சர்க்கரை நோயை விரட்ட இதை செய்தால் போதும்

சர்க்கரை நோய் – விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்

சர்க்கரை நோய் விரட்ட இதை மட்டும் செய்தால் போதும் 

மனிதனைப் பாதிக்கின்ற நோய்கள் பல. வந்ததும் சில நாட்களிலேயே மறைந்து விடும் நோய்களும் உண்டு. சில, வாழ்நாள் முழுவதும் கூடியிருந்து தீராத தொல்லைகள் தருவதும் உண்டு. இவற்றுள் ஒன்றுதான் சர்க்கரை நோய்.

நடக்க முடியாதவனை ‘நடராஜன்’ என்றும், பார்க்க இயலாதவரை ‘கண்ணாயிரம்’ என்றும் விஷமுள்ள பாம்புக்கு ‘நல்ல பாம்பு’ என்றும் எதிர்மறையாக பெயர்கள் இருப்பதுபோல் கொடிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை நோய்க்கு ‘சர்க்கரை’ என்ற இனிப்பான பெயர் வந்தது விந்தையே!

கசக்கும் சர்க்கரை நோய்

இந்தியாவில் சர்க்கரை நோயுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சுமார் 10 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் விரைவில் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ள நிலையில் உள்ளார்கள்.

இவர்களைத் தவிர, தமக்கு சர்க்கரை நோய் இருப்பதையே அறியாமல் இருப்பவர்களும் ஏராளம்… தற்சமயம் பள்ளிக் குழந்தைகளும், இளம் வயதினரும் இந்நோயால் அவதிப்படுவது ஜீரணிக்க முடியாத ஓர் அவலநிலை. எனவேதான் இந்தியாவை ‘சர்க்கரை நோய் உலகின் தலைநகரம்’ என்கிறார்கள்.

இது பாரம்பரிய நோயாக இருப்பதால் குடும்பத்தில் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். வந்தது முதல் நாள்பட தொடர்ந்து வலுப்பெறும் நோய் இது. வாழ்நாள் முழுவதும் கூடியிருந்து தொல்லைகள் தரக்கூடிய நோய். 

எவ்வித வைத்திய முறைகளாலும் இதை தீவிரமாகாமல் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் தீர்க்க இயலாது. உச்சி முதல் உள்ளங்கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்க கூடிய கொடிய நோய் இது. தசைகள், மூட்டுகள், நரம்புகள், ரத்தக் குழாய்கள் என எதையும் இந்நோய் விட்டு வைப்பதில்லை.

முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், மூளை என அனைத்தையும் சீர் கெட வைக்கும் நோய்-சர்க்கரை நோய். கண்களை பாதிக்கும்போது-பார்வைக் கோளாறுகள், திடீரெனப் பார்வை பறிபோதல் போன்றவைகளும், நாள்பட விழித்திரை பாதிப்பு, கண்ணழுத்த நோய் எனப் பின் விளைவுகள் கடுமையாகும். இப்பாதிப்புகளால் இருக்கின்றப் பார்வையை தக்க வைத்துக் கொள்ளதான் முடியுமே தவிர போனது, போனதுதான்.

சிறுநீரகம் சீர்கெடும்

இதயத்தின் இயக்கம் மாறுபடும்போது திடீர் மரணம், உயிர்க்கொல்லிப் வலியில்லாமல் மாரடைப்பு, இதய செயலிழப்பு முதலிய பாதிப்புகள் தோன்றும். சர்க்கரை நோய் இருப்பது என்பதே ஒரு தடவை மாரடைப்பு வந்து விட்டதற்கு சமம். இதனுடன் இதய பாதிப்புகளும் சேரும்போது இளம் வயதிலேயே உயிரிழப்பு போன்றவைகள் சகஜம்.

சிறுநீரகம் சீர்கெடும்போது உடல் முழுவதும் வீக்கம், மூச்சுத் திணறல் என ஆரம்பித்து, உப்புச் சத்து அதிகரிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு வரை செல்லும். நரம்புகள் நலிவுறும்போது மதமதப்பு, எரிச்சல், முகவாதம், பக்கவாதம், ஆண்மைக் குறைவு, பாலுறவில் ஏமாற்றம் என நிலைபெறும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் ‘சயரோகம்’, சிறுநீரக நோய்த்தொற்று, காளான் தொற்று, எனப் பலவித நோய்த் தொற்றுக்கள் விரைவில் வந்துவிடும். சாதாரண ‘நீர்க்கடுப்பு’ என்பது விரைவில் சிறுநீரகச் செயலிழப்பு என வலுப்பெறும்.

சர்க்கரை நோயை விரட்ட இதை செய்தால் போதும்

கால்களில் பாதிப்புகள் வரும்போது ஆறாத புண்கள், கால் விரல்கள் அழுகுதல், தீராத நோய்த்தொற்று எனத் தொடங்கி, அறுவைச் சிகிச்சையால் முழங்காலுக்கு கீழே கால்களை அகற்ற வேண்டிய அவலநிலை உருவாகும். எதிர்பாராமல் முடமாகும் துர்ப்பாக்கிய நிலை என முடிவில்லாமல் தொல்லைகள் தொடரும்.

ஆரம்பம் முதலே நல்ல கட்டுப்பாட்டில் இருந்தாலும் இதய பாதிப்புகள், பக்கவாதம் போன்ற பின்விளைவுகள் வருவதை தடுக்க இயலாத நிலை உள்ளது. எனவே ஆபத்தான எதிர்காலத்தை பயத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தடுக்கும் முறைகள்

சர்க்கரை நோயைத் தடுக்க முதலில் கவனிக்க வேண்டியது உணவுப் பழக்க வழக்கங்களைத்தான். அதைச் சாப்பிடக்கூடாது; இதை சாப்பிடக்கூடாது என்பதல்ல உணவு முறை. அனைத்தையும் சாப்பிடு; அளவோடு சாப்பிடு என்பது சரியான வழிமுறை.

அளவான உணவு; வளமான வாழ்வு என்பதை அனைவரும் உணர வேண்டும். நோயுள்ளவர்களுக்கு மட்டும் உணவுக் கட்டுப்பாடு என்றில்லாமல், வீட்டோடு உணவுக் கட்டுப்பாடு, ஊரோடு உணவுக் கட்டுப்பாடு என்ற நிலை வர வேண்டும்.

சர்க்கரை அதிகமுள்ள அரிசி, கோதுமை, கேப்பை, கம்பு போன்றத் தானிய உணவுகளை குறைந்து, நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிக முள்ள பருப்பு, பயறு, காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை உணவில் அதிகளவு இடம்பெறச் செய்ய வேண்டும். “அரிசி சாப்பாடு பாதி; காய்கறி கூட்டு மீதி” என்பதுதான் ஆரோக்கியத்திற்கான சூத்திரம். இதற்கென பெரிதாக சிரமம் கொள்ள வேண்டியதில்லை.

இயல்பாக சாப்பிடும் சப்பாத்தியோடு கொண்டைக் கடலை குருமா, புதினா சட்னி சேர்க்கலாம். இட்லியுடன் பொரிகடலை சட்னி. தக்காளி சட்னி, புதினா சட்னி சேர்க்கலாம். தேங்காயை கூடியவரை குறைக்க வேண்டும். சப்பாத்தி செய்ய சலிக்காத முழு கோதுமை மாவைப் பயன்படுத்தலாம்.

கோதுமையுடன் வறுத்த சோயா பீன்ஸ், கடலைப் பருப்பு சேர்த்து அரைத்து வைத்து உபயோகிக்கலாம். இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்தைக் குறைத்து, சோயா பீன்ஸ், வெந்தயம் சேர்த்து அரைக்கலாம். எல்லாச் சத்துக்களும் குறைவில்லாமல் கிடைத்து விடும்.

எண்ணெய் நமக்கு எமன்

எண்ணெய் நமக்கு எமன், தனிப்பட்ட எந்த எண்ணெயும் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. வறுக்க கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய், சுவைக்கு சிறிதளவு நெய் என்று அளவோடு சேர்த்தால் நலம் பயக்கும். ‘ஆயிலைக் குறை; ஆயுளைக் கூட்டு’ என்பது புதுமொழி. புகையிலை, மதுவை அறவே தவிர்க்க வேண்டும். தேவைக்கேற்ப இனிப்பும், உப்பும், எண்ணெயில் பொறிக்காத அசைவ உணவும் நலம் பயக்கும். கொழுப்பு நீக்கப்பட்ட பால், செயற்கை இனிப்புகளால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் நல்லது.

உணவு விடுதிகளில் உண்ணும் நேரத்தில் மசாலா தோசைக்கு பதிலாக இடியாப்பத்தை தேர்வு செய்வது நம் கையில் உள்ளது. விருந்துகளில், விருப்பமானவைகளை விட, தேவையானவற்றை தேர்ந்தெடுத்து உண்ணும் மனநிலை உருவாக வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு செல்லும்போது இனிப்புகளுக்கு பதிலாக காய்கறிகள், பழங்களை பரிசாக வழங்கலாம்.

பெரியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை சிரமத்துடன் மேற்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு எப்படி முடியும் என்பார்கள் பலர். குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான உணவு முறையைப் பழக்கப்படுத்துவது பெற்றோர்களின் தலையாயக் கடமை. ஆரோக்கியமான, நம் பாரம்பரிய உணவுகளை சுவைபட தயாரித்து வழங்க வேண்டும்.

தயிர் சாதத்துடன் திராட்சை, மாதுளை, வெள்ளரி, காரட் சேர்த்தால் சிறுவர்கள் சுவையுடன் உண்பர். தோசை மேல் காரட், கொத்தமல்லி, கீரை எனச் சேர்த்து கலர் கலராக கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

எண்ணெய், கொழுப்பு மிகுந்த பரோட்டா, சிப்ஸ், பர்கர், பீஸா, பிஸ்கட், கேக் வகைகள், குளிர் பானங்கள் போன்ற நலம் பயக்காத துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். 

இனிப்புள்ள மென்பானங்கள் விற்கும் கடை களில் சர்க்கரை இல்லாத பானங்களும் கிடைக்க வழி வகுக்க வேண்டும். உணவகங்களில் செயற்கை இனிப்பு சேர்த்த காபி/டீ வழங்கவும் நிர்ப்பந்திக்க வேண்டும். எண்ணெயில்லாத கொழுப்பில்லாத உணவுகளைத் தேவைப்படுவோர்க்கு வழங்காத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *