உலகில் தினமும் 3,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் சராசரியாக இறக்கிறார்கள். இதே போல தினமும் 6 லட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
உலகின் மொத்த ஜனத்தொகை 700 கோடி. இதில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்கிறார்கள் என்று சுகாதார அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் 1 லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
வளமான நாடுகள் வரிசையில் இருக்கும் அமெரிக்காவில்கூட ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது 1 லட்சம் பேரில் 12 பேர் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்கிறார்கள்.
இளம் வயதினர்
உலகில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தற்கொலைக்கான – ‘ரிஸ்க்’ அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் இந்த துயர ‘முடிவை எடுக்கிறார்கள். அதிலும் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர்தான் இந்த முடிவை அதிகமாக எடுக்கிறார்கள் என்கிறது சமீபத்திய தகவல்.
கடன் தொல்லை, விவசாய வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் தற்கொலைக்கு பெயர்போன இந்தியாவில் இப்போது இளம் வயதினரின் தற்கொலை மனிதவள ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணங்கள்
சாதிப்பதில் தோல்வி, எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஆகியவைதான் இளம் வயதினரின் தற்கொலைக்கு முக்கிய காரணங்கள். இவை மட்டுமல்ல, செல்போன் போன்ற புதிய தொழில்நுட்பங்கள், சமூக வலைத்தளங்கள், கேடுகெட்ட இணையதளங்கள், ரம்மி போன்றவையும் இவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இளம் வயது பெண்களில் 60 சதவீதம் பேரும் ஆண்களில் 40 சதவீதம் பேரும் இந்த உச்சகட்ட முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
விரக்தி, வெறுப்பு, அவமானம், தாங்க முடியாத வலி அல்லது கொடுமை, எதிர்பார்ப்பில் ஏமாற்றம், சாதிப்பதில் தோல்வி, கடன் சுமை, தீராத பகை, தீர்க்க முடியாத பிரச்சினை, உயரதிகாரிகளின் தொல்லை, நண்பர்களின் கெடுதலான அழுத்தம், பெற்றோர்களின் நெருக்குதல் அல்லது கவனக்குறைவு, மனச்சிதைவு, மன அழுத்தம், முன் கோபம் ஆகியவையே தற்கொலைகளுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்கொலைகளை தடுப்பது எப்படி?
எந்த ஒரு பிரச்சினைக்கும் கவுன்சிலிங்தான் தீர்வு என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே . மேற்கண்ட காரணங்களால் ஒருவர் தவிக்கிறார் என்றால் அவர் நம்பிக்கைக்கு உரியவர்களை நாடி தகுந்த ஆலோசனை பெறலாம். அல்லது அப்படி தவிப்பவரை கண்டறிந்து மற்றவர்கள் அவருக்கு ஆலோசனை கூறலாம்.
எந்த ஒரு விஷயத்தையும் பகுத்தறிந்தால் அதற்கு தீர்வு கிடைத்து விடும்.
ஒரு விஷயத்தில் தோல்வி என்றால் அந்த தோல்வியையே வெற்றிப்படியாக்க விடாமுயற்சி என்ற ஏணியை பயன்படுத்தலாம்.
ஒரேவிஷயத்தில் ஓயாமல் கவனம் செலுத்தாமல் அதிலிருந்து விடுபட்டு, வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
தற்கொலை என்பது ‘ஒரு கோழைத்தனமான முடிவு’ என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். பெற்றோர்களும் இதுகுறித்து தங்களது குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நீங்கள் தனிமையில் இல்லை, நீங்கள் மனம் உடையவில்லை, நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வருங்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அப்போது உங்களுக்கு இந்த எண்ணம் வராது. வருங்காலமே இல்லை என்று எண்ணி சட்டென்று முடிவுக்கு வந்து விடக்கூடாது.
ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு மனநிலை கோளாறும் காரணம் என்பதால் இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் மருத்துவர்களை நாடி தகுந்த நிவாரணத்தை பெறலாம்.