சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம்

ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்

எனது கன்னியாகுமரி மாவட்ட கட்டுரை வெளிவந்த இதழ்களை கவிமணி அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அவர் அவற்றை மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு என்னை ஆசீர்வதித்து என்னிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

“பேரப்பிள்ளை, உனக்கு நன்றாக எழுதும் திறமை உள்ளது. உன்னிடம் எனது ஆவல் ஒன்றை கூறுகிறேன். நீ அதை நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. குமரி மண்ணில் பல ஆலயங்கள் உள்ளன. ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற தலைப்பில் பாஸ்கர தொண்டைமான் அவர்கள் எழுதிய கட்டுரைத் தொடரில், குமரிமாவட்டத்தில் கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய இரண்டு கோயில்கள் மட்டும் இடம் பெற்றதே தவிர பல அருமையான கோவில்களின் வரலாறு அதில் இடம் பெறவில்லை. விடுபட்ட அந்த வரலாற்றை எழுத வேண்டும். இந்த வேண்டுகோளை நீ மனதில் வைத்துக் கொள்” என்று கூறினார். 

அந்த வேண்டுகோளை நான் அவரது அன்புக் கட்டளையாக ஏற்று கொண்டேன். 1949 ஆம் ஆண்டு குஞ்ஞன் நாடார் அவர்கள் நாகர்கோவிலிலிருந்து வெளியிட்டு வந்த ‘தென்குரல்’, 1951 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திலிருந்து டி.வி.ஆர். வெளியிட்டு வந்த ‘தினமலர்’ ஆகிய பத்திரிகைகளில் கதைகளும், கட்டுரைகளும் தொடர்களும் எழுதி வந்தேன். 

எழுத்தாளர்

நாட்கள் உருண்டோடின. கல்லூரிகளில் பட்டப் படிப்பை முடித்ததும் 1956-ல் வருவாய்த் துறையில் சிறப்பு கண்காணிப்பாளராக சில காலம் பணியாற்றினேன். பின்னர் 1957 ஆம் ஆண்டு ‘பாரத ஸ்டேட் வங்கி’ விருது நகர் கிளையில் எழுத்தராக பதவியேற்றேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு 1966 ஆம் ஆண்டு நாகர்கோவில் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் ‘இந்து’ ஆங்கில நாளிதழில் இருந்து ஒரு சிறப்பு நிருபர் பாரத ஸ்டேட் வங்கிக்கு காசோலை மாற்ற வருகை தந்தார். 

அவர் நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தைப் பற்றி எழுதுவதற்காக இங்கு வந்தார். அதன் வரலாறு குழப்பமாக இருந்ததால் அதுபற்றி எழுத முடியவில்லை என்று வருத்தத்தோடு கிளை மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் மேலாளர் அறையின் உள்ளே நுழைந்தேன். மேலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்து நிருபருக்கு என்னை ஒரு எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

குமரி மாவட்ட கோவில்கள்

உடனே இந்து பத்திரிக்கை நிருபர் என்னிடம் நாகராஜர் ஆலயத்தைப் பற்றி கட்டுரை ஒன்று எழுத முடியுமா? என்று கேட்டார். முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்து முகவரியை வாங்கிக்கொண்டேன். பின்னர் நாகராஜர் ஆலயம் பற்றி தகவல்களைச் சேகரித்து, அங்கு காணப்படும் கல்வெட்டு செய்திகளை இணைத்து கட்டுரை ஒன்றை எழுதி இந்து ஆங்கில நாளிதழ் நாளிதழுக்கு அனுப்பிவைத்தேன். அக்கட்டுரை 07.08.1966 இந்து நாளிதழ் ஞாயிறு மலரில் நாகராஜா கோயில் படத்துடன் வெளிவந்தது. அந்த நாளில் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவருவது பெரியதொரு சாதனையாக கருதப்பட்டது. 

பின்னர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்வடிவம் பெற்றது. அதன் ஆங்கில பதிப்பிற்கு டாக்டர் கே. கே. பிள்ளை அவர்களும் தமிழ் பதிப்பிற்கு திருமுருக கிருபானந்த வாரியார், கலைமகள் ஆசிரியர் கி.வ.ஜா. ஆகியோரும் அணிந்துரை வழங்கிய ‘குமரி மாவட்ட கோவில்கள்’ என்ற தமிழ் நூல் அன்றைய குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எஸ். ராமகிருஷ்ணன் முன்னிலையில் அன்றைய மாவட்ட நீதிபதி எம். எஸ்.சங்கரலிங்கம் தலைமையில் கீதாஸ்ரீ என். கிரிதாரி பிரசாத் வெளியிட டாக்டர் கே. பத்மநாபன் அவர்களின் துணைவியார் திருமதி என். பார்வதி அம்மாள் முதல் நூலைப் பெற்று சிறப்பித்தார் என்பதை நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் இங்கே கூற நான் கடமைப் பட்டுள்ளேன்.

எனது கட்டுரை

அதே நேரத்தில் கன்னியாகுமரி தேவஸ்தனம் போர்டு தலைவராக இருந்தவர் நாகம்மாள் ஆலை அதிபர் டாக்டர் கே. பத்மநாபன் அவர்கள், அவர் என்னை அழைத்து இந்து நாளிதழில் நாகர்கோவில் நாகராஜர் ஆலயம் பற்றி வெளிவந்த எனது கட்டுரையைப் பாராட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள எல்லா கோவில்களைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவில்களின் உள்ளே புகைப்படம் எடுக்கவும், அங்கு உள்ள கல்வெட்டுகளைப் படிக்கவும் எனக்கு அனுமதி வழங்கி, அதுகுறித்து ஒரு ஆணை பிறப்பித்து குமரி மாவட்ட கோவில்களுக்கு எல்லாம் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அந்த ஆணை எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எனது பணிக்கு அது ஊக்கமளித்தது. ஆணை பிறப்பித்து நான்கு ஆண்டுகளுக்குள் குமரி மாவட்டத் திருக்கோயில்கள் அனைத்தையும் பற்றி கட்டுரை எழுதினேன்.

அவை கோவில் படங்களுடன் தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி மெயில், டைம்ஸ் ஆப் இந்தியா, பவன்ஸ் ஜர்னல் போன்ற ஆங்கில இதழ்களிலும் தினமணி, தினமலர், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற தமிழ் இதழ்களிலும் வெளிவந்தன.

பயணம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published.