ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா - ஆண்டனி ஆவேசம்

கிளியோபாட்ரா-48 ‘ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா’

‘ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா’ – ஆண்டனி ஆவேசம்! இறுதி அத்தியாயத்தை நோக்கி கிளியோபாட்ரா தொடர்…

ஆண்டனி-கிளியோபாட்ராவின் கூட்டுத் தரைப்படையை எந்த சூழ்நிலையிலும் வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போர்க்களம் இறங்கிய ஆக்டேவியனின் ரோமானியப்படை, எதிரிப்படையை எதிர்கொள்ள ஆவேசமாகப் புறப்பட்டது. 

ஆக்டேவியனின் போர் அணுகுமுறைகள் அவனுக்கு எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. அவன் எதிர்கொண்டது உள்நாட்டுப் படை என்பதால் எகிப்து வீரர்கள் ஆக்ரோஷமாகத் தாக்கினார்கள்.

இரு தரப்பிலும் வீரர்கள் பலர் உயிரிழந்தனர். ஆண்டனிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அன்றைய போர்க்களம் இரு படைகளின் வெற்றியையும் தீர்மானிக்கவில்லை. எனினும், எகிப்து படையின் கையே ஓங்கியிருந்தது.

மாலைநேர சூரியன் துயில் கொள்ளக் கிளம்பியதும் இரு தரப்பு படைகளும் தங்களது முகாம்களுக்குத் திரும்பின.

எகிப்துப் படைக்கு முழுமையான – இறுதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதில் கிளியோபாட்ராவுக்கு மிகப்பெரிய வருத்தம். அதேநேரம், எகிப்துப் படை ரோமானியப் படையை அதிரடியாக எதிர்கொண்டது அவளுக்கு ஆறுதலைத் தந்தது.

ஆண்டனி உற்சாகம்

போரில் காயம்பட்ட ஆண்டனியைப் பார்க்க ஓடோடி வந்தாள். உற்சாகத்துடன் காணப்பட்ட ஆண்டனியைப் பார்த்த அவளுக்குள்ளும் உற்சாகம் பிறந்தது.

“ஆண்டனி எப்படி இருக்கிறீர்கள்? நமது எகிப்து படைக்கு இன்றைய தினம் வெற்றிதானே?”

“நீ என்னருகில் துணையாக இருக்கும்போது இன்று மட்டுமல்ல, என்றுமே எனக்கு வெற்றிதான்.”

“நன்றி ஆண்டனி! உங்களுக்கு காயம் என்றார்களே, இப்போது எப்படி இருக்கிறது? தகுந்த மருத்துவம் பார்த்தீர்களா? சரியாக சாப்பிட்டீர்களா? பணிப்பெண்கள் தங்களை கனிவுடன் கவனித்துக் கொள்கிறார்களா? என்ன வேண்டும் என்றாலும் இப்போதே என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன்” ஆண்டனி மீது பாச மழை பொழிந்து அவனைத் திகைக்க வைத்தாள் கிளியோபாட்ரா.

ஆண்டனியும், கிளியோபாட்ரா தன் மீது கொண்டுள்ள அபரிமிதமான காதலைக் கண்டு வியந்து போனான். அவளுக்குப் பதிலுக்கு உணர்வுப்பூர்வமாக நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் இன்பத் தவிப்புக்கு ஆளானான்.

“அன்பே கிளியோபாட்ரா..! என் மீது நீ செலுத்தும் அன்பைப் பார்த்தால், எனக்கே வியப்பாக இருக்கிறது. அன்பு என்கிற பெயரில் வெறும் பகல் வேஷத்தையே பிறரிடம் அதிகம் பார்த்து பார்த்து பழகிப்போய்விட்ட எனக்கு நீ வினோதமாகத் தெரிகிறாய். உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை…” என்று பாசத்தில் உருகிய ஆண்டனி, கிளியோபாட்ராவைக் கட்டியணைத்தபடி சில கண்ணீர் துளிகளை அவளுக்காக அங்கே தியாகம் செய்தான்.

தங்கக்கவசம் பரிசு

மறுநாள் நடைபெறும் போரில் ரோமானியப் படையை எகிப்தை விட்டே விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆண்டனிக்கு உற்சாகம் ஊட்டவும், அவனுக்குத் தங்கக் கவசம் ஒன்றைப் பரிசாக வழங்கினாள் கிளியோபாட்ரா.

அவளது தனிமையிலான தனிப்பட்ட பரிசளிப்பும், அவள் ஊட்டிய உற்சாக டானிக் வார்த்தைகளும் ஆண்டனிக்குப் புதிய தெம்பைத் தந்தன. மறுநாள் நடைபெறும் போர் இறுதியான போராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மகிழ்ச்சிக்காக மதுவும் அருந்திவிட்டுத் தனக்குரிய ஓய்வறைக்குச் சென்றான். அப்போது நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது.

அதே நேரம், ஆக்டேவியனின் படைமுகாம் எப்போதும் இல்லாத அளவுக்குப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். உலகத்தையே நடுங்க வைக்கும் இளைய சீஸர் ஆக்டேவியனின் தரைப்படைக்கு எகிப்தில் ஏற்பட்ட பின்னடைவு, ஆக்டேவியனை மட்டுமின்றி, அவனது படைவீரர்களையும் யோசிக்க வைத்தது. அதுவே அவர்களுக்குள் கோபமும் வெறியுமாக மாறியது.

ஆனால், ஆண்டனியின் நண்பனாக இருந்து ஆக்டேவியன் பக்கம் தாவிய எனோபார்பஸ் வேறுவிதமாகப் புலம்பிக் கொண்டிருந்தான். நீ எங்கிருந்தாலும் வாழ்க என்று ஆண்டனி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை படித்த பிறகே இப்படியொரு நிலைக்கு ஆளானான். பகலில் சுட்டெரித்துவிட்டு இரவில் கடும் குளிரைப் பொழிந்து கொண்டிருந்த அந்த பாலைவனத்து நிலவிடம் அவன் கடைசியாக மனம் விட்டுப் புலம்பினான்.

“ஏ நிலவே… எனது துயரத்தை மேலும் மேலும் வளர்க்காதே! இந்த இரவின் நச்சுக் குளிரில் எனது உயிர் போகட்டும். நான் செய்த மாபெரும் துரோகம் பெரிய பாறாங்கல்லாக மாறி எனது இரக்கமற்ற இதயத்தை உடைக்கட்டும். சோக வெப்பத்தால் அந்த இதயம் தூள் தூளாகட்டும். இதுவரை எனக்குள் புதைந்து கிடந்த துரோக எண்ணங்கள் காய்ந்து மறையட்டும். 

… ஆண்டனிக்காக அது மேலும் வருந்தட்டும். ஆண்டனியே… நீ என்னை மன்னித்துவிடு. நெருங்கிய நண்பனான உனக்கே நான் துரோகம் செய்துவிட்டேன். அதற்காக நான் இப்போது வருந்துகிறேன். உனக்கு துரோகம் செய்த எனக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். அந்த தண்டனை என்னை தேடி வராவிட்டாலும் கூட, நானே எனக்கு கொடுத்துக் கொள்வேன்…” என்று கூறிக்கொண்டே அந்தப் பாலைவன மண்ணில் பொத்தென்று விழுந்தான் எனோபார்பஸ். 

அடுத்த சில நொடிகளிலேயே, நண்பனுக்கு இக்கட்டான நேரத்தில் செய்த துரோகத்தை நினைத்துத் தவியாய் தவித்த அவனது உயிரும் வேதனையுடன் விடைபெற்றுக் கொண்டது.

பரபரப்புகளுக்கு மத்தியில் விடிந்தது மறுநாள்.

மீண்டும் கடற்போர்

தரைப் போரில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பின்னடைவு மீண்டும் ஏற்படாமல் இருக்க மீண்டும் கடல் வழியாக எகிப்துப் படையை எதிர்கொள்ள திடீர் திட்டம் தீட்டினான் ஆக்டேவியன். கடற்போருக்குத் தேவையான பலம் எகிப்துப் படையிடம் இல்லை என்பதைச் சரியாகக் கணித்து, அதன்படி காயை நகர்த்திய அவனது ராஜதந்திரம் தங்களுக்கு முடிவுரை எழுதி விடும் என்று ஆண்டனியும், கிளியோபாட்ராவும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மீண்டும் கடற்போருக்கு தயாரான ஆக்டேவியன் எகிப்துப் படையின் மீது இரு முனைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டான். ஒருபுறம் பலம் வாய்ந்த கப்பல் படையுடன் எகிப்தை முற்றுகையிடுவது, மறுபுறம் மீண்டும் தரைப்படையை புதிய பலத்துடன் களம் இறக்குவது என்று முடிவெடுத்து, அதன்படி இரு வழிகளில் படைகளைப் பிரித்து அனுப்பினான்.

ஆக்டேவியன் தரை வழியாகவும், கடல் வழியாகவும் எகிப்தின் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்று கணித்த ஆண்டனி, பலம் குறைந்த எகிப்துக் கடற்படைக்கு பலம் சேர்க்கத் தரைப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்களை அங்கு அனுப்பி மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை எடுத்தான்.

கடற்போரில் குதித்த ரோமானியப் பெரும் படையின் சிறிய கப்பல்கள் எகிப்தை நோக்கி வேகமாக முன்னேறின. ஆனால், எகிப்துப் படையில் இருந்த மிகப்பெரிய கப்பல்கள் தள்ளாடியபடியே எதிரிகளை நோக்கி முன்னேறின. 

சுற்றி வளைத்து தாக்குதல்

இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரோமானியப் படை வீரர்கள், எகிப்து படையின் பிரம்மாண்ட கப்பல்களைத் தங்களது சிறிய அதிவேகக் கப்பல்களால் சுற்றி வளைத்து தாக்கினர். நான்கு புறம் ரோமானியப் படைவீரர்கள் தாக்கியதால் நிலைகுலைந்து போனார்கள் எகிப்துப் படைவீரர்கள். எகிப்துக் கடற்படையில் கடைசி நேரத்தில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட தரைப்படை வீரர்களை எளிதில் வெற்றி கொண்டது ரோமானிய கப்பல் படை.

இதற்கிடையில், ஆக்டேவியன் உத்தரவுபடி ரோமானியத் தரைப்படையும் அலெக்ஸாண்டிரியா நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. முந்தைய நாள் போரில் அதிகப்படியான வீரர்களைக் கொண்டு காணப்பட்ட எகிப்துத் தரைப்படை இன்று அதில் பாதி பலத்தை மட்டுமே கொண்டிருந்தது. அதனால், எகிப்துத் தரைப்படையை எளிதில் விரட்டியடித்தனர் ரோமானியப் படை வீரர்கள்.

தங்களது தோல்வி உறுதி என்பதை உணர்ந்த எகிப்துத் தரைப்படையினர் ரோமானியப் படையிடம் திடீரென்று சரணடைந்தனர். எகிப்து கப்பல் படையும் தோல்வியை ஏற்று ஆக்டேவியனிடம் சரணடைந்தது.

ஏமாற்றிவிட்டாள்

இந்த திடீர் மாற்றங்களை எதிர்பார்க்காத ஆண்டனி, கிளியோபாட்ரா தன்னை ஏமாற்றிவிட்டாள் என்றே ஆரம்பத்தில் கருதினான். ஒரேநேரத்தில் எகிப்துத் தரைப்படையும், கடற்படையும் ஆக்டேவியனிடம் சரணடைந்ததால் அப்படி அவசரமாக யோசித்தான். கிளியோபாட்ரா, அவளது அரசைக் காப்பாற்றிக் கொள்ள தன்னை பலிகடா ஆக்கிவிட்டாள் என்றே நினைத்தான். ஏமாற்றிவிட்டாள்..!

நேராக, கிளியோபாட்ரா பலத்த பாதுகாப்புடன் தங்கியிருந்த படை முகாமிற்குச் சென்றான். கையில் வாளுடன் கோபம் கொப்பளிக்க வந்த அவனைப் பார்த்து கிளியோபாட்ராவின் உயிர்த் தோழியர் எல்லாம் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.

தனது தோழியர் மரண பயத்தில் ஓடி வருவதைக் கவனித்த கிளியோபாட்ரா, ஒருவேளை ஆக்டேவியனின் படைதான் வந்துவிட்டதோ என்று பயந்தாள். ஆனால், அதே ஆக்டேவியன் வர வேண்டிய ஆக்ரோஷத்தில் ஆண்டனி வந்து நின்றதால் அவளது முகத்தில் திடீர் கலவரம் வெடித்தது. ஏமாற்றிவிட்டாள் கிளியோபாட்ரா!

“ஆண்டனி உங்களுக்கு என்ன ஆயிற்று? போருக்கு வீரநடை போட்டு புறப்பட்டுச் சென்ற உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி?…”

மேற்கொண்டு அவளைப் பேச அனுமதிக்கவில்லை ஆண்டனி. வலது கையில் வாளை ஓங்கிக்கொண்டு இடது கையால் கிளியோபாட்ராவின் கழுத்தைச் சட்டென்று இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவனது முரட்டு வேகத்தில் ரத்தம் வழியாத குறையாக கழுத்து சிவந்து போனாள் கிளியோபாட்ரா. ஏமாற்றிவிட்டாள்..!

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *