கிளியோபாட்ரா அழகு: எகிப்து பேரரசி ஆன கிளியோபாட்ரா, ஒரு நாட்டின் அரசியாக மட்டுமின்றி அழகுப் பதுமையாகவும் திகழ்ந்தாள். பருவத்தின் செழிப்பு அவளது மேனியில் ஏகத்துக்கும் கொட்டிக் கிடந்தது.
அதுவரை நைல் நதியை அழகுக்கு அழகாய் போற்றி வந்த எகிப்து கவிஞர்கள், அந்தக் கருத்தை மாற்றி, நைல் நதிக்கு ஒரு படி மேலாக கிளியோபாட்ராவை புகழ்ந்து தள்ளினார்கள்.
தனது அழகை தானே கண்டு வியந்து போனாள் கிளியோபாட்ரா. அந்தப் பேரழகுக்கு இன்னும் மெருகூட்ட தன்னை பலவாறு அலங்கரித்துக் கொண்டாள்.
ஆடை, ஆபரணங்கள் அணிவதில் தனிக்கவனம் செலுத்தினாள். அக்காலத்தில் கிடைத்த இயற்கை அழகுப் பொருட்கள் அவளை விதவிதமாக அலங்கரித்தன.
எகிப்து மக்களின் தேவதை
அவளது பொன் மேனியில் நிரந்தரமாய் தங்கியிருந்த நறுமணப் பொருட்களின் வாசனை, அவள் குளித்து முடித்த பிறகும், உலகின் மிகப்பெரிய வறண்ட பாலைவனமான அந்த சகாராவின் காற்றோடு கலந்து வந்தது.
அணியும் ஆடையையும் வித்தியாசமாக அணிந்தாள் கிளியோபாட்ரா. எகிப்துப் பெண்ணாக தன்னைக் காட்டிக்கொள்வதை விட, எகிப்து மக்களின் தேவதையாகவே காட்டிக்கொண்டாள். தான் கிரேக்கப் பெண் என்றும், தனது உடலில் ஓடுவது கிரேக்க ரத்தம் என்றும் கூறிக்கொண்டாள்.
அவள் அணிந்த ஆடைகளை நவரத்தினங்கள் அலங்கரித்தன. சிறப்பான சிகை அலங்காரம் அவளது அழகு முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது.

அவள் எங்கு புறப்பட்டுச் சென்றாலும், சேவை செய்யும் அழகான இளம்பெண்களும் பின்தொடர்ந்தார்கள். அந்த சேவைப் பெண்களுக்கு மத்தியில் நடந்து வந்த கிளியோபாட்ரா தேவதை போலவே ஒளிர்ந்தாள்.
அவளது பவுர்ணமி முகத்தின் அழகான திமிரும், உதட்டுச்சாயம் இல்லாமலே எப்போதும் சிவந்திருந்த உதடுகளும், வில் போன்ற புருவத்தில் இருந்து புறப்பட்ட பார்வை அம்புகளும் அவளுக்கே உரிய தனி அடையாளங்களாக திகழ்ந்தன.
காதல் பெண்
கிளியோபாட்ராவின் ஒட்டுமொத்த அழகையும் பார்க்கும்போது, கிரேக்க காதல் கடவுளான ‘க்யூபிட்’ போலவே இருந்தாள்.
சிலநேரங்களில் எகிப்தைக் காக்கும் பிரதான கடவுளான ‘இசிஸ்’ மற்றும் டார்சஸ் நகரின் முக்கிய காதல் பெண் தெய்வமான ‘அப்ரோடைட்’ ஆகிய இரு தெய்வங்களின் கலவை போலவும் தெரிந்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல அவளது அழகு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது.
இப்படியெல்லாம் கிளியோபாட்ரா மேனி அழகில் ஜொலிக்க அவள் தினமும் குளித்த விதம்தான் காரணம் என்று கூறுவோரும் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப் பாலில் குளித்தாள் என்பதுதான்-. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.
ஆனாலும், அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், அந்தக் காலத்தில் எகிப்தில் கழுதைகள் பிரபலமாகத் திகழ்ந்தன. அவர்களது மறு ஜென்ம நம்பிக்கைக்கு இந்த கழுதைகளே முக்கிய காரணமாக இருந்தன.
கழுதையின் சிலை
இறந்தவர் உடலைப் பாதுகாத்து வைத்திருந்தால், அந்த உடல் மறு ஜென்மத்தின்போது உதவும் என்றும், ஆவிகள் இருப்பது உண்மை என்றும் அக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதன் காரணமாக, ஒருவர் இறந்துவிட்டால், அவரது கல்லறைக் கிடங்கில் ஒரு கழுதையின் சிலையைச் செய்து வைத்தார்கள்.
மறு ஜென்மத்தில் இந்த கழுதை இறந்தவருக்கு உதவும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
இப்படி, எகிப்தியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த கழுதையின் பால், கிளியோபாட்ராவின் அழகு ரகசியத்திலும் ஒளிந்திருப்பதில் வியப்பில்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது.
தனது அழகுக்காக, இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட குங்குமப்பூவையும் அவள் பயன்படுத்தினாள் என்று கூறுவோரும் உண்டு.
மேனி அழகில் மட்டுமின்றி, பல்வேறு திறமைகளும் கிளியோபாட்ராவிடம் ஒளிர்ந்தன. அவளது பேச்சில் இனிமை மட்டுமின்றி ஒருவிதக் கவர்ச்சியும் சேர்ந்தே வந்தது.
9 மொழிகள்
கற்பனை வளமும் அவளிடம் நிறைகுடமாய் நிறைந்திருந்தது. உணர்ச்சிகரமாக அவள் பேசும்போது, துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டுகள் போல அவளது வார்த்தைகள் வேகமாக – ஆக்ரோஷமாக வந்து விழுந்தன.
தாய்மொழியுடன் மேலும் சில மொழிகளையும் கற்று வைத்திருந்தாள். 9 மொழிகள்வரை பேசத் தெரியும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
எகிப்த்தை ஆண்ட டாலமி வம்ச அரசர்களுக்கு எகிப்திய மொழியே சரியாக தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிளியோபாட்ரா அதைத் தவறாது கற்று வைத்திருந்தாள்.
நம் நாட்டு சித்தர்கள் கற்று வைத்திருந்த உலோகங்களை பொன்னாக மாற்றும் ரசவாதக் கலையும் அவளுக்குத் தெரியும் என்று கூறுவோரும் உண்டு.
இப்படிப் பலவகைத் திறமைகளுடனும், சாதூரியத்துடனும் செயல்பட்ட பேரரசி கிளியோபாட்ராவுக்கு, அவளது அமைச்சர்களாலேயே முதல் ஆபத்து தேடி வந்தது.
–தொடரும்…

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.