புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி
ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கி இருந்தது. வழக்கமாகக் காணப்படும் கலகலப்பு ஒட்டுமொத்தமாகக் காணாமல் போய் இருந்தது. பிரம்மாண்டமான அந்தக் கல்லறை மாடத்தின் ஓர் அறையில் முடங்கிக் கிடந்தாள்.
புரொக்கியூலிஸ்
அந்த நேரத்தில் ஆக்டேவியன் தூது அனுப்பிய, அவனது நண்பன் புரொக்கியூலிஸ் சில ரோமானிய வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். கொலைக்களக் கூடத்தின் கீழ்பகுதியில் நின்று கொண்டு, மேல் மாடத்தில் தங்கியிருந்த கிளியோபாட்ராவைச் சந்திக்க வேண்டி குரல் கொடுத்தான்.
அவனது சப்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் கிளியோபாட்ரா.
“யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?”
“என் பெயர் புரொக்கியூலிஸ். இளைய சீஸர் ஆக்டேவியனின் நண்பன்.”
“எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?”
“இளைய சீஸர்தான் எங்களை அனுப்பி இருக்கிறார். தாங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கேட்டறிய வந்திருக்கிறோம்.”
“ஓ… அப்படியா? உங்களைப் பற்றி ஆண்டனி என்னிடம் ஏற்கனவே கூறி இருக்கிறார். ஆக்டேவியன் உள்ளிட்ட அவனது ஆதரவாளர்கள் யாரையும் நம்பாதே. ஆனால், புரோக்கியூலிஸை மட்டும் நம்பு. அவன் ரொம்ப நல்லவன் என்று கூறினார்.”
சோகம்
“என்னைப் பற்றி ஆண்டனி அப்படியா கூறினார்? இதைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம், அவர் உயிருடன் இல்லையே என்கிற சோகம் என்னையும் தாக்குகிறது…” என்ற புரொக்கியூலிஸின் கண்கள் லேசாக பனித்தன.
திடீரென்று எட்டிப்பார்த்த சோகத்தைத் துடைத்துக் கொண்டு கிளியோபாட்ராவிடம் பேசினான்.
“நான் மேல் மாடத்திற்கு தங்களுடன் பேச வரலாமா?”
சிறிது யோசனைக்குப் பிறகு “சரி… வாருங்கள்” என்றாள்.
அவனும் அந்தப் பழைய கட்டிடத்தின் படிக்கட்டுகள் வழியாக கிளியோபாட்ரா இருந்த அறைக்குச் சென்றான்.
“உங்களுடனான இந்த சந்திப்பு நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். உங்கள் விருப்பத்தை ஒளிவு மறைவின்றி என்னிடம் கூறுங்கள். என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்ய காத்திருக்கிறேன்.”
“உங்களது உதவும் மனப்பான்மைக்கு நன்றி. இதுவரை எல்லா ஏமாற்றங்களையும் சந்தித்தாகி விட்டது. இனிமேலும் எந்த ஏமாற்றம் வந்தாலும் அதுபற்றி கவலைப்படப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன். அதனால், உங்களது உதவி ஏதும் எனக்கு வேண்டாம்.”
“இல்லை எகிப்து அரசியாரே! உங்களது பேச்சைப் பார்த்தால், இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை என்பது போல் இருக்கிறது. தயவுசெய்து அப்படி ஏதேனும் தவறான முடிவை எடுத்து விடாதீர்கள். உங்களது ஏதேனும் ஒரு ஆசையையாவது சொல்லுங்கள். அதையாவது நான் நிறைவேற்றித் தருகிறேன்”.
என் மகனுக்கு எகிப்து…
“சரி… நீங்கள் என் மீது அதிக அக்கறை கொண்டு சொல்வதால் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன். நான் பிச்சை எடுக்க வேண்டும் என்று உங்களது இளைய சீஸர் ஆசைப்பட்டால் இந்த எகிப்து அரசை பிச்சை கேட்பதாகப் போய்ச் சொல்லுங்கள். இப்போது அவர் வெற்றி கொண்டுள்ள இந்த எகிப்து என் மகனுக்கு வழங்கப்பட வேண்டும். இதுதான் என் ஆசை. இதைத்தவிர வேறு எதையும் நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.”
“என்னிடம் நம்பிக்கை வைத்து மனம் திறந்து பேசியதற்கு நன்றி. இப்போதுள்ள சோகம் மீண்டும் உங்களிடம் இருக்க வேண்டாம் என்பது என் தனிப்பட்ட விருப்பம். எங்கள் பேரரசர் சார்பில் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் தருகிறேன். அவர் மிகவும் நல்லவர். உங்களை துன்புறுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எதிரியாக வளர்ந்த ஆண்டனியை சிறைப்பிடிக்கத்தான் அவர் இங்கே படையெடுத்து வந்தார். இப்போது துரதிர்ஷ்டவசமாக ஆண்டனி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு விட்டார். அதனால், எங்களது இளைய சீஸரின் வேலை முடிந்து விட்டது. அவர் விரைவில் ரோமாபுரிக்கு திரும்ப இருக்கிறார். உங்களுக்கு என்ன தேவையோ, அது எப்போது தேவையோ அதுபற்றி எங்கள் சீஸருக்கு தகவல் அனுப்புங்கள். அவர் நிச்சயம் அதை உங்களுக்கு செய்து தருவார் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.”
“நன்றி புரொக்கியூலிஸ்… மேலும், நான் உங்களது இளைய சீஸரையும் பார்க்க விருப்பப்படுவதாகவும் சொல்லுங்கள்” என்ற கிளியோபாட்ரா, தன் பரிதாப நிலையை எண்ணி மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியானாள்.
அவளிடம் விடைபெற்றுப் புறப்பட தயாரானான் புரொக்கியூலிஸ்.
தற்கொலை முயற்சி
அப்போது அவனுடன் வந்த, ஆக்டேவியனின் இன்னொரு நண்பனான ரோமானியப் படைத் தளபதி காலசும், சில ரோமானிய வீரர்களும் சட்டென்று கிளியோபாட்ரா தங்கியிருந்த அந்த கொலைக்களக் கூடத்திற்குள் நுழைந்தனர்.
வந்தவர்கள் சூழ்ச்சி வலை பின்னி தங்களை கைது செய்து விட்டதாக கருதிய கிளியோபாட்ரா, அவர்களிடம் கைதாகி சித்ரவதைக்கு ஆளாவதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று முடிவெடுத்து, தனது வாளால் தன்னைத்தானே வெட்டி தற்கொலை செய்ய முயன்றாள்.
இதை எதிர்பார்க்காத புரொக்கியூலிஸ் சட்டென்று பாய்ந்து அவளது கையைப் பிடித்து தற்கொலை முயற்சியை தடுத்தான்.
அமைதியானாள் கிளியோபாட்ரா
“என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? மாபெரும் எகிப்து தேசத்துக்கு அரசியான தாங்கள் எடுக்கும் முடிவா இது? இப்போது நாங்கள் உங்களை கைது செய்ய வரவில்லை. எங்களது இளைய சீஸரும் அப்படியொரு உத்தரவை எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், உங்களது பாதுகாப்பு கருதிதான் நானும், மற்ற ரோமானிய வீரர்களும் இங்கே வந்திருக்கிறோம்.”
புரொக்கியூலிஸ் கொடுத்த விளக்கத்திற்குப் பிறகுதான் கிளியோபாட்ரா அமைதியானாள்.
தொடர்ந்து, சில ரோமானிய வீரர்கள் மட்டும் கிளியோபாட்ராவின் பாதுகாப்புக்காகக் கொலைக்களக் கூடத்தின் முன்பு நின்று கொண்டனர். புரொக்கியூலிஸ், ஆக்டேவியனைப் பார்க்க புறப்பட்டான்.
ஆண்டனியின் மறைவுக்குப் பிறகு மரண பயத்தில் இருந்த கிளியோபாட்ராவுக்கு அன்றைய இரவு தூக்கம் வர மறுத்தது. நள்ளிரவு வரை வெகுநேரம் தனிமையில் விழித்து தவித்திருந்த அவள், ஒருக்கட்டத்தில் தன்னை அறியாமலேயே தூங்கிப் போனாள்.
திடீரென்று ஏதோ பயங்கர சத்தம். கொலைக்களக் கூடத்தில் இருந்து வேகமாக ஓடி வந்து வெளியே எட்டிப் பார்த்தாள் கிளியோபாட்ரா. சற்றுத் தொலைவில் ஆக்டேவியனின் பிரம்மாண்ட ரோமானிய குதிரைப்படை ஆவேசத்தோடு வந்து கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த படை கொலைக்களக் கூடத்தை சூழ்ந்து கொண்டது.
கிளியோபாட்ரா கைது
சிறிதுநேரத்தில் கொலைக்களக் கூடத்திற்குள் நுழைந்த ரோமானியப் படை கிளியோபாட்ராவை கைது செய்தது. அவளது கைகளை இரும்புச் சங்கிலியைக் கொண்டு கட்டிய வீரர்கள் அவளை தரதரவென்று இழுத்துச் சென்றனர்.
எகிப்து வீதிகள் வழியாக அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது அந்தத் துயரக் காட்சியைக் காண சகிக்க முடியாத பொதுமக்கள் தங்களையும் மீறி அழுதனர். சிலர் அந்த சோகக் காட்சியைக் காண சக்தியின்றி தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டனர்.
இதையெல்லாம் கவனித்த கிளியோபாட்ரா, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இதே வீதிகளில் தங்கத்தேரில் தெய்வமாக பவனி வந்த தான், இன்று கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘இத்தகைய அவமானம் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் ஆண்டனி இறந்த அன்றே தற்கொலை செய்திருப்பேனே…’ என்று மனதிற்குள் புலம்பினாள்.
திடீரென்று அவள் கைகள் கட்டப்பட்டு இருந்த இரும்புச் சங்கிலியில் இணைக்கப்பட்டு இருந்த கயிறு அவளை வேகமாக இழுக்க ஆரம்பித்தது. ஆம்… அவளைக் குதிரையில் இருந்தபடி வீதிகளில் இழுத்துச் சென்ற ரோமானிய வீரர்கள் திடீரென்று குதிரையை வேகமாக விரட்டினர்.
குதிரையின் வேகத்திற்கு ஈடுஇணையாக ஓட முடியாத கிளியோபாட்ரா சில அடிகள் எடுத்து வைத்த நிலையிலேயே கால் இடறிக் கீழே விழுந்தாள். ஆனால், அவளை இழுத்துச் சென்ற குதிரை மட்டும் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தது.
கூர்மையான கற்கள் நிறைந்த பழுதான சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட கிளியோபாட்ராவின் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டன. அவளது ஆடையின் பல பகுதிகள் கிழிந்து தொங்கின.
சித்தரவதை
சில நொடிகள் வேகமாக ஓடியிருக்கும். அவள் சுயநினைவை இழக்க ஆரம்பித்தாள். அவளது பார்வையில் தெரிந்த அனைத்துக் காட்சிகளும், நடந்து கொண்டிருக்கும் சித்தரவதைக் காட்சியை காண சகிக்க முடியாமல் மறைய ஆரம்பித்தன. திடீரென்று ‘டமார்’ என்று பயங்கர சப்தம்! இழுத்துச் செல்லப்பட்ட கிளியோபாட்ரா சாலையோரம் இருந்த இரும்புத் தூணில் மோதினாள்.
‘அம்ம்…ம்மா..-.’ என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தாள்.
‘இது கனவா?’
கண் விழித்தபோது படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்தாள். அதேவேகத்தில் கைகளைப் பார்த்தாள். அதில் இரும்புச் சங்கிலிகள் இல்லை. ஆடையைப் பார்த்தாள். அதில் எந்த கிழிசலும் இல்லை. உடம்பிலும் காயங்கள் இல்லை.
‘அப்படியானால்… நான் கண்டது எல்லாம் கனவா?’
கிளியோபாட்ரா தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அவளது இதயத் துடிப்பின் வேகம் மட்டும் இரு மடங்காகி இருந்தது.
-தொடரும்
பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.