Tamu Market

நார்த் ஈஸ்ட்-15 இந்திய எல்லை கடந்து மியான்மர் நாட்டுக்குள்

இந்தியாவின் பக்கத்து நாடுகளில் நேபாளமும் பூடானும் மட்டுமே எந்தவொரு பாஸ்போர்ட் விசாவும் இல்லாமல் இந்தியர்களை தங்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நுழைய விடுபவை. இந்த வரிசையில் மற்றொரு பக்கத்து நாடான மியான்மரும் இருக்கிறது என்ற சங்கதி எனக்கு அங்கு போனதும்தான் தெரிந்தது.

மியான்மர் மற்ற இரண்டு நாடுகளைப் போல் இந்தியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடவில்லை. சில கட்டுப்பாடுகளோடு தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கிறது. அதுவும், ஒருநாள் மட்டுமே.

எல்லை நகரம் தமு

எல்லை நகரமான தமு வரையே செல்ல முடியும். குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பிவிட வேண்டும். அதற்கு மேல் தாமதமானால் சட்டரீதியான பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

தமுவை கடந்து பர்மாவுக்குள் பயணிக்க வேண்டுமென்றால் முறையான விசா வேண்டும். இதற்காகவே இந்திய எல்லையைக் கடந்து மியான்மரில் நுழையும்போது இரண்டு கேட்டுகளை வைத்திருக்கிறார்கள்.

கேட் நம்பர் 2, பாஸ்போர்ட் விசா இல்லாமல் பயணிக்கும் இந்தியர்களுக்கான நுழைவுவாயில். கவனிக்கவும் இந்தியர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை மற்ற நாட்டினருக்கு கிடையாது.

இந்த பாதைதான் ‘இண்டோ-மியான்மர் ஃப்ரெண்ட்ஷிப் கேட்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கேட் இந்தியர்களுக்கு தமு வரை போய்வரவும். பர்மியர்களுக்கு இந்தியாவின் மோரே வரை வந்துபோகவும் அனுமதியளிக்கிறது.

ஆவணம் இல்லாமல்

இரண்டு தேசத்தவர்களும் எல்லைக்கு அருகே இருக்கும் நகரங்களுக்கு எந்தவொரு ஆவணமும் இல்லாமல் பயணித்துக்கொள்கிற உரிமையை இந்த ஃப்ரண்ட்ஷிப் கேட் வழங்குகிறது. எல்லை திறந்திருக்கும் நேரம் இந்திய நேரப்படி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை.

நமது ஒரிஜினல் அடையாள அட்டை ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து ரூ.20 கொடுத்தால் மியான்மர் நகருக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு தரப்படும்.

கேட் நம்பர் 1 தமுவை கடந்து மியான்மருக்குள் பிரவேசிக்கும் முறையான விசா பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்களுக்கானது. மியான்மர் சுற்றுலாவிற்கான விசா கட்டணம் ரூ.2,800.

28 நாட்களுக்கு மட்டுமே சிங்கிள் என்ட்ரிதான். அவர்களின் இணையத்தளத்திலோ அல்லது டெல்லியில் இருக்கும் மியான்மர் தூதரகத்திலோ விசாவைப் பெற்றுக்கொள்ளலாம்.

நாம்ப்லாங்

நாங்கள் விசா பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல் மியான்மர்க்குள் நுழைந்தோம். அந்த இடம் நாம்ப்லாங் என்ற மார்க்கெட்.

புத்த விஹார், தமு
புத்த விஹார், தமு

எல்லையின் இருபுறமும் மார்கெட்டுதான் இருக்கிறது. இந்தியப் பகுதியில் அதாவது மோரேயில் உள்ள மார்கெட்டைவிட மியான்மர் பகுதியிலுள்ள மார்க்கெட் சுத்தமாக உள்ளது. விலையும் கூட மலிவுதான்.

பெண்களை கவர்ச்சியாக காட்டுவதற்கு என்னென்ன வகையறாக்கள் வேண்டுமோ அவ்வளவும் அங்கிருக்கிறது.

மார்கெட்டைக் கடந்து வெளியே வந்தால் நம்மூர் ஷேர் ஆட்டோ போல் அங்கு வரிசையாக ஆட்டோக்கள் நிற்கின்றன. போட்டிபோட்டுக்கொண்டு அழைக்கிறார்கள். ஒரு நபருக்கு ரூ.20 என்ற கணக்கில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

மழைத் தூறல் தொடர்ந்து கொண்டே இருந்தது. நமது சாலைகளில் நாம் வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும் என்றால், மியான்மரில் வலது புறமாக ஓட்டுகிறார்கள். நமக்கு இடதுபுறமாக பார்த்தே பழகிவிட்டதால் வலதுபுறம் வாகனங்கள் ஒதுங்கிப்போவது சற்று வித்தியாசமாகவே தெரிந்தது.

சிறு நகரம்

சற்று தொலைவு பயணித்ததும் நிங்தீ என்ற நதியைக் கடந்து ஆட்டோ சென்றது. இந்த நதிதான் இந்தியாவையும் மியான்மரையும் பிரிக்கும் எல்லைக்கோடு.

வட்ட வட்டமான பர்மிய எழுத்துக்கள் நம்மை வரவேற்று நின்றிருந்தன. அந்த வரவேற்பு பலகை கூட அவர்கள் கலாச்சாரப்படி அமைத்திருந்தது மிக அழகு.

ஏதாவது ஒரு வெளிநாட்டுக்காவது போய்விட வேண்டும் என்ற நடுத்தரக் குடும்பத்தின் ஆசை நிஜமான மகிழ்ச்சியில் என்னுடன் பயணித்த பலரின் முகமும் மலர்ந்திருந்தது.

இந்திய எல்லையில் இருந்த 5 கி.மீ. தொலைவில் தமு நகரம் இருக்கிறது.

மோரே நகரை ஒரு பெரிய கிராமம் என்று சொல்லலாம். அப்படிதான் அந்த ஊர் இருக்கிறது. பெரிய கட்டடங்களோ விஸ்தாரமான கடைவீதிகளோ அங்கில்லை.

அதோடு ஒப்பிடும்போது தமு, ஒரு சிறு நகரம் போல் காட்சி தருகிறது. குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது.

இம்பாலில் இருந்த எங்களுடன் தொடர்ந்து வந்த மழை தமுவிலும் விட்டபாடில்லை. முன்பைவிட கூடுதலாக கொட்டியது. ஆட்டோவில் இருந்து இறங்கி மார்கெட்டுக்குள் மழைக்குப் பயந்து ஒதுங்கிக்கொண்டோம். அப்படியே மார்க்கெட்டை ஒரு ரவுண்ட் வந்தோம்.

-இன்னும் பயணிப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *