Snake Budhha

நார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்

இம்பாலில் இருக்கும் இமா மார்கெட்டோடு இதை ஒப்பிட முடியாது. அதைவிட இது சிறியதுதான். இங்கும் பெரும்பாலான கடைகளில் பெண்களே இருக்கிறார்கள். இங்கும் சில பெண்கள் தமிழ் பேசுகிறார்கள். பேசாத பலரும் கூட புரிந்து கொள்கிறார்கள்.

இங்கு விற்கப்படும் பொருட்களில் 90 சதவீதம் சீனா, தைவான் மற்றும் தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டவைகள். பர்மாவுக்கும் தமிழர்களுக்குமான பந்தம் எப்படிப்பட்டது என்பதை இங்கு விற்கப்படும் சில உணவுகள் காட்டிக்கொடுக்கின்றன.

பணியாரம், உண்ணியப்பம் இந்த இரண்டுமே தமிழர்களிடமிருந்து பர்மியர்கள் எடுத்துக்கொண்ட உணவு. 5 பணியாரம் 150 கயட் நம்ம பணத்திற்கு 10 ரூபாய்.

தனகா

இந்த நாட்டில் கண்ணில் படும் பெண்கள் அனைவரும் கன்னத்தில் ‘தனகா’ எனும் மரத்திலிருந்து கிடைக்கும் சந்தானம் போன்ற பூச்சை பூசியிருக்கிறார்கள். காரணம் கேட்டால் இந்த சந்தானம் முகத்தை இளமையோடு வைத்திருக்குமாம். வெப்பம் தாக்காதாம். குளிர்ச்சியாக இருக்குமாம்.

முகசுருக்கமும் வயோதிகமும் காணாமல் போய்விடுமாம். அதனால் எல்லா பெண்களும் இங்கு மஞ்சள் முகத்துடனே இருக்கிறார்கள். பர்மியர்கள் பெரும்பாலும் மிகுந்த நட்புடனே பழகுகிறார்கள். இந்த நட்பு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.

தமு நகரில் குறிப்பிடத்தக்க ஓர் இடம் என்றால் அது புத்த பக்கோடாதான். நாங்கள் இருக்கும் சந்தைப் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அது இருந்தது.

சிறிய குன்று

அதுவொரு சிறிய குன்றுப் பகுதி. இங்கிருந்து அங்கு போக வேண்டுமென்றால் ஆட்டோரிக்ஷா அல்லது வாடகை காரில்தான் செல்ல வேண்டும்.

நாங்கள் ஒரு ஆட்டோவை பிடித்தோம். வாடகை கட்டணமாக 3,000 கயட் (மியான்மர் நாணயம்) கேட்டார்கள். நமது இந்திய மதிப்பில் 200. அங்கே போய் நம்மை இறக்கிவிட்டு, காத்திருந்து மீண்டும் அழைத்துவர இந்தக் கட்டணம்.

பரவாயில்லை, ஆனாலும், ஆட்டோக்காரர்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போல. 2 கி.மீ. தொலைவுக்கு 200 ரூபாய் என்பது அதிகமாக தெரிந்தது.

ஆட்டோ ஒரு சிறிய குன்றின் மீது ஏறியது. அது கிட்டத்தட்ட 250 அடி உயரம் இருக்கும். அங்கு தான் புத்த பகோடா இருந்தது. 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை புதுப்பித்திருக்கிறார்கள்.

நம்மூரில் ஆஞ்சநேயர்தான் தனது வாலை சிம்மாசனம் போல சுருட்டி, அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பார். இங்கு அதேபோல் புத்தர் சிம்மாசனம் போல் சுருண்டு உயர்ந்து நிற்கும் பாம்பின் மீது அமர்ந்திருக்கிறார்.

இங்கு ஒரு சிறிய காட்சி கோபுரம் இருக்கிறது, அதில் ஏறினால் தமு நகரின் அழகை பறவைப் பார்வையில் பார்த்து மகிழலாம். அதன்பின் அங்கிருக்கும் புத்த ஆலயத்தை பார்வையிடலாம்.

நார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்

இளவரசி தொய்பி

இந்த ஆலயம் மணிப்பூர் மாநிலத்தில் மொய்ரங் என்ற இடத்தை ஆட்சி செய்த இளவரசி தொய்பி நினைவாக பொதுமக்கள் கட்டியதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் பர்மாவுக்குமான நெருக்கம் பல நூற்றாண்டுகளாகவே இருக்கிறது என்பதை இந்த ஆலயம் காட்டுகிறது.

ஆலயத்துக்குள் புத்தர் தவக்கோலத்தில் இருப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரே அமைதியாக இருந்து தியானம் செய்ய தியானக்கூடமும் இருக்கிறது.

மிக அமைதியான இடத்தில் இயற்கை அழகு சூழ இந்த இடம் அமைந்திருக்கிறது. மனதிற்கு அமைதியும் நிம்மதியும் தரும் இடமாக இது இருக்கிறது. அங்கிருந்து பலரும் ஊரில் இருந்த தங்கள் குடும்பத்தினருக்கு மொபைலில் பேசினார்கள்.

பி.எஸ்.என்.எல். சிக்னல் மோரெயிலிருந்து அங்கு கிடைத்தது. சிலருக்கு உள்ளூர் கட்டணமும் சிலருக்கு சர்வதேச கட்டணமும் வந்தது. இரண்டு நிமிடம் பேசி 150 ரூபாய் இழந்தவர்கள் பலரும் எங்கள் குழுவில் இருந்தார்கள்.

இந்திய டவர் கிடைத்தவர்களுக்கு உள்ளூர் கட்டணமும் பர்மா டவர் கிடைத்தவர்கள் வெளிநாட்டு கட்டணமும் கொடுத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது.

பர்மியப் பெண்

எங்களுக்கு கோயிலைப் பற்றிய விளக்கங்களை அங்கிருக்கும் பெண் ஒருவர் பர்மிய மொழியில் கூறினார். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் இனிமையாகவும் உற்சாகத்துடனும் மிக மிக வேகமாக அவர் சொன்ன விளக்கங்கள் எங்கள் அனைவரையும் கவர்ந்தது.

அங்கிருந்து மீண்டும் தமு மார்கெட்டிற்கு வந்தோம்.

மதிய உணவை பர்மாவில் முடிப்போம் என்றால் உணவுவகைகள் ஒன்றும் நமக்கு தோதாக இல்லை. அதனால் வெறும் டீ மட்டும் அருந்தினோம். ஒரு டீ 100 கயட் என்ற விலையில் இருந்தது. நம்மூர் கணக்கில் 6.60 ரூபாய்.

எல்லாமே நம்மூர் விலையை ஒட்டியே இருந்தது. டீயின் சுவை அருமையாக இருந்தது. பர்மா வந்ததன் நினைவாக நமது 20 ரூபாயை கொடுத்து பர்மா நாணயமான 300 கயட்டை வாங்கிக்கொண்டேன்.

மீண்டும் ஷேர் ஆட்டோவில் ஏறி இந்தியாவுக்குள் வந்தோம். வெறும் நான்கு மணி நேரம்தான் பர்மாவுக்குள் இருந்தோம். ஆனால், அந்த நான்கு மணி நேரம் வாழ்நாளில் மறக்க முடியாத பல இனிமையை தந்தது என்றால் மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published.