கழுதைப்பால் குளித்த பேரழகி; பேரழகியின் நீராடல்
அந்தி சாயும் நேரம். அந்தப் பாலைவன பிரதேசத்து சூரியன் மஞ்சள் தேய்த்து குளித்த ஜொலிப்பில் – ஒருவித மயக்கத்தில் இருந்தான்.
அலெக்ஸாண்டிரியாவில் உள்ள தனது அரண்மனைக்குள் கிளியோபாட்ராவும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தாள். ஆம்… அவளும் வாசனைத் திரவியங்கள் கலந்த மிகவும் சுத்தமான தண்ணீர் நிறைந்த தொட்டியில் நீராட தயாராகிக் கொண்டிருந்தாள்.
அரண்மனை சேவைப் பெண்கள் சிலர் அவளை அழைத்து வந்தனர். குளியல் அறை இருந்த பகுதிக்குள் வந்ததும், சேவைப் பெண்களை, ‘நான் கூப்பிடும்போது மட்டும் வந்தால் போதும்’ என்று கூறி அனுப்பி வைத்தாள் கிளியோபாட்ரா. அவர்கள் கதவை வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் இட்டுக்கொண்டு வெளியேறினர்.
குளியல் தொட்டி அருகில் வந்து நின்றவள், தனது ஆடையை ஒவ்வொன்றாக விலக்கத் தொடங்கினாள். அதற்கு முன்னதாக, சற்றே திரும்பினாள். அங்கே, குளியல் தொட்டியை ஒட்டி ஒரு பாத்திரத்தில், அது நிறையக் கழுதைப்பால் வைக்கப்பட்டு இருந்தது.
பேரரசியாக இருந்தபோது முழுக்க முழுக்க கழுதைப்பாலிலேயே குளித்து பழக்கப்பட்டவளுக்கு, இப்போது அவள் நாட்டை விட்டே விரட்டப்பட்டவள் என்பதால், அவள் பாலில் குளித்த பழக்கத்திற்காக மட்டும் இப்படி பாலை வைத்திருந்தனர் போலும்! இருந்தாலும், சமாளித்துக்கொண்டாள்.
கழுதைப்பால் நீராடல்
அடுத்த நொடியே ஆடையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டுக் குளியல் தொட்டிக்குள் இறங்கினாள். அவளது முக அழகைக் காட்டிலும், அவளது ஆடைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள் இன்னும் அழகாக மஞ்சள் நிறத்தில் மின்னின.
குளியல் தொட்டிக்குள் அமர்ந்து கொண்டவள் நிதானமாக குளிக்க ஆரம்பித்தாள். சுமார் 10 நிமிடங்கள் மெதுவாக நகர்ந்து முடிந்தன.
நீருக்குள் நீராடி முடித்தவள், அந்தப் பெரிய தொட்டியில் இருந்து சற்று மேலே எழுந்து அமர்ந்தாள். தொடர்ந்து பாத்திரத்தில் இருந்த பாலை ஒரு கோப்பையில் மொண்டு தன் மீது ஊற்றிக் குளித்தாள். அந்தத் தொட்டி தண்ணீர் முழுக்க பாலாக மாறியது.
குளித்தது போதும் என்று நினைத்தவள், தனது இரு கைகளால் தட்டினாள். அவளது சேவைப் பெண்கள் இருவர், குளியல் அறையின் முகப்பு வாசல் முன்பு வந்து நின்றனர்.
“உள்ளே வரலாமா மகாராணி..?” அவர்களது குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியவள், “ஆம்… வாருங்கள்..!” என்றாள்.
அடுத்த நொடியே அவர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தனர். அவர்களில் ஒருத்தியின் கையில் இரவு நேரம் மகாராணிகள் அணியக்கூடிய மிகவும் விலை உயர்ந்த ஆடை இருந்தது. இன்னொருத்தி, தாம்பாளம் போன்ற ஒரு தட்டில் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்தாள்.
இருவரும் கிளியோபாட்ரா அருகில் வந்ததும், அவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் அவளை நோக்கினர்.
“மகாராணி! நாங்கள் திரும்பிச் செல்ல உத்தரவு தர வேண்டும்!”
“தாராளமாகச் செல்லுங்கள்!”
அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தைவிட்டு அகன்று இருந்தனர் சேவைப் பெண்கள் இருவரும். குளியல் அறையின் முன்புறக் கதவும் மூடப்பட்டு இருந்தது.
சிறிதுநேரத்தில், ஆண் மயில் தோகையாய் விரிந்து கிடந்த தலைமுடியை இந்தியப் பெண்கள் போல் அள்ளி முடிந்துகொண்டு, குளியல் தொட்டிக்குள் இருந்து எழுந்தாள் கிளியோபாட்ரா.
அவளது ஒட்டுமொத்த அந்தரங்க அழகையும் பருகித் தீர்த்த களைத்துப்போன குளியல் தொட்டி தண்ணீர், அவளை மீண்டும் ஒருமுறை ஏக்கமாய் பார்த்து, வியந்து ஓய்ந்தது.
ஓரிரு நிமிடங்கள் கரைந்திருக்கும்.
உடலை ஒட்டி இழையோடும் மெல்லிய விலை உயர்ந்த ஒற்றை இரவு ஆடை அவளது அழகைப் பாதுகாக்கும் பொருட்டு மூடியிருந்தது. ஆடையின் நடுவில் இருந்த நாடாவால், இறுக்கமாக அல்லாமல் கொஞ்சம் தளர்த்தி இடுப்பை கட்டிக்கொண்டாள். வாசனைத் திரவியங்களும் அவளது மேனியில் மணக்க ஆரம்பித்து இருந்தன.

முத்தமிட்ட மலர்கள்
அடுத்த நிமிடமே குளியல் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அறைக்கு வெளியில் பத்துக்கும் மேற்பட்ட சேவைப் பெண்கள் மலர்கள் தாங்கிய தட்டுகளுடன் காத்திருந்தனர்.
அவளது பொன்னான பாதங்கள் வெளிப்பட்டதும் அவர்கள் அவளை நோக்கி மலர்களைத் தூவ ஆரம்பித்தனர். படுக்கையறையை நோக்கி அவள் செல்ல… அவளுக்கு முன்பாக மலர்களை அவளது பாதங்களுக்குக் காணிக்கை ஆக்கியபடியே சென்றனர் அந்தப் பெண்கள்.
படுக்கையறையை அடைந்ததும் அந்த சேவைப் பெண்கள் நின்று கொண்டனர். 21 வயதே ஆன கிளியோபாட்ரா மட்டும் அறைக்குள் நுழைந்தாள்.
-தொடரும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.