கேதார கௌரி விரதம் அஷ்ட ஐஸ்வர்யம்

கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்பு

கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்பு

கேதார கௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதார கௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகை சமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின் முன்பதாக அமர்ந்திருந்து பூசை வழிபாட்டிற்குரிய வலது கையில் ஞான விரலாகிய மோதிர விரலில் தர்ப்பைப் பவித்திரம் அணிந்து சிவாச்சாரியர் மூலம் உங்கள் பிறந்த நட்சத்திரம் பெயர் ஆகியவற்றைக் கூறி குடும்பத்தவர் அனைவரது நன்மைகளுக்காகவும் விரத பூஜைகளை நடாத்துவதாகச் சங்கற்பம் செய்து ஸ்ரீ வரசித்தி விநாகர் வழிபாட்டுடன் ஆரம்பித்தல் அவசியமாகும்.

குரு மூலம் உபதேசம்

விரத தினங்களிலே பகலில் உணவு தூக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து, பழச்சாறு பால், நீர்மோர் ஆகியவற்றை மட்டுமே அருந்தி தெய்வசிந்தனையுடன் கழித்து, மாலையில் ஆலயத்தில் கௌரி மீனாட்சி சமேதரான கேதீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகளிலும், அர்த்தநாரீஸ்வரராக இறைவனுக்கு நடைபெறும் அர்சனை வழிபாடுகளிலும் கலந்துகொள்வதுடன், கும்பத்தில் 21 தினங்களாக பூஜையில் வைக்கப்பட்டுள்ள, இருபத்தொரு இழைகளினால் உருவாக்கப்பெற்றுள்ள நோன்புக் கயிற்றில் இருக்கும் 21 முடிச்சுக்களுக்குரிய (கிரந்தி பூஜை) சிறப்பு மந்திரங்களை குரு மூலம் உபதேசமாகக் காதினால் கேட்டு அதனை திரும்ப உங்கள் வாயினால் பக்தியுடன் உச்சரித்து அதன்பின்னர் சிவலிங்கப்பெருமானை சிவலிங்காஷ்டக ஸ்தோத்திரத்துடன் கையில் பூவும் நீரும் ஏந்தி பிரதட்சிணம் செய்து கும்பத்துக்கு மலர் சொரிந்து வழிபடுவது அவசியமாகும்.

இன்றியமையாத காரணங்களினால் தினமும் வரமுடியாவிடின் இயன்ற தினங்களில் வந்து தவறவிட்ட பிரதட்சிண நமஸ்காரங்களையும் குறைவின்றி நிறைவேற்றிப் பூர்த்தி செய்வது அவசியமாகும். இறுதி நாளன்று பழைய நோன்புக்கயிற்றினை நீக்கிப் புதிய நோன்புக்கயிற்றினை கேதாரி கௌரி ரட்சைக் காப்பாக ஆண்கள் குருமூலம் வலது கையிலும், பெண்கள் குருமூலம் அல்லது கணவர் மூலம் அல்லது சுமங்கலிகள் மூலம் இடது கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அன்றைய தினம் பூரணமான உபவாசமாக இருந்து மறுநாள் பாரணம் செய்வது மிகவும் உத்தமம்.

சங்கல்பம்

ஒருசிலர் ஆரம்பதினத்தில் வந்து சங்கல்பம் செய்து விரதத்தைத் தொடங்கிப் பின் இறுதி மூன்று தினங்களில் அனைத்து பிரதட்சிண நமஸ்காரங்களையும் செய்து முடித்து குரு வழிபாட்டுடன் நோன்புக் கயிறு வாங்கி அணிவர். பழைய காப்புக் கயிறை நீர் நிலைகளில் போடவும். 

பெண்களுக்கு இறுதி நாளில் ஆலயத்திற்கு வந்து பூர்த்தி செய்ய இயலாது, மாத விலக்கினால் தடங்கல் ஏற்பட்டால் அசுத்தமான மூன்று தினங்களும் ஒருவேளை உணவுடன் விரதமாக இருந்து நான்காம் நாள் மங்கள ஸ்நானம் செய்து ஆலயத்தில் வந்து பிரதட்சண நமஸ்காரங்களை நிறைவு செய்து காப்பு அணியலாம். இதற்காக இன்னொரு அமாவாசை வரும் வரை காத்திருப்பது அவசியமில்லை.

இவ்விரதத்தை ஏனைய ஒருசில விரதங்களைப்போல இத்தனை வருட காலம் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டுமென்ற நியதி கிடையாது. தொடர்ந்து அனுஷ்டிக்கும்போது வயோதிகத்தினால் தளர்ச்சியடைந்தவர்களும் நோயுற்று உடல் நலிவடைந்வர்களும் காலையிலேயே பக்தியுடன் பூஜை வழிபாடுகளை நிறைவேற்றி உச்சிப்பொழுதில் பால் பழம் அதிரசம் பலகாரங்களை உட்கொள்வதும் தவறல்ல. ஆலயத்திற்குசெல்ல இயலாது இருப்பவர்கள்; அல்லது ஆலயம் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்:

இருபத்தோரிழைகள்

புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். 

தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள், வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளி அன்னம் முதலிய நைவேத்தியங்கள் வைத்து, தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். 

இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.

குழந்தைப் பாக்கியப்பேறுகள்

தமது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் தமது குடும்பத்தவரின், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் இவ்விரதத்தை இயன்றவரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம் ஆகும். 

கேதார கௌரி விரதம் அஷ்ட ஐஸ்வர்யம்
Photo by Yan Krukov

இவ்வாறு கௌதம முனிவர் விரதமஹிமையை உலக மாதாவாகிய கௌரிதேவிக்கு உபதேசம் செய்ய, அதைக்கேட்டு அன்னை கேதாரேஸ்வரப்பெருமானை நினைந்து தவமிருந்து வழிபட, இறைவன் காட்சிகொடுத்து தேவிக்குத் தனது இடப்பாகத்தைக் கொடுத்து தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரனாகி “உமையொருபாகன்” என்னும் சிறப்புத் திருநாமத்தைப் பெற்றார் என்பது வரலாறு.

உமையொருபாகன்

தேவியின் வேண்டுதலினால் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் அனைவருக்கும்; தம்பதிகள் சேமமாக இருத்தலும், பிணிநீங்கலும், வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும், கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். 

மேலும் உஜ்ஜயனி தேசத்து புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். இவ்விரதத்தை அனுஷ்டித்த இந்த இராஜ குமாரிகளின் கதை. புண்ணியவதி, பாக்கியவதி என்னும் இரு இராஜ குமாரிகள் தேவ கன்னியர் கங்கைக் கரையில் இவ்விரதத்தை அனுஷ்டித்து வருவதைக் கண்டனர். 

அஷ்ட ஐஸ்வரியம்

தன் தகப்பன் நாடு நகரிழந்ததன் காரணமாக விவாகமாகாத இக்கன்னியர் தேவ கன்னியரிடம் இவ்விரதம் பற்றிய விவரமறிந்து தேவ கன்னியர் கொடுத்த நோன்புக் கயிற்றையும் பெற்று வீட்டிற்கு போக வீடு அடையாளந் தெரியாமல் குச்சு வீடு மாட மாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வரியம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சரியமடைந்து நிற்கையில் தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்துச் சென்று சுகமாக வாழந்து வரும் நாளில் இராஜ கிரி அரசன் புண்ணியவதியையும், அளகாபுரியரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் ஊர்களுக்கு சென்று புத்திர பாக்கியத்துடன் வாழந்து வந்தனர்.

இங்ஙனம் வாழந்து வரும் நாளில் பாக்கியவதி நோன்புக் கயிற்றை அவரைப் பந்தலின் மேல் போட்டு மறந்து போனதின் விளைவாக பாக்கியவதியின் நாட்டை வேற்றரசன் கைப்பற்றிக் கொண்டு இவர்களை ஊரைவிட்டு துரத்தி விட்டான். 

நோன்புக் கயிறு

பாக்கியவதியும் அவள் புருஷனும் நித்திய தரித்திரர்களாகி உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி இருக்கையில் நோன்புக் கயிறு அவரைப் பந்தலிலிருந்ததால் அவரைக்காய் மிகுதியாகக் காய்க்க பாக்கியவதி அந்த அவரைக் காய்களை சமைத்து புசித்து ஜீவித்து வந்தனர்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் பாக்கியவதி தன் குமாரனையழைத்து அப்பா நாம் நாடு நகரமிழந்து உண்ண உணவுக்கும் உடுக்க ஆடைக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நீ இராஜகிரிக்கு போய் உன் பெரிய தாயாரிடம் நமது நிலையைக் கூறி கொஞ்சம் திரவியம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி கட்டமுது கட்டி கொடுத்து வழியனுப்பினாள். 

மகனும் இராஜகிரி வந்து பெரிய தாயாரிடம் தங்கள் வர்த்தமானங்களைச் சொல்ல, அவளும் பிள்ளையை நாலு நாள் வைத்திருந்து சில வஸ்திரமும் ஆபரணமும் திரவிய முடிப்பும் கட்டமுதும் கட்டிக் கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக் கொண்டு சில தூரம் சென்ற பின் ஒருக் குளக்கரையில் மூட்டையை வைத்து விட்டு கட்டமுது சாப்பிடும் போது மூட்டையை கருடன் எடுத்துக் கொண்டு போய் விட்டது. 

ஐப்பசி மாதம்

அதுகண்ட சிறுவன் மனஸ்தாபப்பட்டு மீண்டும் பெரிய தாயாரிடம் சென்று நடந்ததை சொல்லி மேலும் சிறிது திரவியம் கட்டிக் கொண்டு வரும் வழியிலே அதை திருடர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். சிறுவன் துக்கப்பட்டக் கொண்டு பெரிய தாயாரிடம் சென்று “அம்மா! நாங்கள் செய்த பாவமென்னவோ? தெரியவில்லை இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்துக் கொண்டு போய் விட்டான்” என்று சொல்லி அழும் சிறுவனை தேற்றி குழந்தாய் உன் தாயார் கேதார கௌரி விரதத்தை அனுஷ்டித்து வருகிறாளா இல்லையா என்று கேட்டாள்.

சிறுவனும் இப்போது அனுஷ்டிப்பதில்லை, நோன்புக் கயிற்றையும் அவரைப் பந்தலின் மேல் போட்டு விட்டாள். அன்று முதல் இவ்வித கஷ்டங்களெல்லாம் வந்தது என்று தெரிகிறது என்று கூறினான். 

இதைக் கேட்ட புண்ணியவதி மிகவும் மனம் வருந்தி ஐப்பசி மாதம் வரை சகோதரி மகனை தன்னிடமே நிறுத்திக் கொண்டு ஐப்பசி நோன்பு நோற்கின்ற போது பாக்கியவதிக்கும் ஒரு பங்கு நோன்பு வைத்து நோற்று அந்த நோன்புக் கயிறும் பலகாரமும், பாக்கு, வெற்றிலை, மஞ்சளும் இன்னும் சில ஆடை ஆபரணங்களுந் திரவியமும் கொடுத்துக் காவலாக சில சேவகரையுங் கூட்டி இனி மேலாவது இந்த நோன்பை விடாமல் நோற்கச் சொல்லி புத்திமதி கூறி அனுப்பினாள்.

கேதேரேச்வரர் நோன்பு

பெரிய தாயாரிடம் விடைபெற்று வரும் போது முன்னே வழியில் பறித்துப் போன திருடன் திரவியத்தை கொடுத்துச் சென்றான். கருடனும் மூட்டையைக் கொண்டு வந்து போட்டுவிட்டு உன் தாய் கேதேரேச்வரர் நோன்பு விரதத்தை விட்டு விட்டதனாலேயே இவ்விதம் வந்தது இனி மேல் பயபக்தியுடனே நோன்பு நோற்கச் சொல் என்று சத்தமுண்டாக்கிக் கூற சிறுவன் ஆச்சிரியப்பட்டு பயபக்தியோடும் சந்தோஷத்தோடும் தன் வீட்டிற்க்கு திரும்பி தன் தாயாரிடம் நடந்ததைக் கூறி தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப் பட்ட நோன்பு கயிற்றையும் பலகாரத்தையும் கொடுத்தான். 

பாக்கியவதியும் , ஆங்காரத்தினால் கெட்டேன் என்று சொல்லி ஸ்நானஞ் செய்து கேதாரீஸ்வரரை நமஸ்காரம் செய்து நோன்புக் கயிற்றை வாங்கிக் கட்டில் கொண்டாள். உடனே தங்கள் பட்டணத்தைப் பிடுங்கிக் கொண்ட அரசன் பட்டணத்தையும் யானை, சேனை, பரிவாரங்களையும் கொடுத்து விட்டுப் போனான். 

பிறகு முன் போலவே பாக்யவதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே தான் முன் நோன்பு நோற்கத் தவறினதாலேயே கேதாரீஸ்வரர் வறுமையைத் தந்தாரென்று அறிந்து அன்று முதல் தவறாமல் நோன்பைக் கடைப்பிடித்து சகல சம்பத்தும் பெருகி சுகபோகத்தோடு வாழ்ந்தாள். எனவே இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அள்ளித் தருவார். தென்னாடுடைய சிவனே போற்றி..! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *