கிளியோபாட்ரா-35 கிளியோபாட்ரா ஆண்டனி பதிலுக்கு பதில் விருந்து
கிளியோபாட்ரா அளித்த விருந்தில் சொக்கிப்போனது ஆண்டனி மட்டுமல்ல; அந்த விருந்தில் பங்கேற்ற அவனது அத்தனை படைவீரர்களும்தான்!
ஆம்… தான் மிதக்கும் வசந்த மாளிகையில் வைத்த விருந்தில் பங்கேற்ற ஆண்டனியின் ரோமாபுரிப் படைவீரர்களுக்கு அறுசுவை உணவுகளோடு, பலவிதப் பரிசுகளையும் வாரி வாரி வழங்கினாள் கிளியோபாட்ரா.
அதுவும், அவளே தன் கைப்பட அந்தப் பரிசுகளை வழங்கியதால் அத்தனை ரோமாபுரி வீரர்களும் உள்ளம் மட்டுமின்றி உடலும் குளிர்ந்து போனார்கள்.
ஆண்டனிக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு அரபுக் குதிரைகளும் மற்றும் சிலருக்கு ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்ட விருந்து மேஜைகளும், இன்னும் சிலருக்குத் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன தட்டுகளும் வழங்கப்பட்டன.
இவற்றோடு நல்ல உடல் உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய எத்தியோப்பிய அடிமைகளான ஏராளமான இளைஞர்களும் ரோமாபுரி வீரர்களுக்குப் பரிசாகக் கிடைத்தனர். ஏழையாக வந்தவர்கள் எல்லாம் கிளியோபாட்ராவின் இந்த விருந்தின் மூலம் செல்வந்தர்கள் ஆனார்கள்.
ஆண்டனியின் பதில் விருந்து
கிளியோபாட்ராவின் இந்த மாபெரும் விருந்தைக் கனவிலும் எதிர்பார்க்காத ஆண்டனி, தான் ரோமாபுரியின் வருங்கால வேந்தன் என்பதை நிரூபிக்கப் பதில் விருந்துக்கு கிளியோபாட்ராவை அழைத்தான். எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் கிளியோபாட்ராவின் தாராள மனதிற்கு முன்பு அவன் தோற்றுப்போனதுதான் உண்மை.
ஆண்டனியை மகிழ்விக்க இன்னொரு விருந்தையும் நடத்தினாள் கிளியோபாட்ரா. அந்த விருந்தும் வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் நீங்கா இடம்பெற்றது.
அந்த விருந்து நடைபெற்ற அறை முழுவதுமே இறக்குமதி செய்யப்பட்ட ரோஜாப் பூக்களால் நிரம்பி இருந்தது. ஆயிரக்கணக்கான ரோஜா பூக்களின் வீடாக மாறியிருந்த அந்த அறை ஆண்டனியை பிரமிக்கச் செய்தது.
தன் வாழ்நாளில் இப்படியொரு உல்லாச வாழ்க்கை கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்காததால் பிரமித்துப்போய் நின்றான். கிளியோபாட்ரா என்றால் ஆடம்பரம், ஆடம்பரம் என்றால் கிளியோபாட்ரா என்பதை உறுதி செய்தன கிளியோபாட்ராவின் இந்தப் புதுமை விருந்துகள்.
ஆண்டனியின் இன்பத் தவிப்பு
கிளியோபாட்ராவிடம் பேரழகும், செல்வச் செழிப்பும் மட்டுமின்றி, நாட்டை ஆளும் அரசனுக்கே உரிய சமயோசிதத் திறனும், பலமொழித் திறமையும், எந்தவொரு மாவீரனுடன் நேருக்கு நேர் அஞ்சாமல் விவாதம் செய்கிற சக்தியும் இருந்ததால் அவளை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் ஆண்டனி. அதற்காக அவள் சொன்னதை எல்லாம் கேட்டான்.
அதன் தொடர்ச்சியாக, கிளியோபாட்ரா சொன்னபடி அவளது தங்கை அர்சினோவை கொலை செய்தான் ஆண்டனி. தான் சொல்லும் எதையும் செய்ய ஆண்டனி தயாராக இருக்கிறான் என்ற நிலை வந்தபோது, தனது இறுதிக்காலம் வரை அவன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று பேராசை கொண்டாள்.
ஆனால், ஆண்டனியின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. மது, மாது, சூதாட்டம்… என்று தனது உல்லாசத் தேவைகளை நிறைவேற்றும் சிறந்த இடமாக அலெக்ஸாண்டிரியா திகழ்ந்ததால், கிளியோபாட்ராவைப் பிரியவும் முடியாமல், அலெக்ஸாண்டிரியாவை விட்டு அகலவும் முடியாமல் இன்பத் தவிப்புக்கு ஆளானான்.
அதோடு, அவளுடன் சேர்ந்து வாழவும் ஆரம்பித்து இருந்தான். காதலன் ஆண்டனியுடன் பலமுறை படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள் கிளியோபாட்ரா.
மீன்பிடி விளையாட்டு
ஒருநாள் ஆண்டனியும், கிளியோபாட்ராவும் மாரியோட்டிஸ் என்ற ஏரிக்கரைக்கு பொழுதுபோக்குக்காகச் சென்றனர். அங்கே இருவரும் தூண்டில் மூலம் மீன் பிடித்து மகிழ்ந்தார்கள்.
கிளியோபாட்ரா தனக்கு மிக அருகில், இறுக்கி அணைத்தபடி இருந்ததால் மிகவும் ஆர்வமாக மீன் பிடித்தான் ஆண்டனி. ஆனால், தூண்டிலில் மீன்தான் சிக்கவில்லை. அதேநேரம், கிளியோபாட்ரா பயன்படுத்திய தூண்டிலில் மீன்கள் சிக்கிக்கொண்டே இருந்தன.
அப்போதுதான் ஆண்டனிக்கு அந்த ஐடியா தோன்றியது. தனது பணியாளன் ஒருவனை அழைத்தவன், அவனது காதில் ஏதோ கிசுகிசுத்தான். சிறிதுநேரத்தில் அவனது தூண்டிலில் வரிசையாக மீன்கள் சிக்க ஆரம்பித்தன.
எப்படி இந்த திடீர் மாற்றம் என்று யோசித்த கிளியோபாட்ரா, அருகில் தனக்கு தெரியாமல் என்ன நடக்கிறது என்று ரகசியமாக கண்காணித்தாள். ஆண்டனியின் பணியாளன், ஆண்டனி பிடித்த மீன்களை திரும்பத் திரும்ப நீருக்குள் மூழ்கி, அவன் உபயோகிக்கும் தூண்டிலில் அவற்றை செருகிவிட்டு வந்து கொண்டிருந்தான்.
‘இதுதான் அந்த ரகசியமா?’ என்று மனதிற்குள் லேசாக சிரித்துவைத்த கிளியோபாட்ரா, தனது பணியாளன் ஒருவனை அருகில் அழைத்து அவன் காதில் ஏதோ சொன்னாள்.
தூண்டிலில் கருவாடு
அடுத்த சில நிமிடங்களில் ஆண்டனியின் தூண்டிலில் மீனுக்கு பதிலாகக் கருவாடு* சிக்கிக் கொண்டு வந்தது. இதைப் பார்த்தும் பார்க்காததுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கிளியோபாட்ரா. ஆனால், ஆண்டனியின் முகத்தில்தான் அதிர்ச்சி.
‘ஆச்சரியமாக இருக்கிறதே… ஏற்கனவே பிடித்த இறந்த மீன்தான் வரும் என்று பார்த்தால்… காய வைக்கப்பட்ட கருவாடே வருகிறதே… விட்டால், வறுவல் மீன் கூட வரும் போல் இருக்கிறதே…’ என்று, தனக்குத்தானே அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டான்.
இதைப் பார்த்துவிட்ட கிளியோபாட்ரா, மனதிற்குள் எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் கேட்டாள்.
“என்ன ஆண்டனி. ரோமாபுரியின் வருங்கால வேந்தர் என்பதற்காக உங்களது தூண்டிலில் கருவாடே வருவது ரொம்பவும் மிகையாகத்தான் இருக்கிறது…” என்றவள், தன்னையும் மீறி சிரித்துவிட்டாள்.
மிகுந்த வெட்கத்திற்கு ஆளான ஆண்டனி, கிளியோபாட்ராவுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். கடைசியில் அவளே உண்மையைச் சொல்லிவிட, லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்து வைத்தான்.
கிளியோபாட்ரா அனுப்பிய பணியாளன்தான் ஆண்டனியின் தூண்டிலில் கருவாடு வரக் காரணம். அவன்தான், ஆண்டனியின் பணியாளனை ஓரம் கட்டிவிட்டு, அவனது தூண்டிலில் கருவாடை செருகிவிட்டான்.
மேற்படி சம்பவத்தில் வரலாற்றுக் கற்பனைக் கலப்பு இருந்தாலும், ஆண்டனியும் கிளியோபாட்ராவும் எந்த அளவுக்கு காதலன் காதலியாக, அன்யோன்யமாக இருந்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த சாட்சி.
இதல்லவோ காதல்
கிளியோபாட்ராவும், ஆண்டனியும் கொண்டிருந்த காதலை வரலாற்று ஆய்வாளர்கள் புகழ்ந்தே பேசுகிறார்கள். ஆரம்பத்தில், கிளியோபாட்ரா தன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ள ஆண்டனியை தனது கைக்குள் போட்டுக்கொண்டாலும் நாளடைவில் ஆண்டனியை உயிருக்கு உயிராக நேசிக்கத் துவங்கிவிட்டாள்.
ஆண்டனியும், அவளது கவர்ச்சி வலையில் விழுந்தவன்தான் என்றாலும், அவள் தன்மீது காண்பித்த அபரிமிதமான அன்பால் அவள்பால் கரைந்து போனான்.
ஒருமுறை கிளியோபாட்ராவும் ஆண்டனியும் சந்தித்துக்கொண்டபோது காதல் உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இருந்தனர்.
“ஆண்டனி… என்னை நீங்கள் எந்த அளவுக்கு காதலிக்கிறீர்கள்? அந்த அளவை குறிப்பிட முடியுமா?” கிளியோபாட்ரா கேட்டாள்.
“என்ன… அப்படி கேட்டுவிட்டாய் கிளியோபாட்ரா? நம் காதலை அளவிட அளவீடுகளே இல்லை.”
“சும்மா கற்பனையை அவிழ்த்துவிட வேண்டாம். என்னை திருப்திப்படுத்துவதற்காவது சொல்லுங்கள். என் மீது உங்களுக்கு எவ்வளவு காதல் உள்ளது?”
“அன்பே… அளவிடக்கூடியது பிச்சைக்காரர் காதல். நம் காதலுக்கு அளவே இல்லை.”
“மீண்டும் மீண்டும் என்னை சமாளிக்க வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்.”
“நான் உன் மீது கொண்டுள்ள காதலின் அளவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், புதிதாய் சொர்க்கம் ஒன்றையும், பூமி ஒன்றையும் அந்த இறைவன் படைக்க வேண்டும்” என்று கூறி, கிளியோபாட்ராவை வியப்பில் ஆழ்த்தினான் ஆண்டனி.
இந்த சமயத்தில்தான், கிளியோபாட்ரா தனது வயிற்றில் இரட்டைக் குழந்தைகளை சுமக்க ஆரம்பித்து இருந்தாள். இதற்கு காரணம், வேறு யாரும் அல்ல; மார்க் ஆண்டனியே தான்!
-தொடரும்
* உப்பு சேர்த்துக் காய வைத்து, பக்குவப்படுத்தப்பட்ட மீன்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.