Bharathi

பாரதியாரை வென்ற கவிஞர்

 “பாரதியாரை வென்றவர்”

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினான்காம் ஆண்டு ‘இந்தியக் கும்மி’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடந்தது. ‘பாட்டுக்கொரு புலவனான பாரதியார் உள்பட பலர் பங்குகொண்ட அந்தப் போட்டியில் அ.மாதவையா என்பவரும் கலந்து கொண்டார்.

அந்தப் போட்டியில் அ.மாதவையாவுக்குத்தான் முதல்பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற பாடலுக்காக மகாகவி பாரதியாருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

அந்த மாதவையா, திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து இரண்டாம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் பதினாறாம் நாள் பிறந்தவர்.

மாதவையா

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று அதே கல்லூரியில் ஆசிரியராயும் பணியாற்றியவர். பின்பு உப்பு ஆய்வாளராய்ப் பணிபுரிந்தார்.

“மாதவையா களங்கமற்ற அதிகாரி. ஓர் எலுமிச்சம் பழத்தைக்கூட கொடுக்கவோ – வாங்கவோ மாட்டார்” என்ற நேர்மைக்குச் சொந்தக்காரர். –

தமிழின் பற்றுக்கொண்ட மாதவையா, ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்று எட்டாம் ஆண்டு ‘பத்மாவதி சரித்திரம்’ என்ற நாவலை எழுதினார். இரண்டு பாகங்களைக் கொண்டது அந்தப் புதினம்.

மூன்றாம் பாகமும் எழுதினார். ஆனால் அது முற்றுப் பெறவில்லை. இதுதவிர முத்துமீனாட்சி என்ற நாவலும் படைத்து இருக்கிறார். இது “விவேக சிந்தாமணி என்ற பத்திரிகையில் சாவித்திரியின் கதை என்ற தலைப்பில் தொடராய் வெளிவந்தது.

பஞ்சாமிர்தம்

“பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையைத் தொடக்கி நடத்தினார். ஏராளமான கட்டுரைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி இருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகக் கல்விப் பேரவை செனட் உறுப்பின ராயும் இருந்த அ.மாதவையா, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டு நடந்த ஆட்சி மன்றக்கூட்டத்தில் தமிழ் மொழியை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாய்ச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.

பேசி முடிந்ததும் இருக்கையில் உட்கார்ந்தார். அப்போதே அந்த இடத்திலேயே அவருடைய தமிழ் மூச்சும் நின்றது. அவர் இறக்கும்போது வயது ஐம்பத்து மூன்று.

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்”

குறள் (989)

உ.வே.சாமிநாதையர்

உன்பற்றுத் தவிர ஒருபற்று வேண்டேன்”

தமிழ் உலகு உய்யத் தோன்றிய உ.வே.சாமிநாதையர் மாணவப் பருவத்தை எய்தியபோது ஒருநாள் அவருடைய தாத்தா, “நீ ஆங்கிலம் படித்தால் இந்த உலகை வெல்லலாம். சமஸ்கிருதம் படித்தால் அந்த உலகை (ஆன்மிக உலகம்) வெல்லலாம். எதைப் படிக்கப் போகிறாய்? எதைப் படிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு உ.வே.சாமிநாதையர், “நான் ஆங்கிலம் படிக்கப்போவதில்லை சமஸ்கிருதமும் படிக்கப்போவதில்லை, தமிழ்படித்து வெல்வேன்” என்று பதில் சொன்னார். அவர் தாம் பிற்காலத்தில் தமிழ்த்தாத்தா’ ஆனார்.

நாற்பத்து நான்கு வயது வரை வெறும் இலக்கண நூல்களையும், நூல்களையும், உரைகளையும் மட்டும் படித்திருந்தார் உ. வே. சாமிநாதையர். அதன்பிறகு சேலம் நீதிபதி இராமசாமி முதலியார் வழிகாட்டுதலின்பேரில் ஐம்பெருங்காப்பியங்கள், சங்க இலக்கியங்கள் பற்றி அறிந்தார்.

இதைத் தொடர்ந்து உ.வே.சாமிநாதையர் தமிழகத்தில் கரையான்களுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த பழந்தமிழ் ஓலைச் சுவடிகளையும், நூல்களையும், காப்பாற்றி நமக்குத் தந்தார்.

தமிழ் இலக்கியச் சுவடி

கட்டை வண்டி, தொடர்வண்டிகளில் சென்றும், நடையாய் நடந்தும் சமய தமிழ் இலக்கியச் சுவடிகளைத் தேடிக்கொண்டுவந்தார். இவருடைய வாழ்க்கையை நடையாய் நடந்த வாழ்க்கை என்றும் கூறுவர்.

இந்த அரும்பணிக்காக அவர் போகாத ஊரில்லை, தேடாத வீடில்லை, சந்திக்காத ஆளில்லை, சிந்திக்காத நாளில்லை. அவற்றின் பயனாக ஒரே நூலுக்குப் பல ஏடுகள் கிடைத்தன.

புதையலாகக் கிடைத்த அவற்றில் எது ஆசிரியரால் எழுதப்பட்டது, இடைச்செருகல் உள்ள சுவடிகள் எவை? எவை? என்று ஆய்ந்து திருத்தங்கள் செய்த செந்தமிழ் ஆசான் அவர்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, காப்பியங்கள், சங்ககால நூல்கள் எல்லாம் இவரால் பதிப்பிக்கப் பெற்றவை. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலைக்கு சிறந்த குறிப்புரை எழுதிய சிறந்த உரையாசிரியர், இத்தகைய அரும்பெரும் தமிழ்ப்பணிகள் செய்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்

“பொதிகைமலை பிறந்த தமிழ் வாழ்வறியும் 

காலமெலாம் புலவோர் வாயில் 

துதி அறிவாய்! அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே!” 

என்று மகாகவி பாரதியாரால் வாழ்த்துப் பெற்றவர்.

நிறைமொழி மாந்தரான இவர் ஒருநாள் தமது இறுதிக்காலம் இறுதி நேரம் நெருங்கிவிட்டது என்பதை உள்ளுணர்வால் புரிந்து கொண்டார், பின்பு, உதவியாளரிடம் “திருவாசகத்தைக் கொண்டுவா” என்றார்.

*பிணக்கிலாத பெருந்துறை…’ என்று தொடங்கும் திருக்கழுக்குன்றப் பதிகத்தைப் படி என்றார். அந்தப் பதிகத்தை உதவியாளர் உருக்கமாகப் படித்ததும் விழுமிய சிந்தனைகள் நிரம்பிய ‘தமிழ்த்தாத்தா “உன்பற்றுத் தவிர ஒரு பற்று வேண்டேன்” என்றார். 

கரங்கள் குவித்தார். இறைவனின் கணக்கிலாத் திருக்கோலம் கண்டார். அவருடைய ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறப் போய்விட்டது. ஆம். தமிழ்த் தாத்தாவின் உயிர்ப்பறவை பறந்து மறைந்தது.

ஓடி, ஓடி அலைந்த கால்கள் ஓய்ந்தன; சங்கத் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த தங்க மணிக்கரங்கள் சோர்ந்தன. தேடித் தேடி அலைந்த மலர்க் கண்கள் குவிந்தன. மண்ணக வாழ்வை ஒருவி, விண்ணாக வாழ்வை மருவினார்’.

Leave a Reply

Your email address will not be published.