கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு!
“கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து வந்த ஒரு ஜீவன் இந்த உலகத்தை விட்டே மறைந்துவிட்டதா? அன்பே… நான் சொல்லக்கூடாத வார்த்தைகளைக் கேட்டு இப்படியொரு முடிவை எடுத்து விட்டாயா? அய்யகோ… இனி நான் என்ன செய்வேன். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என் அரசியே… எனக்காக சொர்க்கத்தில் காத்திரு. இதோ நானும் வந்து விடுகிறேன்…”
– கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் அறிந்த ஆண்டனி இப்படித்தான் புலம்பினான்.
“என்னை வென்றவள், நான் ஒருத்திதான்! என்று சொல்வதுபோல் என் கிளியோபாட்ராவின் மரணம் அமைந்துவிட்டது. எனக்காக வாழ்ந்தவளே உயிரோடு இல்லாததால், இனி நான் உயிர் வாழ்வது அவமானம். நான் பேராசை கொண்டவன் என்று வரலாறு என்னை பழிக்கும். அதற்கு இடம் கொடுக்க மாட்டேன்…” என்று ஆண்டனியின் கடைசி நேர புலம்பல்..!
சாகத் துணிந்தான் ஆண்டனி
கிளியோபாட்ரா உண்மையிலேயே இறந்துவிட்டாள் என்று நம்பிய ஆண்டனியும் உண்மையிலேயே சாகத் துணிந்தான். இதையறிந்த, அவனுக்கு அருகில் அப்போது நின்றிருந்த அவனது எகிப்து அடிமையான ஈராஸ் சற்று நடுங்கியபடியே நின்றிருந்தான்.
“ஏன் மவுனமாக இருக்கிறாய் ஈராஸ்? உன் தலைவியின் பிரிவை உன்னாலும் தாங்க முடியவில்லையா?”
“அது வந்து… ஆ…ஆ… ஆமாம் அரசே!”
தமிழ்நாடு பெயருக்காக தனது உயிரை துறந்த மாமனிதர்
“உனக்கே இந்த நிலைமை என்றால், என் இதயத்தில் அவளுக்கு மட்டுமே கோவில் எழுப்பியுள்ள என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அதனால், ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அதற்கு நீதான் உதவ வேண்டும்.”
“உதவியா…? அதுவும் என்னிடத்திலா?”
“ஆமாம்! நீதான் எனது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்.”
“என்னது… கடைசி ஆசையா?”
“இப்போதுதான் நீ தைரியமாக இருக்க வேண்டும். நான் சொல்வதைச் செய்ய வேண்டும்.”
மரணத்தைதான்
“நீங்கள் என்னிடம் அப்படி என்ன எதிர்பார்க்கிறீர்கள்?”
“மரணத்தைதான்!”
“அய்யோ…”
“பயப்படாதே. நான் சொல்வது என் மரணத்தைப் பற்றி!”
“ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? நமது அரசியாரின் உடலை ஒருமுறை பார்த்த பின்னர் உங்கள் முடிவு பற்றி யோசிக்கலாமே…”
“இல்லை ஈராஸ்! என் கிளியோபாட்ரா இறந்துவிட்டாள் என்ற செய்தி என் காதில் எப்போது கேட்டதோ, அப்போதே நானும் இறந்து போய்விட்டேன். இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருப்பது உயிரற்ற எனது உடல்தான்!”
“அவசரப்பட வேண்டாம் அரசே! தற்கொலை என்பது யாரும் யோசித்து எடுக்கும் முடிவு அல்ல. ஒரு சில நொடிகளில் தன்னையும் அறியாமல் எடுக்கப்படுகிற தவறான முடிவு. நமது தலைவிதான் அப்படியொரு முடிவை…” இதற்கு மேல் பேச ஈராஸ் சற்று சிரமப்பட்டான்.
விசாரிப்போம்…
“ஏன் சொல்ல வந்ததை விழுங்குகிறாய். இப்போது நீ சொல்லும் அறிவுரை கூட நான் கேட்கும் கடைசி அறிவுரை என்பதால்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”
“தங்களுக்கு அறிவுரை சொல்கிற தகுதி என்னிடம் இல்லை. ஆனாலும், நடந்த ஒரு சம்பவத்தை தீவிரமாக விசாரிக்கலாம் இல்லையா?”
“எதைப் பற்றி விசாரிக்கலாம் என்கிறாய்?”
“நமது அரசியார் இறந்ததாக சொல்கிறார்கள் அல்லவா?”
“ஆமாம்…”
“அவர் இறந்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டுவிட்டு, அதன்பின் தங்கள் முடிவு பற்றி யோசிக்கலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.”
“நிறுத்து! போதும் உன் அறிவுரை. இவ்வளவு நேரம் நான் உன்னுடன் பேசியதே பெரிய விஷயம். இதுவரை நீ சொன்ன உதவாத அறிவுரைகள் போதும். இனி நான் சொல்வதை எனது உத்தரவாக ஏற்று செய்!”
“சரி… அப்படியே செய்கிறேன்…” என்ற ஈராஸின் கைகள், கால்கள் மட்டுமின்றி உடலே நடுங்க ஆரம்பித்துவிட்டது. அழாத குறையாக ஆண்டனியின் முன் பரிதாபமாக நின்றிருந்தான்.
அடிமையின் கையில் கத்தி
அவனது கையில் ஒரு கத்தியை அவசரமாகத் திணித்த ஆண்டனி, தனது கர்ஜனையான குரலால் மீண்டும் அவனை மிரட்டினான்.
“ஈராஸ்… இப்போது நீ செய்யும் செயலால் வரலாற்றிலும் இடம்பெறப் போகிறாய். என்னைப் பற்றி யாரெல்லாம் பேசப் போகிறார்களோ, அங்கே நீயும் பேசப்படப் போகிறாய்…”
“தங்கள் அடிமையான நான் அதற்கெல்லாம் தகுதியானவனா?”
“ஆமாம்… என்னை கொல்லப்போகும் தகுதியை உனக்கு நான் தரப்போகிறேன் அல்லவா?”
“என்னது கொலையா? அதுவும், நானா உங்களை…” மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தான் ஈராஸ்.
“ஆமாம் ஈராஸ்! இப்போது நீ என்னை என் சுய விருப்பத்துடனேயே கொல்லப் போகிறாய். அதனால்தான் உன் கையில் கத்தியை கொடுத்து இருக்கிறேன். கிளியோபாட்ரா சென்ற இடத்திற்கே நானும் செல்ல தயாராகிவிட்டேன். தாமதப்படுத்தாதே உனது கையில் உள்ள கத்தியால் என்னை குத்தி கொலை செய். நான் சொர்க்கத்தில் உள்ள என் கிளியோபாட்ராவை இப்போதே காணச் செல்ல வேண்டும்”.
“என்னை மன்னித்து விடுங்கள். வேண்டுமானால் இந்த கத்தியால் குத்தி நானே தற்கொலை செய்து கொள்கிறேன். தங்களை இந்த கத்தியைக் கொண்டு தீண்ட என்னால் ஒருக்காலும் முடியாது”.
“என்னிடம் சமாதானம் கூறாதே ஈராஸ். தேவையில்லாமல் பேசிப் பேசி என் மனதை மாற்றி விடாதே. சொன்னதை மட்டும் செய்! இது என் உத்தரவு!”
“இல்லை அரசே! நீங்கள் என்னை கொன்றாலும் பரவாயில்லை. உங்களை என்னால் தீண்ட முடியாது”.
“இப்போது கத்தியால் என்னை குத்தப் போகிறாயா இல்லையா?”
“இந்த கத்தி உயிரை பலி வாங்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது. அதற்கு காரணமாக நான் அமைந்துவிட்டேன். உங்கள் முகத்தை மட்டும் திருப்பிக் கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்த கத்தியால் ஒரு உயிரை எடுக்கிறேன்…” என்று ஈராஸ் சொல்ல, அடுத்த நொடியே ஆண்டனி நெஞ்சை நிமிர்ந்து தன் முகத்தை வேகமாகத் திருப்பிக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டான்.
திரும்பியது கத்தி!
நொடிகளின் வேகம் அதிகரித்தது. ஆனால், ஆண்டனிக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், ஒரே ஒரு சத்தம். யாரோ, “ஆ…!” என்று கத்திக்கொண்டு விழுவதைக் கேட்ட ஆண்டனி சட்டென்று கண்களைத் திறந்தான். அவனுக்கு எதிரே, ஈராஸ் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.
“ஏன் இப்படி தவறாகச் செய்தாய் ஈராஸ்?” என்று ஆண்டனி கேட்கவும், அவன் கண்களை கடைசியாக மூடவும் சரியாக இருந்தது.
தன் கண் எதிரே ஈராஸின் கத்திக்குத்து மரணத்தைக் கண்ட பிறகும் கூட ஆண்டனியின் தற்கொலை எண்ணம் மாறவில்லை.
ஈராஸ் தன்னைத்தானே குத்திக்கொண்ட கத்தியை அவனது உடலில் இருந்து பிடுங்கினான். மண் தரையில் அந்த கத்தியை செங்குத்தாக நிறுத்தி வைத்த ஆண்டனி, அந்த கத்தி மீது கண் இமைக்கும் நேரத்தில் விழுந்தான். சதக் என்று அவனது உடலுக்குள் நுழைந்தது கத்தி. ரத்தமும் வேகமாக பீறிட்டது. மயக்கமாகிச் சரிந்தான் ஆண்டனி.
சற்றுநேரத்தில் அங்கு வந்த எகிப்து வீரர்கள் சிலர் ஆண்டனி கத்திக்குத்துக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும், அவருக்கு அருகில் ஈராஸ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் பார்த்துத் திடுக்கிட்டனர்.
“கிளியோபாட்ரா தங்களைப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்குள் இப்படி அவசரப்பட்டு விட்டீர்களே…” என்று அவர்கள் சொன்னபோது, போக இருந்த உயிரையும் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியானான் ஆண்டனி.
அப்போது அவனால் ஒன்றை மட்டுமே உடனடியாகச் சொல்ல முடிந்தது.
“என்னது… கிளியோபாட்ரா இன்னும் சாகவில்லையா?”
-தொடரும்
பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.