மதுரை தெப்பத்திருவிழா

மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு

மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு  

பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவனின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தெப்பத்திருவிழா நடைபெறுகின்றது. 

தெப்ப உற்சவம் நடக்க வேண்டுமென்றால் குளத்தில் நீர் நிறைந்திருக்கவேண்டும். ஊருக்கு நடுவே குளத்தில் நீர் நிறைந்திருந்தால் ஊரில் தண்ணீர் பஞ்சமே வராது. வீட்டில் பணத்தை சிக்கனமாகச் செலவழித்தால் பணத்தட்டுபாடே வராது. தெப்பத்திருவிழாவை காண்பவர்களுக்கு வண்டி வாகன யோகம் தேடி வரும்.

தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளங்களுள் மதுரை தெப்பக்குளமும் ஒன்று. திருவாரூர், மன்னார்குடி தெப்பக்குளங்களைவிட பரப்பளவில் கொஞ்சம் குறைந்திருந்தாலும் மதுரை தெப்பக்குளத்தின் மையமண்டப எழில் தமிழகத்தில் வேறு எந்த தெப்பக்குளங்களிலும் இல்லை. 

‘மாரியம்மன்’ தெப்பக்குளம்

தென்வடலாக 1000 அடியும், கீழ்மேலாக 950 அடியும் உள்ளது. ஏறத்தாழ மீனாட்சியம்மன் கோயிலுக்கு நிகரான பரப்பளவைக் கொண்டது. 20 அடி ஆழமும், 115 கன அடி கொள்ளளவும் கொண்டது இத்தெப்பக்குளம். பக்கத்திற்கு மூன்று படித்துறைகளைக் கொண்டு மொத்தம் பன்னிரெண்டு படித்துறைகளை கொண்டுள்ளது.

மேற்கே முக்தீஸ்வரர் கோயிலும், வடக்கே மாரியம்மன் கோயிலும் உள்ளன. இது ‘மாரியம்மன்’ தெப்பக்குளம் என்று அழைக்கப்பட்டாலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழாவிற்கு எழுந்தருள திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில் கிழக்கே அமைந்துள்ளது.

தெப்பத்திருவிழா

இறைவனை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று ஆறாட்டு விழா, தெப்பத்திருவிழா நடத்துவது நம் முன்னோர் மரபு. முழுநிலவு பொழியும் பௌர்ணமி நாட்களையொட்டி விழாக்கள் வருவது இன்னும் சிறப்பு.

முக்தீஸ்வரர் ஆலயம் தெப்பக்குளத்தின் மேற்குகரையில் அமைந்துள்ளது. ஐராவதேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் இக்கோயிலின் பெயராலேயே அருகிலுள்ள ஊர் ஐராவதநல்லூர் என்றழைக்கப்படுகிறது. ஐராவதம் இந்திரனின் வெள்ளையானையைக் குறிக்கும்.

முக்தீஸ்வரர் கோயிலில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் சிவலிங்கம் மேல் சூரிய ஒளி படும்படி ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

பொறியியல் நுண்ணறிவு

பழந்தமிழரின் கலைத் திறனையும், நீர் மேலாண்மைத் திறனையும் தெளிவாகக் காட்டும் நகரம் மதுரை. அதற்கு சாட்சியாக 1000 அடி நீளம், 980 அடி அகலம் 20அடி ஆழம் உடைய மாரியம்மன் தெப்பக்குளத்தின் அலைகற்களோடு கூடிய கற்சுவர்களும், படிக்கட்டுகளும் தமிழர்களின் பொறியியல் நுண்ணறிவுக்கு அடையாளமாகும். 

தெப்பக் குளத்தின் சுற்றுச்சுவர்களும் சுவரில் அமைந்த சிலைகளும் மையமண்டபமும் தமிழர்களின் கலைத்திறனுக்குச் சான்றாகும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்  தெப்பத்திருவிழா பனிரெண்டு நாட்கள் பெருந்திருவிழாவாக வருடந்தோறும் தை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆரம்பக்காலங்களில் 10 நாட்கள் விழா திருவாதிரை நட்சத்திரம் வரை கொண்டாடப் பட்டுவந்தது. நிறைவு நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் என்கிற நிகழ்வாக கொண்டாடப்பட்டு வந்தது.

மதுரை சிந்தாமணி

மதுரை சிந்தாமணி வாழ் மக்கள் உள்ளத்தில் ஒரு ஏக்கம் இருந்தது மதுரையின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லும் மீனாட்சியும் சொக்கநாதரும் நம்முடைய  பகுதிக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள்.

சிந்தாமணி மக்கள் தங்களது எண்ணத்தை திருமலை நாயக்க மன்னரிடம் வேண்டுகோளாக வைத்தார்கள். மன்னனும் பரிசீலனை செய்து அந்த கால கட்டத்தில் அறுவடை நடைபெறுவதனை மையப்படுத்தி கதிரறுப்புத் திருவிழா என்கிற திருவிழாவை ஏற்படுத்தினர்.  

தெப்பத்திருவிழாவிற்கு முதல்நாள் புணர்பூசம் நட்சத்திர நாளன்று  மீனாட்சியம்மனை வைத்து  சிந்தாமணி வயலில் கதிரறுக்கும் உற்சவமாக கொண்டாடலாம் என முடிவு எடுத்தார். அதன் படி தை மாத வளர்பிறை புனர்பூச நன்னாளை கதிரறுப்புத் திருவிழா  நாளாக அறிவித்தார்.

அதனை அடுத்து பூசம் நட்சத்திர நாள் இந்த நாளில் தான் திருமலை நாயக்கர் பிறந்தார். அவரது  பிறந்தநாளான தைப்பூசத்தன்று தெப்பக்குளத்தில் சுவாமியையும் அம்பாளையும் எழுந்தருள வைத்து அழகு பார்க்கும் தெப்பத் திருவிழாவாக மாற்றினார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்

தெப்பத்திருவிழா அன்று காலை இரண்டு முறை  அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் மீனாட்சி சொக்கநாதருடன் வலம் வருவார். மாலையில் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இரண்டு முறை வலம் வருவார்கள். அதன்  பிறகு சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் அவுதா தொட்டில் வாகனத்திலும் கோயிலை சென்றடைவர்.

அது சரி இந்த தெப்பக்குளத்தில் நீர் நிறைந்து இருக்கின்றது. அதனால் ஏதேனும் தொற்று வருமா? அதற்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது. அதன்படி  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் முதல் முறையாக இயற்கை முறையில் சுத்திகரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது

‘இன்ஸ்டியபோ ரிமெடியேஷன்’

மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு

16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அற்புதமான தெப்பக் குளத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனால் தண்ணீர் தெளிவாகவும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கிறது. 

மிக அருமையான செரிவூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை ‘இன்ஸ்டியபோ ரிமெடியேஷன்’  கலவையைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 1000 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் முதல் ஒரு கிலோ கலந்து தெப்பக்குளத்திற்கு வருகின்ற தண்ணீரில் சொட்டு சொட்டாக கலக்கும்படி அனுப்பப்படுகிறது. 

தண்ணீரை மாசு படுத்தும் பாஸ்பேட் மற்றும் நைட்ரேட்டை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் செறிவூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை ‘இன்ஸ்டியபோ ரிமெடியேஷன்’க்கு உண்டு. மேலும் தண்ணீரில் வளரும் அற்புத மூலிகைகளான வெட்டிவேர், கல்வாழை ஆகிய செடிகளை 1,200 எண்ணிக்கையில் மிதவை மூங்கில் படுக்கைகளில் வைத்து தெப்பத்தில் விடப்பட்டிருக்கிறது. இதனால் தெப்பத்தின் தண்ணீருக்கு இயற்கை முறையில் சுத்திகரிப்பு நடக்கிறது.

பதினாறுகால் மண்டபம்

உலகப் பிரசித்தி பெற்ற தெப்பத்திருவிழா அன்று மாலையில் சொக்கநாதர் குதிரை வாகனத்தில் வலம் வருவார். அந்தக் காட்சியினைக் காண இலட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். இந்த நேரத்தில் தெப்பக்குளம் பகுதி முக்தீஸ்வரர் ஆலயம் நோக்கி கிழக்கு முகமாக திரும்பும் போது, பதினாறுகால் மண்டபம் ஒன்று இருக்கும். 

இந்த மண்டபம் எதற்காக கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் என்ன நடந்தது..? சொக்கன் ஒரு திருவிளையாடலையே இந்த இடத்தில் நடத்தியிருக்கின்றான். அது என்ன?

அபிடேகப்பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியன் பாண்டிய நாட்டினை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் சைவம் செழித்தோங்கி இருந்தது.

மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதருக்கு அருகே எல்லாம் வல்ல சித்தரை திருவுருவத்தை நிறுத்தி நள்தோறும் வழிபட்டு வந்தான். இன்றைக்கும் அதனை  நாம் தரிசிக்கலாம்.

விக்கிரமபாண்டியனிடம் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசன் ஒருவன் நீண்ட நாள் பகைமை கொண்டிருந்தான்.

சமண சமயத்தைச் சார்ந்த அந்த அரசன்  விக்ரமபாண்டியனை நேரடியாக போரிட்டு வெல்ல இயலாததால் சூழ்ச்சியால் வெல்ல எண்ணினான்.

எட்டு மலை

மதுரையைச் சுற்றி எட்டு மலைகளில் வாழ்ந்த சமணர்களின் தலைவர்களுக்கு தனித்தனியே ஓலை எழுதி அனுப்பினான். ஓலையின்படி சமணத்தலைவர்கள் அனைவரும் காஞ்சியில் ஒன்று கூடினர். மயில்தோகையால் சோழனை அவர்கள் ஆசீர்வதித்தனர்.

சோழ அரசன் அவர்களிடம் “விக்கிரமபாண்டினை நேரில் வெல்ல இயலாததால் நீங்கள் அபிசார வேள்வியை அதாவது  மரண வேள்வியை உண்டாக்கி அவனை கொன்று விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் நான் என்னுடைய நாட்டில் பாதியை உங்களுக்குத் தருவேன்.” என்று கூறினான்.

சோழனின் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்ட சமணர்கள் பாலியாற்றங்கரையில் பெரிய யாக குண்டத்தை அமைத்தனர். அதில் எட்டி உள்ளிட்ட தீய மரத்தின் விறகுகளையும், நச்சு உயிரிகளின் ஊன், மிளகுப் பொடி கலந்த எண்ணெயையும் ஊற்றி அபிசார வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வித் தீயினால் உண்டான நச்சானது அருகில் இருந்த காடுகள், சோலைகள், நந்தவனம் ஆகியவற்றை கருக்கி விட்டன.

அபிசார வேள்வித் தீ

சமணர்களின் அபிசார வேள்வித் தீயிலிருந்து ஒரு கொடிய யானை ஒன்று தோன்றியது.சமணர்கள் கொடிய யானையிடம் “நீ விரைந்து சென்று விக்கிரம பாண்டியனையும், மதுரையையும் அழித்து விட்டு வா” என்று கட்டளையிட்டனர்.

யானையின் உடலானது பெருத்து அதனுடைய கால்கள் மண்ணில் பதிந்தும், உடலானது விண்ணைத் தொட்டும் இருந்தது. அது தன்னுடைய பெரிய காதுகளினால் சூறாவளியை உருவாக்கியும், கண்களில் நெருப்புப் பொறி சிந்தவும், உலகத்தினை உலுக்கும் இடிபோல் பிளிறிக் கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டது.

சமணர்களும், சோழனுடைய படைகளும் யானையைப் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் மதுரையின் எல்லையை அடைந்த கொடிய யானை அங்கிருந்த காடுகள், வயல்வெளிகள், உயிரினங்கள் உள்ளிட்ட கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து நாசமாக்கியது. யானையின் செயலை மதுரை மக்கள் விக்கிர பாண்டியனுக்குத் தெரிவித்தனர்.

கொடிய யானையின் செயல்களை அறிந்த விக்கிரம பாண்டியன் “சொக்கநாதரைத் தவிர்த்து இந்த ஆபத்தில் இருந்து நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். ஆதலால் வாருங்கள் நாம் அனைவரும் சென்று அவரை வழிபாடு செய்வோம்” என்று கூறி மதுரை மக்களுடன் சொக்கநாதரை தரிசிக்கச் சென்றான்.

சொக்கநாதரின் சந்நிதியை அடைந்த விக்கிரபாண்டியன் “கொடிய யானை மதுரையின் எல்லையில் நின்று கண்ணில் பட்டவற்றை நாசம் செய்தவாறே மதுரையை நோக்கி வருகிறது. இறைவா, எங்களை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!” என்று மனமுருகி வழிபட்டான்.

அப்போது வானத்தில் இருந்து “பாண்டியனே, கவலைப்பட வேண்டாம். யாம், வேடுவர் வேடம் பூண்டு வில் ஏந்திய சேவகனாய் மதுரையை அழிக்க வந்த கொடிய யானையை அழிப்போம். நீ அதற்கு முன்பு மதுரைக்கு கிழக்கே ஓர் அட்டாலை மண்டபத்தை உண்டாக்கு” என்ற திருவாக்கு கேட்டது.

இறைவனின் திருவாக்கினைக் கேட்ட விக்கிரமபாண்டியன் மனதில் மகிழ்ச்சி கொண்டு மதுரையின் கீழ்த்திசை நோக்கி ஓடினான். 

அட்டாலை மண்டபம்

கற்களையும், சாந்தினையும் கொண்டு பதினாறு கால் தூண்களுடன் கூடிய பெரிய அட்டாலை மண்டபத்தை உண்டாக்கினான். அந்த மண்டபம் தான் முக்தீஸ்வரர் ஆலயத்திற்கு திரும்பும் போது உள்ள 16 கால் மண்டபம்.

இறைவனான சொக்கநாதர் அரையில் சிவப்பு ஆடையைக் கட்டி தலையில் மயில்தோகை அணிந்து, அம்புக்கூட்டினை முகிலே கட்டி, பச்சைநிற மேனியராய் தோன்றினார். அட்டாலை மண்டபத்தில் ஏறி கொடிய யானையின் வரவிற்காக காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் கொடிய யானையானது அவ்விடத்திற்கு வந்தது. தமது வில்லை எடுத்து நாணினைப் பூட்டி வளைத்தார். பின் வில்லில் நரசிங்கக் கணையை வைத்து நாணினை இழுத்து விட்டார்.

அக்கணையானது யானையின் மத்தகத்தைக் கிழித்தது. கொடிய யானை நரசிங்க கணையின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானை மடிந்ததைக் கண்ட சமணர்கள் மிகுந்த மனவருத்தம் கொண்டனர்.

யானை மடிந்ததைக் கண்ட விக்கிரமபாண்டியன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். யானையின் பின்னால் வந்த சமணர்களையும், சோழனின் படைகளையும் பாண்டியனின் படைகள் அடித்து துரத்தினர்.

விக்கிரமபாண்டியன்

வேடுவ வடிவம் கொண்டு வந்த சொக்கநாதரின் திருவடிகளில் வீழ்ந்த விக்கிரமபாண்டியன் “எங்களைக் காத்த இறைவரே, தாங்கள் இத்திருக்கோலத்திலேயே இங்கேயே தங்கி இருக்க வேண்டும்” என்று விண்ணபித்தான். இறைவனாரும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று அருளினார்.

பின்னர் விக்கிரமபாண்டியன் இராஜசேகரன் என்னும் புதல்வனைப் பெற்று பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினான்.

மதுரையை அழிக்க வந்த யானையானது சோமசுந்தரரின் பாணம் பட்டு தரையில் வீழ்ந்த இடத்தில் மலையாக மாறியது. இதுவே யானை மலை ஆகும்.இது பார்ப்பதற்கு யானை படுத்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும்..

சோமசுந்தரர் யானையின் மீது விடுத்த நரசிங்கக்கணையானது உக்கிர நரசிங்கமாக யானை மலையின் அடிவாரத்தில் தோன்றியது. இவ்நரசிங்கமூர்த்தியை உரோமசமுனிவர் வழிபாடு நடத்தி தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். 

பிரகலாதனும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்து அழியாவரம் பெற்றான். எல்லாம் வல்ல சொக்கநாதனின் கால் படாத இடமே இல்லை இந்த மதுரைத் தலத்தில். எனவே தான் மதுரைக்கு திருவிழா நகரம் என்கிற பெயர் நிலைத்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *