கல்பூர்னியாவை நடுநடுங்க வைத்த பொல்லாத கனவு

கிளியோபாட்ரா-25 கல்பூர்னியாவை நடுநடுங்க வைத்த பொல்லாத கனவு

கிளியோபாட்ரா-25 கல்பூர்னியாவை நடுநடுங்க வைத்த பொல்லாத கனவு

ஜூலியஸ் சீஸரைக் கொலை செய்யும் திட்டம் பற்றி சக செனட்டர்களுடன் பேசிவிட்டு திரும்பிய புரூட்டஸ், அந்த திட்டம் பற்றி தெரியாத தனது மனைவி போர்ஷியாவைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.

“என்ன போர்ஷியா… இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? இப்போதுதான் வந்தாயா? இல்லை… வந்து வெகுநேரம் ஆகிவிட்டதா?” – பதற்றத்துடனேயே கேட்டான் புரூட்டஸ்.

“ஏன் பதற்றப்படுகிறீர்கள்? நான் இப்போதுதான் வந்தேன். எதார்த்தமாக கவனித்தபோதுதான், உங்களை சிலர் சந்தித்து விட்டு வெளியேறுவதை பார்த்தேன். 

“இந்த நேரத்தில் என்ன விஷயம்? என்று கேட்கத்தான் இங்கே வந்தேன். 

“மற்றபடி, நீங்கள் எதற்காக இங்கே கூடிப் பேசினீர்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது…” என்று நிதானமாகவே பேசினாள் போர்ஷியா.

‘நல்லவேளை… நம் ரகசியத் திட்டம் இவளுக்குத் தெரியவில்லை’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட புரூட்டஸ், மனைவியை அணைத்தபடியே வீட்டிற்குள் சென்றான்.

ஏன் மறைக்கிறீர்கள்?

விசாலமான அறையில் இருந்த அந்த பெரிய படுக்கையில் இருவரும் அமர்ந்தனர். படுக்கும் முன் மனைவியை ஏறிட்டான் புரூட்டஸ்.

“என் அருமை மனைவியே! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. நாளை செனட் சபைக்கு செல்ல வேண்டும். அதனால் நான் ஓய்வெடுக்கிறேன். நீயும் படுத்துக்கொள்.”

“உங்களை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. இந்த நள்ளிரவில் நீங்களும், சிலரும் சேர்ந்து எதையோ ரகசியமாக பேசி இருக்கிறீர்கள். மனைவியிடம் மறைக்கும் அளவுக்கு பெரிய விஷயமா அது?”

“அதுபற்றி இப்போது கூற முடியாது அன்பே! நாளை வரை காத்திரு. உனக்கே உண்மை புரிந்துவிடும். இப்போது என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்…” என்று பணித்த புரூட்டசின் குரலில் களைப்பு நன்றாகவே தெரிந்தது. அவனது கண்களும் தூக்கத்தைத் தொலைத்திருந்ததால் சிவந்துபோய் காணப்பட்டன.

“சரி… உங்களை நான் தொந்தரவு செய்யவில்லை. நாளைக்கும் உங்களது ரகசிய திட்டம் எனக்கு தெரியாவிட்டால், அதை நீங்களே என்னிடம் சொல்லிவிட வேண்டும்…” என்று செல்லமாக ஒரு நிபந்தனை மட்டும் விதித்துவிட்டு படுக்கையில் விழுந்தாள் போர்ஷியா. புரூட்டசும் அமைதியான தூக்கத்திற்குள் நுழைந்தான்.

கல்பூர்னியா பதட்டம்

சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதுவரை அமைதியாய் இருந்த வானம் திடீரென்று சிலிர்த்துக்கொண்டது. எங்கிருந்தோ திரண்டு வந்த கருமேகங்கள் ஒன்றொடு ஒன்று மோதி இடியையும், மின்னலையும் கொண்டு வந்தன. 

இயற்கை திடீரென்று ஏற்படுத்திய அந்த வெளிச்சத்தில் இருளில் மூழ்கிப்போய் இருந்த ரோம் நகரம் அவ்வப்போது பகலாய் பளிச்சிட்டு மறைந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் சீஸரின் அரண்மனையில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.

படுக்கையறையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சீஸரின் மனைவி கல்பூர்னியா அலறியபடியே எழுந்தாள். பக்கத்து அறையில் மன அமைதியின்றிப் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டிருந்த சீஸர், மனைவியின் திடீர் அலறலால் பதற்றமானார். 

மனைவியின் அறைக்கு வேகமாக ஓடி வந்தார்.

தன் அருகில் வந்து அமர்ந்த சீஸரை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டாள் கல்பூர்னியா. அவளது உடல், அவளது கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கியது.

“அன்பே… உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி அலறினாய்? திடீரென்று இடி இடித்ததால் பயந்து விட்டாயா? அல்லது, துணையாய் நான் உன்னருகில் இல்லாததால் மிரண்டு விட்டாயா?” பதற்றத்தோடு கேட்டார் சீஸர்.

கல்பூர்னியாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சீஸரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மேலும் நடுங்கிக் கொண்டிருந்தாள். 

அவளை இறுக்கி அணைத்து அவளது பதற்றத்தை தணிக்க முயன்றார் சீஸர். சில நொடிகளுக்குப் பிறகே கல்பூர்னியா வாய் திறந்தாள்.

பொல்லாத சொப்பனம் கண்டேன்…

கல்பூர்னியாவை நடுநடுங்க வைத்த பொல்லாத கனவு

“அரசே… பொல்லாத கனவு ஒன்று கண்டேன். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பயத்தில் அலறிவிட்டேன்”.

“என்ன சொல்கிறாய் அன்பே… பொல்லாத கனவு உனக்கு மட்டும் இல்லையே; எல்லோருக்கும் வருவது இயல்பான ஒன்றுதானே…?”

“எல்லோருக்கும் கெட்ட கனவு வரலாம். ஆனால், நான் கண்ட கனவு, என்னை தங்களிடம் இருந்து நிரந்தரமாக பிரித்து விடுமோ என்று பயப்படுகிறேன்.”

“அப்படியென்றால்… நான் இறந்து விடுவதுபோல் கனவு கண்டாயா?”

“அப்படி சொல்லாதீர்கள் அரசே..! இப்போதைய ரோமானிய பேரரசில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில் இப்படியொரு கனவு வந்ததால், அப்படியொரு சம்பவம் நடந்து விடுமோ என்று பயப்படுகிறேன்.”

“உலக நாடுகளையே நடுங்க வைக்கும் ஒரு மாவீரனின் மனைவியாக இருந்து கொண்டு, ஒரு கனவுக்காக பயந்து நடுங்குவது கோழைத்தனம் இல்லையா?”

“கோழைத்தனம் என்று நீங்கள் இதைக் கருத வேண்டாம். நடைபெறப் போகும் ஒரு சம்பவத்தின் முன்னெச்சரிக்கையாகக் கூட இதை எடுத்துக்கொள்ளலாம், அல்லவா?”

“சரி… நான் உன் வழிக்கே வருகிறேன். இப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்?”

“இன்று காலையில் நடைபெறப் போகும் செனட் சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது”.

“நீ கண்ட கனவுக்கும், நான் செனட் சபைக்கு செல்லக்கூடாது என்பதற்கும் என்ன சம்பந்தம்?”

“சம்பந்தம் இல்லாமல் இல்லை. அங்கே, உங்கள் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து வந்து விடுமோ என்று பயப்படுகிறேன்…” என்ற கல்பூர்னியாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் சிந்தியது. ஆறுதலோடு அதை துடைத்துவிட்டார் சீஸர்.

பெண் சிங்கம்

கல்பூர்னியா கண்ட கனவு எவ்வளவு மோசமானது என்பதை திகிலோடு விவரிக்கிறாள்.

“வீதியில் ஒரு பெண் சிங்கம் குட்டி போட்டது. கல்லறைகள் வாய் திறந்து பிணங்களைக் கக்கின. பயங்கரத் தோற்றம் கொண்ட எதிரிகள் வானத்தில் ஓடும் கரும் மேகங்களுக்குள் மறைந்திருந்து இந்த ரோமாபுரியின் மீது தாக்குதல் நடத்தினார்கள். 

“அந்தத் தாக்குதலில் செனட் சபை முழுவதும் ரத்த மழை பெய்திருந்தது. இந்தப் போரில் மடிந்த வீரர்கள், இறப்பதற்கு முன்பு எழுப்பிய சப்தம் காற்று மண்டலம் முழுவதும் எதிரொலித்தது. உயிர் விடும் நிலையில் உள்ளவர்கள் ஏதேதோ முனகினர். பேய்கள் எல்லாம் வீதிகளில் ஆட்டம் போட்டன…” என்று, கல்பூர்னியா தான் கண்ட கெட்ட கனவு குறித்து கூறினார்.

மேலும், கல்பூர்னியா கண்ட அந்த கனவுக்கு பரிகாரமாக உயிர் பலியிட உத்தரவிடுகிறார் சீஸர். அதன்படி ஒரு விலங்கு பலியிடப்படுகிறது. அப்படி பலியிடப்பட்ட விலங்கின் உடலில் இதயம் இல்லை என்று தகவல் தனக்கு கிடைத்தபோது சிலிர்த்தெழுகிறார் சீஸர். 

நான் கோழை அல்ல…

“கோழைகள்தான், தாங்கள் சாகுவதற்கு முன்னால் பலமுறை பயத்தால் இறக்கிறார்கள். மாவீரன் ஒருமுறை மட்டும்தான் சாகிறான். அப்படிப்பட்ட மாவீரன் நான். சாவை யாரும் தவிர்க்க முடியாது. அது எப்போது வரவேண்டுமோ, அப்போது வந்தே தீரும். என் மனைவி இன்று செனட் சபைக்கு போகக்கூடாது என்று சொல்வதாலோ, பலியிடப்பட்ட விலங்கின் உடலில் இதயமே இல்லை என்று சொல்வதாலோ நான் பயந்துவிட மாட்டேன்.

“இன்று, பயத்தின் காரணமாக நான் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தால், எனக்கும் பலியிடப்பட்ட விலங்கைப் போல் இதயம் இல்லாமல் போய்விடும். எந்த சூழ்நிலையிலும் இந்த சீஸர் பயத்தால் அரண்மனைக்குள் முடங்கிக் கிடக்க மாட்டான். ஆபத்துக்கே தெரியும், இந்த சீஸர் எப்படிப்பட்ட ஆபத்தானவன் என்று. 

“நானும், ஆபத்தும் ஒரேநாளில் பிறந்த சிங்கங்கள். நான் அண்ணன்; ஆபத்து, தம்பி. நான் தம்பியைவிட மிகப் பயங்கரமானவன். அதனால், இன்று செனட் சபைக்கு நான் செல்வது உறுதியான முடிவுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை…” என்று சீஸரின் வார்த்தைகளால் கர்ஜித்தார்.

அதேநேரம், சீஸரை செனட் சபைக்கு இன்று ஒருநாள் மட்டும் செல்லவிடாமல் தடுக்க கல்பூர்னியா எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்கிறாள்.

“இன்று ஒருநாள் மட்டுமாவது எனது பேச்சைக் கேளுங்கள். இன்று உங்களுக்கு பதிலாக ஆண்டனி செனட் சபைக்கு செல்லட்டும். காரணம் கேட்டால், இன்று தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று நானே சொல்லி விடுகிறேன்…” என்று சீஸரின் காலில் விழுந்து கதறுகிறாள் கல்பூர்னியா.

மனம் மாறினார் சீஸர்

‘செனட் சபைக்கு போகாதே என் கணவா..! பொல்லாத சொப்பனம் நான் கண்டேன்..!’ என்று அவள் கதறியது, சீஸரின் மனதில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது.

‘இயற்கையும் திடீரென்று மாறி இடி, மின்னலுடன் பேய் மழை கொட்டுகிறது. இவளும் கெட்ட கனவு கண்டேன் என்கிறாள். அப்படியென்றால், இன்று செனட் சபைக்கு செல்வதை தவிர்த்து விடுவோம்’ என்று உறுதியாக முடிவெடுத்த சீஸர், அந்தத் தகவலை முகமலர்ச்சியுடனேயே மனைவியிடம் கூறினார்.

அதைக் கேட்ட பிறகுதான் கல்பூர்னியா மகிழ்ச்சி அடைந்தாள். கணவனை ஆரத்தழுவி முத்தமிட்டாள். 

அப்போது, கெட்ட கனவின் எதிராலியாக அதுவரை அவளிடம் காணப்பட்ட உடல் நடுக்கமும் காணாமல் போய் இருந்தது. இரவு நேரமும் மறைந்து காலைப்பொழுது மலர்ந்திருந்தது.

ஆனால், விதி யாரை விட்டது? 

சீஸரை செனட் சபைக்கு எப்படியாவது அழைத்துச் சென்று கொலை செய்துவிட வேண்டும் என்ற ரகசியத் திட்டத்தோடு, அவரது வீட்டிற்கு எதிரிகளான சில செனட்டர்கள் வந்து கொண்டிருந்தனர்.

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *