Mandralayam

தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்

ஸ்ரீ ராகவேந்திரர் தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்டவர்.

தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட, அற்புதங்கள் பல செய்த, ஒர் ஆன்மிக மகானைப் பற்றித்தான் இங்கு பார்க்கப்போகிறோம். அந்த மகான் பெயர் ஸ்ரீ ராகவேந்திரர். சமாதி கட்டிக்கொண்ட இடம் மந்த்ராலயம்.

மந்த்ராலயம் பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால், அங்கு போவதற்கான வாய்ப்பு வெகுநாட்களாக கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் எனது நண்பர் ராஜ்குமார் மந்த்ராலயம் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார்.

சொன்னதோடு விட்டுவிடாமல் ஒருநாள் மந்த்ராலயம் செல்வதற்கான ரயில்வே முன்பதிவு டிக்கெட்டோடு வந்து நின்றார்.

மந்த்ராலயம் ரோடு

ராகவேந்திரரின் தீவிர பக்தரான அவர் பலமுறை மந்த்ராலயம் சென்றிருக்கிறார். இந்தமுறை அவருடன் நானும் இணைந்து கொண்டேன். எங்களுடன் நண்பர்கள் சசிகுமார் மற்றும் ராமகிருஷ்ணன் வந்தார்கள்.

நால்வரும் மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு நாகர்கோயில் டூ மும்பை செல்லும் எக்ஸ்பிரஸில் பயணத்தை தொடங்கினோம். 913 கிமீ தூரத்தை 18 மணி 20 நிமிடத்தில் கடந்து மறுநாள் காலை 5.17 -க்கு ‘மந்த்ராலயம் ரோடு’ ரயில் நிலையத்தை அடைந்தோம்.

மந்த்ராலயம் ரோடு என்பது ஒரு சிறிய ரயில் நிலையம். அங்கு ஒரு நிமிடம் தான் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும். நாம் முன்பே லக்கேஜுகளை எடுத்து தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் இறங்கும் முன் ரயில் புறப்பட்டுவிடும்.

நாங்கள் சென்றிருந்தது பிப்ரவரி மாதம் என்பதால் நல்ல குளிர் இருந்தது. அந்த அதிகாலை குளிருக்கு இதமாக சூடாக ஒரு டீயை குடித்துவிட்டு, மந்த்ராலயம் நோக்கி புறப்பட்டோம்.

ரயில் நிலையத்திலிருந்து மந்த்ராலயம் செல்ல பொதுப் பேருந்து, ஷேர் ஆட்டோ, வாடகை கார்கள், தனியார் ஜீப்புகள் நிறைய கிடைக்கின்றன. நமக்கு ஏற்ற வாகனங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

நாங்கள் ஒரு வாடகை காரை அமர்த்திக்கொண்டோம். 16 கிமீ தொலைவை 30 நிமிட நேரத்தில் சென்று சேர்ந்தோம். வாடகையாக 300 ரூபாய் கொடுத்தோம். இதுவே பேருந்து என்றால் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் மட்டுமே.

ஸ்ரீ ராகவேந்திரர்
ஸ்ரீ ராகவேந்திரர்

துங்கபத்ரா

மந்திராலயம் போகும் வழியெல்லாம் வறண்ட நிலப்பரப்பே காணப்பட்டது. பாறைகள் நிறைந்த கட்டாந்தரை. துங்கபத்ரா என்ற வளமான நதி பாய்ந்தபோதும் கூட இந்த இடம் வறட்சியோடுதான் காணப்படுகிறது.

சரி, இப்படியொரு இடம் வேண்டுமென்றுதானே குரு ராகவேந்திரர் கேட்டார். அதுவொரு சுவாரசியமான கதை. அந்தக் கதையைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

அதற்கு முன் மந்த்ராலயம் எங்கிருக்கிறது என்று பார்ப்போம்.

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது மந்த்ராலயம் நகரம். நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துங்கபத்ரா நதிதான் மாநிலங்களின் எல்லைக்கோடாக இருக்கிறது.

மன்ச்சாலே

ஆற்றுக்கு அக்கரையில் கர்நாடகா மாநிலம் உள்ளது. துங்கபத்ரா நதியில் ஐந்து கி.மீ. கிழக்கே சென்றால் தெலுங்கானா மாநிலம் வந்துவிடுகிறது. ஆக, மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் மந்த்ராலயம் இருப்பது ஒரு சிறப்புதான். இதன் பழைய பெயர் ‘மன்ச்சாலே’.

மந்த்ராலயம் ஓர் அழகான ஆன்மிக நகரம். பக்திதான் அங்கு பிரதானம். அதற்கேற்ப அந்த நகரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நிறைய தங்கும் விடுதிகள். சாலையோர உணவகங்கள். பூஜைக்கான பொருட்கள் விற்கும் கடைகள், துணிக்கடைகள் என்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

எங்களுக்கு தேவஸ்தான தங்கும் விடுதியை ராஜ்குமார் ஏற்பாடு செய்து கொடுத்தார். அறைகள் நன்றாக பராமரிக்கப்பட்டிருந்தன. ஒருசில குறைகளை தவிர பெரிதாக சொல்லும் விதமாக எதுவும் இல்லை.

தங்கும் விடுதிகள்

தனியார் விடுதிகளை விட இதன் வாடகை மிக மிகக் குறைவு. தரமும் நன்றாகவே இருந்தது. தேவஸ்தானத்திற்கான தங்கும் விடுதிகளே பிரமாண்ட வடிவமைப்பில் இருக்கின்றன.

இந்தக் கட்டிடங்கள் எல்லாமே தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகள்தான். எத்தனை பிரமாண்டம் பாருங்கள்..! நட்சத்திர விடுதியை நினைவுபடுத்தும் அழகிய வடிவமைப்பு.

கிட்டத்தட்ட 440 அறைகள் தேவஸ்தானம் சார்பிலுள்ளன. ஏசி அறைகள், நான்-ஏசி அறைகள் மற்றும் பட்ஜெட் அறைகள் உள்ளன. ஆன்லைனில் இந்த அறைகளை முன்பதிவு செய்துகொண்டு செல்வது மிகவும் நல்லது. அறைகளை தேடி அலையும் சிரமத்தைக் குறைக்கும்.

நாங்கள் அறையில் குளித்து முடித்து ராகவேந்திர சுவாமிகளை தரிசிக்க தயாரானோம். முதலில் துங்கபத்ரா நதியில் குளிப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தோம். கடுமையான குளிர் எங்கள் திட்டத்தை மாற்றிவிட்டது. அதனால் விடுதி அறையிலேயே குளித்து முடித்தோம்.

அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட 53 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுவொரு சிறிய நகரத்துக்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது.

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *