கிளியோபாட்ரா-38 ஆக்டேவியா மறுமணம் செய்த ஆண்டனி
ரோமாபுரியில் உள்ள ஆக்டேவியனின் அரண்மனையில் அன்றைய தினம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆம்… அன்றுதான், ஆக்டேவியனின் தாய் வழி சகோதரி ஆக்டேவியாவை கிளியோபாட்ராவின் மனம் கவர்ந்த ஆண்டனி மறுமணம் செய்து கொள்ளும் விழா எளிய முறையில் நடந்தது.
ஆண்டனிக்கு மட்டுமின்றி ஆக்டேவியாவுக்கும் இது மறுமணம்தான். ஏற்கனவே அவளுக்கு முதல் கணவன் மூலம் 3 குழந்தைகள் இருந்தனர். அவளது கணவன் இறந்து போய் விட்டதால், அவளை ஆண்டனிக்கு மறுமணம் செய்து வைத்தான் ஆக்டேவியன். அதில் அவனது சுயநலமும் கலந்திருந்தது.
முதலிரவு
திருமணம் நடைபெற்ற அன்றே ஆண்டனி – ஆக்டேவியா தம்பதியினரின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே அவர்கள் இருவரும் முதலிரவு இன்பத்தை அனுபவித்து இருந்ததால் பதற்றம் இன்றி சாதாரணமாகக் காணப்பட்டனர்.
இரவு வந்ததும் புதுமணத் தம்பதியரான ஆண்டனி – ஆக்டேவியா இருவரும் முதலிரவு அறையில் பளிச்சிட்ட விலை உயர்ந்த அலங்கார மஞ்சணையில் அமர்ந்திருந்தனர். அமைதியான சுபாவம் கொண்ட ஆக்டேவியா வழக்கம்போல் அமைதியாகவே இருந்தாள்.
பெண்களிடம் மன்மத விளையாட்டுகளைச் செம்மையாக வெளிப்படுத்தும் ஆண்டனிதான் அவளிடம் முதலில் பேசினான்.
“அன்பே ஆக்டேவியா… என்னைப் பற்றி நீ பலவாறு கேள்விப்பட்டு இருப்பாய். நீ கேள்விப்பட்டவை அனைத்தும் உண்மையாக கூட இருக்கலாம். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதேநேரம், உன்னை உனது விருப்பம் இல்லாமல் மணந்துகொண்டு விட்டேனா என்று சந்தேகிக்கிறேன்…”
அதுவரை அமைதியாக இருந்த ஆக்டேவியா மெல்லப் பேசினாள்.
“அப்படியெல்லாம் தவறாக எதையும் நான் எண்ணவில்லை. மாவீரனான உங்களிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.”
“நல்லது ஆக்டேவியா. உனது பெருந்தன்மையை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது” என்ற ஆண்டனி, அவளை இறுக்கமாக அணைத்தான். அவளுடன் இயல்பாகக் கலந்தான். ஆக்டேவியாதான் அதிகமாகவே வெட்கப்பட்டுப் போனாள்.
மறுநாள் காலை, ஆண்டனிக்கு முன்னதாகவே ஆக்டேவியா எழுந்து குளித்தும் முடித்திருந்தாள். அழகான, மென்மையான ஆடை அவளது கட்டழகை மெல்லிய திரை போட்டு மறைத்திருந்தது.
சிந்தனையை தூண்டிய ஆக்டேவியா

ஆக்டேவியாவின் பேரழகில் மீண்டும் சிலிர்த்துப்போன ஆண்டனி, அவளது சிவப்புக் கையை வேகமாகப் பிடித்து இழுத்தான். அந்த வேகத்தில் அவளது கை இன்னும் சிவப்பாகி ரத்தமே வந்துவிடும்போல் ஆகிவிட்டது.
அப்போது, “உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமோ…” என்று இழுத்தாள் ஆக்டேவியா.
“அப்படி என்ன கேள்விப்பட்டாய்?”
“இல்லை… பெண்கள் விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் சபலம் என்றார்கள். நானும், எல்லா ரோமாபுரி ஆண்களிடமும் இருக்கக்கூடிய விஷயம்தானே என்று அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ‘அந்த’ விஷயத்தில் நீங்கள் இந்த அளவுக்கு வேகமாக இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.”
“அது சரி ஆக்டேவியா… இப்போது என்னை புகழ்ந்துரைக்கிறாயா? இல்லை… நான் ஏற்கனவே செய்த தவறுகளை சுட்டிக்காட்ட இதுதான் தகுந்த சமயம் என்று சொல்கிறாயா?”
“நான் இப்படிச் சொல்வதால், அதற்காக என்னை தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் வேகம் அதிகமாக இருக்கிறதே… அதனால்தான் அப்படிக் கேட்டேன்…” என்ற ஆக்டேவியா, ஆண்டனியின் தலைமுடியை வேகமாகக் கோதிவிட்டு அங்கிருந்து அப்போதைக்கு அகன்றாள்.
வாடினாள் கிளியோபாட்ரா
ஆண்டனி ரோமாபுரியில் இப்படி ஜமாய்த்துக் கொண்டிருக்க… எகிப்தில் கிளியோபாட்ராவோ ஆண்டனியின் நினைவால் வாடிக் கொண்டிருந்தாள். ஆண்டனியின் காமக்களியாட்டத் தேவைகளுக்கு தானும், எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவும் தேவைப்பட்டதால்தான், அவையே கதியென்று அவன் மதி மயங்கிக் கிடந்தான் என்பது அவளுக்கு அதுவரை தெரியாமலேயே இருந்தது.
ஆண்டனியைக் காணாத கிளியோபாட்ராவின் தேகம் மெலிந்துபோய் காணப்பட்டது. முகத்தில் எப்போதும் காணப்படும் மகிழ்ச்சி காணாமல்போய் இருந்தது. சோகமாய் உறைந்துபோய் இருந்த அவளை உசுப்பேற்றிவிட்டாள் தோழி சார்மியான்.
“அரசியே! உங்கள் சோகத்திற்கான காரணம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். மாவீரர் ஆண்டனி, தற்காலிகமாகத்தான் உங்களை விட்டு இப்போது பிரிந்திருக்கிறார். அவர் உங்களைத் தேடி விரைவில் இங்கு வருவார். அதனால் நீங்கள் எப்போதும்போல் சந்தோஷமாக இருக்கலாமே…”
“நல்லது சொன்னாய் என் அருமைத் தோழி. உனது இந்த பேச்சு எனக்கு ஆறுதலை தருகிறது” என்ற கிளியோபாட்ரா மலரும் நினைவுகளில் மூழ்கினாள்.
பதற்றப்பட வைத்த செய்தி
அப்போது வேகமாக வந்தான் தூதுவன் ஒருவன். அவனைப் பரபரப்புடன் ஏறிட்டாள் கிளியோபாட்ரா.
“தூதுவனே… உன் வேகத்தைப் பார்த்தால் மகிழ்ச்சியான செய்தி ஏதேனும் கொண்டு வந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். ஆண்டனி என்னைப் பார்க்க வந்து கொண்டு இருக்கிறாரா? அல்லது, நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டு, தூது அனுப்பி இருக்கிறாரா? உண்மையை வேகமாகச் சொல்…”
“நம் மாவீரர் ஆண்டனி அவர்களைப் பற்றிய செய்திதான் அரசி”.
“அப்படியானால் வேகமாகச் சொல். தேனான செய்தி கொண்டு வந்திருக்கும் உன் பேச்சைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்.”
“நான் கொண்டு வந்துள்ள செய்தியை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் அரசி!”
“சந்தோஷம் எந்த அளவுக்கு நம்மை பாதிக்கும் என்று நான் நன்கு அறிவேன். உன்னிடமும் அந்த பாதிப்புதான் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். விரைவாக அந்த நல்ல செய்தியைச் சொல்…”
“அரசியாரே… நான் கொண்டு வந்துள்ள செய்தி நல்ல செய்தி அல்ல…”
“அப்படியானால் கெட்ட செய்தியா? என் ஆண்டனி இறந்து விட்டாரா?”
“அப்படி இல்லை அரசி…”
“என்ன சொல்ல வருகிறாய்? என்னை குழப்பாமல் உண்மையை மறைக்காமல் சொல். நீ கொண்டு வந்துள்ள செய்தி என்ன?”
“நம் மாவீரர் ஆண்டனி, ஆக்டேவியா என்ற அழகான பெண் சொல்வதை எல்லாம் கேட்க தொடங்கி இருக்கிறாராம்.”
“வார்த்தையை அளந்து பேசு. ஆண்டனிக்கு அழகான பெண், காதலி, மனைவி நான் ஒருத்தி மட்டும்தான். இனியும் அந்த பெண்ணை அழகி என்று சொன்னால் நான் உன் நாக்கை அறுத்து விடுவேன். சரி… அந்த ஆக்டேவியா யார்?”
“இளைய சீஸரான ஆக்டேவியனின் தாய் வழி சகோதரியாம்.”
“அவளுக்கும், என் ஆண்டனிக்கும் என்ன முடிச்சு போடுகிறாய்?”
“நான் சொல்வதைக் கேட்டு வருத்தம் கொள்ள வேண்டாம் அரசியாரே… நான் சொல்லப் போவது முற்றிலும் உண்மையானதுதான்.”
“உள்ளதை உடனடியாகச் சொல். என் பொறுமையை மேலும் சோதிக்காதே…”
“நம் மாவீரர் ஆண்டனிக்கும், அந்த ஆக்டேவியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது” என்று சொன்ன அந்த தூதுவன் மேற்கொண்டு எதையும் சொல்லாமல் வாய் பொத்தி அமைதியானான்.
அதேநேரம், கிளியோபாட்ரா கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். தகவல் சொன்ன தூதுவனின் இடது கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறைவிட்டாள். அதைத் தாங்க முடியாத அவன் அங்கேயே சுருண்டு விழுந்தான்.
அவளது அந்த நேரத்திலான கோபத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினாள்.
ஆண்டனிக்கும், ஆக்டேவியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்ன தூதுவனை, “அவனை மிக மோசமான தொற்றுநோய் தாக்கட்டும்” என்று கிளியோபாட்ரா வாயால் சாபமிடுகிறாள்.
மயங்கிச் சரிந்தாள்
தூதுவன் உண்மையையே சொன்னாலும், ஆண்டனிக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் திருமணம் ஆகி இருக்காது என்றே நம்பினாள் கிளியோபாட்ரா. அவளது தோழி சார்மியான் கூறிய சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் புலம்ப ஆரம்பித்தாள்.
“ஆண்டனிக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தி பொய்யாக இருந்தால், எனது எகிப்தின் பாதிப் பகுதியை இழக்கக்கூட தயாராக இருக்கிறேன்…” என்று, அப்பாவியாய் புலம்பிய அவளைப் பார்க்கவே சார்மியானுக்கு பரிதாபமாக இருந்தது.
அந்த நேரத்தில் கிளியோபாட்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், ஆண்டனிக்குத் திருமணம் ஆன விஷயத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மயக்கமாகிச் சரிந்தாள்.
-தொடரும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.