கற்றறிந்தவர்கள்

இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்

கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ (புறம், 182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கற்றறிந்தவர்கள்  இந்திரர் வழங்கும்  அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணார்; பிறருக்குக் கொடுத்தே உண்பார். யாரிடமும் சினம் கொண்டு ஒதுங்க மாட்டார். பிறர் துன்பங்களைக் கண்டு தாங்களும் அஞ்சுவர்; புகழுக்காக உயிரையும் கொடுப்பர்; பழிவருமெனில் உலகமே கிடைப்பதாயினும் கொள்ளார். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்வார் என்று விளக்குகிறது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் மாணவர்கள் கல்வி கற்றனர். மாணாக்கர் முதல் கடை இடையென மூவகையினர். கற்றோர் எங்கும் சிறப்புப் பெற்றனர். கல்வி எழுமைக்கும் ஏமாப்பாயிற்று, பிள்ளைகளின் கல்வியறிவு பெற்றோரைப் பெருமைப்படுத்தியது.

மம்மர் அறுக்கும் மருந்தாகிய கல்வி கொடுக்கக் கொடுக்கக் குறையாது. கல்லார்  இழிவுடையோராகக் கருதப்பட்டனர். கல்வியைப் போல கேள்விக் கல்வியும் சிறந்தது. விரைந்துகற்க அது பயன்பட்டது. கற்றதன் பயன் மனிதத் தன்மையுடன் வாழ்வதே, சாதிக் கொடுமைகள் அகல, கல்வி ஒன்றே உயர்ந்த கருவி. 

மூங்கில் வேந்தன்

காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் – கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல… 

மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும். 

வருத்தவன் வேய் அரசர் மாமுடியின் மேலாம்வருத்த வளையாத மூங்கில்- தரித்திரமாய்    வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்துதாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.- என்கிறது   நீதிவெண்பா.

வளைய வேண்டுமென்பதற்காக நெருப்பில் வாட்டினும் பொறுத்து – வளைகிற மூங்கில் வேந்தன் அமரும் பல்லக்கில்அவனது முடிக்கு மேலே நின்றுபெருமை கொள்ளும் !

நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ கழைக்கூத்தாடிகளின் கையகப்பட்டு ஊர் ஊராய்த் திரிந்து அவர்தம் காலடியில் மிதிபடும்! இளமையிலே வருந்திக் கற்பவர் வளையும் மூங்கிலாய்ப் பெருமையடைவர்

வருந்திக் கல்லாதவர் மிதிபடும் மூங்கிலாய்ச் சிறுமையடைவர், என்று விளக்குகிறது.

அடைநெடுங் கல்வி

அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது, ‘குழந்தைகளிடமிருந்து கூட உடல், உள்ளம், ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பார். 

புறநானூறு கற்றறிந்தவர்கள்

புறநானூற்றில் அடைநெடுங் கல்வி யார் என்னும் புலவர் ஒருவர் பெயர் காணப்பெறுகிறது. இப்பெயர் கல்வியால் பெற்ற சிறப்புப் பெயராகும்.

பாசம் மிக்க தாயும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் மகனையே பெரிதும் விரும்புவாள். 

இதனை பிறப்போரன்ன வுடன் வயிற்றுள்ளும்சிறப்பின் பாலாற் தாயுதனந் திரியும் (புறம், 183;3,4) என்று புறநானூற்றில் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றின் வழி அறியலாம்

பெற்றோரைப் பெருமைப்படுத்தும் நிலை கல்விக்குண்டு. எனவே பிச்சை எடுக்கும் இழிநிலையிலுங் கூட ஒருவன் கற்க வேண்டும் என்கிறார் அதிவீரராம பாண்டியர்.கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை, 15)

சமயக் கல்வி

ஒரு நாட்டின் வளம் நிலவளத்தால் மட்டும் அமைவதன்று, கற்றறிந்த சான்றோராலேயே நாடு மதிக்கப் பெறுகின்றது. இதனை, நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோஎவ்வழி நல்ல வர் ஆடவர்அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம், 187) என்ற ஒளவையார் வாக்கு வலியுறுத்துகின்றதுகல்லாத மூடரைக் காணவும் ஆகாதுகல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று என்று அறிவுறுத்தினார் திருமூலர்.

சங்க காலத்திற்குப் பின்னர் கல்வி என்பது சமயக் கல்வியாகத் தான் இருந்துள்ளது. கற்றறிந்தவர்கள் மூலம் சமயக் கல்வி சமய ஒழுங்கு முறைப்படி செயலாற்றுதலையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தியது.

சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்றி நல்வழிப்படுத்தலே கல்வியின் தலையாய பயனாகும். பிறர் நலம் நாடும் பண்பினைக் கற்றலினாய பயன்களுள் ஒன்றாகக் குறிப்பிடலாம். கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றது. நன்றாக கற்போம். மனிதத் தன்மையோடு வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published.