அறிஞர் அண்ணாவுடன் கி.ஆ.பெ.விசுவநாதம்

‘பள்ளி’யில், படிக்காத மேதை – கி.ஆ.பெ.விசுவநாதம்

முத்தமிழ்க் காவலர் எனத் தமிழுலகம் போற்றும் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம், பள்ளிக்கூடம் சென்று படிக்காத மேதை. தாமாகவே கற்றுப் புலமை பெற்றவர். பல்கலைக் கழகத்தால் ‘அறிவர்’ (டாக்டர்) பட்டமும் பெற்ற பேரறிவாளர்.

அவர் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராயும் பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் செயலாளராயும் பொறுப்பு வகித்தவர். ஐந்தாயிரம் தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்த பண்பாட்டாளர். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தை முன்நின்று நடத்திய முத்தமிழ்க் காவலர். தமிழிசை இயக்கத்தை மூலை முடுக்கெல்லாம் பரப்பிய இனியவர். சித்த மருத்துவ முறைக்குப் புத்துயிர் அளித்த சித்தர் பெருமகனார்.

பல்துறை வித்தகர் கி.ஆ.பெ.விசுவநாதம்

சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், வாய்மை வழுவாத வணிகர் எனப் பல்துறை வித்தகர் அவர். பேரறிஞர் அண்ணாவை முதன்முதலில் மேடை ஏற்றிய பெருமைக்கு உரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம்தான். திருச்சிராப்பள்ளியில் நடந்த நீதிக் கட்சி மாநாட்டில் அதன் தலைவர் டாக்டர் சர்.இராமசாமி முதலியாரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்க அன்று ஆள் இல்லாமல் தவித்தார்கள் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள்.

இதையறிந்து கூட்டத்தில் இருந்த ஒருவர், தம் பக்கத்தில் இருந்த இளைஞரைச் சுட்டிக்காட்டி. “இவர் பெயர் அண்ணாதுரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர். ஆங்கிலப் புலமை மிகுந்தவர், இவர் அருமையாக தமிழில் மொழிபெயர்ப்பார்” என்றார்.

உடனே, மேடையில் இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம் கை கொடுத்து அண்ணாதுரையை மேடை ஏற்றினார். பேச்சு முடிந்ததும் இராமசாமி முதலியார். “என் பேச்சைவிட மொழிபெயர்ப்புத்தான் சிறப்பாக இருந்தது” என்று வெகுவாய்ப் பாராட்டினார்.

முதல் மேடைப்பேச்சு

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்றாம் ஆண்டு ஒட்டப் பிடாரத்தில் நடந்த கூட்டத்தில் கி.ஆ.பெ. விசுவநாதம் ‘அன்பு’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதுதான் அவர் பேசிய முதல் மேடைப்பேச்சு. இந்தச் சொற்பொழிவைக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் முன்வரிசையில் உட்கார்ந்து கேட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று நான்காம் ஆண்டு சென்னைத் தேனாம்பேட்டையில் ஓர் உணவு விடுதியில் நடந்த தமது தொண்ணூற்று ஆறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம். அப்போது “நான் அதிக காலம் உயிருடன் இருக்கமாட்டேன். இந்த நேரத்தில் தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி குறித்து அரசு ஆணை வந்தால் மகிழ்வோடு உயிர் துறப்பேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டார். இதுதான் அவர் பேசிய கடைசிப் பேச்சும் விருப்பமும் ஆகும்.

அவர் கூறியது போலவே அந்த ஆண்டிலேயே திசம்பர்த் திங்கள் பத்தொன்பதாம் நாள் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் இயற்கையோடு ஒன்றினார். ஆம். ஐம்பூதங்களில் கலந்தார். சாகும்வரை முத்தமிழுக்காகவே வாழ்ந்தார் அவர். நாமும் தமிழுக்காக வாழ்வோம்; தலைநிமிர்ந்து வாழ்வோம்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே

பெரியாரைப் பேணித் தமராக் கொளல்”

குறள் (443)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *