கிளியோபாட்ராவை மீண்டும் தேடிவந்த ஆன்டனி

கிளியோபாட்ரா-42 மீண்டும் தேடிவந்த ஆண்டனி

கிளியோபாட்ரா-42 மீண்டும் தேடிவந்த ஆண்டனி

மீண்டும் கிளியோபாட்ராவுடன் ஒட்டிக்கொண்ட ஆண்டனி, தனது படையின் பலத்தைப் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டான். அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட கிளியோபாட்ராவுடன் இணைந்து உரிமையோடு குடும்பம் நடத்தவும் ஆரம்பித்து இருந்தான். 

மனதளவில் ஆண்டனியை மெல்ல வெறுக்க ஆரம்பித்து இருந்த கிளியோபாட்ரா, தனக்கு சக்தி வாய்ந்த ஓர் ஆண் தேவை என்பதால் அவனுடன் இல்லற வாழ்வில் முழுமையாக இணைந்தாள்.

சர்வாதிகாரியாக பிரகடனம்

இதற்கிடையில், எகிப்தை மையமாகக் கொண்டு கீழ் திசை நாடுகளில் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்ட ஆண்டனி, தன்னைக் கீழ்திசை நாடுகளின் சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்திக் கொண்டான். 

எகிப்தைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் கவர்னராக கிளியோபாட்ராவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். கிளியோபாட்ரா வழக்கம்போல் எகிப்தின் அழகு ராணியாக வலம் வந்தாள்.

கிளியோபாட்ராவுடன் ஆண்டனி மீண்டும் புதுப்பித்துக் கொண்ட உறவுக்கு ஆரம்பத்தில் கைமேல் பலன் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவன், படைகளை வழி நடத்திச் சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. கிளியோபாட்ரா தன்னுடன் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்று பெருமிதம் கொண்டான் ஆண்டனி.

சைபிரஸ், பாலஸ்தீனம், போனிசியா, சினாய், மத்திய சிரியா, சிலிசியா நாட்டின் பெரும் பகுதிகள் என கீழ் திசை நாடுகளில் தனது ஆதிக்க பரப்பை விஸ்தரித்துக் கொண்டே போனான். அதில் அவனுக்கு கர்வமும் ஏற்பட்டது. அந்த கர்வத்துக்கு வெகுவிரைவிலேயே பலத்த அடியும் கிடைத்தது.

கி.மு.37 குளிர்காலத்தில் பார்த்தியன்களுடன் போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் ஆண்டனி. அதற்காகப் பெரும் படைகளைத் திரட்டினான். கி.மு.36 மார்ச் மாதத்தில் இரு தரப்பினர் இடையேயும் போர் துவங்கியது. இந்தப் போரில் ஆண்டனி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று நினைத்த கிளியோபாட்ரா அவனுடனேயே போர்க்களத்தில் முகாமிட்டிருந்தாள்.

கிளியோபாட்ரா மீண்டும் கர்ப்பம்

ஆனால், இயற்கையின் தீர்ப்பு வேறு விதமாக இருந்தது. ஒரே பாய்ச்சலில் 16 அடி பாயும் அரேபியக் குதிரையில் வீர வாளுடன் பயணித்த கிளியோபாட்ராவுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. எந்த உணவைப் பார்த்தாலும் வெறுப்பாக இருந்தது.

ஆம்… கிளியோபாட்ரா இப்போது மூன்றாவது முறையாகக் கருத்தரித்திருந்தாள். தான் கருவுற்ற விஷயத்தை ஆண்டனியிடம் சொல்ல வந்தாள்.

“ஆண்டனி… நம் படைகள் வேகமாகவும் விவேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் வெற்றி நமக்குத்தான்!” என்று நெஞ்சம் நிமிர்ந்து சொன்னாள் கிளியோபாட்ரா.

“இதில் என்ன சந்தேகம் கிளியோபாட்ரா? நீ என்னருகில் இருந்தால் வெற்றி என் பக்கம்தான்” என்று கூறி, தனது விரிந்த தோள்களை உயர்த்திக் கட்டினான் ஆண்டனி.

“நீங்கள் சொல்வதும் சரிதான் ஆண்டனி. உங்களுடன் இணைந்து போர் புரிவதில் எனக்கு எந்த விதத்தில் சலிப்பு வந்துவிடப் போவதில்லை. ஆனால்…”

“என்ன ஆனால்…?”

“பார்த்தியன்களுக்கு எதிரான இந்த போரில் நான் உங்களுடன் வர முடியுமா என்ற சந்தேகம் எனக்கு திடீரென்று ஏற்பட்டு விட்டது.”

“உனக்கு என்ன ஆயிற்று கிளியோபாட்ரா? ஏன் உன் பேச்சில் தயக்கம்? எப்போதும் கர்ஜிக்கும் உன் வாய் வார்த்தைகள் இன்று மவுனத்தை தேடி பயணிக்கிறதே என்ன காரணம்? உனக்கு உடல்நிலை சரியில்லையா? அல்லது, வேறு ஏதேனும் பிரச்சினையா?”

“பிரச்சினையா? இல்லையா? என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.”

“உண்மையை மறைக்க வேண்டாம். தாராளமாகச் சொல்.”

“ஆண்டனி… இப்போது நான் மீண்டும் கருத்தரித்து இருக்கிறேன். நமக்கு இரண்டாவது முறையாக ஒரு வாரிசு என் வயிற்றில் வளருகிறது.”

கிளியோபாட்ரா சொன்னதைக் கேட்ட ஆண்டனி உற்சாகத்தில் துள்ளினான். அவளை அப்படியே கட்டியணைத்து உயரே தூக்கிவிட்டான்.

“மகிழ்ச்சியான செய்திதானே சொல்லி இருக்கிறாய். இதைக் கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?”

“எனக்கும் மகிழ்ச்சிதான். இந்த நேரத்தில் உங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான், இதுபற்றி யோசிக்கிறேன்.”

“நீ தேவையில்லாமல் யோசிக்க வேண்டாம் கிளியோபாட்ரா. பார்த்தியன்களுக்கு எதிரான போரில் வெற்றி நமக்கு எப்போதோ உறுதி செய்யப்பட்டு விட்டது. இப்போது உனக்குத் தேவை ஓய்வு. அதனால், போர் முகாமில் நீ தங்க வேண்டாம். இன்றே… ஏன், இப்போதே அலெக்ஸாண்டிரியாவுக்கு புறப்பட்டு விடு. அங்குள்ள நம் அரண்மனையில் நிறைய ஓய்வெடு. 

“என்னைப் பற்றி பயப்படாமல் உனக்குப் பிடித்த உணவை சாப்பிடு. குறிப்பாக, பழங்கள், குங்குமப்பூ, பால் அதிகம் சாப்பிடு. அப்போதுதான், உன்னைப் போல் அழகான, என்னைப் போல் வீரம் நிறைந்த குழந்தை பிறக்கும்” என்று கூறிய ஆண்டனி, அன்றே கிளியோபாட்ராவை எகிப்துக்கு அனுப்பி வைத்தான்.

பின்வாங்கியது எகிப்து படை

அதேநேரம், ஆண்டனியின் வெற்றிக்காக ஒரு லட்சம் வீரர்களும், 10 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் எதிரி நாட்டை நோக்கி முன்னேறினார்கள்.

நாங்களும் வீரத்தில் எந்த விதத்திலும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் பார்த்தியன்களும் பெரும் படையைத் திரட்டி இருந்தனர். அவர்கள், தங்கள் ஆட்சிப் பகுதியை ஆண்டனியிடம் இழக்காமல் இருக்க நாட்டின் எல்லைப் பகுதியில் திரண்டிருந்தனர். 

ஆண்டனியின் படை தங்கள் நாட்டை நெருங்கி வருவதை அறிந்த அவர்களது போர் முரசு வெறிகொண்டு முழங்கியது. அவர்களது பெரும் படை ஆண்டனியின் படையைத் தோற்கடிக்க ஆவேசத்தோடு பாய்ந்தது.

இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டார்கள். பகலில் போரும், இரவில் ஓய்வுமாகப் பல நாட்கள் கழிந்தன.

இந்தப் போர் நிகழ்ந்த காலத்தில் கடும் குளிர் நிலவியது. அத்துடன், உணவுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஆண்டனியின் பெரும்படை அவற்றை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. பார்த்தியன்கள் உள்நாட்டுக்காரர்கள் என்பதால் ஆண்டனியின் பெரும் படை தங்கள் நாட்டிற்குள் நுழைய முடியாமல் தடுப்பு வேலி அமைத்துத் தாக்குதல் தொடுத்தனர்.

எதிர் தாக்குதல் நடத்திய ஆண்டனியின் படைக்குப் பெரும் பொருட்செலவும், வீரர்களின் திறன் இழப்பும் ஏற்பட்டது. இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தப் போர் தொடர்ந்தால் கடும் பஞ்சத்தாலேயே தனது படைவீரர்கள் பலர் மாண்டு விடுவார்கள் என்று அஞ்சினான் ஆண்டனி.

மேலும், கருவுற்றிருந்த கிளியோபாட்ரா எப்படி இருக்கிறாளோ என்ற பரிதவிப்பும் அவனை வாட்டியது. அதனால் அவனது வீரமான பேச்சிலும் சற்றுத் தொய்வு காணப்பட்டது. இதையடுத்து, இப்போது பார்த்தியன்களை எதிர்த்து போர் புரிய வேண்டாம் என்று கணக்குப் போட்ட ஆண்டனி, தனது படையை எகிப்து நோக்கித் திரும்ப உத்தரவிட்டான்.

கோபமானாள் கிளியோபாட்ரா

ஆண்டனியின் படை பின்வாங்கி எகிப்து நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது என்ற தகவலை அறிந்த கிளியோபாட்ரா கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். மிகப்பெரிய படை இருந்தும் பார்த்தியன்களை வெல்ல முடியாமல் ஆண்டனி திரும்பி வருகிறாரே என்று எரிச்சல் அடைந்தாள்.

ஆனால், எகிப்து திரும்பிய ஆண்டனியிடம் கோபத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக பாசத்தை பொழிந்தாள் கிளியோபாட்ரா. ஆண்டனியே இதை எதிர்பார்க்கவில்லை. பார்த்தியன்களுக்கு எதிராகப் போர் முயற்சியில் வீணான பெரும் பொருட்செலவையும், வீரர்களின் திறன் இழப்பையும் அறிந்திருந்த கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு உற்சாகம் ஊட்டும் பொருட்டு அறிவுரைகள் பல வழங்கினாள்.

சில மாதங்கள் கிளியோபாட்ராவின் அரண்மனையிலேயே ஓய்வெடுத்து வந்தான் ஆண்டனி. கிளியோபாட்ராவின் வயிற்றில் வளர்ந்து வந்த அவனது அடுத்த வாரிசு பிறக்கும் காலமும் நெருங்கியது.

கி.மு.36 இறுதியில் ஆண்டனிக்காக இரண்டாவது முறையாக ஓர் ஆண் குழந்தையை பிரசவித்தாள் கிளியோபாட்ரா. தாயைப் போலவே அழகுடன் காணப்பட்டான் அந்தக் குழந்தை. அவனுக்கு டாலமி பிலடெல்பஸ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் கிளியோபாட்ரா-ஆண்டனி தம்பதியினர்.

ஆக்டேவியன் தூது

இதற்கிடையில், ரோமில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆக்டேவியன், ஆண்டனிக்கு ஒரு தூது அனுப்பினான். ஆண்டனி நட்புறவுடன் பழகியவனும், ‘கடல் அரசன்’ என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டு, கீழ்திசை நாடுகளின் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்தவனுமான செக்ஸ்டஸ் பாம்பேயை (இவன் ரோமாபுரி பாம்பே அல்ல) வீழ்த்த வேண்டும் என்பதுதான் அந்த தூது.

ஆக்டேவியனிடம் முடியாது என்று சொல்லிவிட்டால், அது தன்னை இயலாதவன் ஆக்கிவிடும். ஆக்டேவியன் முன்பு தலைகுனியக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம். அதனால், ஆக்டேவியனுக்கு எதிரான போரில் நீ பங்குகொள்ள வேண்டாம். உனது ராஜதந்திரமான அறிவுரைகளை எனக்குச் சொல். நான் வெற்றிக்கனியுடன் திரும்பி வருகிறேன்.”

“சபாஷ் ஆண்டனி. உங்களை நினைத்தாலே எனக்குப் பெருமையாக இருக்கிறது. மாவீரன் ஆண்டனியின் காதலியாக, மனைவியாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். நாளைய வரலாறு நம்மை போற்றும் என்பது உறுதியாகிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது.”

“உனது ஆசை நிச்சயமாக நிறைவேறும் கிளியோபாட்ரா. இப்போது ஆதவன் சோம்பல் களைந்து வேகமாக எழத் துவங்கிவிட்டான். நமது பெரும் படையை திரட்டிக்கொண்டு போர்க்களத்திற்குச் செல்ல வேண்டும். எனக்கு விடை கொடு அன்பே. இன்று மாலை நான் உன்னைப் பார்க்க வரும்போது, ரோமானிய வரலாறே திசை திரும்பிப் போய் இருக்கும்…” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசிய ஆண்டனி, கிளியோபாட்ராவை ஆசையாய் கட்டியணைத்தான். அவளும் அவனது நெற்றியில் முத்தமிட்டுப் போர்க்களத்திற்கு வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.

ஆரம்பமே அதிர்ச்சி!

கிளியோபாட்ராவிடம் விடைபெற்று போர்க்கள முகாமுக்குத் திரும்பிய ஆண்டனிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவனது நெருங்கிய நண்பர்களாக உலா வந்த எனோபார்பஸ் உள்ளிட்ட சில முக்கியமான வீரர்கள் எகிப்துப் படையில் இருந்து ஆக்டேவியனின் ரோமானியப் படைக்குத் தாவியிருந்தனர்.

எவ்வளவோ அதிர்ச்சியை தாங்கிப் பழக்கப்பட்ட ஆண்டனியின் இதயம், இப்போதும் எனோபார்பசுக்கு ஆதரமாகவே பேசியது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எனோபார்பசுக்கு உரிய செல்வத்தை முறையாக அனுப்பி வைத்ததோடு, “நீ எங்கிருந்தாலும் வாழ்க. இனியாவது, தலைவனை மாற்றும் பழக்கத்தை கைவிடு” என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டுப் போர்க்களத்திற்கு புறப்பட்டான் ஆண்டனி.

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *