Queen Cleopatra

கிளியோபாட்ரா-3 திடீரென்று ஆட்சிப் பீடத்திற்கு ஏறியது ஏன்?

கி.மு.51-ல் தனது 12 வயது தம்பி 13-ம் டாலமியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் எகிப்து பேரரசின் அரசி ஆனாள் 18 வயது கிளியோபாட்ரா. அவளது தம்பி 13-ம் டாலமி நாட்டின் அரசன் ஆனான். அவள் திடீரென்று ஆட்சிப் பீடத்திற்கு ஏறியது ஏன்? அதன் பின்னணியில் நடந்தது என்ன?

ரோமானியப் பேரரசு

அந்தக் காலத்தில் மாபெரும் சாம்ராஜ்யமாகப் பரந்து விரிந்து காணப்பட்டது ரோமானியப் பேரரசு. அங்கே குடியாட்சி முறை இருந்தாலும் கூட, நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

லட்சக்கணக்கான படைவீரர்களைக் கொண்ட அவர்களின் அசுர பலம், பிற நாடுகளை நடுங்க வைத்தது. இதற்கு பயந்தே பல நாடுகள் ரோமாபுரிக்கு விசுவாசமாக நடந்துகொண்டன. அந்த நாடுகளின் பட்டியலில் எகிப்தும் ஒன்று.

அந்த வகையில், கிளியோபாட்ராவின் தந்தையான 12ம் டாலமிக்கு முன்பு எகிப்துப் பேரரசை ஆட்சி செய்த 11-ம் டாலமி, ரோமானியப் பேரரசுக்கு அதிகமான விசுவாசத்துடன் இருக்க வேண்டியதாகிவிட்டது.

அப்போது ரோமானியப் பேரரசின் வேந்தராக இருந்த சுல்லா என்பவரிடம் 11-ம் டாலமி ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்து

‘நீங்கள்தான் இந்த நாட்டுக்குப் பேரரசர். ஆனால், உங்களின் பிரதிநிதியாக, இந்த நாட்டு மக்களின் மன்னனாக நானே அரசாட்சி செய்கிறேன்…’ என்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, ரோமப் பேரரசின் கீழ் எகிப்தை ஆண்டு வந்தார் 11-ம் டாலமி.

முன்னதாக, அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, தனக்குப் பிறகு எகிப்து பேரரசின் குடியுரிமை ரோமானியப் பேரரசுக்கே சொந்தம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.

அவர் இறந்த பிறகுதான், இதுபற்றிய விஷயம் அவருக்கு அடுத்ததாக அரியணையில் ஏறக் காத்திருந்த கிளியோபாட்ராவின் தந்தையான 12-ம் டாலமிக்குத் தெரிய வந்தது. அதனால், அவர் அரியணை ஏறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

திடீரென்று ஆட்சி கிளியோபாட்ரா, டாலமி
கிளியோபாட்ரா, டாலமி

ஜூலியஸ் சீஸர்

அப்போது ரோமானியப் பேரரசில் ஆதிக்கம் செலுத்திவந்த ஜூலியஸ் சீஸர், பாம்பே, கிரேசஸ் ஆகிய 3 பேரில் பாம்பே எகிப்துப் பேரரசு உள்ளிட்ட கீழ்திசை நாடுகளுக்கு பிரதிநிதியாக இருந்தான்.

இந்த பாம்பேயை சரிக்கட்டினால் எகிப்துப் பேரரசுக்கு அரசனாகி விடுவதில் பிரச்சினை வராது என்று கணக்குப் போட்டார் 12-ம் டாலமி. அதனால், பாம்பேயைத் தனது அரண்மனையில் நடந்த விருந்துக்கு அழைத்தார்.

விருந்து தடபுடலாக நடந்தது. மது, மாது என்று விருந்து அமர்க்களப்பட்டது. விருந்தில் திக்குமுக்காடிப் போனான் பாம்பே. மேலும், அவனுக்குத் தங்க கிரீடம் அணிவித்தும் குளிர்வித்தார் 12-ம் டாலமி.

அதனால், அவர் எகிப்து அரியணையில் ஏற இருந்த சிக்கல் அகன்றது. நாட்டின் பேரரசராக முடிசூட்டிக் கொண்ட அவர், ரோமானியப் பேரரசுக்கு உட்பட்டு எகிப்து நாட்டை ஆளத் தொடங்கினார். அவருக்கு உலகப் பேரழகி கிளியோபாட்ரா உள்ளிட்ட மகன்களும், மகள்களும் பிறந்தனர்.

இப்படியாக நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருக்க, ரோமானிய வேந்தராகவும், ரோமானிய ராணுவத்திற்குத் தலைவராகவும் திகழ்ந்த ஜூலியஸ் சீஸர், சைபிரஸ், எகிப்து அரசுகளை ரோமானியப் பேரரசுடன் இணைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவரது ஆசையை நிறைவேற்றுவதில் பாம்பே ஒரு தடையாக இருந்தான். காரணம், அவர்களுக்குள் நீடித்து வந்த பனிப்போர்தான்.

பதவிவெறி


சீஸர், தன்னிடம் இருந்து தட்டிப் பறித்த முதல் இடத்திற்கு தான் மீண்டும் வரவேண்டும் என்று ஆசைப்பட்டான் பாம்பே.

அதற்காக, சீஸரைக் கொலை செய்யவும் அவன் தயாராக இருந்தான். சீஸரும், பாம்பேயும் நெருங்கிய உறவு முறை கொண்டவர்கள்தான். ஆனால், பதவிவெறியால் சீஸரை ஒழித்துக்கட்ட பலவாறு யோசித்தான் பாம்பே.

அதற்காக, தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையின் பலத்தை அதிகரித்து வந்தான். சீஸரை வலுக்கட்டாயமாக போருக்கு வரவழைத்து, அவரை வென்று, ரோமானிய அரசியலில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது அவனது நெடுநாளையக் கனவாக இருந்தது.

இந்த சூழ்நிலையில், பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.
சீஸரால் கிளியோபாட்ராவின் சித்தப்பா வசம் இருந்த சைபிரஸ், ஜூலியஸ் சீஸரால் ரோமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. சீஸரின் அடுத்த பார்வை எகிப்தின் மேல் விழுந்தது.

இதற்கிடையில் –
எகிப்தை ஆண்டு வந்த 12-ம் டாலமி இறந்துபோய்விட… அடுத்து அரியணையில் ஏறப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அவனது வாரிசுகளுள் கிளியோபாட்ராவே 18 வயது நிரம்பிய மேஜர் ஆக இருந்தாள்.

அதனால், தனது தம்பி 13-ம் டாலமியை, ராஜ சம்பிரதாயத்திற்காக திருமணம் செய்து கொண்டு அரியணையில் ஏறினாள் பேரழகி கிளியோபாட்ரா.

-தொடரும்…

இக்கட்டுரையினை வீடியோ வடிவில் பார்க்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *