போர் ஏற்பாடுகள் மும்முரம்

கிளியோபாட்ரா-47 போர் ஏற்பாடுகள் மும்முரம்

போர் ஏற்பாடுகள் மும்முரம்

எகிப்துக்குள் புகுந்த ஆக்டேவியனின் ரோமானியப்படை, கிளியோபாட்ரா – ஆண்டனியின் கூட்டுப் படையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது. 

மறுநாள் விடியலுக்காக ஆதவன் துயில்கொள்ள சென்றிருந்த அந்த வேளையில் வழக்கத்தைவிட ஆக்டேவியனிடம் கூடுதலான பரபரப்பு காணப்பட்டது.

“நாளை நடைபெறும் போரே இறுதியான போராக இருக்க வேண்டும். நிச்சயம் அப்படித்தான் இருக்கும். எகிப்துக்குள் புகுந்துவிட்ட நம்மால் எகிப்து கூட்டுப்படையை எளிதில் வெற்றிக் கொண்டுவிடலாம். 

நமது படையில் முதல் வரிசையில் இடம்பெற்றுள்ள அனுபவம் வாய்ந்த வீரர்கள். ஏற்கனவே ஆண்டனி படையில் பணியாற்றியவர்கள் என்பதால், ஆண்டனி வகுக்கும் வியூகத்தை அவர்கள் எளிதில் முறியடித்து விடுவார்கள். அதனால் நமது வெற்றி உறுதியாகிவிட்டது. 

அதனால் வீரர்களே… இன்றைய இந்த அழகான மாலைப்பொழுதில் மகிழ்ச்சியோடு உண்ணுங்கள்…” என்று நீண்டுகொண்டே போன ஆக்டேவியனின் வீர உரை ரோமானியப்படை வீரர்களுக்கு உற்சாக டானிக் ஆக அமைந்தது.

போர் முகாம்

அதேநேரம் – எகிப்து கூட்டுப்படையின் முகாமில் ஆண்டனியின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக இருந்தது. அளவுக்கு மீறி மது அருந்த ஆரம்பித்த அவன், தனது வீரர்களையும் மது அருந்துமாறு கட்டாயப்படுத்தினான்.

“இன்றிரவு நீங்கள் எல்லோரும் எனக்கு சேவை செய்யுங்கள். இது உங்களது கடைசி சேவையாகக் கூட இருக்கலாம். எனது வாழ்க்கை முடியப் போகிறது என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஒருவேளை நீங்கள் நாளை இன்னொருவருக்கு இந்த சேவையைச் செய்ய நேரலாம். மனைவியிடம் நம்பிக்கை கொண்டுள்ள கணவனைப் போல நான் உங்கள் சேவையில் என் மரணம் வரை நம்பிக்கை வைத்துள்ளேன். 

இன்று இரவு எனக்கு இரண்டு மணி நேரம் சேவை செய்யுங்கள். அதற்கு மேல் உங்களிடம் நான் கேட்கவில்லை. உங்கள் சேவைக்கு ஏற்ற பரிசை கடவுள் வழங்குவார்” என்று ஆண்டனியின் பரிதாபப் பேச்சு இருந்தது.

மறுநாளின் அதிகாலைப் பொழுது புலர்ந்தது.

ஆக்டேவியனின் வீரர்கள் போர் புரிந்து வெற்றிப்பெற வேண்டும் என்கிற உற்சாகத்தோடு துயல் எழ… ஆண்டனியின் வீரர்களோ போர்க்களத்தில் என்ன நடக்கப்போகிறதோ… என்கிற பீதியுடன் விழித்தெழுந்தனர்.

வழியனுப்பினாள் கிளியோபாட்ரா

இன்று நடைபெற உள்ள போரில் எப்படியும் வெற்றிப்பெற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ஆண்டனி இருந்ததால் அவனை உற்சாகத்துடன் வழியனுப்ப தயாரானாள் கிளியோபாட்ரா.

“ஆண்டனி நேற்று இரவு நன்றாக தூங்கினீர்களா? உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள களைப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறதே…”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைய போர்க்களத்தில் எதிரிகளை எப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று நம் வீரர்களை அறிவுறுத்தியதால் துயில் கொள்ள சற்று காலதாமதமாகிவிட்டது. அவ்வளவுதான். மற்றபடி இந்த ஆண்டனி எப்போதும் மாவீரன். வெற்றி இவனுக்கு எப்போதும் எட்டும் கனிதான்!”

போர் ஏற்பாடுகள் மும்முரம் ஆண்டனி

“அதில் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது ஆண்டனி. இப்போது நான் உங்களிடம் ஒன்று கேட்பேன்; அதை செய்வீர்களா?”

“நீ சொல்லி நான் எதைத்தான் கேட்கவில்லை? நடந்து முடிந்த கடற்போரில் கூட உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விட்டதா என்று நான் பின்வாங்கியதால்தான் தோல்வியின் விளிம்புக்கு வந்துவிட்டோம். ஆனால், இந்த தரைப் போரில் வெற்றிப்பெறப் போவது பலம் வாய்ந்த நமது கூட்டுப்படைதான்” என்று சிங்க கர்ஜனையை வெளிப்படுத்திய ஆண்டனி…

“ஆமாம்… எதையோ கேட்க வந்தாயே… என்ன வேண்டுமானாலும் கேள், எனது உயிரைக்கூட உனக்கே உனக்காய் பரிசளிக்க நான் எப்போதும் காத்திருக்கிறேன்…” என்று கிளியோபாட்ராவைப் பார்த்துக் கூறினான்.

கனவு பலிக்கும்

“அவசரப்பட்டு பேச்சை விடவேண்டாம், ஆண்டனி. சில நேரங்களில் நாம் யதார்த்தமாக வெளிப்படுத்தும் வாய் வார்த்தைகள் கூட அப்படியே பலித்து விடுவது உண்டு. இப்போது, நமது வெற்றி தொடர்பான கனவுகள் பலிக்க வேண்டுமே தவிர, நமக்கென்று எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது.”

“நீ என்னுடன் துணையிருக்கும்போது வெற்றி பற்றிய கவலை எனக்கு தேவையில்லை. இன்றைய போரில் மீசை கூட முளைக்காத ஆக்டேவியனை எப்படி வெற்றிகொள்ளப் போகிறேன் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்.”

“உங்கள் விருப்பம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை உங்களைவிட எனக்கு அதிகமாகவே இருக்கிறது ஆண்டனி. இப்போது நான் உங்களிடம் கேட்க நினைப்பதை எப்படி கேட்பது என்றே எனக்கு தெரியவில்லை. 

இப்போது கேட்க வேண்டாம் என்று என் மனம் சொன்னாலும், அதே மனத்தின் இன்னொரு பகுதி இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள் என்று எனக்கு முன்னெச்சரிக்கை செய்கிறது. அதனால், அதை கேட்போமோ, வேண்டாமா என்று தவியாய் தவிக்கிறேன்”.

“ஆரம்பத்தில் உற்றத் தோழியாய்… அதன்பின் காதலியாய்… அதற்குப் பிறகு அன்பு மனைவியாய் என் மனதிற்குள் குடியேறிய உனக்குள் தவிப்பா? அதை இப்போதே சொல்லிவிடு. இல்லையென்றால், போர்க்களத்தில் கூட உனது தவிப்பு என்னவோ என்று நானும் தவிக்க நேரிடும். நமது கடற்படைக்கு நேர்ந்த கதி மீண்டும் வேண்டாம்.”

“நீங்கள் சொல்வதும் சரிதான் ஆண்டனி. நான் கேட்பது திருமணம் ஆன எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுகிற சந்தேகம்தான்”.

“என்னது, சந்தேகமா…?”

“தவறாக எண்ண வேண்டாம் ஆண்டனி. எதிரியான ஆக்டேவியனின் படை எகிப்துக்குள் நுழைந்துவிட்டது. ஒருகாலத்தில் இதே ஆக்டேவியன் உங்களுடன் நெருங்கிப் பழகியவன். 

அன்று அவன் சிறுவன். இன்று துடிப்புமிக்க இளைஞன். கடற்போரில் கிடைத்த எதிர்பாராத வெற்றியின் காரணமாக புதிய வலிமையோடு வந்திருக்கிறான். அவனை எதிர்கொள்வதில் தங்களுக்கு அச்சம் இல்லையே… வேண்டுமானால்…”

“நிறுத்து கிளியோபாட்ரா. நான் இப்போது மாவீரனாக இருக்கிறேனா? இல்லை… கோழையாகிவிட்டேனா என்று சந்தேகிக்கிறாயா?”

சில மனஸ்தாபங்கள்

“அய்யோ… நான் அப்படி எண்ணவில்லை ஆண்டனி. இப்போது நீங்கள் வெற்றிபெற வேண்டும். அதுதான் என்னுடைய பேராசை. சீஸருக்குப் பிறகு நான் உங்களுக்காகவே வாழ்ந்து வருகிறேன். இடையில் நமக்குள் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறைந்து இருக்கலாம். 

தம்பதியருக்குள் அதுபோன்று ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். இன்றைய தரைப்போரில் நீங்கள் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அதனால், நானும் உங்களுடன் போர்க்களத்திற்கு வரலாமா என்று கேட்கத்தான் சுற்றி வளைத்துக் கேட்டேன்”.

“கடற்போரில் ஏற்பட்ட விபரீத நிலை மீண்டும் ஏற்பட வேண்டாம் என்றே நினைக்கிறேன். இப்போது நான் ஆக்டேவியனை எதிர்த்து போர் புரிய கிளம்ப காரணம் நமது கூட்டுப்படை வெற்றிபெற வேண்டும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், நீ எந்த சூழ்நிலையிலும் தோற்று அந்த மீசையில்லா ஆக்டேவியன் முன்பு தலைகுனியக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம். அதனால், ஆக்டேவியனுக்கு எதிரான போரில் நீ பங்குகொள்ள வேண்டாம். உனது ராஜதந்திரமான அறிவுரைகளை எனக்குச் சொல். நான் வெற்றிக்கனியுடன் திரும்பி வருகிறேன்.”

“சபாஷ் ஆண்டனி. உங்களை நினைத்தாலே எனக்குப் பெருமையாக இருக்கிறது. மாவீரன் ஆண்டனியின் காதலியாக – மனைவியாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். நாளைய வரலாறு நம்மை போற்றும் என்பது உறுதியாகிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது.”

“உனது ஆசை நிச்சயமாக நிறைவேறும் கிளியோபாட்ரா. இப்போது ஆதவன் சோம்பல் களைந்து வேகமாக எழத் துவங்கிவிட்டான். நமது பெரும் படையை திரட்டிக்கொண்டு போர்க்களத்திற்குச் செல்ல வேண்டும். 

எனக்கு விடை கொடு அன்பே..! இன்று மாலை நான் உன்னைப் பார்க்க வரும்போது, ரோமானிய வரலாறே திசை திரும்பிப் போய் இருக்கும்..!” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசிய ஆண்டனி, கிளியோபாட்ராவை ஆசையாய் கட்டியணைத்தான். அவளும் அவனது நெற்றியில் முத்தமிட்டுப் போர்க்களத்திற்கு வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.

ஆரம்பமே அதிர்ச்சி!

கிளியோபாட்ராவிடம் விடைபெற்று போர்க்கள முகாமுக்குத் திரும்பிய ஆண்டனிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவனது நெருங்கிய நண்பர்களாக உலா வந்த எனோபார்பஸ் உள்ளிட்ட சில முக்கியமான வீரர்கள் எகிப்துப் படையில் இருந்து ஆக்டேவியனின் ரோமானியப் படைக்குத் தாவியிருந்தனர்.

எவ்வளவோ அதிர்ச்சியை தாங்கிப் பழக்கப்பட்ட ஆண்டனியின் இதயம், இப்போதும் எனோபார்பசுக்கு ஆதரமாகவே பேசியது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எனோபார்பசுக்கு உரிய செல்வத்தை முறையாக அனுப்பி வைத்ததோடு, “நீ எங்கிருந்தாலும் வாழ்க. இனியாவது, தலைவனை மாற்றும் பழக்கத்தை கைவிடு” என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டுப் போர்க்களத்திற்கு புறப்பட்டான் ஆண்டனி.

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *