Kasi Tribe Costume

நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயணித்த அற்புத அனுபவங்களை ஒரு பயணத் தொடராக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அத்தியாயம் வாசித்திருப்பீர்கள். இது இரண்டாவது அத்தியாயம்.

ஒரு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திப்ரூகர் எக்ஸ்பிரஸில் ஏறி அமர்ந்தோம்.

இங்கும் எனக்கு பக்கத்தில் நாகராஜன் தான் வந்திருந்தார். எங்களுக்கு எதிரே எங்களின் பயணக் குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சந்திரசேகர் அவரது மனைவி பார்வதியும் இணைந்து கொண்டார்கள். மூன்று இரவு, இரண்டு பகல் பயணத்தை பேசிப்பேசியே தீர்த்தோம்.

எங்களோடு மனிதர்கள் மட்டுமல்ல, கரப்பான் பூச்சிகளும் பாச்சைகளும், குட்டி எலிகளும் கூட பயணம் செய்தன. பராமரிப்பு என்பது மருந்துக்குக் கூட கிடையாது. 55 மணி நேர பயணத்தில் ஒருமுறை கூட கோச் சுத்தம் செய்யப்படவில்லை.

ரயிலில் பிச்சை எடுப்பவர்கள்தான் அவ்வப்போது சின்ன விளக்குமாறு வைத்து கூட்டி சுத்தம் செய்து அதற்கு கூலியாக நம்மிடம் யாசகம் பெறுகிறார்கள். அவர்களும் இல்லையென்றால் கோச் குப்பைக்காடாக மாறியிருக்கும்.

பிராணயாமம்

கழிப்பறைப் பக்கம் போக பிராணயாமம் தெரிந்திருக்க வேண்டும். ஏஸி கோச் என்றால் நல்ல பராமரிப்பு இருக்கும் என்று நம்பினோம்.

தென்னக ரயில்வேயில் பரவாயில்லை. ஆனால், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் பராமரிப்பு என்பது கொஞ்சமும் இல்லை. கலைக் கூத்தாடிகள் முதல் எல்லா வகை மனிதர்களும் ஏஸி கோச்சுக்குள் வந்து வித்தை காட்டுகிறார்கள்.

இரவு 12 மணி வரை டீ, காபி முதற்கொண்டு எல்லா வியாபாரிகளும் வந்து போகிறார்கள். 10 மணிக்கு மேல் முன்பதிவு பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றொரு ரயில்வே விதி இருக்கிறது. இங்கு எந்த விதியும் கடைப்பிடிக்கப்படவில்லை.

மேகாலயா கோல்ப் மைதானம், Northeast,
மேகாலயா கோல்ப் மைதானம்

கனவாகவே போனது

இரவு தூங்குவதற்கு முன்பு விஜயவாடாவில் நல்ல இட்லி கிடைக்கும் என்று உடன் பயணித்தவர் கூறினார். காலை 5.30 மணிக்கு விஜயவாடா போகும் எல்லோரும் நல்ல இட்லி வாங்கிவிட வேண்டும் என்ற கனவோடு தூங்கினோம்.

அது கனவாகவே போனது. காலையில் கண் விழிக்கும்போது 6.45 மணி. இனி எங்கு இட்லி வாங்குவது? என்னுடன் வந்த சீனியர் சிட்டிசன்கள் புலம்ப, அடுத்து ராஜமுந்திரியில் நிற்கும்… அங்கு கிடைக்கும் என்று அனுபவஸ்தர்கள் சொல்ல ராஜமுத்திரிக்காக காத்திருந்தோம்.

ஆளாளுக்கு நாலு இட்லி

காலை 8 மணிக்கு ராஜமுந்திரி வந்தது. பிளாட்பாரத்தில் வரிசையாக சிறிய டேபிள் போட்டு இட்லி விற்றுக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் கொடூரப் பசி. ஆளாளுக்கு நாலு இட்லியை பார்சல் வாங்கிக்கொண்டு ஏறினோம். ரயிலும் புறப்பட்டுவிட்டது.

பொட்டலத்தைப் பிரித்து இட்லியைப் பிட்டு வாய்க்குள் வைத்தோம். பு..ளி..ப்பு..! புளி..ப்பு..!! அப்படியொரு புளிப்பு..!!! வாயில் வைக்க முடியவில்லை. பசியைத் தணித்துக்கொள்ள எப்படியாவது வயிற்றுக்குள் திணித்துக் கொள்ளலாம் என்றால் அதுவும் முடியவில்லை.

அப்படியே கீழே தூக்கிப் போட்டோம். ஒவ்வொருவருக்கும் 60 ரூபாய் நஷ்டம். பேசாமல் ரயிலில் ஐ.ஆர்.டி.சி. கொடுக்கும் காலை உணவையே வாங்கி சாப்பிட்டிருக்கலாம். பயணத்தில் இதுவும் ஒரு அனுபவம்தான்.

விசாகப்பட்டினம்

நான்கு மணி நேரம் கழித்து விசாகப்பட்டினம் வந்தது. பிளாட்பாரத்தில் ரன்னிங் ரேஸ் ஓடி ஒருவழியாக பிரியாணி வாங்கி வந்தோம். இப்போது பரவாயில்லை. பிரியாணி பிரமாதமாக இல்லை என்றாலும் பசியை ஆற்றியது.

ரயிலின் இருபக்கமும் பசுமையான வயல்கள்தான் கண்ணில் பட்டன. நம்மூர் ரயில்பாதை ஓரங்களில் தவறாமல் தென்படும் சீமைக்கருவேல மரங்கள் ஒன்றுகூட பார்க்க முடியவில்லை. நீர் வளம் நிறைந்த, வளமான பூமி என்பது பார்த்தவுடனே தெரிகிறது.

சரி, ஆந்திராதான் வளமான பூமி. ஒடிஷா அப்படியிருக்காது என்று நினைத்தால், அங்கும் பசுமை பூத்துக் குலுங்குகிறது. அறுவடைக்கு முந்தைய காலம் என்பதால் ஆந்திராவில் தொடங்கிய பசுமை மணிப்பூர், மியான்மர் வரை எங்களை துரத்திக்கொண்டே வந்தது. பசுமையான பயிர்கள் பார்க்க.. பார்க்க.. அழகு!

இரண்டாவது இரவு

ஒடிஷா மாநிலத்தை ரசிக்கலாம் என்று பார்த்தால் அதற்குள் இருட்டி விட்டது. வட்ட வட்ட வடிவில் இருக்கும் ஒரிய எழுத்துக்கள் பார்க்க அம்சமாக இருந்தன.

ரயிலில் எங்களது இரண்டாவது இரவு இது. காலையிலும் மதியமும் உணவுக்காக அலைந்து திரிந்த அனுபவம் தந்த படிப்பினையால் இரவு உணவை ஐ.ஆர்.டி.சி.யிடமே ஒப்படைத்து விட்டோம்.

நூறு ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி, ஒரு தோசை கொடுத்தார்கள். தொட்டுக்கொள்ள பருப்புக் குழம்பும் பன்னீர் மசாலாவும் இருந்தன. அப்படியொன்றும் ருசியாக இல்லை. ஆனாலும் பரவாயில்லை.

மறுநாள் காலை கண் விழித்தபோது மேற்கு வங்காளத்துக்குள் பயணித்துக்கொண்டிருந்தோம். இரவு வரை அந்த மாநிலத்திற்குள் தான் பயணம். நம்மூரில் இரட்டை ரயில் பாதை கொண்டு வரவே திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இங்கு சரக்கு ரயிலுக்கு தனிப்பாதையே இருக்கிறது. ஆக இங்கு மூன்று ரயில் பாதைகள் உள்ளன.

இங்குள்ள ரயில் நிலையங்களும் வித்தியாசமாக உள்ளன. நம் பகுதியில் வழக்கொழிந்த கைகாட்டி வகை சிக்கனல்கள் இன்னமும் புழக்கத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன்களும் உள்ளன.

கிராமங்களில் தகரத்தால் உருவாக்கப்பட்ட குடிசை வீடுகள் இருக்கின்றன. ஆண்டாள், நிவேதிதா, வைஜெயந்தி என்று பெண்கள் பெயரில் ஊரும் ரயில் நிலையங்களும் இருப்பது ஓர் ஆச்சரியம்!

-இன்னும் பயணிப்போம்

இதற்கு முந்தைய அத்தியாயத்தில் பயணிக்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *