Palani Murugan

பழநி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பு

பழநி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பு பதிவு

பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. 

அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திரு நீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை.

அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.  நூற்றியெட்டு செய்யுட்கள் அடங்கிய கந்தர் அலங்கார நூலில் அருணகிரிநாதர், ஊர்ப்பெயரையே திருநாமமாக வைத்து வழிபட்டிருப்பது பழநியை மட்டுமே.

'படிக்கின்றிலை பழநித் திருநாமம்; படிப்பவர்தான்முடிக்கின்றிலை; முருகா

என்கிலை; முசியாமல் இட்டுமிடிக்கின்றிலை;

பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மிநடிக்கின்றிலை; நெஞ்சமே! தஞ்சம் ஏது நமக்குஇனியே!’

-(கந்தர்அலங்காரம்-75)

கண்ணீரால் அபிஷேகம்

“மனமே! பழநித் திருநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறினாய் இல்லை. அவ்வாறு ஓதுபவர்களின் பாதங்களைச் சென்னியில் சூடினாய் இல்லை. முருகா என்று சொல்லவில்லை; வறியோர்க்குத் தளராமல் தானம் செய்ததில்லை; பரமானந்தம் அடைய அவன் நாமத்தை ஜெபிக்கும்போது துளிர்க்கும் கண்ணீரால் அபிஷேகம் செய்தாய் இல்லை;

நெஞ்சமே! மரணம் என்று ஒன்று வரும்போது நமக்குத் தஞ்சமளிக்க எவரும் இருக்கமாட்டார்கள் என்பதை உணர்வாயாக!’’- என்று உருகுகிறார்.

‘சுருதிமுடி போனம்’ எனத் துவங்கும் திருப்புகழில் அருணகிரியார், “பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருளதாக நவில் சரவணபவா ஒன்றுவற்கர முமாகி வளர் பழநிமலை மேல் நின்ற சுப்ரமண்யா!’’  என்று முருகனை விளிக்கிறார்.

பழநி மலை

Palani Murugan Temple

“பணிகின்ற அடியார், தமது உள்ளத்தில் மெய்ப்பொருளாகக்  கருதிப்போற்றும் ‘சரவணபவா’ எனும் ஆறெழுத்துகள் பொருந்திய வலிய பேரொளியாகி வளர்கின்ற பழநிமலை’ என்பது இதன் பொருள். 

பழநி மலை ஷடாக்ஷர மலையாகும். ஆதலால் ஷடா க்ஷரத்தை ஓதும் பலன், ‘பழநி’ எனும் திருநாமத்தை ஓதுவதாலேயே கிட்டி விடும் அல்லவா?

தன்னை வழிபட்டவர்கள் உள்ளத்தைப் பழநியாண்டவன் பழுக்க வைக்கிறான். பழநி மலை மீது ஏறிச்சென்று அவனை வழிபட்டால்தான் நற்கதி கிடைக்குமென்றில்லை. அவன் ஞானதண்டாயுதபாணியாகக் குடிகொண்டுள்ள ஞானமலையாம் பழநியை வலம் வந்து மனமார வணங்கினாலே மனம் பழுத்து விடும்.

ஒரு பழம் காரணமாக உமையம்மையோடு சிவபெருமானும் சேர்ந்து மலைக்கு வந்ததனால் “பைங்கயிலை போலும் பழநியே” என்று மாம்பழக்கவிசிங்கராலும், ‘காசியின் மீறிய பழநி’ என்று அருணகிரியாராலும் போற்றப்பட்ட பெருமை உடையது பழநி. திருவண்ணாமலையைப் போன்றே பழநி மலையையும் சிவசொரூபமாகக் காண்கிறார்கள் சைவ அடியார்கள்.

குமரப் பெருமான்

குமரப் பெருமான் உறையும் மலையான பழநி மலையினை  அன்புடன் வலம் வரவேண்டும். இறைவன் ஆலயத்தை வலம் வருவதுவே கால்கள் உண்டானதன்  பெரும் பயனாகும் என்பதை அப்பர் பெருமாண்

“கால்களால் பயன் என்ன? கதைக் கண்டன் உறை கோயில்

கோலக்கோபுர கோகரணம் சூழா கால்களாற் பயன் என்?’’ என்று வினவுகிறார். 

இந்த வழியில் முருகபக்தர்கள் கால்நடையாக பாத யாத்திரை வருகின்றார்கள். பழநிப் பெருமான், மலைக்கொழுந்து ஈசனுடனும் உமையுடனும் உறையும் பழநி மலையை நாமும் விருப்பொடு வலம் வந்து வணங்குவோம்!

‘பச்சைத் தேரோடப் பவளத்தேர் நின்றசைய

சித்திரைத் தேர் ஓடி வரும் தென்பழநி வேலவனே!

எருக்கிலைக்குத் தண்ணிகாட்டி எத்தனைப் பூ பூத்தாலும்

மருக்கொழுந்து வாசமுண்டோ? மலைப்பழநி வேலவனே’

– என்கிறது பாடல். 

தினந்தோறும் ஊர்வலம்

இன்று பழநியில் சின்னக்குமரர் மரத்தேர், வெள்ளித்தேர், தங்கத்தேர் எல்லாவற்றிலும் ஊர்வலம் வருவதைக் காணலாம். தந்தப் பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு வாகனம், தங்கக் குதிரை வாகனம், தங்க மயில் வாகனம்,  தெப்பத்தேர் போன்றவற்றில் தினந்தோறும் ஊர்வலம் வரும் ஆண்டவனைக் கண்டு பக்தர்கள் உளமகிழ்கின்றனர்.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர்! முருகப் பெருமானின் விபூதியின் மகத்துவத்தை சொல்லும் போது,

‘வேற்று மருந்து ஏன்? விபூதி யொன்றே போதாதோ

தேற்று உன்னருள் மாத்திரமிருந்தால் காற்றுலவு

பஞ்சாமே நோயனைத்தும் பார்த்துப் பழநி வள்ளால

அஞ்சாமே ஆள்வது அறன்.’

என்று பழநி வெண்பா அந்தாதியில் குறிப்பிடுகிறார்.

‘வாழ்க்கைச் சூழலாலும், வயது மூப்பாலும் வரும் நோய்தீர வேறு எந்த மருந்தையும் நாட வேண்டியதில்லை; உன் விபூதி மட்டும் போதும், காற்றில் பறக்கும் பஞ்சுபோல் நோயனைத்தும் ஓடிவிடும். பழநி வள்ளலே! தண்டபாணித் தெய்வமே! என்னை உன்னருளால் காக்க  வேண்டும்!’’ என்று பழநி ஆண்டவனின் விபூதி மகிமையை போற்றுகிறார்.

‘‘திளைத்துணை யேனும் நின் சித்தம் என்பக்கம் திரும்பி விட்டால் வினைத்துயர் தீர்வதரிதோ? பனிவெவ் வெயிலிலுண்டோ? நினைத்த வரம் தமியேற்கருள் செய்து முன்னின்றிரட்சி அனைத்துலகும் பணியும் பழனாபுரி ஆண்டவனே! -பழநி மலை வாழும் பாலதண்டாயுதா! 

மொட்டை ஆண்டி

தானியங்களில் சிறிய அளவான தினையளவிலாவது உன் அருள் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும், முன் வினையால் ஏற்பட்ட துயரம் எல்லாம் ஆதவன் ஒளிபட்டு உருகி அகலும் பனிபோல மறைந்துவிடும். அகிலமெலாம் போற்றி வணங்கும் பழநியிலே ஆட்சிபுரியும் ஆண்டவனே! முருகா! எனக்கு அருள் செய்து ஆண்டருள வேண்டும்.

பழநி ஆண்டவன் ஜடை ஆண்டியா அல்லது மொட்டை ஆண்டியா என்ற எண்ணம் பலருக்கு எழுகிறது. மொட்டை ஆண்டிப் படத்தை வீட்டில் வைத்தால் கெடுதல் என்ற மிகத் தவறான எண்ணமும் சிலருக்கு உள்ளது. மூர்த்தியின் திருவுருவத்தை அபிஷேக நேரத்தில் உற்றுக் கவனித்தால் அவன் மொட்டை ஆண்டி அல்ல என்பது புரியும்.

கோடானு கோடி செல்வங்களைத் தன் காலடியில் வந்து கொட்டியபோதும், தனக்கென்று ஒரு கௌபீனமும், தண்டமும் மட்டுமே கொண்டு நிற்கும் இப்பால துறவியைக் காண மலை ஏறிவரும் பக்தர்களின் பெரும் எண்ணிக்கையே இதற்குச் சான்று. 

அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதனால்தான் நாம் எல்லாப் பேறுகளையும் பெறமுடிகிறது. பழத்தை நாடியவன், தானே ஞானப்பழமாகி நின்ற கோலத்தை எவ்வாறு வர்ணிப்பது? வர்ணிப்பதற்கு வார்த்தைகள் போதாது.

அருணகிரிநாதர், ஒரு பாடலில்,

‘குலவு பழநி மலையோனே!அறமு நிறமும் அயிலும் மயிலும்

அழகும் உடைய பெருமாளே!’

அறுபடை வீடு

பெருமையில் மிக்கவனான. பழநி ஆண்டவனிடத்தில்  அறம், நிறம், ஞானம் (அயில்), பிரணவம் (மயில்) அழகு, பெருமை ஆகிய ஆறும் அடங்கியுள்ளன என்கிறார். அழகுத் தெய்வம், முருகன். அழகை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். எனவே அவனைத் துதிப்போர்க்கு மேற்கூறிய ஆறும் எளிதில் கைவரப்பெறும்.

ஆண்டிக் கோலத்தில் உள்ள முருகனை வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வங்களை இழப்போம் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இது தவறாகும். 

அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் உட்கார்ந்திருக்கிறார். அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம். 

முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார்?

நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தில் உணர்த்தவில்லை. 

தவறான வழியில் செல்வத்தை தேடாதே, பொருளைத் தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது. பிறகு சங்கடங்களை அனுபவிப்பாய். எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம்.

தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம். இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம். அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது.

அதாவது பற்றற்று வாழ்தல், பற்றற்று என்றால் எதையுமே சாப்பிடாமல் இருப்பது என்பதெல்லாம் பொருளல்ல, சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு. 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வந்ததும் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டி முருகனை பார்க்காமலேயே சிலர் சென்று விடுகிறார்கள். இது மாபெரும் தவறு.

தண்டபாணியின் இக்கோலம் மாயையான உலகில் இருக்கும் நாம் நமது ஆணவம், கர்வம் போன்றவற்றை துறந்து போலியில் பற்றின்றி வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

எத்தனை வேண்டுதல்களைச் செய்து எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும், பிணமாய் எரியும் போது எப்படி நிர்வாணமாய் வந்தோமோ அப்படி நிர்வாணமாகவே இறைவனை அடைவோம் என்பதையே ஆண்டிக்கோலம் காட்டுகிறது. 

இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம். அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.

நவகிரக நாயகன்

பழநி ஆண்டியை நவகிரக நாயகன் என்று கூறலாம். அவனை வணங்கினால் நவகிரகங்களும் நம் வசப்படும். கருமேனி கொண்ட மூர்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது என்றாலும், ஆண்டவன் சிலையின் உண்மையான நிறம் கரும்பச்சை என்றும், சூரிய ஒளி பட்டால் மட்டுமே இது விளக்கமாகத் தெரிய வாய்ப்புண்டு என்றும் கூறுவர். 

இத்திருமேனி காற்று, நீர், எண்ணெய், தேன், இவற்றால் கரையாது. நெருப்பினால் பாதிக்கப்படாது. பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தயிர் இவற்றால் அபிஷேகப் பிரியனுக்கு அபிஷேகம் செய்யப்படும்போது அவை அனைத்துமே மருத்துவ குணங்கள் பெறுகின்றன.

நவபாஷாணம்

தண்டாயுதபாணியை கண்ணால் தரிசிக்கும்போது நம் உடலில் கதிர் வீசப்படுகிறது. பிரசாதங்களை உண்பதால் நோயற்ற வாழ்வு வாழலாம். நவபாஷாணம் கொண்டு, யாருமே செய்திராத சிலையை வடித்த போகர், ஆகம விதிப்படி செய்த சுத்தமான விபூதியால் அதற்கு அபிஷேகம் செய்து அதைத் தன் உடம்பெங்கும் பூசிக் கொண்டார்.

மலைவாழை, நெய், நாட்டுச்சர்க்கரை, பேரீச்சம்பழம், தேன் எனும் ஐந்து பொருட்களால், ரசாயனம் ஏதும் கலக்காமல் செய்த பஞ்சாமிர்தத்தை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து அதையே உணவாக உண்டார். இதனால் உடலும், உள்ளமும் உரம் பெற்று, நீண்டகாலம் நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்.

மனித குலத்திற்கு ஏற்படும் அனைத்து நோய்களையும் நீக்கும் சர்வரோக நிவாரணியான நவபாஷாண முருகனை உருவாக்கி, இன்றளவும் அருவமாக இருந்து மக்களுக்குப் பெரும் தொண்டாற்றி வருகிறார் போகர் என்றே கூறலாம்.

தீர்த்தக் காவடி

அக்னி நட்சத்திர விழாவின்போது முருகனைக் குளிர்விப்பதற்காகப் பக்தர்கள் பல நதிகளிலிருந்தும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு சென்று மலை மேலுள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதனைத் தீர்த்தக் காவடி என்பர். 

இத்தகைய நீர் அபிஷேகத்தினால் முருகன் திருவுருவச்சிலை மேலும் உறுதிப்படுவதாக ஆன்றோர்கள் கூறுகின்றனர். தீர்த்தக்குடமானது தலையிலே சுமந்து செல்லப்படுகிறது. மனிதஉடலின் சிறந்த சக்தி ஊற்றான ஸஹஸ்ரார சக்ரம் எனும் நரம்புத் தொகுதி தலை மேல் உள்ளதால் தீர்த்தக்குடம் தலையிலே சுமக்கப்படுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இப்படி பக்தர்களின் அன்பைப் பெற்ற முருகன் கோபக்காரணா இல்லவே இல்லை. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.

உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். 

உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகப் பெருமான் காட்டும் கெளமார வழி.

நம்முடைய தலை எழுத்தை மாற்ற இயலுமா?

எல்லாம் என் தலை எழுத்து என்று அடிக்கடிப் புலம்புபவர்களைப் பார்த்திருப்போம் தலை எழுத்தை அழிக்க எதாவது  அழிப்பான் (ரப்பர்) இருக்கா? நம்முடைய தலை எழுத்தை  எப்படி அழிப்பது? அதுக்கும் ஒரு அழிப்பான் இருக்கு அது என்னன்னு தெரியுமா? 

அருணகிரிநாதர் சொல்கிறார்

‘சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வேர்ப்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே’

திருச்செந்தூரில் உள்ள வயல்களில், மீன்கள்  நீந்தும் அளவுக்கு  வயல்களில் தண்ணீர் இருக்குமாம் அதனால் மீன்கள் துள்ளி விளையாடியதால் செந்தூரின் வயல்கள்அழிந்தது – தேன் வழிகின்ற கடம்ப பூ உள்ள மாலை வாசனை  பட்டுஅழிந்ததாம் பெண்களின் மனம்.

பெரிய மயில் மேல் உள்ள முருகன் வேலினால் அழிந்ததாம் காவலை உடைய சூர பத்மனின் கோட்டையும், மலையும் முருகப் பெருமானின் திருப்பாதம்  நம் தலை மேல் பட்டதால் பிரம்மன் நம் தலையில் எழுதிய எழுத்து  அழிந்தததாம். முருகப் பெருமானின் திருவடி பட்டுவிட்டால்  நம் தலை எழுத்து மாறும்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *