்கள் பலரும் அதை வணங்கி செல்கிறார்கள்.
கோமாதா
பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்கென்றே கோவிலுக்கு முன் ஒரு கோமாதா இருக்கிறார். இவரை வணங்கி வந்தால் சகல பாக்கியமும் நமக்கு கிட்டும் என்பது நம்பிக்கை.
அதனால் அனைவரும் கோமாதாவிற்கு கீழே குனிந்து வணங்கி வெளியே வருகிறார்கள். இதுவொரு வித்தியாசமான அனுபவம்.
கைகளை தரையில் ஊன்றாமல் பசுவின் வயிற்றில் உங்கள் முதுகு படாமல் நுழைந்து வந்தால் உங்களின் உடலில் இன்னும் தெம்பு இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
இதனைக் கடந்து வந்தால் வலது பக்கம் காளிங்கன் பாம்பின் மீது கிருஷ்ணர் நடனமாடும் சிலை அம்சமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் பயபக்தியோடு வழிபடுகிறார்கள்.
துங்கபத்ரா நதி
அங்கிருந்து வலது பக்கம் செல்லும் பாதை நேராக துங்கபத்ரா நதிக்கு செல்கிறது. செல்லும் பாதையின் இருபக்கமும் கடைகள் இருக்கின்றன.
ஆற்றின் கரையில் நீண்ட படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இது ஆற்றில் அதிக நீர் வந்தாலும் கரையில் நின்று குளிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் சென்ற போது ஆறு வறண்டிருந்தது. பிரமாண்டமான நதி ஒரு ஓடை போல் ஓடிக்கொண்டிருந்தது. பாறைகளும் மணற்பரப்பும்தான் பிரதானமாக தெரிந்தன.
அதிலும் மக்கள் குளித்துக்கொண்டிருந்தனர். இங்கு துங்கபத்ரா அவ்வளவு தூய்மையாக இல்லை என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டும்.
குளித்து முடித்ததும் நாம் அடுத்து செல்ல வேண்டிய இடம் கோவில்தான். கோவிலை நோக்கி நடந்தோம்.
வேட்டி சேலை தாவணி
கோவிலுக்கு ஆண்கள் மேலாடையின்றி வேட்டி உடை அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, தாவணி போன்ற பாரம்பரிய உடையில் வந்தால் மட்டுமே மகானை தரிசிக்க முடியும். மற்ற நாகரிக உடைகளுக்கு இங்கே அனுமதியில்லை.
மந்த்ராலயம் நகரத்தின் குன்றா புகழுக்கு குரு ராகவேந்திரா சுவாமியால் கட்டப்பட்ட பிருந்தாவனம் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.
அதாவது தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ராகவேந்திர சுவாமிகள், அந்த சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு தான் 700 ஆண்டுகள் அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி 350 ஆண்டுகள் கழித்துவிட்ட நிலையில், மேலும் 350 ஆண்டுகள் ராகவேந்திரர் அதில் வாழ்வார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர். இதன் காரணமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மந்த்ராலயத்தை புனிதத் தன்மை வாய்ந்த நகரமாக கருதுகின்றனர்.
மாஞ்சாலியம்மன்
இங்கு நாம் குரு ராகவேந்திரா சுவாமிகளை தரிசிப்பதற்கு முன் இந்த ஊரின் கிராம தேவதையான மாஞ்சாலியம்மனை வணங்கியாக வேண்டும்.
தேவதையின் அனுமதியோடுதான் ராகவேந்திரரை தரிசிக்க முடியும். மாஞ்சாலியம்மன் வாங்கிக்கொண்ட வரம் அப்படி.
ராகவேந்திரர் இங்கு பிருந்தாவனம் நிறுவ முற்படும்போது கிராம தேவதையான மாஞ்சாலியம்மன் அவரிடம் சென்று தாங்கள் வந்த பிறகு மக்கள் என்னை மறந்து விடுவார்களே என்று கேட்டார்.

அதற்கு ராகவேந்திரர், ‘என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் உன்னை தரிசனம் செய்த பிறகுதான் என்னை தரிசனம் செய்வார்கள்..!’ என்று வரம் தந்தார்.
அதனால் நாம் மாஞ்சாலியம்மனை மனமுருக வேண்டிக்கொண்டு, ராகவேந்திரரை தரிசிக்க அனுமதி பெற வேண்டும்.
நாங்கள் சென்றது காலை நேரம் என்பதால் அம்மனை தரிசிக்க கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
அம்மனின் தரிசனம் அருமையாக கிடைத்தது. நம்மூரில் மாரியம்மன் ஆலயத்தில் இருப்பது போல் மூன்று அடுக்கில் அம்மன் அருள் பாலிக்கின்றாள்.
அப்பணாச்சாரியார்
அதற்கடுத்து நாம் நுழைவது குரு ராகவேந்திரா ஆலயத்துக்குள். 2009-ம் ஆண்டு துங்கபத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆலயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது நுழைவாயில் வேறுவிதமாக இருந்தது.
அதன்பின் புனரமைக்கப்பட்டு ஆலயம் பிரமாண்டமாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டன. நுழைவயிலும் முக மண்டபமும் பெரிதாக அமைக்கப்பட்டன. அந்த நவீன தோற்றம்தான் நாம் இப்போது பார்ப்பது.
நுழைவாயிலில் அப்பணாச்சாரியார் அருளிய
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச|
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||
என்ற ஸ்லோகம் பெரிதாக பொறிக்கப்பட்டு நம்மை வரவேற்கின்றது.
இது கொரோனா காலம் என்பதால் கோவிலுக்குள் நுழைய முகக்கவசம் கட்டாயம் தேவை. உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
-தொடரும்

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.