Cleopatra

பேரழகி கிளியோபாட்ரா – 1 அக்காள்-தம்பி திருமணம்

பேரழகி கிளியோபாட்ரா 1 அக்காள் – தம்பி திருமணம்

அது, கி.மு. 51ம் ஆண்டு.

வடக்கு எகிப்தின் கடற்கரையில் அமைந்திருந்த அலெக்ஸாண்டிரியா நகர மக்கள் எல்லாம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருந்தார்கள்.

நாட்டை ஆளும் பேரரசரின் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்ததுதான் அதற்குக் காரணம். அமைச்சர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கே கூடி இருந்தார்கள்.
அவர்களின் பார்வை எல்லாம் நம் கதாநாயகியான அந்த 18 வயது இளம் பெண்ணையும், 12 வயதான சிறுவனையும் மொய்த்துக் கொண்டிருந்தது.

அக்காள்-தம்பி

இவர்கள் இருவரும் உறவு முறையில் அக்காள்-தம்பி. இவர்களது திருமணத்தைக் காணவே அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது.
என்னது… அக்காள் தம்பிக்குத் திருமணமா? ஏன் இப்படியொரு முடிவு என்று நீங்கள் கேட்கலாம்.

அந்தக் காலத்தில் அரச பரம்பரையில் இந்த மாதிரியான அக்காள்-தம்பி, அண்ணன்-தங்கை திருமணம் எல்லாம் சகஜம். காரணம், அரசாளும் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான்.

அரச வம்சத்தில் பிற இன ரத்தம் கலந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையும் இதில் உண்டு.

அரசர் இறந்துவிட்டால், அவரது மனைவியைப் பேரரசி ஆக்கிவிடுவார்கள். அரசியும் கொல்லப்பட்டுவிட்டால்… அது போராகவும் இருக்கலாம், அரசியலுக்காக நடக்கும் ராஜதந்திரக் கொலையாகவும் இருக்கலாம்; அதுபோன்ற நேரங்களில் வாரிசை நியமிப்பார்கள்.

வாரிசு

அந்த வாரிசு இளைஞனாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவன், சிறுவனாக இருந்துவிட்டால்…. அப்போதுதான், அவனுக்கு அக்காள் என்று வயதில் மூத்த ஒருத்தி இருந்தால், அவளுக்கும் இவனுக்கும் திருமணம் செய்து வைத்து, அந்த பெண்ணை அரசியாக்கி விடுவார்கள்.

இதுவும் இல்லையென்றால், மிகவும் நெருங்கிய உறவுப் பெண்ணைத் தேர்வு செய்வார்கள்.

அப்படித்தான் பட்டத்துக்கு வந்தாள் நம் கதாநாயகி!
திருமணம் நடைபெறும் இடத்தில் நம் கதாநாயகி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே இருந்தாள்.

மணமகனான அவளது தம்பிதான், வாயில் கையை வைத்து விரல் சூப்பாத குறையாக நின்று கொண்டிருந்தான்.

பளபளக்கும் ஆடையில், வசீகரமாக அந்தக் கூட்டத்தில் மின்னிக் கொண்டிருந்த நம் கதாநாயகியைப் பற்றி கொஞ்சம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பேரழகி கிளியோபாட்ரா
பேரழகி கிளியோபாட்ரா

கிரீடம்

18 வயது இளம்பெண் என்பதால், ஒட்டுமொத்த அழகும் அவளது தேகத்தில் நைல் நதியாக படர்ந்திருந்தது.

தலையை அலங்கரித்த, மின்னும் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த கிரீடம் அவளது அழகுடன் போட்டியிட முடியாமல் ஒதுங்கி இருந்தது.

செழிப்பாக வளர்ந்திருந்த அவளது தலை முடி, மெல்லிய இடுப்புக்கு சற்று மேலாகவே உரசிக் கொண்டிருந்தது.

அவளது பிரகாசமான முகமும், பளிச்சிட்ட சின்ன நெற்றியும் அந்த அரண்மனைக்கு இன்னும் வெளிச்சமூட்டின.

மெல்லிடையிலும், மாராப்பிலும் தொங்கிக்கொண்டிருந்த ஆபரணங்கள், அவளைக் குட்டித் தேவதைபோல் அலங்கரித்து இருந்தன.

தைரியம்

அவளது கண்களில் மிரட்சிக்கு பதில் தைரியம்… தைரியம்… தைரியம் மட்டுமே!

‘இந்த உலகமே என் காலடியில் விழப்போகிறது…’ என்று சொல்வதுபோல் திமிராகக் காட்சித் தந்து கொண்டிருந்தன அவளது காந்தக் கண்கள்.

ஆனாலும், அந்தக் கண்களுக்குள் காதலும் ஒரு ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது.

சிறிதுநேரத்தில் 18 வயது நம் கதாநாயகிக்கும், 12 வயது அவளது தம்பிக்கும் டும் டும் கொட்டாமல் அன்றைய வழக்கப்படி நடந்து முடிந்தது திருமணம்.

இக்கட்டுரையினை வீடியோ வடிவில் பார்க்க…

அப்போதுதான், தன்னையும் அறியாமல் முதன் முதலாக வெட்கப்பட்டாள் நம் கதாநாயகி.

சரி… யார் இவள்?

பேரழகுக்கே பேரழகாக இன்றும் நம் எல்லோராலும் அடையாளம் காட்டப்படும் எகிப்துப் பேரரசி கிளியோபாட்ரா தான் அவள்.

-தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *