இந்தியாவின் டாப் 10 ஓடிடி தளங்கள்

இந்தியாவின் டாப் 10 ஓடிடி தளங்கள்

கொரோனோவிற்கு முன்பு யாரும் ஓடிடியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கொரோனா பொது முடக்கத்திற்கு பின் ஓடிடி-க்கள் அதீத வளர்ச்சி கண்டன. அதற்கு முன்புவரை வெளிநாடுகளில் கோலோச்சி வந்த ஓடிடி க்கள் இந்தியாவிலும் சக்கை போடு போட ஆரம்பித்தன. இவற்றின் அசுர வளர்ச்சி திரையரங்குகளை கூட மிரள வைத்தன. அப்படிப்பட்ட ஓடிடி தளங்களில் டாப் 10 இடங்களில் இருக்கும் ஓடிடி பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். சந்தாதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தரவரிசை தரப்பட்டுள்ளது. 

10. ஆப்பிள் டிவி 

பத்தாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் டிவி. ஐபோன், ஐபாட், மேக் கம்ப்யூட்டர் போன்ற ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை தருவதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த ஓடிடி. இந்தியாவிற்கு 2019-ல் வந்தது. ஆங்கில படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால். பத்து லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டு பத்தாவது இடத்தில் இருக்கிறது.  

9. ஆஹா 

இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், முதலில் தெலுங்கு படங்களை வெளியிடுவதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு அன்று இந்த ஓடிடி தொடங்கப்பட்டது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அரவிந்த் தான் இதன் உரிமையாளர். ஒரேயொரு மொழியை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தளம் போதிய வரவேற்பு பெறாததால் தற்போது தமிழ் கண்டெண்ட்களையும் இணைத்துள்ளனர். 2022-ம் ஆண்டு முதல் இந்த தளத்தில் தமிழ் படங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போதைய கணக்குப்படி இந்த ஓடிடி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. சந்தாதாரர்கள் எண்ணிக்கை 15 லட்சம். 

8. ஊட் செலக்ட் 

எட்டாவது இடத்தில் இருக்கும் ஊட் ஓடிடி தளமும் ஓர் இந்திய நிறுவனம்தான். முகேஷ் அம்பானிதான் இதன் முக்கிய பங்குதாரர். கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனமான வயகாம் 18 தங்களின் அனைத்து மொழிகளிலும் உள்ள 31 சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களையும் இந்த ஓடிடியில் அளித்து வருகிறது. மொத்தம் 40 ஆயிரம் மணி நேரத்துக்கான வீடியோ கண்டெண்ட் தங்களிடம் இருப்பதாக ஊட் ஓடிடி தெரிவிக்கிறது. இந்த ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. இந்தியாவில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

7. ஏஎல்டி பாலாஜி 

இந்தி படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் அடிக்கடி கேள்விப்படும் பெயர் ஏக்தா கபூர். ஏக்தா கபூர் வழங்கும் ஸ்ரீ பாலாஜி டெலிபிலிம்ஸ்-ன் என்ற வாசகங்களை கொண்ட இந்தி டப்பிங் தொடர்களை சில வருடங்களுக்கு முன்பு வரை சேட்டிலைட் சேனல்களில் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அந்த தொடர்களின் கதை, அதன் தயாரிப்பாளர், இயக்குனர் எல்லாமே இவர்தான். இவர் இந்தி நடிகர் ஜீதேந்திராவின் மகள். 1995-ல் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருகிறார். 

இவரின் சொந்த ஓடிடி தான் ஏஎல்டி பாலாஜி. 2017-ம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. இந்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, தமிழ் ஆகிய மொழிகளில் கண்டெண்ட் கிடைக்கிறது. இதுவும் ஒரு இந்திய நிறுவனம்தான். இந்த ஓடிடியின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 34 லட்சம்.

6. நெட்பிலிக்ஸ் 

ஓடிடி என்று சொன்னாலே நமது நினைவிற்கு வருவது நெட்பிலிக்ஸ் தான். உலகம் முழுவதும் அத்தனை பிரபலம். ஆனால் இந்தியாவில் டாப் 10 ஓடிடி தளங்களில் 6-வது இடத்தில் இது இருக்கிறது. 1998-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சீனாவைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் இயங்கி வருகிறது. 2016 முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. சொந்த தயாரிப்புகளை அதிகமாக கொண்ட ஓடிடி தளம் இது மட்டும் தான் என்று சொல்லாம். 

அதிக கட்டணம், உள்நாட்டு மொழிகளுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுப்பது ஆகிய இரண்டுமே சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

நெட்பிலிக்ஸ் தற்போதைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 55 லட்சம். 

5. ஜீ5

1992-ல் இந்தியாவில் முதல் சேட்டிலைட் சேனைகளை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஜீ என்டேர்டைமென்ட். இன்று எல்லா மொழிகளிலும் 55-க்கும் மேற்பட்ட செனல்களைக் கொண்டுள்ளது. 2018-ம் ஆண்டு 12 மொழிகளின் கண்டென்ட்டுகளைக் கொண்டு ஜீ 5 என்ற ஓடிடி தளம் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த ஓடிடியின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 75 லட்சமாகும். 

4. சோனி லிவ் 

இந்தியாவின் டாப் 10 ஓடிடி தளங்கள் சோனி லிவ்

இந்தியாவில் ஆரமிப்பிக்கப்பட்ட முதல் ஓடிடி தளம் இதுதான். 2013-ல் இருந்து இயங்கி வருகிறது. ஹாலிவுட் படங்களை மட்டுமே வைத்திருந்தது. அதனால் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருந்தது. 2020-ம் ஆண்டுதான் சோனி லிவ் தனது சோனி எண்டெர்டைமென்ட் நிறுவனம் மூலம் சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்கள், ஸ்போர்ட்ஸ் போன்றவற்றை இந்த ஓடிடியில் இணைத்தது. அன்று முதல் இதன் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்தது. சோனி நிறுவனம் உலகம் முழுவதும் இருந்தாலும் சோனி லிவ் இந்தியாவில் மட்டுமே இயங்கும் ஒரு ஓடிடி தளமாகும்.

கிரிக்கெட், ஒலிம்பிக், ஏசியன் கேம்ஸ் என்று விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பி வருவதால் இதன் வளர்ச்சி கடந்த இரன்டு ஆண்டுகளில் 1 கோடியே 20 லட்சம் சந்தாதாரகள் என்ற எண்ணிக்கையில் இந்தியாவில் நான்காவது இடத்தில் இருக்கிறது. 

3. அமேசான் ப்ரைம் வீடியோ

அமேசான் ப்ரைம் ஓர் அமெரிக்க நிறுவனம். 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அப்போதுதான் ப்ரைம் வீடியோ இந்தியாவிற்கு அறிமுகமானது. அமேசான் ப்ரைம் என்பது வெறும் வீடியோ கண்டன்ட் மட்டுமல்ல, அது பல சிறப்புகளைக் கொண்டது. அமேசான் இணையதளத்தில் பொருட்கள் வாங்கும் போது அதற்கு சலுகை கொடுக்கிறது. அமேசான் ம்யூசிக்கில் இலவசமாக பாடல்களைக் கேட்கலாம். அதனால் ப்ரைம் உறுப்பினர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. போதாக்குறைக்கு பெரிய பட்ஜெட் படங்களும் அதிகமாக இந்த தளத்தில்தான் வெளியாகிறது. தியேட்டரில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் புதிய படங்களையும் வாடகை அடிப்படையில் காணமுடிகிறது. இவை எல்லாமே சந்தாதாரர்கள் அதிகமாவதற்கான காரணங்கள்.

இந்திய டாப் 10 ஓடிடி தளங்களில் 3-வது இடத்தில் அமேசான் ப்ரைம் இருக்கிறது. இதன் தற்போதைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம். 

2. எம்எக்ஸ் பிளேயர் 

முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கும் ஒரு ஓடிடி தளம் இது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் நிறுவனமான டைம்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் இந்த எம்எக்ஸ் பிளேயர். 2019-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து செயல் படுகிறது. விளம்பரம் இல்லாத சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 மொழிகளில் இயங்கும் இந்தத் தளம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்களைக் கொண்டிருக்கிறது. இலவசமாக வீடியோக்களை பார்க்கலாம் என்பதால் இந்த தளத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்திய ஓடிடி தளங்களில் இரண்டாவது இடம் பிடித்திருக்கும் இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சம்.

1. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் 

டாப் 10 ஓடிடி  தளங்களில் முதலிடத்தில் இருப்பது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார். ஸ்டார் இந்தியா குழுமம் 2015-ம் ஆண்டு ஹாட்ஸ்டார் என்று ஓடிடி தளத்தை உலக கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து தொடங்கியது. அப்போதே இளைஞர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு. 2020-ம் ஆண்டு ஹாட்ஸ்டாருடன் டிஸ்னி ப்ளஸ்ஸும் இணைந்து கொள்ள இந்த ஓடிடி படு வளர்ச்சியடைந்தது. வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ், பிக்சர், மார்வெல் ஸ்டுடியோ, லூகாஸ்பிலிம், நேஷனல் ஜியோகிராபி போன்ற பெரிய நிறுவனங்களின் படைப்புகள் இந்த ஓடிடியில் வலம் வரத்துவங்கின. இப்போதும் விளையாட்டுதான் இந்த தளத்தில் பிரதானமாக இருக்கிறது. அதனால் இதன் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

இந்திய ஓடிடியில் முதலிடத்தில் இருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தற்போதைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 4 கோடியே 75 லட்சம்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *