கிளியோபாட்ராவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்

கிளியோபாட்ரா-39 கிளியோபாட்ராவுக்கு இரட்டைக் குழந்தை

கிளியோபாட்ரா-39 கிளியோபாட்ராவுக்கு இரட்டைக் குழந்தை

அலெக்ஸாண்டிரியாவில் இருந்து ரோமிற்கு ஆண்டனி வந்து 6 மாதம் வேகமாக ஓடியிருந்தது. கி.மு.40-ம் ஆண்டின் குளிர்காலம் கரைந்து, கி.மு.39 பிறந்திருந்தது.

ஒருபுறம் ஆசைக் காதலி கிளியோபாட்ரா இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்தபடி நிறைமாத கர்ப்பிணியாக இருக்க… மறுபுறம், மறுமணம் செய்து கொண்ட ஆக்டேவியாவுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஆண்டனி மூலம் கர்ப்பிணி ஆனாள் ஆக்டேவியா. அவளது வயிற்றில் பெண் குழந்தை பதிவாகி வளர ஆரம்பித்துக் கொண்டிருந்தது.

இரட்டைக் குழந்தை

இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிளியோபாட்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அலெக்ஸாண்டிரியாவில் இருந்து மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் கைதேர்ந்த மருத்துவச்சிகள் முன்னதாகவே வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கிளியோபாட்ராவுக்கு இரண்டாவது முறையாக பிரசவம் பார்த்தனர்.

சிறிதுநேரத்தில் அடுத்தடுத்து இரு குழந்தைகள் பிறந்தனர். முதலில் ஒரு ஆண் குழந்தையும், அதைத் தொடர்ந்து பெண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தை அலெக்ஸாண்டர் ஹெலியோஸ் என்றும், பெண் குழந்தை கிளியோபாட்ரா செலின் என்றும் அழைக்கப்பட்டனர். 

ஆண்டனி மூலம் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை ஆசையோடு எடுத்து முத்தமிட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கு அருகில் நின்றிருந்த, அவளுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் பிறந்த சிறுவனான டாலமி சீஸர் இரு குழந்தைகளையும் ஆசையோடு தொட்டுச் சிலிர்த்தான்.

கிளியோபாட்ரா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தகவல் ரோமாபுரிக்கும் பறந்தது. ஆனால், அதைக் கேட்கத்தான் ஆண்டனி இல்லை. அவன், ஆக்டேவியாவுடன் ஏதென்சுக்குச் சென்றிருந்தான். அங்கிருந்தபடி தனது கட்டுப்பாட்டிற்குள் வந்த நாடுகளை ஆட்சி செய்ய ஆரம்பித்து இருந்தான். அங்குள்ள பிரம்மாண்ட அரண்மனையில் புதிய மனைவி ஆக்டேவியாவுடன் குடும்பம் நடத்தி வந்தான். அங்கே, கி.மு.39 இறுதியில் ஆண்டனி மூலம் ஆக்டேவியாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ஊசலாடிய ஆண்டனியின் மனம்

ஆக்டேவியா மிகவும் அழகானவளாகவே இருந்தாலும், ஆண்டனியின் மனமோ ஏனோ கிளியோபாட்ராவைத்தான் நாடியது. ஆக்டேவியா தந்த இனிய தீண்டல்கள், முத்தங்கள் எல்லாம் கிளியோபாட்ராவையே நினைவுப்படுத்தின. இதனால், சிலநேரங்களில் சொல்ல முடியாத தவிப்புக்கு ஆளானான். 

நாட்கள் வேகவேகமாக நகர… அதுவரை நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துவிட்ட ஆக்டேவியா பொலிவிழக்கத் தொடங்கினாள். ஆண்டனிக்கும் அவள் மீதான மோகம் குறையத் துவங்கியது. அவர்களுக்குள் மெல்லியதாக ஏற்பட்ட விரிசல் வேகமாக விரியவும் ஆரம்பித்து இருந்தது.

அதேநேரம், ஆக்டேவியாவின் சகோதரன் ஆக்டேவியனுக்கும், ஆண்டனிக்கும் இடையே பனிப்போர் துவங்கி இருந்தது. அவன், ஆண்டனிக்கும் கிளியோபாட்ராவுக்கும் உள்ள உறவு பற்றி ஒன்றுக்கு இரண்டாகக் கொளுத்திப் போட்டுவிட்டதோடு, ஆண்டனியின் போர் நடவடிக்கைகள் மீதும் குற்றம் சுமத்தினான். மூவர் கூட்டணியின் உடன்பாடுகளை ஆண்டனி மீறுவதாகவும் குற்றம் சாட்டினான்.

மனைவியுடன் வாக்குவாதம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒருநாள் ஆக்டேவியாவுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டான் ஆண்டனி.

“ஆக்டேவியா! உன் ஒன்றுவிட்ட சகோதரனை கண்டித்து வை. அவன், மூவர் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி எனது நட்புக்குரிய செக்ஸ்டஸ் பாம்பேவுக்கு எதிராக போர் செய்துள்ளான். தனது எதிர்கால திட்டம் பற்றி அறிக்கை வெளியிட்டு இருப்பதோடு, என்னைப் பற்றியும் பலவாறு தவறாகப் பேசி இருக்கிறான். அவனது சகோதரியாகிய உன்னை நான் திருமணம் செய்து இருக்கிறேன். அப்படி இருக்கும்போது, அவன் என்னை புகழ்ந்துதான் பேச வேண்டுமே தவிர, இப்படி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது தவறு.”

“நிச்சயம் என் சகோதரன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான். இந்த விஷயத்தில் தாங்கள் அவசரப்படாமல் முடிவெடுக்க வேண்டும்.”

“அப்படியென்றால் நான்தான் அவசரப்படுகிறேனா?”

“நீங்கள் தவறாகக் கருத வேண்டாம். யார், யாரோ சொன்னார்கள் என்பதை எல்லாம் நம்ப வேண்டாம். ஆக்டேவியன் என் சகோதரன். எனக்கும், நமக்கும் எதிராக எதையும் சொல்லியிருக்க மாட்டான்.”

“நீதான் உன் ஒன்றுவிட்ட சகோதரனை மெச்சிக்கொள்ள வேண்டும். என்னால் அது முடியாது. அவன் என்னைப் பற்றி தவறாக பேசியது உண்மை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”

“சரி… என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? அதையாவது சொல்லுங்கள்…”

“ஆக்டேவியனின் மேல் உள்ள என் கோபவெறிக்கு உன்னை அடிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. நீ என் மனைவியாக இருப்பதால், என் கை உன் மீது ஓங்க யோசிக்கிறது. அதேநேரம், உன்னிடம் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கிறேன்.”

“என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன்.”

“எனக்காக நீ தூது செல்ல வேண்டும்.”

“என்ன தூது?”

“உன் சகோதரனிடம்தான் நீ தூது செல்ல வேண்டும். எனக்கும் அவனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதான் தீர்வு காண வேண்டும். அந்த தீர்வு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதுவும் கூடிய சீக்கிரமே…” என்ற ஆண்டனி, அங்கிருந்து சட்டென்று வேகமாக வெளியேறினான்.

சில நாட்களில் ஆக்டேவியா, ஆண்டனியிடம் விடைபெற்று எதென்சில் இருந்து ரோமாபுரிக்குப் புறப்பட்டாள். அவளது கையில் ஒரு பெண் குழந்தை இருக்க… அவளது வயிற்றில் ஆண்டனியின் இன்னொரு வாரிசும் உருவாகத் துவங்கி இருந்தது. அதுவும் பெண் குழந்தைதான்!

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *