ராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்ல வேண்டும் தெரியுமா?
பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் மிகவும் முக்கியமானது ராமேஸ்வரமும் வாரணாசி எனப்படும் காசியும். இந்தியாவில் உள்ள ஹிந்து பக்த கோடிகள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய பேராகக் கருதுவது இந்த இரண்டு திருத்தலங்களின் யாத்திரைதான். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
இந்தியாவின் தென் கோடியில் இருப்பவர்கள் காசி யாத்திரையை புனித யாத்திரையாகக் கருதுவது போல வட இந்தியர்களுக்கு ராமேஸ்வர யாத்திரை வாழ்நாளில் மிக முக்கியமான பேராகக் கருதப்படுகிறது.
வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி எல்லாக் கடமைகளும் முடிந்துவிட்டன, இனி இறுதிக் காலத்தில் காசி, ராமேஸ்வரம் என்று தீர்த்த யாத்திரை கிளம்ப வேண்டியது தான் என்பார்கள். இந்த யாத்திரை அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.
ஒரு காலத்தில் கால் நடையாகவோ அல்லது மாட்டு வண்டிகளிலேயோ பயணம் செய்தார்கள். திரும்பி வருவார்கள் என்பது நிச்சயமில்லை. அவ்வளவு கடினமான பயணமாக இருந்தது..!
அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்களால் மிகவும் எளிமையாகிவிட்டன, விமானத்தில் பயணித்தால் சிலமணி நேரங்களில் காசிக்கு சென்று, அன்றே திருப்பிவிடலாம். ஆனாலும் இப்போதும் அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.
முதலில் ராமேஸ்வரம்

காசி – ராமேஸ்வர யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கு கடலில் நீராடி (அக்னிதீர்த்ததில்), கடலிலிருந்து சிறிது மணலையும் , அக்னி தீர்த்த நீரையும் ஒரு குப்பியில் எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று கங்கை நதியில் அந்த மணலைப் போட வேண்டும்.
அதன்பின், காசி விஸ்வநாதரை, ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்துவந்த அக்னி தீர்த்த நீரால் நமது கைகளினாலேயே அபிஷேகம் செய்துவிட்டு, ஸ்ரீ விஸ்வநாதரை தரிசித்து விட்டு கங்கையில் நீர் எடுத்து வந்து, மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்பது முறை.
காசியில் கங்கை நீர் எடுக்கக் கூடாது. அலஹாபாத் திரிவேணி சங்கமத்தில்தான் நீர் எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியடைந்ததாகக் கருதப்படும். இது நமது ஆகமம்.
நான்கு புனிதத் தலங்கள்
வட இந்தியாவிலிருந்து வருபவர்கள் ஆகமப்படி, “சார்தாம்“ எனப்படும் நான்கு புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லவேண்டும். சார்தாம் எனப்படும் புனிதத் தலங்கள் – பத்ரிநாத், துவாரகை, பூரி இறுதியாக ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது.
வடக்கில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கிழக்கில் ஒரிசா மாநிலத்தின் பூரி, மேற்கில் குஜராத் மாநிலத்தின் துவாரகை ஆகும். இந்த மூன்றும் வைணவ திருத்தலங்கள்.
பின்னர் காசிக்குச்சென்று விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு (பிந்துமாதவர்) பின்னர் புனித கங்கை நீரை எடுத்து வந்து தக்ஷிணகோடியில் இருக்கும் சேது மாதவருக்கு (ராமேஸ்வரம்) அபிஷேகம் செய்யவேண்டும்.
இதன் பிறகு சிறிது மணலை அங்கிருந்து எடுத்துவந்து, பிரயாகையில் (அலஹாபாத் வேணுமாதவர்) உள்ள திரிவேணி சங்கமத்தில் போடவேண்டும் .
பிறகு அங்கிருந்து கங்கை நீரை வீட்டிற்கு எடுத்து வீட்டுக்கு வரவேண்டும் என்பது அவர்கள் ஆகமம். இந்த சம்பிரதாயத்தை முழுமையாகப் பின்பற்றினால் சார்தாம் யாத்திரை பூரணத்துவம் பெறுகிறது என்பது ஐதீகம்.
இதில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும், சிவன் – விஷ்ணு என்கிற வேறுபாடுகள் இல்லாமல், இருவரையும் ஒரே யாத்திரையில் நான்கு இடங்களில் தரிசிக்கிறோம் என்பதுடன் மறைமுகமாக தேசிய ஒருமைப் பாட்டையும் காணலாம்.
இந்த நான்கு இடங்களிலும், குறிப்பாக காசி – ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் முறையே தென்னிந்தியர்கள், வட இந்தியர்களின் கூட்டத்தைக் காணமுடிகிறது.
தவிரவும், ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத ஸ்வாமி (லிங்கம்) மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால் வழிபடப்பட்ட திருமேனி. இதை நினைக்கும்போது உடல் புல்லரிக்கிறது.
ஸ்தலபுராணம் என்ன சொல்கிறது?
இராவணனால் சீதாபிராட்டி கடத்தப்பட்ட பிறகு, சீதையைத்தேடி காடு, மேடுகளில் ஸ்ரீ ராமர் சுற்றியலைந்தபோது, சுக்ரீவனை சந்திக்கிறார். அவருடைய நட்பு கிடைத்தபிறகு, ஆஞ்சநேயரிடம் சீதையைக் கண்டுபிடிக்கும் பணியைக் கொடுத்தபோது, அவர் சீதையை இராவணனின் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சிறைவைக்கப்பட்டிருப்பதை அறிகிறார்.
சுக்ரீவன், ஆஞ்சநேயரின் உதவியுடன் வானர சேனையைத் திரட்டி, தெற்குக் கடற்கரையை அடைகிறார். அவ்வளவு பெரிய கடலை எப்படி கடப்பது என்பது பெரிய பிரச்னை? ஸ்ரீ ராமருக்கு..
இராவணன் மிகப்பெரிய சிவபக்தன் என்றும் அவரிடமிருந்து ஏராளமான வரங்கள், சக்திகளைப் பெற்றிருக்கிறான் என்கிற உண்மை தெரிய வருகிறது. ஒரு சிறிது நீர்கூட அருந்தாமல் சிவ பூஜையில் ஈடுபடுகிறார்.
சிவ லிங்க பிரதிஷ்டை
ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாறு வடிவங்களில் வழிபடுகிறார் (ஷோடசோபசாரம்). அதன் பலனாக சிவா பெருமான் அவர்முன்பு தோன்றி என்ன வரம் வேண்டுமென்றாலும் கேள் தருகிறேன் என்றார்.
அப்போதுகூட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, தனக்கென எதுவும் கேட்காமல் இந்த மனித சமுதாயத்திற்காக தாங்கள் இங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு அருள் செய்யவேண்டும் என்கிறார். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று அருளி ஜோதிர்லிங்க வடிவில் இங்கேயே உறைந்தார் என்கிறது ஸ்கந்த புராணம், சிவ புராணம் போன்ற திவ்ய சரிதங்கள்.
சிவபெருமானின் அருளாசியுடன் வானர சேனைகளின் உதவியால் சேது பந்தனம் எழுப்பப்படுகிறது, இராவண வதம் முடிந்து சீதாப்பிராட்டியுடன் ராமேஸ்வரம் வருகிறார்.
இராவணன் பிறவியில் புலஸ்தியர் என்கிற பிராமண ரிஷிக்குப் பிறந்தவன். எனவே, ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தினால் பிரம்மஹத்தி தோஷம் தாக்காமல் இருக்க, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, கடற்கரையில் மணலால் லிங்கம் பிடித்து அதற்கு பூஜைகள் செய்துவிட்டு அயோத்திக்குத் திரும்புகிறார். அன்று மணலால் பிடிக்கப்பட்ட லிங்க வடிவம்தான் இராமநாத ஸ்வாமி.

1964-ம் ஆண்டு தனது 19-வது வயது முதல் எழுதி வரும் ஜெயா வெங்கட்ராமன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெங்களூருவில் வசித்து வரும் இவர் ஆன்மிகம், பயணம் பற்றிய கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். கன்னட மொழியில் வெளியான படைப்புகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.