ரோம் திரும்ப ஆண்டனி முடிவு
கிளியோபாட்ரா அழகில் மயங்கிக்கிடக்கிறான் ஆண்டனி என்கிற தகவல் எகிப்து மக்களுக்கு மட்டுமின்றி, ரோமாபுரி வரைக்கும் பரவிவிட்டது.
ரோம் நகரில் வசித்து வந்த ஆண்டனியின் மனைவி புல்வியா இதை அறிந்து சற்று அதிர்ச்சி ஆனாள். ஆனாலும், ஒரு அரசன் இன்னொரு அரசனின் மனைவியை தூக்கி வருவதும், அழகான பெண்கள் மீது ஆசைப்படுவதும் காலம் காலமாகத் தொடர்வது என்பதால் அதை மிகப்பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை அவள்.
இதற்கிடையில், ரோமாபுரி மூவர் கூட்டணியில் முதன்மையானவனான அகஸ்டஸ் என்கிற ஆக்டேவியன் வயதாலும், மனதாலும் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக மாறியிருந்தான்.
ரோமாபுரி முழுமையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர காயை நகர்த்தினான். அதையொட்டி, ஆண்டனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளுடன் இணைக்க நடவடிக்கைகள் எடுத்தான்.
ரோம் திரும்ப ஆண்டனி முடிவு
இதையறிந்த ஆண்டனியின் மனைவி புல்வியா கொதித்தெழுந்தாள். அவள், ஆண்டனியின் சகோதரன் லூசியசுடன் சேர்ந்து ஆக்டேவியனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாள். இருவரும் படைகளைத் திரட்டி ஆக்டேவியனை போர்க்களத்தில் எதிர்கொண்டனர்.
ஆனால், எப்போதும் தந்திரமாக காய்களை நகர்த்தும் ஆக்டேவியன் படைகள் முன்பு எளிதில் தோற்றுப் போயினர். இருவரும் நாட்டை விட்டே விரட்டப்பட்டனர். சிசியான் என்ற இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த புல்வியா, அங்கேயே நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தாள்.
அவள் இறந்த செய்தி தாமதமாகத்தான் ஆண்டனியை வந்தடைந்தது. தனது அதிகாரப்பூர்வ மனைவி என்பதால் ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்தினான். அத்துடன், ஆக்டேவியனின் கை வேகமாக ஓங்குவதால், தான் ரோமாபுரிக்கு உடனே புறப்பட்டுச் செல்வது அவசியம் என்றும் உணர்ந்தான். அதற்கான ஏற்பாடுகள் அதிவேகமாக நடைபெற்றன. அவன் ரோம் புறப்படும் நாளும் வந்தது.
கிளியோபாட்ராவின் ஏக்கம்
ஆண்டனி ரோமாபுரிக்குச் செல்வது கிளியோபாட்ராவுக்குப் பிடிக்கவில்லை. ஆண்டனி, தனது நிலையை சொன்னாலும்கூட, அவன் எகிப்திலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
“ஆண்டனி… ரோமுக்கு கண்டிப்பாக போய்த்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டு, அதற்காக பொய் காரணங்களை என்னிடம் கூற வேண்டாம். போகிறேன் என்று சொல்லிவிட்டு செல்லுங்கள்.
அந்த சொர்க்கமே எனது இதழிலும் விழியிலும் இருக்கிறது என்று நீங்கள் முன்பு பேசியது உண்மையாக இருந்தால், என்னைவிட்டு போகமாட்டேன் என்று அல்லவா முடிவெடுத்து இருக்க வேண்டும்? என்னைவிட்டு நீங்கள் சென்றாலும், உங்களுக்காக எகிப்தில் ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டும் போதும்…” என்ற கிளியோபாட்ராவின் மீன் விழிகளின் ஓரம் கண்ணீர் இழையோடிக் கொண்டிருந்தது.
“என்னை மறுபடியும் மறுபடியும் போகாதே என்று சொல்லாதே கிளியோபாட்ரா. நான் அங்கே செல்வது காலத்தின் கட்டளை. நீ நினைப்பது போல் நான் உன்னை பிரிந்து அங்கே செல்லவில்லை. உனக்காக எனது இதயத்தை இங்கே விட்டுவிட்டுதான் போகப்போகிறேன்.”
“எனக்காக உங்கள் இதயத்தையே இங்கே விட்டுவிட்டு போவதாக சொல்கிறீர்கள்… அப்படியென்றால், இங்கேயே இருந்து விடலாமே..!”
“இல்லை கிளியோபாட்ரா! ரோமாபுரியில் உள்நாட்டு குழப்பம் உருவாகி இருக்கிறது. அதோடு, இன்னொரு காரணமும் இருக்கிறது” என்ற, ஆண்டனி அதற்கு மேல் பேச முடியாமல் திடீரென்று விக்கித்தான்.
“என்ன ஆனால்…?” பதற்றம் கலந்த ஆர்வத்தோடு கேட்டாள் கிளியோபாட்ரா.
“எனது மனைவி புல்வியா இறந்துவிட்டாள்!”
“அய்யோ… என்ன கொடுமை இது?”
“அவள் எனது மனைவி மட்டுமல்ல; மிகச்சிறந்த போர் வீராங்கனையும்கூட! அவளது மறைவு என்னவென்றே புரியாமல் என்ன ஏங்கச் செய்கிறது…” என்ற ஆண்டனியின் வீரக் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் அரும்பின. அதைக் கவனித்துவிட்டாள் கிளியோபாட்ரா.
“புல்வியாவுக்காக நீங்கள் விடும் கண்ணீர் உண்மையானதா அல்லது நடிப்பா என்று என்னால் அறிய முடியவில்லை. ஆனாலும், உங்களை நம்புகிறேன். நிச்சயமாக உங்களது இந்த செயல் நடிப்பாக இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். எல்லா கடவுள்களும் உங்களுக்கு துணை வருவார்கள் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்களது வீர வாளில் எல்லாம் வெற்றியாகட்டும்.”
“மிகவும் மகிழ்ச்சி அன்பே! உனது பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். வெற்றிவீரனாக மீண்டும் எகிப்து திரும்புகிறேன். நான் இங்கிருந்து தற்காலிகமாக உன்னை பிரிந்து சென்றாலும், உன்னுடன் இருப்பதாகவே எண்ணுவேன்” என்ற ஆண்டனி, கிளியோபாட்ராவிடம் விடைபெற்று, படைவீரர்களுடன் ரோம் புறப்பட்டான்.
ஆண்டனி பற்றி விசாரணை
இதற்கிடையில், எகிப்தில் ஆண்டனி போட்ட காமக்களியாட்டங்கள் குறித்து விசாரணை நடத்தினர், ரோமாபுரியின் மூவர் குழுவின் முதன்மையானவனும், ஜூலியஸ் சீஸரின் வளர்ப்பு மகனுமான ஆக்டேவியன் மற்றும் அந்த குழுவின் மூன்றாவது தலைவனான லெப்பிடஸ்!
“லெப்பிடஸ்… ஆண்டனியின் மீது புகார் மேல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆட்சிப் பரப்பை விரிவுப்படுத்த எகிப்துக்கு சென்றவர், கிளியோபாட்ரா விரித்த மோக வலையில் விழுந்துவிட்டாரே… ரோமாபுரியின் மூவர் குழுவில் தானும் ஒருவர் என்பதை மறந்துதான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரா?”
“அவசரப்பட வேண்டாம் இளைய சீஸர். ஆண்டனியின் குணங்கள்தான் நம்மை இப்படி பேச வைத்திருக்கின்றன. நிச்சயம் அவர் ரோம் திரும்புவார். அவரோடு நட்புறவு பாராட்டுவதுதான் நல்லது.”
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”
“தங்கள் தந்தை சீஸரை கண்டு அஞ்சியவர்கள், இப்போது தலையெடுக்கத் துவங்கிவிட்டார்கள். செக்ஸ்டஸ் பாம்பேயஸ் கடல் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டான். அவனது ஆதிக்கம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது”.
“அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள்?”
“அவசரப்பட்டு ஆண்டனியை ஒதுக்கிவிடாமல், அனைவரும் சேர்ந்து, எதிரிகள் மீது போர் தொடுக்க வேண்டும். அப்போதுதான் பாம்பேயஸ் போன்ற திடீர் எதிரிகளை விரட்ட முடியும். இல்லையென்றால், ரோமப் பேரரசு மீது ஒரு பயம் இல்லாமல் போய்விடும்”.
“நீங்கள் சொல்வதும் சரிதான். ஆண்டனி மீண்டும் ரோம் வரட்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்கிறேன்” என்ற ஆக்டேவியன், ‘நாம் எல்லாம் ஒரே அணியில் இருந்தால், நான் எப்போது இந்த ரோமாபுரிக்கு தனிப்பெரும் பேரரசன் ஆவது?’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.
-தொடரும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.