கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபாடும் முக்தீஸ்வரர் ஆலயம்

கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்

கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்.

தல வரலாறு 

பார்புகழ் மதுரை மாநகரின் கீழ்ப்பகுதியில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் எழுந்தருளும் ஸ்ரீ மரகதவல்லி சமேத முக்தீஸ்வரரின் திருக்கோயில் பல ஆபூர்வச் சிறப்புகள் கொண்ட பண்டைத் தலமாகும்.

சூரிய பூஜை 

பாரத புண்ய பூமியிலுள்ள லட்சக்கணக்கான கோயில்களில் மிக மிகச் சிலவற்றில் மட்டுமே சூரியனின் ஒளிக் கிரணங்கள் நேரடியாக இறைவன் மீது படும் அமைத்துள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய  இக்கோயில்கள் சூரிய பூஜைக் கோயில்கள் எனப் புகழப்படுகின்றன. இத்தகு சூரிய பூஜைக் கோயில்களிலும் பெரும்பாலும் வருடத்தில் 2 அல்லது 3 நாட்கள், அதுவும், சில நிமிடங்கள் மட்டுமே சூரிய ஒளி கருவறையில் படரும். 

வருடத்திற்கு 26 நாட்களுக்கு, தினந்தோறும் 20 நிமிடங்களுக்கு சூரிய ஒளி சிவலிங்கத்தின் மேல் படரும் ஒரே கோயில் ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில் மட்டுமே.

தக்ஷிணாயனத்தில் 13 நாட்களுக்கு செப்டம்பர் 18 முதல் 30 வரை காலை 6-15 முதல் 6-25 மற்றும் 6-40 முதல் 6-50 வரையும், உத்தராயணத்தில் 13 நாட்களுக்கு மார்ச் 10/11 முதல் 22/23 வரை காலை 6-35 முதல் 6-45 மற்றும் 7-00 முதல் 7-10 வரையும் சூரிய பகவான் ஸ்ரீ முக்தீஸ்வரனை வணங்குகிறார். 

முதல் 10 நிமிடங்கள் நேரடியாக செங்கதிர்களாலும், அடுத்த 10 நிமிடங்கள் மகாமண்டபத்திலுள்ள 3 துவாரங்கள் வழியாக கண்ணைக் கூசும் வெள்ளொளியாலும் சூரிய பகவான் சிவபெருமானை வழிபடுவதை தரிசிக்க கண்கோடி போதாது.

கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்

கோளிலித் தலம் 

சிவனை வணங்குகையில் கோள்கள் என்ன செய்யும் என்று கூறி வந்தாலும், சிவாலயங்கள் எல்லாவற்றிலுமே நவக்கிரஹங்களுக்கு சன்னதி ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. நவக்ரஹ சன்னதி இல்லாத, மிகவும் அரிதான, பழமையான சிவாலயங்களில்

ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இத்தகு கோயில்கள் கோளிலித் தலம் எனப்படும். 

பலகாலமாக பல்லோர் இக்கோயிலில் நவக்ரஹ சன்னதி ஏற்படுத்த விரும்பியும், இறை உத்தரவு கிடைக்காதது இங்கே குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ முக்தீஸ்வரனை வழிபடுவதால் நவகோள் வினையும் ஒருசேர விலகுவது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். 

பஞ்சபூதத் தலமான மதுரையில் இக்கோயில் வாயுத் தலம்; மீனாட்சி ஆலயம் ஆகாயத்தலம்; தெற்குமாசி வீதி தென்திரு ஆலவாய சுவாமி கோயில் அக்னித்தலம்; மேலமாசி வீதி இம்மையிலேயே நன்மை தருவார் கோயில் பூமித்தலம்; செல்லூர் திருவாப்புடையார் கோயில் நீர்த்தலம் ஆகும்.

கால வரலாறு 

மதுரைத் திருவிளையாடல் புராணங்கள், மதுரைக் கோயில்களில் நடந்த திருப்பணிகள் பற்றி தெரிவிக்கின்ற திருவாலவாயுடையார் திருப்பணி மாலை மற்றும் நாயக்கர் கால சரித்திரங்கள் ஆகியவை இவ்வாலயத்தின் தொன்மையான தோற்றம், வரலாறு பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

மதுரைத் திருவிளையாடல்களில் முக்கியமான 64ல், இரண்டாம் திருவிளையாடலான ஐராவதம் சாபம் தீர்ந்த நிகழ்ச்சியினால் உருவானதே ஸ்ரீ மரகதவல்லி முக்தீஸ்வரர் திருக்கோயில். 

புராணக் கதை

இந்திரனின் வாகனமான ஐராவதம் (வெள்ளை யானை) சிவபூஜைப் பிரசாதமாகக் கிடைத்த மலரை அவமதித்ததால் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளாகிறது. 100 வருடங்கள் காட்டு யானையாகத் திரிந்த பின் மதுரையில் சாப விமோசனம் பெறுகிறது. 

ஐராவதம், சிவபூஜை விருப்பில் இங்கேயே தங்கி, முதலில் வழிபட்ட ஆனையூர் (ஸ்ரீ ஐராவதேசுரர் கோயில்) என்ற தலம், மதுரையின் மேற்கே 35 கி.மீ.ல் உசிலம்பட்டியருகே கட்டக்கருப்பன்பட்டியின் சமீபத்தில் உள்ளது. 

சாபம் தீர்ந்த பின்பும் தன் வாகனத்தைக் காணாத இந்திரன் ஐராவதத்தைத் தேடுகிறான். இந்திரலோகம் கிளம்பும் போது யானைக்கு மீண்டும் சிவபூஜை நாட்டம் அதிகரித்து விடுகிறது. அப்போது மதுரைக்குக் கிழக்கே தன் பெயரால் ஊர் ஏற்படுத்தி (இன்றும் ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில் பகுதி ஆவணங்களில் ஐராவதநல்லுர் என்றே உள்ளது) சிலகாலம் சிவபெருமானை வணங்கியபின் இந்திரனை அடைகிறது.

புராண காலத்திலிருந்து வணங்கப்படும் இத்தலப் பெருமானுக்கு நாயக்கர் காலத்தில் தான் பெருங் கற்கோயில் அமைக்கப்பட்டது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவீரப்ப நாயக்கர் (திருமலை நாயக்கரின் அண்ணன்) இக்கோயிலை ஒரு ஏக்கர் பரப்பளவில் கருவறை தொடங்கி தூபி வரை பல மண்டபங்களோடு சிற்பக் களஞ்சியமாக உருவாக்கியிருக்கிறார்.

அவருக்குப்பின் மதுரையாண்ட திருமலை நாயக்கர், மீனாட்சிக்கு, தான் ஏற்படுத்துவதாக நேர்ந்து கொண்ட தெப்பக்குளத்திற்கு ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயிலின் முன்பகுதியைத் தேர்ந்தெடுத்ததால் இக்கோயில் மேலும் விரிவுபெற இயலவில்லை.

அண்ணன் எழுப்பிய கோயிலுக்கு, வாயிலில் ராஜகோபுரம் இல்லையே என்பதற்காகவே திருமலை நாயக்கர் தெப்பக்குள மைய மண்டபத்தில் பெரிய கோபுரம் எழுப்பியது போலத் தோன்றுகிறது. கோயிலுக்கு உள்ளிருந்து பார்த்தாலும் தெப்பக்குளத்தின் கிழக்கிலிருந்து பார்த்தாலும் மைய மண்டப கோபுரமானது ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயிலின் இராஜகோபுரமாகவே தோன்றும். 

முக்தீஸ்வரனை சூரியன் வழிபடுவது தடைப்படாத வகையில் மைய மண்டபத்தில் பெரிய சாளரங்கள் அமைக்கப்பட்டு இருப்பது பேரதிசயமாகும். இவ்வரிய பொறியியற் சாதனையை சூரிய பூஜைக் காலங்களில் நன்கு காணலாம். 

ஆதியில் இங்குள்ள சிவபெருமான் இந்திரேசுவரர் என்றும், பின்பு ஐராவதேசுவரர் என்றும், முத்துவீரப்ப நாயக்கருக்குப் பின் முத்தீச்சுவரா என்றும், அதற்கும் பின்னர், மக்கள் சிவபதமடைந்தவர்களுக்காக சிவசன்னதியில் முக்தி விளக்கு ஏற்றும் வழக்கால் முக்தீஸ்வரா என்றும் ‘பல பெயர்களால் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

தலமரச் சிறப்பு 

கிடைத்தற்கரிய வில்வம் இக்கோயிலின் தலமரமாக உள்ளது. இங்குள்ள இரண்டு பெரிய வில்வ மரங்களில் வடமேற்கு மூலையிலுள்ள வில்வ மரம் அரிய சக்தி வாய்ந்தது. மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேசுவரரின் வடமேற்கே உள்ள சித்தர் சன்னதிபோல் இவ்வில்வம் நினைத்ததைக் கூட்டுவிக்கும் சிறப்புடையது. குறிப்பாக,

1. வயதாகியும் திருமணமாகாதவர்களுக்கு திருமணமும் 

2. மணமாகிப் பலகாலமாகியும் மகவிலார்க்கு குழந்தைப் பேறும் 

3. பிரிந்த குடும்பத்தவர்க்கு மீண்டும் இணைந்த வாழ்வும் 

4. பிழைப்பே இல்லார்க்கு வாழ வழியும் அமைகிறது. 

விரத முறை: 

வளர்பிறை நன்னாளில் துவங்கி 48 நாட்களுக்கு இவ்வில்வ மரத்தடியில் தினம் ஒரு நல்லெண்ணை தீபம் ஏற்றி மும்முறை வலம்வர வேண்டும். எதிர்பாராத காரணத்தால் அல்லது பெண்டிர் வரக்கூடாத நாட்களில் மட்டும் நெருங்கிய உறவினர் விரதம் தடைபடாமல் விளக்கேற்றலாம். நோய் அல்லது வயது முதிர்ச்சியால் நடக்க முடியாதவர்க்காகவும் நெருங்கியவர் விரதமிருக்கலாம்.

தெய்வத் தமிழ் அர்ச்சனை 

தமிழகக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடப்பதாக அறிவிக்கப்பட்டாலும் அது பரவலாக நடைபெறுவதாகத் தெரியவில்லை. இந்த நிலைக்கு மாறாக, தினந்தோறும், மாலை வழிபாட்டில் 6-30 முதல் 7-00 வரை எல்லா சன்னதியிலும் எல்லா பக்தர்களும் சேர்ந்து தமிழில் திருநாமங்கள் கூறி அர்ச்சனை நடைபெறுவது ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயிலில் மட்டுமே. 

பல்லாண்டு காலம் பெருமை குன்றி பல மதுரைவாசிகளே அறியாத இத்திருக்கோயில், மீண்டும் பிரபலமாகியிருப்பதற்கு இத்தமிழ் அர்ச்சனை வழிபாடு ஒரு முக்கிய காரணம் ஆகும். அரை மணி நேரம் நடக்கும் தமிழ் அர்ச்சனை வழிபாடும் அதற்குப் பின்னர் அனைத்து பக்தரும் சேர்ந்தமர்ந்து 7-00 முதல் 7-30 வரை நமச்சிவாய மந்திரம் ஜபிப்பதும் கண்டும் கேட்டும் அறியாத ஆபூர்வ அனுபவமாகும்.

சிறப்பு வழிபாடுகள்

திருவிளக்கு பூஜை : 

அனைத்து தெய்வங்களையும் ஜோதி வடிவமாக, ஒன்றாக வணங்குவதே திருவிளக்கு பூஜை. இத்திருவிளக்கு வழிபாடானது, பல வருடங்களாக, எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் மாலை 7-00 மணிக்கு, எவ்வித விளம்பரமும் கட்டணமும் இன்றி, நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு நடப்பது இங்கு மட்டுமே. இதுவரை 900 தடவைக்கு மேல் நடந்துள்ளது. வருடம் இருமுறை 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

விநாயகர் சதுர்த்தி தொடங்கி பங்குனி உத்திரம் முடிய எல்லா பண்டிகை நாட்களிலும் விரிவான வழிபாடு நடந்தாலும், நவராத்ரியில் ஒரே நாளில் நடைபெறும் கோடி நாம பாராயணமும், பல மூட்டை அரிசி பொங்கி ஆயிரக்கணக்கானோர் அன்னதானம் பெறும் பல்லாயிரம் தீபமேற்றப்படும் அன்னாபிஷேக பூஜையும், திருக்கார்த்திகையும், மகா சிவராத்திரியும் மாதமிருமுறை நடைபெறும் பிரதோஷ பூஜையும் மிகவும் முக்கிய வழிபாடுகளாகும். மீனாட்சி சொக்கரோடு தொடர்பு

மீனாட்சி சொக்கரின் தைப்பூசத் திருவிழாவோடு இக்கோயிலுக்கு நெருங்கிய தொடர்புள்ளது. விழாவின் 8ம் நாள் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியன்று ஸ்ரீ மீனாட்சியும் சொக்கரும் காலையிலேயே இத்திருக்கோயிலுக்கு எழுந்தருளி மாலை வரை தங்கியிருப்பர். மீண்டும், தெப்பத்தன்று காலை இங்கு இறங்கி பக்தர்களுக்குத் தரிசனம் தந்த பின்னரே தெப்பம் செல்கின்றனர். இரவில் இக்கோயில் வாயிலில் தான் தங்கக் குதிரை ஏறி மதுரை திரும்புகின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 

காலை 6-00 முதல் 10-30 வரை; மாலை 4-00 முதல் 8-30 வரை இறையருளால் ஸ்ரீ முக்தீஸ்வரரை அனைவரும் அன்றாடமும் பணிந்து அனைத்தும் பெறுவோமாக..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *