கிளியோபாட்ரா-8: இந்தப் பேரழகியே எனக்கு மனைவியாக வாய்த்தால் எப்படி இருக்கும்?
எகிப்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜூலியஸ் சீஸரைச் சந்திக்க, தனது அமைச்சரும், ‘அலி’யுமான பொதினசுடன் எலூசியத்தில் இருந்து அலெக்ஸாண்டிரியாவுக்குப் பயணமானான், விரட்டப்பட்ட எகிப்து மன்னன் 13-ம் டாலமி.
கிளியோபாட்ரா
அதேபோல், கடற்கரை நகரமான அஸ்கலனில் அடைக்கலம் புகுந்திருந்த கிளியோபாட்ராவும் சீஸரைச் சந்திக்க வந்தாள்.
எல்லோரும் அறியுமாறு அலெக்ஸாண்டிரியா சென்றால், தன்னை சீஸரின் ஆட்கள் கொல்கிறார்களோ இல்லையோ, மாஜி கணவனும் தம்பியுமான 13-ம் டாலமியால் நிச்சயம் கொல்லப்படுவோம் என்று கருதினாள் அவள். அதனால், மாறுவேடத்தில் அலெக்ஸாண்டிரியாவுக்குச் சென்றாள்.
சில நாட்கள் கழிந்தன.
பரபரப்பாக்கிய பாரசீகக் கம்பளம்
ஒருநாள் அலெக்ஸாண்டிரியாவில் உள்ள எகிப்திய அரண்மனையில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார் ஜூலியஸ் சீஸர்.
‘எகிப்தை கைப்பற்றியாயிற்று; அடுத்து என்ன செய்யலாம்?’ என்று அவர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு பொருள் அவரது பார்வையைப் பளிச்சென்று கவர்ந்தது. அந்தப் பொருளை கூர்ந்து நோக்கினார் சீஸர். அது பாரசீக நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட அழகான தரை விரிப்பு ரத்தினக் கம்பளம். அது அழகாகவே சுருட்டப்பட்டுக் கிடந்தது.
அதன் அழகு மட்டும் ஜூலியஸ் சீஸரை கவரவில்லை. திடீரென்று அது நெளிந்ததுதான் அவரது பார்வையை இழுத்தது. சீஸரின் பார்வை அந்த ரத்தினக் கம்பளம் மீது முழுவதுமாகப் பதிந்தபோது, அது இன்னும் வேகமாக வளைந்து நெளிந்தது. உடனே அதை அவிழ்த்து என்னவென்று பார்க்க உத்தரவிட்டார்.
வீரன் ஒருவன் அந்த ரத்தினக் கம்பளத்தை நெருங்கினான். அப்போதும் அந்தக் கம்பளம் நெளிந்து கொண்டிருந்தது.
‘ஒருவேளை மலைப் பாம்பாக இருக்குமோ…’ என்று கூட அவன் நினைத்தான். ‘மலைப் பாம்பை தேடிக் கண்டுபிடித்து, இப்படி கம்பளத்திற்குள் வைத்து கட்டிக் கொண்டுவர வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லையே…’ என்று யோசித்தவன், அதை அவிழ்த்து உருட்டி விட்டான்.
எழுந்தது அழகுப் பதுமை!
கம்பளத்தின் ஒரு முனை அந்த வீரனின் காலடியில் இருக்க… மறுமுனை ஜூலியஸ் சீஸரை நோக்கி வேகமாக உருண்டு போனது. அதற்குள் ஏதோ விசித்திரப் பொருள் ஒன்று இருப்பது மட்டும் எல்லோருக்கும் புரிந்தது.
அதனால் சீஸர் உள்பட அவையில் இருந்த அனைவரது பார்வையும் அந்த ரத்தினக் கம்பளத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
கம்பளத்திற்குள் உருண்டு வந்த அந்தப் பொருள் ஒரு அழகுப் பதுமையாக ஜூலியஸ் சீஸரின் கால் அருகில் வந்து விழுந்தது. அடுத்த நிமிடமே வலது கையைத் தரையில் ஊன்றி எழுந்து நின்றாள் அந்த அழகுப் பதுமை. அவள் வேறு யாருமல்ல; கிளியோபாட்ராவேதான்!

அவளைப் பார்த்த மாத்திரத்தில் அரியணையில் இருந்து எழுந்துவிட்டார் ஜூலியஸ் சீஸர். அவளை உச்சியில் இருந்து உள்ளங்கால்வரை வேகமாக நோட்டமிட்டார்.
அழகு தந்த போதை
கொள்ளை அழகு என்பார்களே… அப்படிப்பட்ட ஓர் அழகு அவளது மேனியில் நைல் நதியாகத் தவழ்ந்தோடியது. ‘கிராப்’ செய்தது போல் காணப்பட்ட தலைமுடி அவளது முக அழகை இன்னும் பளிச்சென்று காட்டியது.
முகமும் களையான முகம். செக்கச்செவேலான நிறம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு சிகப்பாக மிகவும் அழகாகவே இருந்தாள் அவள். கண்களில் அவ்வளவு வசீகரம். அதில் இழையோடிய காமம், மது அருந்திய போதையை, அது அருந்தாமலேயே தந்தது.
கழுத்தும் நீளமாய், நெளிவாய் சங்குக் கழுத்தை நினைவுபடுத்தியது. கழுத்துக்குக் கீழே உருண்டு திரண்டு காணப்பட்ட மார்பகங்கள் கை படாத ரோஜாவை நினைவுபடுத்தின. அவளைப் போலவே அவையும் கம்பீரமாக நிமிர்ந்து நின்றன.
அவளது மேலாடை இரு மார்பகங்களும் மேலோட்டமாக தெரியும் அளவுக்கு இறங்கிப்போய் இருந்தது. அந்த மார்பகங்களுக்கு இடையில் பனித்துளியாய் பூத்திருந்த சில வியர்வைத் துளிகள் சீஸரை என்னமோ செய்தன.
அவளது இடது மார்பகத்திற்குள் லப்-டப் ஓசையோடு துடித்த இதயமும், வலது மார்பகத்திற்குள் மூச்சை உள்ளேயும், வெளியேயும் இழுத்துவிட்ட நுரையீரலும், வேகமாக இயங்கி, அதனால் அவளது மார்பகம் பங்குச்சந்தை ஏற்றம், இறக்கம்போல் ஏறியும், இறங்கியும் கொண்டிருந்தது சீஸரை ஓரேயடியாகக் கிறங்க வைத்துவிட்டது. இவ்வளவையும் பார்த்து ஏங்கியவர், தனது நாக்கால் உதட்டை அவையோருக்குத் தெரியாமல் வேகமாக ஈரப்படுத்திக்கொண்டு, பார்வையை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கினார்.
அளவோடு அமைந்திருந்த கொடியிடையும், எதையோ எதிர்பார்ப்பது போல் துடித்த அளவோடு ஒட்டிய வயிறும், அதற்கு கீழே செவ்வாழைத் தண்டாய் செழிப்போடு காணப்பட்ட இரு தொடையும் பேரரசர் சீஸரை மனதிற்குள் பல ‘காதல் ஹைக்கூ’ கவிதைகளையே எழுதச் செய்துவிட்டன.
மீண்டும் பரிசா?
இவ்வளவு அழகையும் கிளியோபாட்ராவிடம் பருகி முடித்துக் கிறங்கிப்போன ஜூலியஸ் சீஸர், அவளைக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்க்க முடியாமல் தவித்தபடியே பேச ஆரம்பித்தார்.
“அழகு கிரேக்க தேவதைபோல் என் முன் வந்து விழுந்த பெண்ணே… நீ யார்?”
“நான்தான் கிளியோபாட்ரா! இந்தப் பேரரசுக்கு மகாராணி”.
“ஓ… நீதான் கிளியோபாட்ராவா? உன்னைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது என்ன வேலையாக இங்கே இந்தக் கோலத்தில் வந்திருக்கிறாய்?”
“அதுபற்றி தனியாகத்தான் நான் தங்களிடம் பேச வேண்டும்”.
“அவ்வளவு ரகசியமான விஷயமா அது?”
“ஆமாம்! இன்னொன்று… உங்களுக்காகப் பரிசு ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறேன்”.
“என்னது… பரிசா…?”
ஏற்கனவே, 13-ம் டாலமி பரிசு என்று பாம்பேயின் தலையைக் கொடுத்ததால், இவளும் அப்படி ஏதாவது கொண்டு வந்து இருப்பாளோ… என்று அவசரப்பட்டு பதற்றமானார் சீஸர்.
“நீங்கள் வேறு எதையோ நினைத்து பயப்பட வேண்டாம். அந்தப் பரிசு நானே தான்..!”
கிளியோபாட்ரா இப்படிச் சொன்னதும், ஜூலியஸ் சீசரின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
“இரவில் நாம் இருவர் மட்டும் தனியாக சந்தித்துப் பேசுவோம்…” என்று கூறிவிட்டு, தன் பணிப்பெண்களை அழைத்து, கிளியோபாட்ராவை நன்றாக உபசரிக்க உத்தரவிட்டார் ஜூலியஸ் சீஸர்.
பணிப்பெண்கள் கிளியோபாட்ராவை அழைத்துச் செல்ல… அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சீஸர். அந்தப் பார்வை வீச்சில் அவரது மனமும் தடம் புரண்டு போனது.
‘இந்தப் பேரழகியே எனக்கு மனைவியாக வாய்த்தால் எப்படி இருக்கும்?’ என்று கற்பனைக் குதிரையேறிப் பறக்க ஆரம்பித்தார்.
-தொடரும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.