யார் இந்த கிளியோபாட்ரா?
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.69-ம் ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தை ஆண்டு வந்த டாலமி வம்ச மன்னரான 12-ம் டாலமிக்கு மகளாக பிறந்தாள் பேரழகி கிளியோபாட்ரா.
இவளுக்கு முன்பு, அவளது அரச வம்சத்தில் ஏற்கனவே கிளியோபாட்ரா என்ற பெயரில் 6 பேர் வாழ்ந்து முடிந்துவிட்டதால், நம் கதாநாயகியை, 7-ம் கிளியோபாட்ரா என்று அழைப்போம்.
கிரேக்க வம்சம்
கிளியோபாட்ராவின் தாய் பற்றிய விரிவானத் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், அவளது தாய் பெயர் இஸிஸ் என்று கூறுவோரும் உண்டு.
கிளியோபாட்ராவின் தாய் கிரேக்க வம்சத்தைச் சேர்ந்தவள் என்றும், கிளியோபாட்ரா சில மேம்பட்ட உயரிய இன மரபுகளின் கலவை என்று கூறுகிறார்கள்.
மேலும் – கிளியோபாட்ரா எப்படிப்பட்டவள்? அவளிடம் என்னென்ன திறமைகள் இருந்தன? என்பவை பற்றியெல்லாம் புகழ்ந்திருந்த அவள் காலத்து எழுத்தாளர்களின் விரிவான ஆதாரங்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன.
அதேநேரம், அவள் வாழ்ந்த 200 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது கிறிஸ்து பிறந்த 150 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளைப் பார்த்தவர்கள் மற்றும் அவளை சந்தித்தவர்கள் விட்டுச்சென்ற குறிப்புகளைக் கொண்டு, புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியவைதான் இன்றும் நமக்கு அவளைப் பற்றிய உயிருள்ள ஆதாரங்களாக உள்ளன.

கவரும் தோற்றம்
கிளியோபாட்ராவின் அழகு பற்றி புளுடார்ச் குறிப்பிடும்போது, அவள் நல்ல சிவந்த நிற மேனி கொண்டவள் அல்ல; என்றாலும், மிக அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும், இனிமையான குரலுக்குச் சொந்தக்காரியாகவும் திகழ்ந்ததாக எழுதுகிறார்.
கிளியோபாட்ரா பிறந்த டாலமி வம்சத்தினர், பரம்பரை பரம்பரையாக அரச வம்ச வழி வந்தவர்கள் கிடையாது.
கி.மு.345-களில் பரந்து விரிந்து காணப்பட்ட பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே எகிப்து இருந்தது.
உலகையே தனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப் புறப்பட்டு, வெற்றிமேல் வெற்றிபெற்ற மாவீரனான மாசிடோனியப் பேரரசன் மகா அலெக்ஸாண்டர், எகிப்தின் மீதும் படையெடுத்து வெற்றி கொண்டார்.
டாலமி
எகிப்து வெற்றியைத் தொடர்ந்து, நைல் நதி வழியாகப் பெரும் படைகளுடன் இந்தியா நோக்கிப் புறப்பட்ட அலெக்ஸாண்டர், தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்ய சில கவர்னர்களை நியமித்தார். அவர்கள் அந்தந்த நாடுகளின் ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார்கள்.
அவ்வாறு அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட கவர்னர்களில் ஒருவர்தான் டாலமி. இவர், அலெக்ஸாண்டரின் மிகச்சிறந்த படைத்தளபதி மட்டுமின்றி சிறந்த நண்பரும்கூட.
மாசிடோனியாவின் ஆர்டியா மாவட்டத்தைச் சேர்ந்த செல்வந்தரான லகஸ் என்பவரின் மகன்தான் இந்த டாலமி. தாய் பெயர் அர்சினி.
ஆரம்பத்தில் எகிப்து, லிபியா, அரேபியப் பகுதிகளின் கவர்னராக மட்டுமே இருந்து வந்து டாலமி, கி.மு.305 முதல் அலெக்ஸாண்டருக்குப் பிறகு மன்னராக நாட்டை ஆளத்தொடங்கினார்.
அதுவரை, எகிப்தை ஆண்டு வந்த பல வம்சத்தினரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். டாலமி என்ற புதிய வம்சம் உதயமானது.
அந்த டாலமி வம்சத்தின் வழி வந்தவள்தான் பேரழகி கிளியோபாட்ரா.
– தொடரும்…

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.