கிளியோபாட்ரா-7 13-ம் டாலமி படம்

கிளியோபாட்ரா-7 சிறுவன் 13-ம் டாலமியின் சூழ்ச்சி

சிறுவன் 13-ம் டாலமியின் சூழ்ச்சி. எகிப்தைக் கைப்பற்றினார் சீஸர். பாம்பேயின் தலையைத் துண்டித்து தனக்குப் பரிசாகக் கொண்டு வந்த 13-ம் டாலமி மீது ஜூலியஸ் சீஸருக்குக் கோபம் அதிகமானது.

“இவனிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது” என்று நினைத்தாரோ என்னவோ, “எகிப்து இனி என் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும்…” என்று உத்தரவிட்டு விட்டு அரியணையில் இருந்து வேகமாக இறங்கி வெளியேறினார்.

எகிப்து அரசன் 13-ம் டாலமிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ‘அமைச்சர்கள் பேச்சைக் கேட்டு அக்காளும், மனைவியுமான கிளியோபாட்ராவை ஏற்கனவே துரத்தி விட்டோம். இப்போது இந்த சீஸரே நம்மை துரத்திவிடுவார் போலிருக்கே…’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

முற்றுகையிட்டது ரோமானியப் படை

அன்று இரவு

அரண்மனையின் சொகுசுப் படுக்கையறையிலும் அவனுக்குத் தூக்கம் வர மறுத்தது. நாளை என்ன நடக்குமோ என்ற பயம் அதிகமாகியது. ‘பயப்படும் படியாக எதுவும் நடக்காது’ என்று தலைமை அமைச்சர்கள் தைரியமான வார்த்தைகளைக் கூறியிருந்ததால், மனதைத் தேற்றிக்கொண்டு படுத்துத் தூங்கினான்.

மறுநாள் காலை விடிந்தது.

13-ம் டாலமி பயந்தது போலவே நடந்தது.

ஜூலியஸ் சீஸரின் படைகள் எகிப்துப் பேரரசின் தலைநகரான அலெக்ஸாண்டிரியாவை முற்றுகையிட்டன. நகரில் எங்குப் பார்த்தாலும் மக்களின் அபயக்குரல். பொதுமக்களில் பலர் உயிரைத் தற்காத்துக்கொள்ள மறைவான இடங்களில் பதுங்கினர். சிலர் பாதுகாப்பான இடம் தேடி கடற்கரையோரம் ஓடினர்.

மன்னன் 13-ம் டாலமிக்கும் பயம் அதிகமாகியது. தனது உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சினான். தலைமை அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினான். சீஸரின் ஆட்களைக் கொல்லத் தனது படைவீரர்களை அனுப்பினான்.

ஆனாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பலம் வாய்ந்த ஜூலியஸ் சீஸரின் படை வெற்றி பெற்றது. 13-ம் டாலமியின் படைவீரர்கள் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். இன்னும் ஏராளமான பேர் போர்க் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

டாலமி தப்பி ஓட்டம்

தகவல் அறிந்த 13-ம் டாலமி பதறிப் போனான். தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பக்கத்து நாடான எலூசியத்திற்குத் தப்பி ஓடினான். அலெக்ஸாண்டிரியா முழுவதும் சீஸரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கூடவே, 13-ம் டாலமியின் அரண்மனையும்தான்!

அன்றே, ரோமப் பேரரசுக்கு உட்பட்டதாக எகிப்தை அறிவித்தார் ஜூலியஸ் சீஸர். ஆணைகளையும் பிறப்பிக்க ஆரம்பித்தார்.

இப்போது கிளியோபாட்ரா ஒரு பக்கம் தலைமறைவு; 13-ம் டாலமி இன்னொரு பக்கம் தலைமறைவு.

எத்தனை நாட்களுக்குத்தான் இப்படித் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது என்று யோசித்த கிளியோபாட்ராவும், 13-ம் டாலமியும், ஜூலியஸ் சீஸரிடம் இருந்து எகிப்தைக் கைப்பற்ற ரகசியத் திட்டம் தீட்டினர். சீஸரின் படையை நேருக்கு நேராக எதிர்த்துப் போரிட படை பலம் தங்களிடம் இல்லாததால், அவர்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

13-ம் டாலமி சிறுவன் என்பதால், அவனால் ராஜதந்திரமான முடிவுகளை எடுக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று, கையைப் பிசைந்து கொண்டு, வழக்கம்போல் தலைமை அமைச்சர்களிடமே கேட்டான்.

முடிவு

“மன்னா! இப்போது நம்மிடம் போதிய படைபலம் இல்லை. அதனால், யோசித்துதான் முடிவு எடுக்க வேண்டும்”

“யோசித்துதான் எடுக்க வேண்டும் என்றால், என்னை இப்படியே இருக்கச் சொல்கிறீர்களா?”

“இல்லை மன்னா! இப்போதைய நிலவரப்படி சீஸரிடம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியே இல்லை”.

“ஏற்கனவே அவர்களுக்கு பணிந்து போய்தானே நாம் ஆட்சி செய்கிறோம். வேறு ஏன் நம் மீது கோபம் கொள்கிறார்கள்?”

Ptolemy 13

“முன்பு பாம்பேவை நாம் அனுசரித்து நடந்தோம். அவருக்கு விசுவாசமாக இருந்தோம். சீஸருக்கு அவர் எதிரி. இப்போது பாம்பேவை நாம் கொன்றுவிட்டோம். நமது இந்த காரியத்தால் நம்மிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது என்று அவர் நினைக்கிறார் போலும்…”

“அப்படியென்றால், என்னை அவரது காலில் போய் விழச் சொல்கிறீர்களா?”

“மன்னா! நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. அவருக்கு ஆதரவாகப் போய்விடுவோமே என்றுதான் சொல்ல வருகிறோம்…” என்று, 13-ம் டாலமியிடம் யோசனை கூறினார்கள் தலைமை அமைச்சர்கள்.

வேறு வழி தெரியாத அவன், “சரி…” என்று தலையை ஆட்டி வைத்தான்.

ஆட்சிக்காக தன்மானத்தைக் கூட இழக்க தயார் ஆனான் 13-ம் டாலமி. ஆனால், அவனது அக்காளும், முன்னாள் மனைவியுமான கிளியோபாட்ராவோ வேறுவிதமாக யோசித்தாள்.

தனது அழகால், ஜூலியஸ் சீஸரை என்ன… எப்பேர்ப்பட்ட பேரரசனையும் வீழ்த்திவிட முடியும் என்று உறுதியாக நம்பினாள் அவள். அதற்கான ஆயுதத்தையும் உடனடியாகக் கையில் தூக்கினாள்.

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *