தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு

தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு

தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு

நூற்றாண்டு காண்கிறது. தொழில் நகர் சிவகாசி! கொண்டாடுவோம் கோலாகலமாக!

கரிசல் பூமியில் காசு விளைந்தது! மழை பேய்ந்து விளையும் சீமை மலையாளம். காவிரி பாய்ந்து விளையும் சீமை தஞ்சை. கதிரவன் காய்ந்து விளையும் சீமை சிவகாசி.

வறட்சிக்கு பேர் எடுத்த மண்ணில் ஒரு புரட்சி நடந்தது. அது உத்வேக நெருப்பு அலைபாய்ந்த இரு இளைஞர்கள் வங்காளம் சென்று தீப்பெட்டி செய்முறை கற்று வந்த கதை. ஆறு மாதங்களே பயிற்சி எடுத்தவர்கள், அடுத்து எடுத்து வைத்த காலடிகள் நீள்பாய்ச்சல்கள் தாம். அந்தக் காலகட்டத்தில் நமது நாட்டு தாய்மார்கள் அடுப்பில் உலை வைக்க, அடுத்த வீட்டில் ‘சுள்ளி’ வாங்குவார்களாம். தீப்பெட்டிக்கான தேவை அந்தளவு அபரிதமாக இருந்தது.

ஒரு ஜெர்மானிய மிஷினுடன் உற்பத்தியை துவக்கினர் அய்யநாடாரும், காகா சண்முக நாடாரும். அந்த இயந்திரத்தின் வேகத்தை மிஞ்ச வேண்டும் என்ற அவர்களின் தாகம் பெரிது. அதற்கு மனித ஆற்றல்தான் ஒரே வழி என்று கைத்தொழிலை தேர்வு செய்த நேரம் பொன்னானது.

லட்சக்கணக்கான கரங்களுக்கு உத்திரவாதமான வேலை கிடைத்தது. காய்ந்து கிடக்கும் கரிசல் பூமியில் காசு முளைத்து, தழைத்து, செழித்தது. பின்னாட்களில் ஜில்லா விட்டு ஜில்லா சென்று தொழிலாளர்களை அழைத்து வந்த தீப்பெட்டி ஆபீஸ் பஸ்களை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர் அயலூர்வாசிகள்!

வரமாய் அமைந்த வரிச்சலுகை!

சிவகாசி தொழில் முன்னோடிகள் ‘கோதா’வில் இறங்கி எதிர்த்து மல்லுக்கட்டியது, சாதாரண ஆள் அல்ல. அந்த போட்டியாளர் ‘விம்கோ’ என்ற பன்னாட்டு ஜாம்பவான். அந்த ‘வெட்டுப்புலி’ கோலியாத்தை எதிர்த்து, இங்கே குட்டி அணிலும், கட்டுச்சேவலும் வாகை சூடியது ஒரு வரலாற்றுச் சாதனையே. குவாலிட்டி, சின்சியாரிட்டி, பங்ஜுவாலிட்டி மூன்று டி களும் சேர்ந்து சிவகாசியை இந்திய வரைபடத்தில் ஒரு பாப்புலாரிட்டியை பொறிப்பதற்கு காரணமாகின. 

காலப் போக்கில், ‘விம்கோ’வின் இயந்திரத் தயாரிப்பு 25 சதவிகிதமும் சிவகாசி கைத்தொழில் தயாரிப்பு 75 சதவீதமும் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்தன. பின்னாட்களில் மத்திய அரசு குடிசைத் தொழிலுக்குத் தந்த எக்சைஸ் வரிச்சலுகையும், பெரிய பூஸ்டராக அமைந்தது மறுக்க முடியாத உண்மை. சிவகாசி பகுதி தொழிற்கூடங்களின் வாசலில், அந்தந்த நிறுவனங்களின் பெயர்ப்பலகை இருக்கிறதோ, இல்லையோ, நிச்சயம் ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ போர்டுகள் தொங்கவிடப்பட்டிருக்கும். சிவகாசி வந்தாரை வாழ வைக்கும் பூமி ஆனது!

தொழில் பக்திக்கு மறுபெயர் சிவகாசி!

காலம்: 1943-1952

நெருப்பு தீட்டும் சித்திர ஜாலம் விழிகளை விரித்து, வியக்க வைக்கக்கூடியது. கலர் மத்தாப்புகளில் வித்தககம் பல புரிந்தவர்களுக்கு புஸ்வானம், சாட்டை, சோர்சா, வெடி தயாரிப்பது எளிதாக கை கூடியது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே சிவகாசி பட்டாசுகள், ‘சரவெடி’ கொளுத்தி தன்னை பிரகடனப்படுத்திவிட்டது. வருகையை அதுவரை இங்கு மாய்மாலம் காட்டிக் கொண்டிருந்த சீனத்து டிராகன் தெறித்து ஓடி பின்வாங்கத் துவங்கியது.

அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் பட்டாசுத் தொழிலை சட்டபூர்வமாக்கி, ஒரு டிக்னிட்டியை பெற்றுத் தந்தது. அரசாங்கத்திற்கும் வரி வசூலில் சிவகாசி ஒரு தங்க முட்டையிடும் வாத்தாக மிளிர்ந்தது.

சிவகாசி தீப்பெட்டி அதிபர்கள் எல்லோரும் பட்டாசு முதலாளிகளாகவும் காட்சியளித்து, இரட்டைக் குதிரை சவாரி செய்தனர். நாடே, பட்டாசு கொளுத்தி, தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் பட்டாசு அதிபர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் வசூலுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஊர் திரும்பியதும் நடைபெறும் கார்த்திகைத் திருவிழாதான், சிவகாசி பெருமக்களுக்கு ‘தீபாவளி!’ தொழில் பக்திக்கு மறு பெயர் ‘சிவகாசி!’

போலிகிராஃப் சிட்டி – சிவகாசி

காலம்: 1953-1962

தென்தமிழகத்தில் ஒன்றிரண்டு ஊர்களில் மட்டுமே அச்சுக்கூடங்கள் இருந்த காலம் அது. சிவகாசியைச் சேர்ந்தவர்கள், ஒரு சமுதாய மாநாட்டு மலர் அச்சடிக்க ஊர் ஊராக அலைந்தார்கள். புறக்கணிப்பும், அவமதிப்பும் தானே மனதில் நம்மை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற வெறியைக் கிளப்புகிறது. விளைவு சிவகாசி நாடார் பிரஸ் உருவாகியது. (காலம் 1922)

பொதுமக்களின் பங்கு முதலீட்டில்! ஆங்கே பணியாற்றிய அருணகிரி நாடார் என்ற தொழில்நுட்ப பேரார்வலர், சிவகாசிக்கார்களின் கரம் பற்றி இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றார். அதுதான் அச்சுக்கலையின் பரிணாம வளர்ச்சியான லித்தோகிராபிக் கலை. 

தீப்பெட்டி லேபிளில் அதன் டிரேட் மார்க்கை வண்ணச் சித்திரமாக வழங்கிய தொழில் நகர் சிவகாசி லித்தோபிரஸ்கள் நாளடைவில் நாட்டிலுள்ள பெரும்பான்மையான நுகர்பொருள் தயாரிப்பாளர்களையும், தம்பால் ஈர்க்கத் தொடங்கினர்.

பற்றிக் கொண்டது தேசமெங்கும் வண்ண அச்சு மோகம்! பீடி, சோப், பத்தி லேபிள்களை டிசைன் செய்து தருவதற்காகவே சிவகாசியில் 500க்கும் மேற்பட்ட ஓவியர்கள் இருந்தார்கள் என்பதை கூறினால், இன்று நீங்கள் அதை நம்புவீர்களா?

‘ஆப்செட்’

அச்சுக்கலை ‘ஆப்செட்’ எனும் அடுத்த அவதாரம் எடுத்தபோது, போஸ்டர், லாட்டரி, விமான டிக்கெட், பத்திரிகைகள் என காகிதம் வழியே அச்சு வாகனம் ஏறும் அத்தனை விஷயங்களும் சிவகாசியை நோக்கி படையெடுத்தன. சிவகாசி தெருக்கள் வழியே நடந்து சென்றால், ஆப்செட் மிஷினின் மெல்லிய ரிங்காரத்தைக் கேட்காமல் கடக்க முடியாது.

நூற்றுக்கணக்கான ஜெர்மானிய அச்சு இயந்திரங்கள் சிவகாசியில் வியாபித்திருக்கவே இந்நகர் Polygraph city என்றே அந்நிறுவனத்தால் அடையாளம் கொள்ளப்பட்டது.

தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு
தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு

இந்த நேரத்தில் மேல்நாட்டு படக்கதை நாயகர்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்திய ‘முத்து காமிக்ஸ்’ என்ற சிவகாசி நிறுவனத்தை ஒரு டிரெண்ட் செட்டர் என்றே சொல்லலாம்.

பின்னாட்களில் காலண்டர், டைரிகளை வெளியிட்டு தேசத்தையே தொழில் நகர் சிவகாசி மிரட்டியது, என்பது முக்கியமல்ல. அதை விட சிவகாசிக்கு மாண்பு சேர்த்தது காரனேஷன், நேஷனல், ஓரியண்ட் அச்சகங்கள் தங்கள் பணியாளர்கள் வீட்டு வசதி பெற காலனிகளை உருவாக்கிக் கொடுத்ததுதான்.

‘சிவகாசி கா படாகா தீஜியே, ஸாப்!’

காலம்: 1963-1972

தொழில்நகர் சிவகாசி உருவாகிய, முதல் முப்பது வருடங்கள் மட்டுமே ஆலை அதிபர்கள் தேசாந்திரிகளாக அலைந்து அரும்பெரும் ஆர்டர் வேட்டையாடினர். அதற்கு அடுத்த முப்பது வருடங்கள் ரெப்ரசென்டேட்டிவ்களின் காலம்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தபோது, பட்டாசு முகவர்கள் மட்டும் அவர்கள் பாட்டுக்கு பட்டாசு நுகர்வை பாரதம் முழுக்க பரவலாக்கிக் கொண்டிருந்தார்கள். வட இந்தியாவின் சின்னஞ்சிறு ஊர்களைக் கூட தவறவிடாமல், அங்கெல்லாம் சென்றார்கள். காய்கறி வியாபாரிகளைக் கூட பட்டாசு வியாபாரிகளாக மாற்றினார்கள்.

ரகங்களில் 300 அயிட்டங்கள் புதிது புதிதாக வந்தன. ஸ்டாண்டர்டு செல்லத்துரை நாடார் புதுமை படைப்பதில் விற்பன்னராக இருந்தார். 1978-ல் அமெரிக்க சுதந்திர தின 200ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு சிவகாசி பட்டாசு ஏற்றுமதி செய்யப்பட்டது ஒரு சாதனை நிகழ்வு.

நெருப்பு ஜாலத்தை விற்பனை செய்யும் பட்டாசுத் தொழிலில் ‘குவாலிட்டி கண்ட்ரோல்’ தீயாக அனுசரிக்கப்பட்டது. அன்றாடம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு, மாலையில் முதலாளியின் முன் பரீட்சித்துப் பார்க்கப்படும். ஏதேனும் ஒன்று பர்ஃபெக்ஷன் தவறினால், அந்தப் பட்டாசு ரகத்தைப் தயாரித்த தொழிற்சாலை யூனிட்டின் அன்றைய உற்பத்தி முழுவதும் தாட்சண்யமின்றி அழிக்கப்பட்டு விடும்.

சமரசமில்லாத கெடுபிடிதான், டெல்லி போன்ற மாநகரங்களில், ‘எனக்கு காக் (சேவல்) பிராண்ட் கொடுங்க!’ என்று பேர் சொல்லி கேட்டு வாடிக்கையாளர்கள் குவிய காரணமாகியது.

சுய சார்பு தொழில் நகர் சிவகாசி

காலம்: 1973-1982

சுய சார்பு பொருளாதாரம் பற்றி இந்தக்காலத்தில் தீவிரமாகப் பேசுகிறோம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னரே அய்யநாடார் அதைச் சாதித்துக் காட்டினார். தீப்பெட்டிக்கான மூலப்பொருளான குளோரேட் தயாரிக்கவும், பட்டாசுக்கான அடிப்படைப்பொருளான அலுமினிய பவுடர் உற்பத்தி செய்யவும், இந்தியாவிலேயே, அதுவும் தொழில் நகர் சிவகாசி அருகிலேயே உற்பத்திச் சாலைகளை உருவாக்கினர். பாண்டியன் கெமிக்கல்ஸும், மெட்டல் பவுடர் கம்பெனியும் நாம் வெளிநாட்டையோ, அயல் மாநிலங்களையோ எதிர்பார்த்து கண்கள் பூத்து காத்திருக்கும் நிலைமையை மாற்றியது.

அச்சுக்கலையில் எலக்ட்ரானிக் யுகம் பிறந்தது. ஸ்கேனர் மிஷினின் வருகை ரீ-டச்சிங் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. சிவகாசி பிரிண்டிங் உலகத்தரத்தை எட்டத் துவங்கியது.

ஸ்ரீனிவாஸ், பெப்கோ, லவ்லி, சபையர் போன்ற நிறுவனங்கள் வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள், நோட்புக் ராப்பர்கள் என சொந்த தயாரிப்புகளை தங்கள் பேனரிலேயே வெளியிட்டு சந்தைப்படுத்தியது மிக முக்கியமான நகர்வு என்று தான் சொல்லவேண்டும். சபையர் பிரஸ் சினிமா போஸ்டர்களின் சொர்க்கமாகத் திகழ்ந்தது. 

திருப்புமுனை தந்த பேன்சி பட்டாசு

காலம்: 1983-1992

90களில் தொழில் நகர் சிவகாசிக்கு ஒரு விசேஷமான காலம். அப்போது நடந்த பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் சோனி பயர் ஒர்க்ஸ் வழங்கிய ‘ஏரியல் டிஸ்பிளே’ வான வீதியில் அழகு நடனம் புரிந்தது. நுட்பமாக கத்திரிக்கப்பட்ட காகிதப் பூ போல, விண்ணில் குடை விரித்த வான வேடிக்கை கண்டு, ஊரே மெய் சிலிர்த்தது. பின் வந்த நாட்களில் அதுபோன்ற செய்நேர்த்தியான பேன்சி பட்டாசுகளில் இந்திய நாடே மயங்கியது என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தியே.

தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு

‘ஏரியல் அயிட்டங்கள்’ என்றழைக்கப்படும் அந்த நவீன பட்டாசுகள், பட்டாசுச் சந்தைக்கு புத்துயிரூட்டியது. நாடு முழுவதும் புதிதாக பட்டாசுக் காதலர்கள் பெருகத் தொடங்கினர்.

அந்த நேரத்தில், சிவகாசி வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரியாக இருந்த திரு. கோஷ் என்பவர் பட்டாசுத் தொழிலை பாதுகாப்பு அம்சங்களுடன், நெறிப்படுத்தியதுடன், புதுப்புது யோசனைகளைக் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நல்ல கூறி, வழியும் காட்டினார். அது இந்தத் தொழில்நகரம் பெற்ற நற்பேறு என்றால் நிஜமே!

கால மாற்றத்தை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த ஸ்டாண்டர்டு மேட்சஸ் ரவீந்திரன், தீப்பெட்டித் தொழிலில் இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். எழுபது ஆண்டு காலம் கைகளால் செய்து பழக்கப் பட்ட தீப்பெட்டித் தொழிலை இயந்திரமயமாக்க, ரொம்பவே பிரயாசை தேவைப்பட்டது.

தாய் நாட்டில் தீப்பெட்டிகளின் தேவை குறைந்தபோதும், “உலகமயமாதல்” டிரெண்ட் சிவகாசியின் மெஷின் மேட் தீப்பெட்டிகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவியது.

கணினி அறிவில் இளைஞர்களின் புலமை!

காலம்: 1993-2002

90-களின் துவக்கத்திலேயே சிவகாசித் தொழில் சாம்ராஜ்யத்தக்கு தலைவலி துவங்கி விட்டது. தீப்பெட்டி, பட்டாசு, தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதாக டெல்லி போன்ற பெருநகரங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. சில தொண்டு நிறுவனங்களின் தவறான புரிதலால் ஏற்பட்ட இந்த பிரச்னையை முறியடிக்க, பத்திரிகை விளம்பரங்கள் வழியாக எதிர் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் அச்சுத்துறையின் மற்றொரு பரிமானமான பாலிதீன் பிரிண்டிங் நாலு கால் பாய்ச்சலில் வேகமெடுத்தது. காகித அச்சு வேலைக்கு எப்படியோ, அதே போல், பாலிதீன் பிரிண்டிங்கிற்கும் தொழில் நகர் சிவகாசி மையப் புள்ளியாகவே விளங்கியது.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் அச்சுக்கலையின் சகல பிரிவுகளிலும் ஊடுருவி, தொழிலின் ஒர்க் ஸ்டைலையே மாற்றியமைத்தது. பெயிண்டிங், ரீ-டச்சிங், பிளேட், மேக்கிங் போன்ற பல்வேறு சார்பு தொழில்கள் காணாமல் போயின. கணினி வேலையில் புலமையும், ஆர்வமும் கொண்டவர்கள், புதிய தேவையை நிறைவு செய்தார்கள்.

தொழில் நகர் சிவகாசியில் காகித அட்டை மில்!

காலம்: 2003-2012

டிஜிட்டல் யுகம் துவங்கியதுதான் தாமதம். அச்சுத்துறையினர் சற்று அதிர்ந்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அச்சுக்கலை தொழில்நுட்பம் எளிமையாகிப் போனது. எந்த ஊரிலும் தரமான பிரஸ் அமைப்பது சாத்தியம்தான் என்ற நிலை உருவானது. அதே போல் தீப்பெட்டிக்கான பயன்பாடும் குறைந்தது. கேஸ் உபயோகம் விரிவடைந்தது சிகரெட் விற்பனை குறைந்தது லைட்டர் பயன்பாடு பெருகியது போன்றவையே அதற்கான காரணங்கள்.

தீப்பெட்டித் தொழிலும், அச்சுத்தொழிலும் புதிய எல்லைகளை வகுக்க முடியாமல், ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் நின்று நிலைக்க வேண்டியதாகிவிட்டது. அதே நேரத்தில் பட்டாசுத் தொழில் பட்டையைக் கிளப்பியது. 2003 முதல் 2012 வரை ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். 

தீப்பெட்டி அச்சுத் தொழிலை நம்பி இருந்த புத்திசாலிகள் பலர் மாறி வரும் சூழ்நிலையை புரிந்துகொண்டு, மெல்ல அதை விட்டு, புலம் பெயர்ந்து, பட்டாசுத் தொழிலில் ஊடுருவி ‘பிழைக்கத் தெரிந்தவர்களாக’ பேர் எடுத்தனர்.

இதே வேளையில் எவரும் எதிர்பார்த்திராத ஓர் அதிசயமும் நடந்தது. சிவகாசி அருகாமையிலேயே பேப்பர், அட்டை தயாரிக்கும் ஸ்ரீபதி, சுப்ரீம் போன்ற பிரம்மாண்டமான மில்கள் உருவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தின. தொழில் நகர் சிவகாசியிலிருந்து வெளியூர் சந்தைக்கு பேப்பர், அட்டை அனுப்பப்பட்ட விந்தை நூற்றாண்டு தொழில் கதையில் ஒரு திருப்புமுனைதான்.

பூந்தோட்டமல்ல போர்க்களம்!

காலம்: 2013-2022

சுற்றி வருவது பூமி! சுட்டெரிப்பது சூரியன்! பொங்கி எழுந்தால் பேரலை! போராடினால் மட்டும்தானே அவன் மனிதன்!

கடந்து போன 10 ஆண்டுகளும் போராட்ட யுகமாகவே கழிந்தது. சீனப்பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டு, சிவகாசிக்கு இணையாக ஒரு கள்ளச்சந்தை உருவாக எத்தணித்தது. தகுந்த நேரத்தில் ஊரே ஒன்று கூடி, எதிர்த்துப் போராடி, அந்த ஊடுறுவலை வேரோடு கலைந்தது ஒரு வெற்றிச்செய்தி. அப்போது மத்தியில் புதிதாக பதவியேற்ற பட்டாசுகளின் பாஜக அரசாங்கம் சீனப் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது பாராட்டத்தக்கது. 

திடுதிப்பென அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கத்தால், மற்ற எல்லா சிறு தொழில்களையும் போல, பட்டாசுத் தொழிலுக்கும் பலத்த அடி விழுந்தது. உண்மையே! அடுத்து வந்தது ஜிஎஸ்டி வரி உயர்வு! ஆனால் பட்டாசுத் தொழிலின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்தது. உடனே வரி விகிதம் குறைந்தது.

‘அப்பாடா’ என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டால், பேரியம் நைட்ரேட்டுக்கு தடை அறிவித்தது உச்சநீதிமன்றம். வீறு கொண்டு எழுந்தது தொழில் நகர் சிவகாசி! இந்த தெற்கத்தி சீமையே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் எதிரே லட்சம் லட்சமாக குவிந்து நாலு வழிச்சாலையை மறித்து நின்று, தன் எதிர்ப்பைப் பதிவு செய்தது ஒரு அரிய வரலாற்று நிகழ்வு. 

இப்படிப் போராடிப் களைத்தவர்களுக்குப் பேரிடியாக, கொரோனாவின் கொடூரத் தாக்குதல் அமைந்தது. முடிந்து போன கோவிட் வருடங்களில் இழப்புகள் இல்லாத மனிதர்கள் இல்லை. பின்னடைவு காணாத நிறுவனங்கள் இல்லை.

இருந்தபோதும், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த அடுத்த கணமே, புது உற்சாகத்துடன், புதுப்புது இலக்குகளை நிர்ணயித்துப் புறப்படுகிறார்களே. இந்த சிவகாசிக்காரர்கள் அது எப்படி? அதுதான், இந்த உழைப்புச் சீமையின் உத்வேக உள்ளங்களின் ஓய்வறியா மனிதர்களின் மகிமை!

-ஆரெஸ்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *