கிளியோபாட்ரா-37 ரோமில் சமாதான பேச்சுவார்த்தை
ஆண்டனியைத் தற்காலிகமாகப் பிரிந்த கிளியோபாட்ராவுக்குத் தூக்கம் வர மறுத்தது. தன்னருகில் உதவிக்கு யாரும் இல்லை என்பது போன்ற தவிப்புக்கு ஆளானாள்.
ஆண்டனியின் பிரிவைத் தாங்க முடியாத கிளியோபாட்ரா நீண்ட தூக்கம் தரும் மருந்தைத் தேடினார். தூக்க மருந்து கேட்கும் கிளியோபாட்ராவிடம் ஏன் என்று கேட்கிறாள், சார்மியான் என்ற அவளது தோழி.
அதற்கு கிளியோபாட்ரா, “எனது ஆண்டனியை பிரிந்திருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தை தூங்கியே கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால்தான் அப்படி கேட்டேன்” என்கிறாள். இதில் இருந்தே, கிளியோபாட்ரா, ஆண்டனி மீது எந்த அளவுக்குக் காதல் வசப்பட்டிருந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டனியுடன், எகிப்தின் எல்லை வரை சென்றுவர, அவனது பாதுகாப்பு கருதி பல வீரர்களையும் கிளியோபாட்ரா அனுப்பியிருந்தாள். அவர்களில் ஒருவன் ஆண்டனியை எல்லைவரை சென்று விட்டுவிட்டுத் திரும்பி வந்தான். அவனிடம் ஆர்வமாகப் பேசினாள் கிளியோபாட்ரா.
“வீரனே… வந்துவிட்டாயா? உன் வருகைக்காகத்தான் இவ்வளவு நேரமும் காத்திருந்தேன். ஆண்டனி நல்ல முறையில் புறப்பட்டுச் சென்றாரா? நிச்சயம் அவரது பயணம் சிறப்பாகத் தான் இருக்கும். உன் முகத்தைப் பார்த்தாலே அது நன்றாகத் தெரிகிறது” என்று வேகமாக பேசியவள்.
“சரி… அவர் எனக்கென்று எதுவும் கொடுத்து அனுப்பினாரா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.
“ஆமாம் அரசியாரே! விலை உயர்ந்த கீழ்திசை நாட்டு முத்தை, பலமுறை முத்தமிட்டு என்னிடம் தந்தார். ‘இதை, பாதுகாப்பாக எனக்குரிய உனது அரசியாரிடம் சேர்த்துவிடு’ என்று என்னை பணித்தார். இதோ அந்த முத்து…” என்ற வீரன், ஆண்டனி பரிசாகக் கொடுத்தனுப்பிய விலை உயர்ந்த முத்தை கிளியோபாட்ராவிடம் கொடுத்தான்.
ஆண்டனியின் வீரமுழக்கம்
பேரின்பப் பரவசத்தோடு அதைப் பெற்றுக்கொண்ட கிளியோபாட்ரா, “வேறு எதுவும் சொன்னாரா?” என்று தணியாத ஆர்வத்தில் கேட்டாள்.
“இன்னும் சொன்னார் அரசியாரே! ‘எகிப்து அரசியின் காலடியில் பல நாடுகளை இந்த ஆண்டனி பரிசாக வைப்பான் என்று போய்ச் சொல். கீழ்திசை நாடுகள் விரைவில் அவளை தங்களது தலைவியாக அழைக்கும் என்பதையும் மறந்து விடாமல் சொல்லிவிடு’ என்று கூறியவர், தனது குதிரை மீது தாவி ஏறினார்” என்றான் வீரன்.
‘என்னை தற்காலிகமாக பிரிந்தாலும், அவருக்கு என் மீதான அன்பும், பாசமும் குறையவில்லை’ என்று மனதிற்குள் பெருமிதப்பட்டுக் கொண்டாள் கிளியோபாட்ரா.
இந்த காலக்கட்டத்தில்தான் ஏற்கனவே தான் நேசித்திருந்த ஜூலியஸ் சீஸரை விடவும், இளம் வீரன் ஆண்டனியை அதிகமாக நேசிக்க ஆரம்பித்து இருந்தாள் கிளியோபாட்ரா.
ஒருமுறை தனது தோழி சார்மியானிடம், ‘ஜூலியஸ் சீஸரை நான் இதுபோன்று நேசித்து இருக்கிறேனா?’ என்று ஆண்டனியை மனதில் நினைத்துக் கேட்கிறாள் கிளியோபாட்ரா.
அதற்கு சார்மியான், “ஓ… அந்த மாவீரரையா?” என்று ஆர்வமாகக் கேட்கிறாள்.
அவள் இப்படி சொன்ன மாத்திரத்தில் கன்னம் சிவந்து கோபமாகிறாள் கிளியோபாட்ரா.
“இனி ஒருமுறை நீ சீஸரை அதுபோன்று பெருமையாக அழைத்தால், நான் உன் கழுத்தை திருகிக் கொன்று விடுவேன். மாவீரன் என்றால், அது ஆண்டனிதான் என்று சொல்” என்று கூறி, செல்லமாக மிரட்டுகிறாள்.
கிளியோபாட்ரா திடீரென்று இப்படிச் சொன்னதும், சார்மியானுக்குத் திடீர் சந்தேகம்.
‘சீஸர் உயிரோடு இருக்கும்வரை அவரை நாம் புகழ்ந்து பேசினால்தான் இவளுக்குப் பிடித்தது. இப்போது தலைகீழாக மாறிவிட்டாளே’ என்று மனதிற்குள் புலம்பியவளுக்கு, கிளியோபாட்ராவின் மனதில் மறைந்த சீசருக்கு இப்போது கொஞ்சமாவது இடம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதை அவள் கிளியோபாட்ராவிடம் சட்டென்று கேட்டும்விட்டாள்.
அது அறியாத வயசு!
கோபமான கிளியோபாட்ரா, “ஆண்டனியோடு சீஸரை ஒப்பிட்டு நீ பேசியது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். நான் சீஸரை நேசித்தது அந்தக்காலம். அப்போது எனக்கு அறியாத வயசு. என் உள்ளம் பக்குவம் அடையாமல் இருந்தது. அனுபவம் இல்லாததால் சீஸரை புகழ்ந்து பேசிவிட்டேன். ஆனால், இப்போது நிலைமை வேறு. ஆண்டனியைத்தான் நான் முழுமையாக நேசிக்கிறேன். அதுதான் உண்மை!” என்றார் கிளியோபாட்ரா.
இதற்கிடையில், ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தான் ஆண்டனி. அவனும், ஆக்டேவியனும், லெப்பிடசும் சந்திக்க ஏற்பாடு ஆனது.
மனைவியைப் பறிகொடுத்த சோகம் எட்டிப் பார்த்திருந்த ஆண்டனி, அதற்கு காரணம் ஆக்டேவியன்தான் என்று கருதியதால் சற்றே கோபமுடன் காணப்பட்டான். ஆக்டேவியனும், ஆண்டனி தூண்டிவிட்டதால்தான் புல்வியா தனக்கு எதிராகக் கலகம் செய்தாள் என்று கருதினான்.
சமாதானப் பேச்சு
ஆண்டனியும், ஆக்டேவியனும் சண்டை போட்டுக்கொண்டால் மூவர் கூட்டணிக்கே ஆபத்தாகிவிடும் என்று கணக்குப் போட்ட லெப்பிடஸ் இருவரையும் சமரசம் செய்யும் நோக்கத்துடனேயே பேசினான். அதனால், இருவரும் சற்றே இறங்கி வந்து பேசினார்கள். முதலில் ஆக்டேவியனே பேசினான்.
“ஆண்டனி… நீங்கள் எகிப்தில் தங்கியிருந்ததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு எதிராக தாங்கள் செய்த சதிதான் அதிர்ச்சியாக உள்ளது.”
“என்னது… நான் சதி செய்தேனா? அரசியல் அனுபவம் அதிகம் இல்லாத உனக்கு எதிராக சதி செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.”
“அப்படியென்றால், தங்கள் மனைவி புல்வியா உங்களது சகோதரனுடன் சேர்ந்து எனக்கு எதிராக கலகம் விளைவித்ததை எப்படி எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்கள்?”
“எனது சகோதரன், எனது மனைவியுடன் சேர்ந்து உனக்கு எதிராக கலகம் செய்தது, எனக்கு ஆதரவாகத்தான் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அதேநேரம், நீ என்னுடன் சண்டையிட ஆசைப்பட்டால் வேறு காரணத்தைத் தேடு.”
“நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதை நான் எப்படி நம்புவது?”
“நம்பித்தான் ஆகவேண்டும். ஆட்சிப் பொறுப்பில் நான் உனது பங்காளி. எனது சகோதரன், நீ சொல்வதுபோல் கலகம் ஏற்படுத்தினால் அது என்னையும் சேர்த்தே பாதிக்கும். அதனால், நானும் அவனது கலகத்தை அங்கீகரிக்கவில்லை. அதேபோல், என் மனைவி புல்வியாவை பொறுத்தவரை, அவளை அடக்குவது என்பது, அவளைப் போல் உனக்கும் ஒரு மனைவி இருந்தால்தான் தெரியும்.
என்னை பொறுத்தவரையில் இந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை கட்டிக்காப்பது என்பது எளிதான ஒன்றுதான். ஆனால், புல்வியா போன்ற ஒருத்தியுடன் குடும்பம் நடத்துவது என்பது அதைவிட கஷ்டம். மேலும், அவள் கலகம் செய்ய காரணம், அவளது சொந்த உணர்ச்சிகளும், சூழ்ச்சிகளும்தான். அதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மற்றபடி, அவளது கலகத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லவே இல்லை. இதற்கு மேலும் என்னால் விளக்கம் அளிக்க முடியாது.”
“சரி… அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். அதேநேரம், இன்னொரு வாக்குறுதியையும் நீங்கள் மீறிவிட்டீர்கள்..!”
“என்ன வாக்குறுதி..?”
“எனக்கு தேவைப்படும்போது ஆயுத உதவியும், பொருள் உதவியும் செய்ய வேண்டும் என்பது நம் இருவருக்கும் இடையே உள்ள உடன்பாடு. ஆனால், அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.”
“இல்லை ஆக்டேவியன். நான் உன்னை மறக்கவில்லை. என்னையே மறந்துவிட்டேன். என் மனைவியின் கலகத்திற்கும், இதற்கும் தொடர்பு இருக்கிறது. அதையும் சேர்த்தே ஒப்புக்கொள்கிறேன்”.
“என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“நான் எகிப்தில் இருந்து ரோமாபுரி திரும்ப வேண்டும் என்பதற்காகவே என் மனைவி புல்வியா தங்களை எதிர்த்து கலகம் செய்திருக்கிறாள் என்பது எனது கணிப்பு. அதற்காக நான் வருந்துகிறேன். தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்கிறேன்…” என்று ஆண்டனி இறங்கி வந்தபோது, லெப்பிடசே குறுக்கிட்டான்.
“சபாஷ் ஆண்டனி. உங்களது பெருந்தன்மையான முடிவை வரவேற்கிறேன். இளைய சீஸர் அதை பெரிய விஷயமாக கருதமாட்டார் என்று உறுதியாக சொல்கிறேன்” என்று கூறி, ஆக்டேவியனின் கோபத்தையும் குறைத்தான்.
திருமண ஏற்பாடு
தொடர்ந்து, ஆக்டேவியன், ஆண்டனி இருவரும் சமாதானம் ஆனார்கள். மனம் விட்டு பேசினார்கள். அதன்தொடர்ச்சியாக, தனது தாய் வழி சகோதரி ஆக்டேவியாவை ஆண்டனிக்கு மறுமணம் செய்து கொடுக்க முன்வந்தான் ஆக்டேவியன். ஆண்டனியும் அதற்கு சம்மதித்தான்.
-தொடரும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.