கிளியோபாட்ரா-11 சீசர் கிளியோபாட்ராவின் தேனிலவு பயணம்

கிளியோபாட்ரா-11 சீசர் கிளியோபாட்ராவின் தேனிலவு பயணம்

சீசர் கிளியோபாட்ராவின் தேனிலவு பயணம்

கிளியோபாட்ராவும், ஜூலியஸ் சீஸரும் ‘ஒன்றாக’ கலந்துவிட்ட தகவலைக் கேட்டு, அவளது முன்னாள் கணவனும், தம்பியும், எகிப்தின் ஆட்சியைப் பறிகொடுத்த மன்னனுமான 13-ம் டாலமி வெகுண்டு எழுந்தான். அவனது அமைச்சர்களாக இருந்தவர்கள் உசுப்பிவிட்டதன் எதிரொலியாகத்தான் இந்த வெளிப்பாடு.

அதோடு அவன் நின்றுவிடவில்லை. தன்னை ஏமாற்றியுள்ள கிளியோபாட்ரா, ஆட்சியைக் கைப்பற்ற ஏதோ பெரிய திட்டம் போட்டிருப்பதாகவே கருதினான். ஒருவேளை, சீஸரின் உதவியால் அவள் ஆட்சிக்கு வந்துவிட்டால், அவளை ஏற்கனவே விரட்டிவிட்ட தன்னை எப்படியும் கொன்றுவிடலாம் என்று பயந்தான் 13-ம் டாலமி.

உடனே தனது ஆதரவாளர்களைத் திரட்டினான். அவர்களைப் பொதுமக்களிடம் அனுப்பி, கிளியோபாட்ராவுக்கு எதிராக தூண்டிவிட்டான். கிளர்ச்சி ஏற்பட்டது, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது.

இதையறிந்த ஜூலியஸ் சீஸர் கோபம் கொண்டார். 13-ம் டாலமியை உடனே கைது செய்யுமாறு தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே அவனைத் தேடி ஒரு படை விரைந்தது. அவர்கள் தலைமறைவாக இருந்த 13-ம் டாலமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரசியானாள் அர்சினி!

இதற்கிடையில், கிளியோபாட்ராவின் தங்கையான நான்காம் அர்சினி, 13-ம் டாலமியிடம் செல்வாக்கு பெற்றிருந்த அலியான பொதினஸ் மற்றும் படைத்தளபதி அச்சிலெஸ் உதவியுடன் சேர்ந்து ஒரு பெரும் படையைத் திரட்டினாள்.

சீஸரை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பது அவளது திட்டமாக இருந்தது. அவள் 20 ஆயிரம் படை வீரர்களுடன் சீஸர் கைப்பற்றிய பகுதியை முற்றுகையிட்டாள். அர்சினி படைகளும், சீஸரின் படைகளும் பயங்கரமாக மோதின.

இந்தப் போரில் இரு தரப்பிலும் பல வீரர்கள் பலியாகினர். பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அலெக்ஸாண்டிரியாவில் இருந்த நூலகத்திற்குத் தீ வைக்கப்பட்டது. உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்குகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இந்தப் போர் பதற்றத்துக்கு மத்தியில், சீஸரை எதிர்த்த எகிப்து மக்கள் அர்சினிக்கு ஆதரவாக திரண்டனர். அந்த தைரியத்தில் எகிப்தின் மகாராணியாகத் தன்னை அறிவித்தாள் அர்சினி.

ஜூலியஸ் சீசர் கிளியோபாட்ராவின் தேனிலவு

எகிப்தைக் கைப்பற்றிய ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸர் இந்த அறிவிப்பால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தனக்கு எதிராக கிளம்பியுள்ள அர்சினியை எப்படி அடக்குவது என்று யோசித்தார். ராஜதந்திரத்துடன் காய்களை நகர்த்தினார்.

டாலமியின் பரிதாப மரணம்

சிறைபிடிக்கப்பட்ட 13-ம் டாலமியை விடுதலை செய்தார். ஆனாலும், சுமார் 6 மாதங்கள் வரை போர் நீடித்தது. அந்தப் போரில் பொதினஸ் கொல்லப்பட்டான். அடுத்ததாக படைத் தளபதி அச்சிலெசும் பலியானான். எகிப்துப் படை பின்வாங்கியது.

இதனால் 13-ம் டாலமிக்கு பயம் அதிகமானது. சீஸரின் படைவீரர்கள் தன்னை கொன்று விடுவார்களோ என்று பயந்தான். நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல முடிவெடுத்தான்.

ஒருநாள் இரவு தன்னந்தனியாக நாட்டைவிட்டு ஓடினான் 13-ம் டாலமி. இரவு நேரம் என்பதால் எந்த திசை நோக்கிச் செல்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. சீஸரின் படைவீரர்கள் எங்கெங்கு முகாமிட்டு இருக்கிறார்களோ, அதற்கு எதிர்திசையில் ஓடினான்.

ஓரிடத்தில் நைல் நதி குறுக்கிட்டது. அதை எப்படிக் கடப்பது என்று சிறுவனான 13-ம் டாலமியால் யோசிக்க முடியவில்லை. அதனால், சிறுபிள்ளைத் தனமாகவே முடிவெடுத்தான். ஒரு மரக்கட்டையை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான். ஆனால் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதில் அடித்துச் செல்லப்பட்டு, நீருக்குள் மூழ்கி இறந்தான். அப்போது அவனுக்கு வயது 15.

அதேநேரம், போதிய பாதுகாப்பு இன்றித் தவித்த, எகிப்தின் பேரரசியாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட அர்சினி சிறைபிடிக்கப்பட்டாள். இதுதான் தகுந்த சமயம் என்று, அதற்காகவே காத்திருந்த கிளியோபாட்ரா சீஸரிடம் மெதுவாகக் காயை நகர்த்தினாள்.

ஜெயித்தது தலையணை மந்திரம்!

ஒருநாள் இரவு சீஸரைத் தனிமையில் சந்தித்தாள். படுக்கையில் அவரை அணைத்தபடியே பேச்சைத் தொடர்ந்தாள்.

“பேரரசரே! என் அன்புக்கு உரியவரே! இப்போது எகிப்து முழுவதும் தங்கள் வசமாகிவிட்டது…”

“அது எதிர்பார்த்த விஷயம்தானே?”

“ஆமாம்! இப்போது, நானே எகிப்து பேரரசியாக ஆசைப்படுகிறேன். அதுவும், உங்களின் நிரந்தர துணையுடன்…” என்ற கிளியோபாட்ரா, சீஸரை இறுக்கமாக அணைத்துக்கொண்டு சிலிர்ப்பூட்டினாள்.

ஏற்கனவே கிளியோபாட்ராவின் பேரழகு என்ற வலையில் கவிழ்ந்து கிடந்த சீஸர், அவளை எகிப்தின் மகாராணியாக்க சம்மதித்தார்.

அடுத்த சில நாட்களில் அதற்கான விழா நடந்தது. பெண்களே நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது என்பதால், மீண்டும் ஒருமுறை அதிகாரப்பூர்வமாக ஒரு திருமணம் செய்ய வேண்டிய அவசியம் கிளியோபாட்ராவுக்கு ஏற்பட்டது. சீஸருடன் இணைந்து மட்டுமே வாழ முடியும் என்பதால், தனது இன்னொரு தம்பியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாள் கிளியோபாட்ரா.

அந்தத் தம்பியின் பெயர் 14-ம் டாலமி. அவனுக்கு அப்போது 16 வயதே ஆகியிருந்தது. அதாவது, இறந்துபோன 13-ம் டாலமியைவிட ஒரு வயது அதிகம். அவனைக் கணவனாக ஏற்றுக்கொண்ட கிளியோபாட்ரா, ஜூலியஸ் சீஸர் உதவியுடன் மீண்டும் எகிப்தின் மகாராணி ஆனாள்.

தேனிலவுப் பயணம்

அடுத்த சில நாட்களில் அவள் தேனிலவுக்குப் புறப்பட்டாள். புதிய கணவன் 14-ம் டாலமியை அழைத்துக்கொண்டு அல்ல; ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸருடன்!

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *