கிளியோபாட்ரா-32 அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் மூவர் கூட்டணி உதயம்
கி.மு.44-ல் ரோமாபுரியின் செனட் சபையில் ஜூலியஸ் சீஸரைக் கொலை செய்த சதிகாரர்கள் காஷியஸ், புரூட்டஸ் ஆகியோரின் தற்கொலையும், அவர்களது படையின் தோல்வியும் ரோமாபுரியில் மீண்டும் அமைதியைக் கொண்டு வந்தது.
அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ்
ஜூலியஸ் சீஸரின் அரசியல் வாரிசான அகஸ்டசும், சீஸருக்கு வலது கரமாக செயல்பட்ட படைத்தளபதி ஆண்டனியும் சேர்ந்து புதியதோர் ராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயன்றனர்.
அவர்கள் ஏற்கனவே முடிவு செய்த லெப்பிடசும் அவர்களுடன் கூட்டு சேர்ந்தார். இவர்கள் மூவர் தலைமையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. இதுவே வரலாற்று சிறப்புமிக்க ‘மூவர் கூட்டணி’ எனப்பட்டது. கி.மு.43-ல் இது ஏற்பட்டது.
இவர்களது கூட்டணியில் ரோமபுரியின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த பகுதிகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. மூவர் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் மூவரும் ஆளுக்கு ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அகஸ்டஸ் வயதில் சிறியவனாக இருந்ததாலும், ரோமானிய அரசியலில் மிகச்சிறந்த அனுபவம் இருந்தது.
கிளியோபாட்ரா எகிப்துப் பயணம்
இதற்கிடையில், ரோமின் டைபர் நதிக்கரையில் இருந்த சீஸரின் அரண்மனையில் அவரது விருந்தினராகத் தங்கியிருந்த எகிப்துப் பேரரசி கிளியோபாட்ரா, சொந்த நாட்டிற்குத் திரும்புவது என்ற முடிவுக்கு வந்திருந்தாள். சீஸரின் கொலையும், அவரது வாரிசாக அவருக்கும், தனக்கும் பிறந்த மகன் டாலமி சீஸர் அறிவிக்கப்படாததும் கிளியோபாட்ராவைப் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி இருந்தது.
சீஸர் கொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்கு ரோமாபுரியில் அமைதியற்ற சூழ்நிலை நிலவியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ரோமிலேயே தங்கியிருந்தாள்.
இப்போது அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் தலைமையில் புதிதாய் மூவர் கூட்டணி உருவாகிவிட்டதால், அவர்களின் ஆதரவுடன் எகிப்துப் பேரரசியாக நீடிக்கக்கூடிய வாய்ப்பு மட்டுமே கிளியோபாட்ராவுக்கு இருந்தது. அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தவள், அந்த மூவருள் ஒருவரை தனது ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தாள். அதற்காக அவள் தேர்வு செய்தது ஆண்டனியை. சீஸருக்கு அடுத்த இடத்தை நிரப்பக்கூடிய தகுதி ஆண்டனி ஒருவனுக்கு மட்டுமே இருக்கிறது என்ற அவளது கணிப்புதான் அதற்கு காரணம்.
யார் இந்த ஆண்டனி?
சீஸரைப் போன்று கிழட்டுச் சிங்கம் அல்ல ஆண்டனி. இளமை முறுக்கேறிய மாபெரும் வீரன்; ரோமானிய முதன்மை படைத்தளபதி. வயது 40-ஐத் தொட்டு இருந்தாலும், இளைஞன் என்று கூறும் அளவுக்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். அடிக்கடி போர் முனைக்குச் சென்று வந்தவன் என்பதால், உடற்பயிற்சி செய்யாமலேயே அவனது உடல் இரும்பு போன்று திமிரிக்கொண்டு காணப்பட்டது.
அவனது கட்டுடல் அழகைக் கண்டு மயங்காத ரோமாபுரிப் பெண்களே கிடையாது. பத்தினிப் பெண் கூட ஒருமுறை அவனைப் பார்த்துவிட்டால் அவளை அறியாமலேயே கிரங்கிப்போய் விடுவாள். அந்த அளவுக்குக் கட்டு மஸ்தான உடலுடன் பேரழகனாகவும் திகழ்ந்தான் ஆண்டனி.
இப்படி அவனுக்கு பல ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் இவன் கொஞ்சம் அல்ல, ரொம்பவே பலகீனன்.
அழகான பெண்ணைக் கண்ட மாத்திரத்தில் அவளைத் தன் மஞ்சணைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைப்பான். அதன்படி அவளைக் கொண்டு வந்தும் விடுவான். அடிக்கடி மது அருந்தும் வழக்கமும் அவனுக்கு இருந்தது. அவனது மஞ்சணைக்கு வந்து போகும் பெண்களின் பட்டியலில் ரோமாபுரியின் முன்னணி நாடக நடிகைகளும் இருந்தனர்.
கிளியோபாட்ராவின் புதுக் கணக்கு
இது கிளியோபாட்ராவுக்கு நன்றாகவே தெரியும். அதனால், அவனைத் தன் வலையில் எளிதில் வீழ்த்திவிடலாம் என்று சரியாகக் கணித்தாள் அவள். ஆரம்பத்தில் தனது எகிப்து பேரரசைத் தன் வசம் தக்க வைக்கவே ஆண்டனியை கைக்குள் போட முடிவெடுத்தாள். ஆனால், நாளடைவில் அவர்களுக்குள் மலர்ந்த புனிதமான, உன்னதமான காதல் இன்றும் பிரமிப்பாகப் பேசப்படுகிறது.
ஆண்டனியை தனது கைக்குள் போட்டுக்கொள்ள கிளியோபாட்ரா உறுதியான முடிவெடுத்த நேரம், டைபர் நதிக்கரை அரண்மனையில் தங்கியிருந்த அவளைச் சந்திக்க வந்தான் ஆண்டனி.
ரோமாபுரியின் மூவர் கூட்டணியில், சீஸரின் அரசியல் வாரிசு அகஸ்டசுக்கு அடுத்த இடத்தில் ஆண்டனி இருந்ததும், பிலிப்பி போரில் அவனுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியும் அவனது வீர நடையை இன்னும் கம்பீரமாக்கி இருந்தது. அந்த மிடுக்குடனேயே அவளிடம் பேசினான்.
“என்ன கிளியோபாட்ரா..! எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறதே..!”
“ஒன்றுமில்லை ஆண்டனி..! எவ்வளவு நாட்களுக்குத்தான் இங்கேயே தங்கியிருப்பது..? அதனால்தான், எகிப்துக்கு திரும்பலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.”
“என்ன இருந்தாலும் நீ எகிப்து பேரரசி ஆயிற்றே..! நிச்சயம் அங்கே போய்தானே ஆகவேண்டும்?”
“சீஸர் இருந்தவரை எனக்கு மட்டுமின்றி என் நாட்டுக்கும் பாதுகாப்பு கிடைத்தது. இப்போது அதே பாதுகாப்பு கிடைக்குமா? என்று அச்சமாக இருக்கிறது.”
“அந்த பயம் எல்லாம் உனக்கு வேண்டாம் கிளியோபாட்ரா. எங்களுடன் நீ இணைந்து சென்று விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை”.
“நிச்சயமாக நானும் அதைத்தான் செய்யப்போகிறேன். இப்போதைய ரோமாபுரி மூவர் கூட்டணியில் இயங்கினாலும், நீங்கள் எனக்கு உரிய மரியாதையும், என் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரிகளால் ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். அதை தாங்கள் எனக்கு உறுதியளிக்க வேண்டும்.”
“என்ன கிளியோபாட்ரா..! இப்படி கேட்டுவிட்டாய். எனது மதிப்பிற்குரிய சீஸரின் காதலியாக இருந்த உனக்கு நிச்சயம் இந்த ரோமாபுரியே கடமைப்பட்டு இருக்கிறது. அதிலும், இந்த ஆண்டனி நிறையவே கடமைப்பட்டு இருக்கிறான்” என்ற ஆண்டனி லேசாகச் சிரித்து வைத்தான். அந்தச் சிரிப்பில் ஓராயிரம் அர்த்தங்கள் இருந்தன.
எகிப்து திரும்பினாள்
அடுத்த சில நாட்களில் ரோமில் இருந்து, படைவீரர்கள் சூழ எகிப்துக்கு புறப்பட்டாள் கிளியோபாட்ரா. சீஸருடன் தான் வாழ்ந்த இனிய நாட்களையும் மனதில் சுமந்து கொண்டு பயணித்தாள் அவள்.
கிளியோபாட்ரா எகிப்து திரும்பிய சில மாதங்களில், ரோமாபுரியில் புதிதாய் அமைந்த மூவர் கூட்டணியில் ஆதிக்கப் போட்டி ஏற்பட்டது. ரோமையும், அதன் மாகாணங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அகஸ்டஸ், ரோமாபுரிப் பேரரசு முழுமைக்கும் ஆதிக்கம் செலுத்த விரும்பினான்.
மாசிடோனியா, கிரீஸ், பைதினியா, ஆசியா மைனர், சிரியா உள்ளிட்ட ரோமப் பேரரசுக்கு உட்பட்ட நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆண்டனியும் அகஸ்டஸ் போன்றே கனவு கண்டான். அகஸ்டசை எப்போது விரட்டலாம், தான் எப்போது ரோமாபுரிக்கு பேரரசர் ஆவது? என்றும் பகல் கனவு கண்டான்.
இவர்களுக்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதுபோல் நடந்து கொண்டான், மூவர் கூட்டணியில் கடைசியாக இடம்பெற்று இருந்த லெப்பிடஸ்.
அகஸ்டஸ், ஆண்டனியை விட லெப்பிடஸ் பலம் குறைவுதான் என்பதால், இவன் அவ்வப்போது தன்னை அடக்கி வாசித்துக்கொண்டான். ஆனாலும் இவர்களுக்குள் பனிப்போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது.
நாட்கள் மாதங்களாகி வேகமாகப் பறந்தன.
எகிப்து திரும்பிய கிளியோபாட்ரா திறம்பட ஆட்சி செய்தாள். இப்போது அவளது வயது 28 ஆக இருந்ததும், அவளுக்கும், சீஸருக்கும் பிறந்த டாலமி சீஸர் 7 வயதைத் தொட்டு இருந்ததும் அவளை இன்னும் பக்குவப்பட வைத்திருந்தது. எகிப்துக்குப் பேரரசியாக இருந்தாலும், ஒரு தாய் என்கிற முறையில் தாய்மையோடும் பல முடிவுகளை எடுத்தாள்.
ஆண்டனி படையெடுப்பு
ரோமாபுரியின் பேரரசானது 3 பகுதியாகப் பிரிக்கப்பட்ட பிறகு கிளியோபாட்ராவின் எகிப்து சுதந்திர நாடாகத் திகழ்ந்தது. காரணம், சீஸரின் ஆசை நாயகியாக அவள் இருந்ததுதான்.
கிளியோபாட்ராவைப் பார்த்து வருடங்கள் பல ஆன நிலையிலும், அவளது நாடு தனித்து இயங்குவதால், அதைத் தனது கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டு வந்து, தனது பலத்தை அதிகரிக்கவும் ஆசைப்பட்டான் ஆண்டனி. இதையடுத்து பெரும் படையை திரட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான் அவன். கிரீஸ், ஆசிய மைனர் வழியாக எகிப்து செல்வது என்பது அவனது திட்டமாக இருந்தது.
இதுபற்றி ஒற்றன் வழியாகச் செய்தி அறிந்த கிளியோபாட்ரா, சற்று நடுங்கித்தான் போனாள்.
-தொடரும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.