கிளியோபாட்ரா ஆண்டனி மோதல்

கிளியோபாட்ரா-49 ஆண்டனி-கிளியோபாட்ரா மோதல்

ஆண்டனி-கிளியோபாட்ரா மோதல்

“ஆண்டனி என்னை விடுங்கள். போர்க்களத்தில் நடந்ததை முதலில் கூறுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். அது, உங்களைப் போன்ற மாவீரனுக்கு அழகும் அல்ல…”

தனது கழுத்தை வேகமாக நெறித்த ஆண்டனியிடம், கிளியோபாட்ராவால் இதற்கு மேல் பேச முடியவில்லை. கிளியோபாட்ரா கெஞ்சியதால் அவளைத் தனது பலமான பிடியில் இருந்து விடுவித்தான் ஆண்டனி.

“ஏன் என்னை ஏமாற்றினாய்? சொல்லி வைத்தது போல் நம் கடற்படையும், தரைப்படையும் 

ஆக்டேவியனிடம் சரணடைய என்ன காரணம்? நமது படைவீரர்களிடம் எனக்குத் தெரியாமல் நீ என்ன சொல்லி வைத்தாய்?”

“ஆண்டனி… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? போர்க்களத்தில் நடந்த உண்மையை முதலில் கூறுங்கள்.”

“ஆமாம்… உன்னை நம்பி அந்த ரோமாபுரியை விட்டு நீயே கதியென கிடந்த எனக்கு நீ நல்ல பாடம் கற்பித்து விட்டாய்.”

மோதல்

“ஆண்டனி… அவசரப்பட்டு வார்த்தையை உதிர்க்காதீர்கள். நாளைய வரலாறு உங்களை ஏளனமாகப் பேசும்.”

“என்ன… உண்மையைச் சொன்னால் உனக்கு கோபம் வருகிறதா?”

“எனக்கு கோபம் வரவில்லை. உங்கள் அறியாமையை, நம்பிக்கை இல்லாதத் தன்மையை நினைத்துதான் பரிதாபப்படுகிறேன்.”

“அப்படியென்றால், எகிப்து படைகள் ஏன் ஆக்டேவியனிடம் ஒட்டுமொத்தமாக சரணடைய வேண்டும்?”

“நீங்கள்தானே போர்க்களத்தில் இருந்தீர்கள். நீங்கள்தானே நம் படைகளை வழிநடத்திச் சென்றீர்கள்? உங்களுக்கே அதற்கான காரணம் தெரியாதபோது எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?”

“உன் பேச்சைப் பார்த்தால் நடந்த சம்பவங்களுக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் இருக்கிறதே… ஒருவேளை நீ நடிக்கிறாயா? இல்லை உண்மையைத்தான் சொல்கிறாயா?”

“ஆண்டனி… இதற்கு மேலும் உங்களிடம் நான் பொறுமையாக விளக்கம் கூறிக் கொண்டிருக்க முடியாது. தோல்வி பயத்தில் உயிருக்கு பயந்து எதிரியிடம் சரணடைந்து விட்ட நம் படையினரை, நான்தான் சரணடையச் சொன்னேன் என்று நீங்கள் சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை.”

“நீ சொல்வதை நம்பலாமா?”

“நம்பித்தான் ஆக வேண்டும். அதுதான் உண்மை!”

“ஆனால், நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே. நீ சொல்லித்தான் அவர்கள் அந்த ஆக்டேவியனிடம் சரணடைந்திருக்கிறார்கள். இதுதான் உண்மை என்கிறேன்.”

“ஆண்டனி… நீங்கள் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. என்னிடம் நீங்கள் பேசுவதைப் பார்த்தால், ஒரு காதலியிடம், மனைவியிடம் ஒரு கணவன் பேசுவதுபோல் தெரியவில்லை”.

“ஓ… இப்படியெல்லாம் நீ விளக்கம் கேட்பாயா?”

“ஆமாம்… தன் கணவனாக ஒருவனை ஏற்றுக்கொண்ட பெண், அவனிடம் இப்படி பேசவில்லை என்றால் அவள் அவனுக்கு உண்மையான மனைவியாக, காதலியாக இருக்க முடியாது.”

கிளியோபாட்ரா மோதல்

“நிறுத்து கிளியோபாட்ரா! என்னை ஏன் மோசம் செய்துவிட்டாய் என்று காரணம் கேட்டால், சம்பந்தமே இல்லாமல் முடிச்சுப் போடுகிறாயே…”

“ஏன் சம்பந்தம் இல்லை. தவறாக பேசும் காதல் கணவனிடம் உண்மையை நிலையை விளக்கிக் கூறிக் கொண்டிருக்கிறேன்.”

“இனி உன்னிடம் பேசி எந்த பயனும் இல்லை. நான் வருகிறேன்…” என்ற ஆண்டனி, அந்த போர்ப்படை முகாமில் இருந்து வேகமாக வெளியேறினான். அவனது முகத்தில் கோபம் இன்னும் அதிகமாக கொந்தளித்திருந்தது.

தோழியின் தவறான யோசனை

ஆண்டனியைத் தொடர்ந்து கிளியோபாட்ராவும் அங்கிருந்து வெளியேறி, அலெக்ஸாண்டிரியாவில் உள்ள தனது அரண்மனையைச் சென்றடைந்தாள். ஆண்டனி பேசிய விஷயங்கள் அவளது மனதைப் பெரிதும் பாதித்து இருந்தன.

மிகவும் சோகமாக அமர்ந்திருந்த கிளியோபாட்ராவிடம், வரலாறே மறக்க முடியாத சம்பவம் நடைபெற காரணமாக அமைந்த யோசனையைத் தெரிவித்தாள் அவளது தோழி சார்மியான்.

“அரசியாரே! ஆக்டேவியன் எகிப்துக்குள் நுழைந்து நம்மை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறான். விரைவில் நாம் அனைவரும் கைது செய்யப்படலாம். அல்லது, கொல்லப்படலாம். ஆண்டனியும் இப்போது நம் வசம் இல்லாத நிலைதான் உள்ளது. உங்களிடம் அவர் கோபமாக பேசியதில் இருந்தே அது தெளிவாகத் தெரிகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதை நான் தங்களிடம் தெரிவிக்கலாமா?”

“ஆண்டனியே என்னை ஏமாற்றுக்காரி என்று சொல்லிவிட்டார். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? நீ கூறியபடியே எதிரிகளும் நமக்கு மிக அருகில் வந்து விட்டார்கள். இனி, நமக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், தாராளமாக உன் யோசனையைச் சொல்.”

“நமது குற்றவாளிகளை கொலைக்களக் கூடத்தில் வைத்து தண்டிப்போம் இல்லையா?”

“ஆமாம்! இப்போது அதற்கு என்ன?” மோதல்

“இப்போதைக்கு தங்களுக்கு பாதுகாப்பான இடம் அது ஒன்றுதான் என்பது என் கணிப்பு. அதனால் நீங்கள் அங்கு இப்போதே புறப்பட்டுச் சென்று விடுங்கள். தங்கள் மீது ஆண்டனியும் திடீர் விரோதம் கொண்டிருப்பதால், தாங்கள் அங்கு செல்வது பற்றி அவர் உள்ளிட்ட வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்.”

“இல்லை சார்மியான். எதிர்பார்க்காத தோல்வி காரணமாக அவர் ஏதோ ஒருவித வேகத்தில் என்னை அப்படிப் பேசிவிட்டார். ஆனால், அவரது மனதிற்குள் நிச்சயம் எனக்கு எப்போதும் ஓர் இடம் உண்டு.”

“அதுபற்றி விரிவாகப் பேச இப்போது நேரம் இல்லை அரசியாரே! உடனே கொலைக்களக் கூடத்திற்குப் புறப்படுங்கள். அங்கே பாதுகாப்பாக தங்கியிருங்கள்.”

“நீ சொல்வதும் சரியாகத்தான் தோன்றுகிறது. அப்படியே செய்கிறேன்.”

“அரசியாரே! நான் தங்களின் நெருங்கிய தோழி என்கிற முறையில் என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன். சொல்லலாமா?”

“ம்… தாராளமாகச் சொல்!”

“சற்று நேரத்திற்கு முன்பு தங்களை மதிப்பிற்குரிய ஆண்டனி தவறாகப் பேசினார் அல்லவா?”

“ஆமாம்…”

“அவர் இதயத்தில் தங்களுக்கு தனி இடம் இருப்பதாகவும் சொன்னீர்கள்”.

“ஆமாம்… சொன்னேன்!”

காதல் எத்தகையது

“தங்கள் மீதான அவரது காதல் எத்தகையது என்பதை இந்த நேரத்தில் சோதிக்கலாம் இல்லையா?”

“முடியாது. காதலர்களுக்குள் நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் காதலர்களாகவே இருக்க முடியாது. இப்போது ஆண்டனி வேண்டுமானால் என்னை தவறாகப் பேசலாம். ஆனால், அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்த கிளியோபாட்ராவுக்காக தனது உயிரைக் கூட கொடுப்பார். ஆனால் அவர் மனதில் எனக்கு இடம் இல்லை என்று மட்டும் நிச்சயம் சொல்லவே மாட்டார்.”

“நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் மதிக்கிறேன் அரசியாரே! ஆனாலும்…”

“என்ன ஆனாலும்… அவரை சோதித்தே ஆக வேண்டும் என்று சொல்ல வருகிறாயா?”

“நீங்கள் தவறாக எண்ணாவிட்டால், அதுதான் உண்மை அரசியாரே!”

“சரி… உன் வழிக்கே நான் வந்து விடுகிறேன். எப்படி அவரை சோதிக்க வேண்டும் என்கிறாய்? நமது படைகள் எல்லாம் எதிரியிடம் சரணடைந்துவிட்ட இந்த நேரத்தில் இப்படியொரு சோதனை அவசியம் தேவை தானா?”

சார்மியான்

“தங்களது கருத்திலும் நியாயம் இருக்கிறது அரசியாரே! ஆனாலும், தங்களைப் பற்றிய ஆண்டனியின் விமர்சனத்தின்படி வரலாறு தங்களை தவறாக கருத வாய்ப்பு உண்டு அல்லவா?”

“ஆமாம்… இப்போதுதான் புரிகிறது சார்மியான். என்னுடன் பழகி பழகி நீயும் கூட ராஜதந்திரத்துடன் பேச ஆரம்பித்து விட்டாய். வரலாறு மிக மிக முக்கியம் தோழி! அதுசரி… எனது ஆண்டனியை நான் எப்படி சோதிப்பது? அதுவும், இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில்!”

“நான் இப்போது கூறும் யோசனையை நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. வரலாறு உங்களை பழிக்கக்கூடாது என்பதற்காக அதுபற்றி வாய் திறக்கலாம் என்று இருக்கிறேன்.”

“பயப்படாதே சார்மியான். உன் மனதில் உள்ளதை அப்படியேச் சொல்”.

“நீங்கள் இப்போது கொலைக்களக் கூடத்திற்கு புறப்படப் போகிறீர்கள் இல்லையா?”

“ஆமாம்!”

“அங்கே நீங்கள் இறந்துவிட்டதாக…”

இதற்கு மேல் சார்மியானைப் பேச அனுமதிக்கவில்லை கிளியோபாட்ரா.

அலெக்ஸாண்டிரியா அரண்மனை

“நிறுத்து உன் பேச்சை! பொய் சொல்வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. ஆண்டனி என் மீது உயிரையே வைத்திருக்கிறார் என்று உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நீ என்னவோ தவறுதலாக வழிக்காட்டுகிறாயே…”

“மன்னிக்க வேண்டும் அரசியாரே! தங்கள் மனம் புண்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் நான் அவ்வாறு சொல்லவில்லை. தங்களைப் பற்றி அப்படியொரு ஒரு பொய்யான தகவலை மதிப்பிற்குரிய ஆண்டனியிடம் கூறினால், அவர் தங்களை நோக்கி ஓடோடி வருவார்; அவர் மனதில் நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பதற்காக அப்படிச் சொல்ல வந்தேன். அதில் தவறு இருந்தால் மீண்டும் என்னை மன்னித்து விடுங்கள்…” என்ற சார்மியான், சட்டென்று கிளியோபாட்ராவின் காலில் விழுந்துவிட்டாள்.

சில நிமிடங்கள் மவுனமாக இருந்த கிளியோபாட்ராவுக்கு சார்மியான் சொன்ன யோசனை சரியாகவே தோன்றியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ரகசியமாக நெருங்கிய தோழியர் சிலருடன் அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் இருந்து வெளியேறி எகிப்தின் கொலைக்களக் கூடத்தை சென்றடைந்த கிளியோபாட்ரா ஆண்டனிக்கு அந்த பரபரப்பான தகவலை அனுப்பினாள்.

“எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் மறைந்திருந்த கிளியோபாட்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டாள்!”

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *