எகிப்துக்கு எதிராக போர்

கிளியோபாட்ரா-44 எகிப்துக்கு எதிராகப் போர் அறிவிப்பு

எகிப்துக்கு எதிராகப் போர் அறிவிப்பு

ரோமில் ஆண்டனி எழுதி வைத்திருந்த உயிலை ஆர்வத்தோடு வாசித்தான் ஆக்டேவியன்.

“நான் இறந்தபிறகு, எனது உடல் ரோமானிய ஆட்சிப் பேரவையின் (செனட் சபை) முன்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதன்பின்னர் கப்பல் மூலம் கிளியோபாட்ராவுக்கு அனுப்பப்பட வேண்டும். அலெக்ஸாண்டிரியாவிலேயே எனது உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்…” என்று இறுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அந்த உயிலில், சிசேரியன் என்கிற டாலமி சீஸர்தான் (கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீஸருக்கு பிறந்தவன்) சீஸருக்கு உண்மையான வாரிசு என்கிற  ஆண்டனியின்  நிலைப்பாடும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு, கிளியோபாட்ராவுக்கு அவன் அன்பளிப்பாக அளித்திருந்த நாடுகள் பற்றிய விவரமும் அந்த உயிலில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

செனட் சபையில் விவாதம்

தனது உயிலில் ஆண்டனி குறிப்பிட்டு இருந்த இந்த முக்கியமான தகவல்களைத் தனக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினான் ஆக்டேவியன். ஆம்… சபை மரபுகளை மீறி ரோமின் செனட் சபையின் பார்வைக்கு அந்த உயிலைக் கொண்டு வந்தான். ஆண்டனியின் உயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவல்கள் அத்தனையையும் வாசித்துக் காட்டிப் பேசினான்.

“எந்தவொரு உண்மையான ரோமானியனும் தான் இறந்த பிறகு தனது உடல் சொந்த நாட்டில்தான் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புவான். ஆனால், கிளியோபாட்ரா மீது கொண்ட மோகத்தினால் ஆண்டனியின் ஆசை மாறிவிட்டது. அவர் ரோமானியனே கிடையாது…” என்று உணர்ச்சிப்பூர்வமாக ஆக்டேவியன் ஆற்றிய உரை ஆண்டனிக்கு எதிராக ரோமாபுரி மக்களை திசை திருப்பியது.

இதற்கிடையில், ஆக்டேவியனின் சகோதரி ஆக்டேவியாவை விவாகரத்து செய்யும்படி ஆண்டனியை ஏற்கனவே வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருந்த கிளியோபாட்ரா, அதற்கான கடிதத்தை ஆண்டனி மூலம் ரோமிற்கு அனுப்பச் செய்தாள். இதையும் ஆண்டனிக்கு எதிராகப் பயன்படுத்தினான் ஆக்டேவியன்.

கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு எதிராகச் சரியாகக் காய்களை நகர்த்திய ஆக்டேவியனுக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டு நின்றனர் ரோமாபுரி மக்கள். மாவீரர் ஆண்டனியைத் தனது கவர்ச்சியான அழகால் மயக்கிய கிளியோபாட்ராவை ஆக்டேவியன் கொலை செய்ய வேண்டும், எகிப்தையும் ரோமாபுரியுடன் இணைக்க வேண்டும் என்று எல்லா ரோமாபுரி மக்களையும் பேச வைத்தான் ஆக்டேவியன்.

போர் அறிவிப்பு

இது நடந்த சில நாட்களிலேயே கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு எதிராகப் போர் அறிவிப்பை வெளியிட்டான் ஆக்டேவியன். கி.மு.31 ஆரம்பத்தில் ஆக்டேவியனின் பெரும் படை எகிப்தை நோக்கி ஆவேசத்தோடு புறப்பட்டது. அவர்கள் அலெக்ஸாண்டிரியா கடற்கரையில் வந்திறங்க ஏராளமான கப்பல்களும் தயாராக நின்றிருந்தன.

ஆக்டேவியனின் போர் அறிவிப்பை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தாள் கிளியோபாட்ரா. அதனால், அவளும் பெரும் படையைத் திரட்டினாள். எகிப்து எல்லையை ரோமாபுரிப் படைவீரர்கள் நெருங்குவதற்குள் அவர்களைத் தாக்க திட்டம் தீட்டினாள்.

கி.மு.31 ஜூலை மாதம் ஆக்டியம் என்ற இடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஆண்டனியின் படை முகாமில் பரபரப்பாகக் காணப்பட்டாள் கிளியோபாட்ரா. ஆவேசத்தோடு போர் வாளைக் கையில் எடுத்தாள். அவளது வேகத்தைப் பார்த்த ஆண்டனியின் நண்பனான எனோபார்பஸ் பதற்றம் ஆனான்.

“அரசியாரே! தங்களது வேகத்தைப் பார்த்தால் எங்களுக்கே பயமாக இருக்கிறது. வேகத்தைவிட விவேகம்தான் வெற்றியைத் தரும் என்பது தாங்கள் அறியாததா?”

“எனது கோபக்கனல் மீது பரிதாப பேச்சை வீசி அதன் வேகத்தை தணித்துவிடாதே. ஆக்டேவியன் அறிவித்துள்ள போர் எனக்கும், இந்த எகிப்துக்கும்தான் எதிரானது. இந்த நாட்டு அரசி என்ற முறையில் நான் போர்முனைக்கு செல்வதுதான் சரி.”

“அவரசப்பட வேண்டாம் அரசியாரே! நீங்கள் இந்த வேகத்தில் போர்க்களத்திற்கு வந்தால் நம் மாவீரர் ஆண்டனியின் கவனம் திசை திரும்பும். அவரது வேகம் எதிரிகளை அழிப்பதைக் காட்டிலும், உங்களை காப்பாற்றுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும். அதனால், நீங்கள் இப்போது போர்க்களத்திற்கு வருவது சரியல்ல. ஏன்… அப்படியொரு சூழ்நிலை வராது என்றே நினைக்கிறேன். ஆக்டேவியனின் படைகளை நம் ஆண்டனியே பந்தாடி விடுவார்.”

“இல்லையில்லை… நீ என்னதான் சமாதானம் செய்தாலும், அதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நான் போர்க்களத்திற்கு வருவது உறுதி. அதையும் மீறி தடுத்தால், ஆண்டனியின் நண்பன் என்று கூட பார்க்காமல் உன்னை முதலில் கொன்றுவிட்டு போர்க்களத்திற்கு சென்று விடுவேன்…” என்று கோபத்தில் கிளியோபாட்ரா கர்ஜித்து முடிக்கவும், ஆண்டனி வரவும் சரியாக இருந்தது. 

“உனக்கு என்ன ஆயிற்று கிளியோபாட்ரா. உனது கோபக்குரல் போர் முகாமையும் தாண்டி கேட்கிறதே?”

“நானும் போர்க்களத்திற்கு கிளம்பினேன். ஆனால், இவன்தான் வேண்டாம் என்று கூறி தடுக்கிறான். அதனால்தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.”

“போர்க்களத்தில் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று நீதான் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறாய்… அப்படி இருக்கும்போது, நீயே இந்த சூழ்நிலையில் அவ்வாறு நடந்து கொள்ளலாமா?”

“நான் இப்போது செய்தது சரியா? தவறா? என்று பட்டிமன்றம் நடத்தக்கூடிய நேரமா இது? எதிரியை குறிப்பார்த்து தாக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.”

“நீதான் பெரிய ராஜதந்திரி ஆயிற்றே… உன் கணிப்பைச் சொல். அதன்படியே போர்க்களத்தில் முன்னேறுவோம்.”

“ரோமில் இருந்து புறப்பட்டு வரும் எதிரி படைகள் நிச்சயம் கடல் வழியாகத்தான் நம் நாட்டிற்குள் நுழையும். அதனால், நமது கடற்படையின் பலத்தை அதிகரிக்க வேண்டும்” என்று கிளியோபாட்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவள் முன்பு வந்து பணிந்தான் எகிப்து படைத் தளபதி கனியடிஸ். அவனை ஏறிட்டாள் கிளியோபாட்ரா.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் தளபதியாரே?”

“தங்கள் வேகத்திற்கு முன்பு குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். கடற்போர் விஷயத்தில் எனது கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். அதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.”

“தாராளமாகச் சொல்லுங்கள்.”

“கடற்படையைப் பொறுத்தவரை நம்மைவிட ஆக்டேவியனுக்குத்தான் போர் அனுபவம் அதிகமாக இருக்கிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாம்பேயுடன் அவரது படை அடிக்கடி போர் புரிந்துள்ளது. அந்த அனுபவம் அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பது என் கணிப்பு.”

அப்போது ஆண்டனியின் நண்பன் எனோபார்பசும் குறுக்கிட்டான்.

கடற்போர் வேண்டாம்!

“நம் தளபதியார் சொல்வது உண்மைதான். ஆக்டேவியனின் கடற்படையில் உள்ள மாலுமிகள் மிகவும் திறமைசாலிகள். அவர்களுக்கு இருக்கும் அனுபவம் நம் மாலுமிகளுக்கு கிடையாது. அதுவும், நம் மாலுமிகளில் பலர் புதியவர்கள். திடீர் போரை அவர்களால் எப்படி சமாளிக்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது. 

… மேலும், எதிரி படையில் உள்ள கப்பல்கள் அளவில் சிறியவை, வேகமாகச் செல்லக்கூடியவை. ஆனால், நம் கப்பல்கள் பிரம்மாண்டாகவும், கனமாகவும் இருப்பதால் அவற்றை வேகமாக இயக்க முடியாது. அதனால், எதிரி படைவீரர்கள் நம் கப்பலை எளிதில் தாக்கி சேதப்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால், கடலுக்கு மத்தியில் எதிரி படையை எதிர்கொள்வதைவிட நிலத்தில் தரைப் படையுடன் எதிர்கொள்வதுதான் சிறந்தது என்பது எனது கணிப்பு.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” ஆண்டனி கேட்டான்.

“எதிரியை கடலுக்குள்தான் சென்று சந்திக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எதிரி படைவீரர்கள் பல ஆயிரம் மைல் தொலைவு பயணித்து வந்திருப்பதால் அவர்களிடம் சோர்வு அதிகம் இருக்கும். இந்த பாலைவனப் பகுதியும் அவர்களுக்கு புதிது என்பதால், இங்கே அனுபவப்பட்ட நம்மால் அவர்களை எளிதில் எதிர்கொண்டு தாக்குதல் நடத்திவிட முடியும்.”

“இல்லை எனோபார்பஸ். எதிரியை கடலுக்கு மத்தியிலேயே தாக்கி அழித்துவிட வேண்டும் என்பதுதான் எனது திட்டம். கடலுக்குள்ளேயே அவர்களை அழித்துவிட்டால் தரைப்படைக்கு வேலை இல்லையே…”

“தாங்கள் சொல்வதும் சரிதான். ஆனால், நமது காலாட்படை வீரர்கள் மிகவும் திறமைசாலிகள். பல போர்களில் பங்குபெற்ற அனுபவம் கொண்டவர்கள். அதோடு, நமது காலாட்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் எதிரிகளை எளிதில் வீழ்த்திவிட முடியும்.”

“மீண்டும் நீ தப்பு கணக்குதான் போடுகிறாய் எனோபார்பஸ். நீ எனது நண்பன் என்பதால் இதுவரை நீ சொன்னக் கருத்துக்களைக் கேட்டேன். உன்னுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எதிரியை நாம் குடியிருக்கும் ஊருக்குள்ளேயே அழைத்து வந்து சண்டையிட எனக்கு விருப்பம் இல்லை. அவனை ஊருக்குள் நெருங்க விடாமலேயே கொன்றுவிட வேண்டும் என்பதுதான் எனது தொலைநோக்கு திட்டம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நான் காட்டும் வழிதான் வெற்றிக்கான வழி!” என்று உறுதியாகவும் உத்தரவாகவும் சொன்னான் ஆண்டனி.

அவனது கருத்தை கிளியோபாட்ராவும் ஏனோ ஏற்றுக்கொண்டாள். ஆக்டேவியன் படையைவிட தனது படையில் அதிக கப்பல்கள் இருந்ததால்தான், எப்போதும் தானே முடிவெடுத்து பழக்கப்பட்ட அவள், முதன் முறையாக போர் விஷயத்தில் ஆண்டனி சொன்னதை ஏற்றுக்கொண்டாள்.

எதிரியை எப்படி எதிர்கொள்வது என்று கிளியோபாட்ரா, ஆண்டனி உள்ளிட்டவர்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், ஒரு படைவீரன் மூச்சு வாங்க ஓடி வந்து நின்று, அதே வேகத்திலேயே பேசினான்.

“அரசியாரே! எதிரி படை எகிப்தை நோக்கி கடல் வழியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது”.

– தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *