எம்.ஜி.ஆர். கொண்டிருந்த மிக தீவிரமான கடவுள் நம்பிக்கை

எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை

எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை. ஒன்றே குலம்  ஒருவனே தேவன்.

இது பற்றி எம்.ஜி.ஆர். 1968-ல் தி.மு.க. ஆட்சியின்போது பேசியிருக்கிறார். 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிர் பிழைத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின், நாடகமொன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய பேச்சு இது:

எம்.ஜி.ஆர். நாத்திகன் அல்ல

எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை

“நான் ஒரு ‘நாத்திகன்’ என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான்.

நமக்கெல்லாம் மீறிய மிகப் பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.

நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா? போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன்.

‘மர்மயோகி’ படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் முருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை. என்னுடன் நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.

என் உள்ளத்தில் மாறுதல்

ஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. 

நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம். சற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் மீண்டும் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம்.

அவர், “உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்..!” என்றார் அந்த நண்பர்.

எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை

என் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது.

‘ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா?’ என்ற கேள்வியும் ‘தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா?’ என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா?

எனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது.” 

சிவனாக ஆனந்தத்தாண்டவம்

1952-ல் எம்.ஜிஆர். தி.மு.க-வில் சேரும்வரை காந்தியவாதியாக கதர் உடை அணிந்து, கழுத்தில் துளசி மாலையும், நெற்றியில் பட்டையாக சந்தனமும் குங்குமமுமாக பக்திமயமாக இருப்பார்.

முருகக்கடவுள், அம்மனின் மீது எம்.ஜிஆருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜிஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோயில்களுக்குத் தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார்.

‘ஸ்ரீ முருகன்’ படத்தில் எம்.ஜிஆர். சிவனாக ஆனந்தத்தாண்டவம், ருத்ரதாண்டவம் ஆடியதும் – அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுத்தர, அதுவே அவருக்கு மூலதனம் போல் ஆகியது.

ஜூபிடரின் ‘மர்மயோகி’ படத்திலிருந்துதான் எம்.ஜிஆர். முதல் நிலை ஆக்க்ஷன் ஹீரோவாக உருவாகத் தொடங்கினார். இதற்கு ஸ்ரீமுருகன் படம் தான் காரணம் அது தான்  சென்டிமெண்ட் என்ற வகையில் எம்.ஜி.ஆருக்கு முருக கடவுள் மீது அலாதியான பக்தி உண்டு. 

தி.மு.க.-வில் சேர்ந்தபின் இறைவழிபாடு இல்லாத தோற்றத்தில் மக்கள் திலகம் இருந்தாலும் – துன்பம் நேரிடும் சமயங்களில் எல்லாம் அவர் ‘முருகா’ என்று அழைத்ததை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். தன்னை தமிழனாக எண்ணி, அந்த எண்ணத்தையே சுவாசித்து வாழ்ந்தார். அதனாலேயே தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைப் பெரிதாகக் கொண்டாடினார்.

இயேசு வேடத்தில்

இயேசு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த ‘தலைவன்’ படத் தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸ். ஒரு யுக்தியைக் கையாண்டார். 

‘தலைவன்’ படம் துவங்கி நீண்ட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ், எம்.ஜி.ஆர். விருப்பப்படி ‘இயேசுநாதர்’ படத்தைத் துவங்கினார். அன்றைய தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அந்தப் படவிழாவில் தலைமை தாங்கினார். 

“ஆனால், கதையின் முடிவில், இயேசுவை சிலுவையில் அறைவது போன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். நடிப்பதை எங்களால் தங்க இயலாது” என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, படம் பூஜையோடு நின்றது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டர்களாக வெளிவந்து ஏராளமாக விற்பனையாகின.

‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் நடித்தபோது ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். இயேசுநாதர் போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஆசைக்காக எடுத்துக்கொண்டது. ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் தீய அரசியல்வாதிகளை அடையாளம் காட்ட சிவன் வேடமணிந்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோல எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.

தாய் மூகாம்பிகை

கேரள இந்து மலையாளிகளுக்கு குலதெய்வமாக விளங்குவது, கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள தாய் மூகாம்பிகை. 

அங்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம், எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா, எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதியின் தாயார் மூகாம்பிகை அம்மாள், ஜானகி ஆகியோருக்கு இருந்தது. அது எம்.ஜி.ஆர். மனதிலும் இருந்தது. அதற்கு விதை போட்டவர் இயக்குநர் கே.சங்கர். 

1976-ல் நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள உடுப்பியில் ‘மீனவ நண்பன்’ படபிடிப்பு முடிந்தபின் ஒரு நாள் நம்பியார், கே.சங்கர் (மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் வழியில் அங்கு வந்திருந்தார்) ஆகியோருடன் எம்.ஜி.ஆர் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது மூகாம்பிகை கோயிலுக்குச் செல்வது பற்றிய தனது குடும்பத்துப் பெண்களின் கருத்தை எம்.ஜி.ஆர். சொன்னார். நம்பியார், எம்.ஜி.ஆரிடம் சங்கரைக் காட்டி, “இவரோடு ஒருமுறை கோயிலுக்குப் போய்விட்டு வாருங்களேன்” என்று சொல்ல, எம்.ஜி.ஆர். பதிலேதும் சொல்லாமல் புறப்பட்டு விட்டார்.

யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை

அதிகாலை 5.00 மணிக்கு (4 மணிக்கே கோயில் திறக்கப்படும்) கோயிலுக்குள் சென்ற எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வணங்கிவிட்டு பொழுது விடிவதற்குள் திரும்பிவிட்டார்.

மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி எம்.ஜி.ஆர்., தொப்பி, கண்ணாடி, இன்றி மேல சட்டையில்லாமல் பட்டுத்துண்டு ஒன்றை அணிந்தபடி கோயில் சந்நிதானத்துக்குள் சென்று வந்ததை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டு விலகாத நேரம் வேறு. 

கோயிலில் ஆதிசங்கரர் வழிபட்ட இடம் ‘சங்கரபீடம்’ என்றழைக்கப்படுகிறது. காற்று வசதியில்லாத இந்தச் சிறிய அறைக்குள் ஐந்து நிமிடம் கூட இருக்கமுடியாது. வியர்த்துக் கொட்டிவிடும். அங்கு 30 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து எம்.ஜி.ஆர் தியானம் செய்துவிட்டு வெளியே வந்தபோது வியர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தார். 

அவருடைய முகத்தில் புதிய ஒளி தென்பட்டதுபோல இருந்தது சங்கருக்கு. “இப்படியோரு பரவசமான அனுபவத்தை என் வாழ்நாளிலேயே நான் பெற்றதில்லை!” என்று சங்கரிடம் எம்.ஜி.ஆர். கூறினாராம்.

1977-ல் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர். மீண்டும் ஒருமுறை மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வந்தார். 

தேர்தலில் வெற்றி பெற்றபின் தன் மனைவி ஜானகியிடம் (மதுரையில் ‘நாடோடிமன்னன்’ வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளைக் கொடுத்தனுப்பினார். அந்தத் தங்கவாளைத்தான் இரவு மூகாம்பிகை அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள்.

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் பதினோரு முறை சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் மெய்காப்பாளர்களே உடன் சென்று வந்திருக்கிறார்கள்.

‘இதயவீணை’யில் விவேகனந்தர்

எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை

எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில், மாம்பலம் அலுவலகத்தில் தாயார், தந்தை படங்களுடன் இயேசு, காந்தி, புத்தர், விவேகானந்தர் படங்களெல்லாம் உண்டு. அவர்களையும் அவர் தெய்வமாக வழிபட்டிருக்கிறார். 

விவேகானந்தர் மீது எம்.ஜி.ஆருக்கு உள்ள பக்தியின் அடையாளம்தான் அவர் ‘இதயவீணை’யில் விவேகனந்தர் போல் ஒப்பனை செய்து, ஒரு காட்சியில் நடித்திருந்தார். 

மற்றொரு காட்சியில் தங்கையின் (லட்சுமி) திருமணத்துக்கு மாறுவேடத்தில் வருவார். அந்த ஒப்பனை இயேசுவைப் போல இருக்கும். தான் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகவாதி என்பதை உலகம் அறிந்துகொள்ளவே இப்படியோரு வெளிப்பாடு.

ஆன்மிகத்தில் எம்.ஜி.ஆருக்கு இத்தனை ஈடுபாடுகள் இருந்தபோதிலும் அவர் தன் தாயை நேசித்தது போல், வழிபட்டது போல் முக்கியத்துவம் வேறெதற்கும் தந்ததில்லை. 

ராமாபுரம் இல்லத்தில் தன் தாயாருக்கு கோயிலொன்றை சிறிய அளவில் எழுப்பியிருக்கிறார். அந்தக் கோயிலில் தாயை தினமும் வணங்கிவிட்டுத்தான் வெளியே புறப்படுவார்.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்த பொது சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதை முடித்துக் கொண்டு ராமாபுரம் தோட்டத்துக்கு திரும்பியபோது, கார் போர்டிகோவில் வந்து நின்றது. 

எம்.ஜி.ஆர். கிழே இறங்கி நேராகத் தன் தாயின் கோயிலுக்கு வந்து தாயின் படத்துக்கு முன் சிறிது நேரம் மெளனமாக இருந்து வணங்கிய பின்பே வீட்டுக்குள் சென்றார். இவரைப் போல தாயை நேசித்தவர் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரது புகழ் நிலைத்திருக்க இதுவே காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *