கிளியோபாட்ரா-19 இரவில் தேடி வந்த திகைப்பூட்டும் ஆச்சரியப் பரிசு
கிளியோபாட்ரா ரோமுக்கு வந்து விட்டதால், எகிப்துப் பேரரசின் ஆட்சி நிர்வாகத்தை அவளது நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் பார்த்துக் கொண்டனர். சில நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, அதுபற்றிய தனது கருத்தைச் செயல்படுத்த எகிப்துக்கு ஒற்றர்களை அனுப்பி வைத்தாள் கிளியோபாட்ரா.
ஆனாலும், ரோமில் ஜூலியஸ் சீஸரின் விருந்தாளியாக – ஆசை நாயகியாக தங்கியிருந்த அவளது மனம் மட்டும் ஏனோ அலைபாய்ந்தது. சீஸர், தன்னை அவரது அதிகாரப்பூர்வ மனைவியாக அறிவிப்பாரா? சீஸருக்கும் தனக்கும் பிறந்த டாலமி சீஸர் அவரது வாரிசாக அறிவிக்கப்படுவானா? என்றெல்லாம் யோசித்ததில் பல இரவுகள் தூக்கத்தைத் தொலைத்திருந்தாள்.
ஒருநாள் நள்ளிரவு – யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அணைத்து படுத்திருந்த 2 வயது குழந்தையான டாலமி சீசரைப் பாதுகாப்பாக அகற்றி வைத்துவிட்டு கதவைத் திறக்க வந்தாள் கிளியோபாட்ரா. சீஸரின் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்டிருந்த அந்த அரண்மனைக்குள் எதிரிகள் யாரும் சட்டென்று நுழைந்துவிட முடியாது என்பதால், தைரியமாகவே கதவை திறந்தாள்.
சீஸரின் வருகை
கதவைத் திறந்த மாத்திரத்தில் கிளியோபாட்ராவின் முகத்தில் திடீர் பிரகாசம். ஆம்… ஜூலியஸ் சீஸர்தான் அவளைத் தேடி வந்திருந்தார். கையில் ஏதோ ஒரு பொருள் இருந்தது.
“உள்ளே வாருங்கள் பேரரசே! உங்களின் இந்த நேர வருகையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை”.
“உன்னைப் பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. அதனால்தான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்.”
“சரி… உள்ளே வாருங்கள்…”
சிறிதுநேரத்தில் சீஸரும் கிளியோபாட்ராவும் அந்த உயரிய மஞ்சணையில் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
காதல் கவிதை
சீஸரின் கை விரல்கள், அவரது மடியில் அமர்ந்திருந்த கிளியோபாட்ராவின் மேனியில் ஆங்காங்கே காதல் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தன. அந்த மவுன ஹைக்கூ கவிதைகளின் மெல்லிய தீண்டலில் இன்ப வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா.
சில நிமிடங்கள் மவுனமாகக் கரைந்தன. குழந்தை டாலமி சீஸரும், பெற்றோர் இருவரின் காதல் விளையாட்டுகளுக்கு இடையூறு செய்யாமல் சமர்த்தாக உறங்கிக் கொண்டிருந்தான்.
“பேரரசே! ஏன் வந்தது முதல் மவுனமாக இருக்கிறீர்கள்? நான் இங்கே தங்கியிருப்பது உங்கள் மனைவி கல்பூர்னியாவுக்கு பிடிக்கவில்லையா?” கிளியோபாட்ராவே அங்கே நிலவிய மவுனத்தைக் கிழித்துக்கொண்டு பேசினாள்.
“ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறாய்? எல்லா மனைவிக்குமே தனது கணவன் உத்தமபுத்திரனாக இருக்க வேண்டும் என்ற ஆசைதானே இருக்கும்? அந்தவகையில், அவள் வருத்தப்படுகிறாள். அவ்வளவுதான்! ஆனால்…”
“என்ன ஆனால்…”

“இல்லை… இப்போது நீ ஏன் அவளைப் பற்றி பேசுகிறாய்? உன்னுடன் இருக்கும்போது உனது கணவனாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். இது எனது ஆசை மட்டுமல்ல; பேராசையும்கூட!”
சீஸர் இப்படிச் சொன்னதும், தனது மேனியில் அலைபாய்ந்த அவரது கரங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, அழகான இடுப்பை வளைத்து அப்படியே திரும்பினாள் கிளியோபாட்ரா.
மஞ்சணையில் கரைபுரண்ட உற்சாகம்
இப்போது இருவரது முகமும் மிக மிக நெருக்கத்தில்!
அந்தக் குளிர்ந்த இரவிலும் அனலாக புறப்பட்டு வந்த இருவரது மூச்சுக்காற்றும் மோதிக்கொண்டு ஒன்றாய் கலந்தன. இருவரது கண்களும் காதல் போதையில் வெட்கப்பட்டு நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தவித்தன.
கிளியோபாட்ராவின் ஆரஞ்சுபழ இதழ்களும், சீஸரின் தடித்த உதடுகளும் பேரின்பப் பரவசத்தில் மூழ்கி எழுந்து கொண்டிருந்தன. உதடுகளுக்குக் கீழே தொண்டைக்குழிக்குள், இருவரையும் அறியாமல் வாயில் சுரந்த உமிழ்நீர் வேகமாக இறங்கிய சப்தம் இருவருக்கும் நன்றாகவே கேட்டது. அடுத்த நொடியே கிளியோபாட்ராவை இறுக்கி அணைத்துக்கொண்டார் சீஸர்.
சிறிதுநேரத்தில் அரைகுறை உறக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கும் துயில் கொண்டது. அந்த அறை முழுவதும் இருள் கவ்வியது.
அரை மணி நேரம் ஓடியிருக்கும். மீண்டும் துயில் எழுந்து, எண்ணெயில் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டது விளக்கு. அடுத்த நொடியே அறை முழுவதும் மஞ்சள் வெளிச்சம் வேகமாக பரவியது.
சீஸரின் மார்பில் படுத்திருந்தாள் கிளியோபாட்ரா. இருவரது உடலிலும் ஒட்டுத்துணிகூட இல்லை.
மின்னியது மேனி
அந்த இரவுநேர மஞ்சள் வெளிச்சத்தில் கிளியோபாட்ராவின் பொன்னிற மேனி, அந்தி மயக்கத்தில் மஞ்சள் தேய்த்து குளித்த ஆதவன் போல் மின்னிக் கொண்டிருந்தது. அவளது ஒட்டுமொத்த அழகையும் சுவைத்த இன்பம் போதாது என்று, அவளது மேனியை மீட்டிக் கொண்டிருந்தன சீஸரின் விரல்கள்.
கிளியோபாட்ராவின் விரல்களும் சும்மா இருக்கவில்லை. அவளும், முடி அதிகம் இல்லாத சீஸரின் மார்பில் விரல்களால் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
அந்த நிசப்தமான பரவசத்தின் ஊடே மெல்ல பேச்சை ஆரம்பித்தார் சீஸர்.
‘அழகில் சிறைப்பட்டுவிட்டேன்’
“அழகே! உன்னுடன் தனிமையில் இருக்கும்போது நான் இந்த நாட்டுக்கு வேந்தன் என்பதையே மறந்துபோய் விடுகிறேன். உன் அழகில் சிறை பிடிக்கப்பட்ட நான், உன் உள்ளம் என்னும் சிறையில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து முடிக்க ஆசைப்படுகிறேன்” கற்பனையில் உச்சத்தில் நின்றுகொண்டு பேசினார் அவர்.
“இதில் ஏன் உங்களுக்கு சந்தேகம்? அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் நான் உங்களது மனைவிதானே? விரைவில் உங்களது மனைவியாக அறிவிக்கப் போகிறீர்கள்தானே?”
“ஆமாம்! இதில் எந்த சந்தேகமும் இல்லை! நீ என்னுடைய அதிகாரப்பூர்வமான மனைவி ஆகிவிட்டால் எனக்கு புது தெம்பு கிடைத்துவிடும். மாவீரன் அலெக்ஸாண்டர் போல் இந்த உலகத்தையே எனது தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும். இந்த உலகத்துக்கே நான் பேரரசனாக இருக்க வேண்டும். என்னருகில் நீ… நீ மட்டும் மகராணியாக வீற்றிருக்க வேண்டும். இது என்னுடைய பேராசையாகக்கூட இருக்கலாம். நீ மட்டும் என்னுடன் கடைசிவரை இருந்தால் எனது லட்சியங்கள் அனைத்துமே நிறைவேறிவிடும்”.
தீர்க்கமாக, அதுவும் பேராசையோடு சொன்ன சீஸரை அணைத்தபடி அவரது மார்பில் தலை சாய்த்தாள் கிளியோபாட்ரா.
சிறிதுநேரம் இருவரும் அளவுக்கு மீறிய பாசத்தில்; ஆசையில் உருகிப்போய் கிடந்தனர். அப்போதுதான் சீஸருக்கு அந்த நினைவு வந்தது. கிளியோபாட்ராவை ஒற்றைக்கையால் தாங்கியபடியே படுக்கையில் இருந்து எழுந்தார்.
ஆச்சரியப் பரிசு
“உனக்காக ஆச்சரியப் பரிசு ஒன்றை வாங்கி வந்தேன். உன்னைப் பார்த்த மாத்திரத்தில் அந்த பரிசையே மறந்துபோய்விட்டேன்” என்ற சீஸர் லேசாகச் சிரித்து வைத்தார். அருகே வைக்கப்பட்டு இருந்த பரிசுப் பொருளை எடுத்துப் பிரித்தார்.
அந்த பரிசை பார்த்த மாத்திரத்தில் கிளியோபாட்ராவின் கயல் விழிகள் வியப்பில் விரிந்தன. விலை உயர்ந்த நவரத்தினங்கள் கோர்க்கப்பட்ட ஆபரணம்தான் அது.
அந்த நகையை, கிளியோபாட்ராவின் கழுத்தில் அணிவித்தார் சீஸர். மார்பகங்களுக்கு இடையே நைல் நதியாய் நீளமாக ஊடுருவி, கிளியோபாட்ராவின் பேரழகுக்குப் பேரழகு சேர்த்தது அந்த ஆச்சரியப் பரிசு நவரத்தின மாலை.
-தொடரும்

பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.