கிளியோபாட்ரா: முத்தம் ஏற்படுத்திய விபரீதம்

கிளியோபாட்ரா-46 முத்தம் ஏற்படுத்திய விபரீதம்

முத்தம் ஏற்படுத்திய விபரீதம்

கிளியோபாட்ராவுக்கு மன்னிப்பு கொடுத்துவிட்டு ஆண்டனியைப் பழி வாங்க காத்திருந்த ஆக்டேவியன் சார்பில் கிளியோபாட்ராவிடம் தூது சென்ற தைரஸ், ஆக்டேவியனின் நிலையை அவளிடம் தெளிவுப்படுத்திக் கூறினான்.

“எங்களது தலைவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். தாங்கள் ஆண்டனியுடன் தொடர்பு வைத்திருப்பதற்கு சரியான காரணம் அன்பு அல்ல, அச்சம்தான் என்பது இளைய சீஸருக்கு நன்றாகவே தெரியும்.”

“ஓ… இப்படியெல்லாம் அவர் நினைக்கிறாரா?”

முத்தம்

“ஆண்டனியுடன் தாங்கள் வைத்துள்ள நட்பு உங்களுக்கு களங்கத்தையே ஏற்படுத்தும். அந்த நட்பால் உங்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆனாலும், உங்கள் இருவருக்கும் இடையே உள்ள அந்த நட்பை எங்கள் தலைவர் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது உங்களது கருத்தை அறிந்து வரவே என்னை இங்கே அனுப்பி இருக்கிறார். தங்களது நிலைபாட்டைச் சொன்னால், அவரிடம் முறையாக எடுத்துரைப்பேன்…”

“எகிப்துக்கு எதிரான கடற்போரில் அவரது படை பெற்றுள்ள வெற்றியை நான் ஏற்றுக்கொள்வதாகச் சொல். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும் சொல்லிவிடு.”

“நன்றி அரசியாரே!” என்ற ஆக்டேவியனின் தூதுவன் கிளியோபாட்ராவின் கையைப் பெற்று முத்தம் தந்தான். இதை அங்கு எதார்த்தமாக வந்த ஆண்டனி பார்த்துவிட்டான்.

அடி வாங்கிய தூதுவன்

அடுத்தகணமே அவனது முகம் கோபத்தால் சிவந்தது. ஆக்டேவியனின் தூதுவனைச் சவுக்கால் அடிக்குமாறு தனது வீரர்களுக்கு அவன் உத்தரவிட… அடுத்த நொடியே அவனைச் சில வீரர்கள் இழுத்துச்சென்றனர்.

கோபம் அடங்காத ஆண்டனி, அதே அனல் வீசும் கோபப் பார்வையை கிளியோபாட்ரா மீது வீசினான்.

“நீ உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? தூது கொண்டு வந்து ஒருவனிடம் முத்தம் இட கையை கொடுப்பது ஒரு அரசிக்கு அழகா?”

“ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?”

“கை நீட்டி பரிசு பெறும் ஒரு கீழ்மகனிடம் அவன் முத்தம் இட கையை நீட்டிவிட்டு என்னிடமா கேள்வி கேட்கிறாய்? இந்த ஆண்டனியின் காதல் மனைவி இப்படி இருக்கக்கூடாது” என்று அவன் சொல்லி முடித்தபோது, தூதுவன் தைரசை ஆண்டனியின் வீரர்கள் இழுத்துக்கொண்டு வந்து அவன் முன்பு நிறுத்தினர்.

“நான் சொன்னது போன்று இவனுக்கு சவுக்கடி கொடுத்தீர்களா?”

“ஆமாம் பிரபு!”

“நல்லது. ஆக்டேவியன் வெற்றி பெற்ற இந்த நாளில் அவனது தூதுவன் நம்மிடம் சவுக்கடி வாங்கியிருக்கிறான். இங்கு நடந்ததை அவன் ஆக்டேவியனிடம் போய்ச் சொல்லட்டும்” என்ற ஆண்டனி தூதுவன் தைரஸை விரட்டியடித்தான்.

மவுனம் மோதலானது!

நடந்ததை எல்லாம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா. ஆனாலும், அவள் மனதில், ஆண்டனி திட்டியது பலமாகப் பதிந்திருந்தது. தன்னிடம் அப்படியொரு கேள்வி கேட்க ஆண்டனிக்கு எப்படி மனசு வந்தது என்பதை அறிய பேச்சை ஆரம்பித்தாள்.

“ஆண்டனி… எனது கையை ஆக்டேவியனின் தூதுவன் முத்தமிட்டது பற்றி தவறாக விமர்சனம் செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது?”

“அப்படியென்றால், அந்த இளைய சீஸரான ஆக்டேவியனை மகிழ்விக்க ஒரு கீழ் மகனை காதலிப்பாயா?”

“எப்போதும் அன்பாய் பார்த்த உங்களது பார்வையும், தேனினும் கனிவாகப் பேசிய உங்களது பேச்சும் இப்போது திடீரென்று மாற என்னக் காரணம்? நான் அப்படி என்ன பொல்லாத தவறு செய்துவிட்டேன்?”

“நீ செய்த தவறை என் கண்ணாலேயே பார்த்துவிட்டேன். உண்மை அப்படியிருக்க, தவறே செய்யவில்லை என்று நீ சொல்வது மட்டும் எந்தவிதத்தில் நியாயம்?”

“உங்களை உயிருக்கு உயிராக காதலித்தும், உங்கள் விருப்பப்படி உங்களது காதல் மனைவியாக இருந்தும், உங்களுக்காக மூன்று குழந்தைகளுக்கு தாயும் ஆகிவிட்ட என்னை நீங்கள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஆத்திரப்பட்டு பேசும்போது புத்தி சரியாக வேலை செய்யாது என்பதை மறந்துவிடாதீர்கள்.”

“என் மீதான அன்பு இப்போது உன்னிடம் இல்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை, நாம் முதன் முதலாக சந்தித்தபோது நமக்குள் எப்படிப்பட்ட காதல் இருந்ததோ, அது இப்போதும் உன்னிடம் இருந்தால், ஒரு கீழ் மகன் முத்தமிடும் பொருட்டு உன் அழகிய கரங்களை நீட்டி இருக்க மாட்டாய்.”

“ஏன் ஆண்டனி திரும்பத் திரும்ப அதே விஷயத்திற்குள் நுழைகிறீர்கள்?”

“இப்போது அதுதானே பிரச்சினை?”

“எதையும் தவறாக நினைத்தால் தவறாகத்தான் தோன்றும். ஆக்டேவியனின் தூதுவன், அவன் சார்ந்துள்ள படை பெற்றுள்ள வெற்றியின் காரணமாக ஒருவித மமதையில் என் கரத்தை முத்தமிட்டான். அவன் என் கரத்தை முத்தமிட்ட அக்கணமே அவனை என்னால் கொலை கூட செய்திருக்க முடியும். இப்போது அவன் நம்மை தேடி வந்திருப்பது ஆக்டேவியனின் தனிப்பட்ட விஷயத்தை என்னிடம் சொல்ல. அப்படியிருக்கும்போது அவனை முறையாக நடத்துவதுதான் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சரியானது. இந்த நாட்டுக்கு அரசி என்கிற முறையில் எனது அந்த முடிவு சரியானதுதான்”.

“நீ சொல்வதைப் பார்த்தால், என்னைப் பற்றி கவலைப்பட்டது போலவே தெரியவில்லையே…”

“அய்யோ ஆண்டனி… திரும்பத் திரும்ப ஏன் என்னை வதைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு என்னை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதற்கு பதிலாக ஒரேயடியாக சாகடித்து விடுங்கள். நீங்கள் நினைப்பதுபோல் என்னிடம் தவறு இருந்தால், எனது நெஞ்சம் நஞ்சாகட்டும். ஆலங்கட்டி மழை என் தலையில் விழட்டும். எனது உயிர் பிரியட்டும். எனது குழந்தைகளும் சாகட்டும்…” என்று தனக்குத்தானே சாபமிட்டுக் கொண்ட கிளியோபாட்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.

கலங்கினான் ஆண்டனி

தன் மீதான கிளியோபாட்ராவின் காதல் எள்ளளவும் குறையவில்லை என்று கணித்த ஆண்டனி வெகுநேரத்திற்குப் பிறகு சமாதானம் ஆனான்.

“அழாதே கிளியோபாட்ரா. உன்னை நான் சந்தேகப்படவில்லை. ஏதோ ஒரு ஆதங்கத்தில் அப்படி கேட்டுவிட்டேன். உன் மனதை எனது பேச்சு புண்படுத்தி இருந்தால் இப்போதே மன்னித்துவிடு!” என்று சொன்னவன், கிளியோபாட்ராவை ஆறுதலாகத் தழுவி அவளது அழகான விழிகள் ஓரம் தீட்டப்பட்டு இருந்த கண் மையின் அழகை சிதைத்த கண்ணீர்த் துளிகளை தனது கரங்களால் அப்புறப்படுத்தினான்.

இதற்கிடையில், கடல் வழிப் போரில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ரோமானியப் படை, அடுத்ததாக தரை வழியில் எகிப்துப் படையை எதிர்கொள்ள தயாரானது.

இதையறிந்த ஆண்டனி உற்சாகம் ஆனான். ஆக்டேவியனின் ரோமானிய தரைப்படையைவிட தனது கூட்டுத் தரைப்படையின் வலிமை அதிகம் என்று அவன் ஏற்கனவே கணக்கு போட்டு வைத்திருந்தான்.

“எனது பலம் மூன்று மடங்காகும். துணிவோடு போராடுவேன். என் கையில் சிக்கிய எதிரிகள் எவரும் தப்பிக்க முடியாது. முன்பு எனது பகைவர்கள் பலருக்கு உயிர்ப்பிச்சை வழங்கினேன். ஆனால், இப்போது நான் மாறப்போகிறேன். என்னை எதிர்க்கும் அனைவரையும் மரண உலகத்திற்கு அனுப்பப் போகிறேன்…” என்று ஆண்டனி கர்ஜித்தான்.

ஆண்டனியின் புதிய உற்சாகம் கிளியோபாட்ராவுக்கும் புது தெம்பையும் நம்பிக்கையையும் தந்தது. கடற்போரில் தோற்ற தனது படைக்குத் தரைப்போரில் ஆண்டனியின் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பால் வெற்றி கிடைக்கும் என்று இவளும் கணக்கு போட்டாள்.

ஆனால், அவள் போட்ட கணக்கைச் சுக்கு நூறாக உடைத்துத் தகர்த்தெறிய தயாராகிக் கொண்டிருந்தான் ஆக்டேவியன்.

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *