Raja Ravi Varma

தெய்வங்களை ஓவியங்களாக வரைந்த மன்னர் இராஜா ரவிவர்மா

தெய்வங்களை ஓவியங்களாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் இராஜா ரவிவர்மா. ஓவியங்கள் என்றால் மேற்குலகம் தான் தனித்துவமானது என்கிற எண்ணம் பலருக்கு இருந்தது. அப்பொழுது இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை காட்டுகிற அருஞ்செயலை ஒருவர் செய்தார். 

இந்திய ஓவிய மரபுகளில் தனித்துவம் ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்திய பெருமை இவரைச் சாரும். இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்தவர்  கேரளாவைச் சேர்ந்த இராஜா ரவிவர்மா.

எந்தக் கலைஞனுக்கும், அவன் மேற்கொள்ளும் கலைவடிவத்திற்கும், நோக்கத்திற்கும் ஒப்ப, போற்றுதலும் எதிர்மறை விமர்சனமும் உண்டாகும்.

அரண்மனைக் கலைஞன் இராஜா ரவிவர்மா

இராஜா ரவிவர்மாவும் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர். மேற்கத்திய பாணியைக் கைக்கொண்டு நமது பாரம்பரிய சித்திரக்கலையை சிதைத்துவிட்டார் என்றும், அரண்மனைக் கலைஞன் என்றும், சராசரிகளின் ஓவியன் என்றும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் ஓவியக்கலையை சாதாரண மக்களும் ரசிக்கும் விதத்தில் அதை வெகுஜனக் கலையாக பரப்பினார் என்பதில் ஐயமில்லை. கடந்த நூறாண்டுகளில் வந்த தலைமுறைகள், இரவிவர்மாவின் ஓவியங்களை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது. 

இராஜா ரவிவர்மா வரைந்த இளவரசி தமயந்தி
இராஜா ரவிவர்மா வரைந்த இளவரசி தமயந்தி

சித்திரக்கலை ரசனையின் பால பாடம் ரவிவர்மாவிலிருந்தே தொடங்குவதாய்க் கொள்ளலாம்.

அன்றைய வர்த்தக விளம்பரத்தில் காலண்டர்களின் பங்கு அளப்பரியது. கம்பெனியின் வசதிக்கேற்ப, அச்சிடப்படும் தாளின் தரமும் மாறுபடும். மிகப் பெரிய அளவிலான காலண்டர்களும் வரும்.

ரவிவர்மாவின் கடவுளர்கள் தவிர, சாகுந்தலக் காட்சிகள், நிலவொளியில் பெண், ராணாபிரதாப் சிங், சிவாஜி மகாராஜா ஓவியங்கள் அச்சிடப்பட்டன.

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் ராஜா ரவிவர்மாவை பரோடாவில் சந்திக்கிறார். அவருடைய ஓவியங்களைப் பார்த்து அதில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறார் ஸ்வாமிஜி. 

வியந்து போன ரவிவர்மா,”இதுவரை யாருமே சுட்டிக்காட்டாத குறைகளை சுட்டியிருக்கிறீர்கள். இவ்வளவு நுட்பமான பார்வை கொண்ட நீங்கள் எப்போதேனும் ஓவியராக இருந்தீர்களா என்ன?” என்று கேட்கிறார் இராஜா ரவிவர்மா.

ரவி வர்மா வரைந்த யசோதையுடன் கிருஷ்ணர்
ரவி வர்மா வரைந்த யசோதையுடன் கிருஷ்ணர்

அதற்கு சுவாமி விவேகானந்தர் அவர்கள், “எனது குருவின் கிருபையால், சரஸ்வதி தேவி எனக்கு சற்று தாராளமாக அருளை வழங்கி விட்டாள்’’ என்று ஸ்வாமிஜி சிரித்தாராம் அவருடைய ‘East and West’ எனும் நூலில்கூட ஸ்வாமிஜி ரவிவர்மாவின் சித்திரப் பாணியை விமரிசனம் செய்திருக்கிறார்.

ஐரோப்பிய நகல் 

“ஒரு சித்திரத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது சொல்லவந்த அழகு, எங்கு பொதிந்திருக்கிறது என்று சொல்லிவிட இயலாது. சித்திரம் ரசிக்க பயிற்சி இல்லாத கண்கள், அதன் நுணுக்கமான தீற்றல்களையோ, கலவைகளின் நுட்பங்களையோ, ஓவியனின் மேதைமையையோ மெச்சி ரசிக்க இயலாது” என்கிறார்.

வேறொரு தருணத்தில் ஐரோப்பியர்களை நகலெடுத்து சித்திரக்கலை வளர்த்தெடுத்தால் ஓரிரு ரவிவர்மாக்கள் தோன்றலாம். ஆனால் அத்தகு கலைஞர்களைவிட வங்காளத்து ‘சால்’சித்திர ஓவியர்கள் மேலானவர்கள்.

ரவி வர்மா வரைந்த திலோத்தமை ஓவியம்
ரவி வர்மா வரைந்த திலோத்தமை ஓவியம்

விவேகானந்தரின் கலை பற்றிய முடிபுகள் ஆணித்தரமானவை. சித்திரங்கள் குறித்த அவர்தர்ப்பு எண்ணங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினார். அரவிந்தரோ கலைகள் தாத்பர்யம் சார்ந்தவை என்கிறார். அவை உள்ளொளியின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும் என்கிறார்.

இந்திய பாணி

மேற்கத்திய கலையுணர்வை சாடி இந்திய கலைப் பாரம்பரியத்தினை மேலாக சொல்கிறார். மரத்தை மரமாகவும் மனிதனை மனிதனாகவும் குதிரையை குதிரையாகவும் வரையாமல், உருக்குலைவு செய்து இயற்கையை நகலெடுக்காதவை இந்திய பாணி என்கிறார். 

வெளியில் காணும் புறத்தோற்றத்தை விடுத்து அக மெய்ம்மையை வெளிப்படுத்தும் இந்திய கலைபாணி என்று உயர்த்திப் பிடிக்கிறார்.

இராஜா ரவிவர்மா ஓவியங்களில் தஞ்சாவூரின் கலாச்சாரமும் இருக்கும், ஐரோப்பாவின் ஓவியக் கலை அம்சமும் கலந்திருக்கும். ‘போர்ட்ராய்ட்’ என்று சொல்லக்கூடிய முகம், அது சம்பந்தமான உருவ ஓவியங்கள், வாழ்வியல் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் என மூன்று கட்டங்களாக இவரின் ஓவியங்கள் பகுக்கப்படுகிறது. அனைத்தும் புதுமை மற்றும் மரபு சார் ஓவியங்கள்.

நியூயார்க்கில் ஏலம்

“வெளி நாட்டினருக்கு இந்திய ஓவியங்கள் குறித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது மிகையில்லை.” திருவாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த, ராஜாரவிவர்மா, பலஆண்டுகளுக்கு முன் வரைந்த, தமயந்தி ஓவியம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது; இந்த ஓவியத்தை, 11 கோடி ரூபாய் கொடுத்து, ஏலம் எடுத்திருக்கிறார், ஒருவர்.

‘தி பீஸ்ட் ஆப் ரோசஸ், லீனா மொறாட்டா’ போன்ற, ஆங்கில நாடகங்களில் நடித்த நடிகைகளின் புகைப்படங்களை மையமாக வைத்து, இந்த ஓவியத்தை வரைந்ததாக, ராஜா ரவிவர்மாவின் வாரிசுகள் தெரிவித்துள்ளனர்.

ஓவியக்கலை என்றதுமே பலரும் உச்சரிப்பது பிக்காஸோ, லியனார்டோ டாவின்சி, சால்வடோர் டாலி போன்ற மேலைநாட்டுக் கலைஞர்களின் பெயர்களைத்தான். அவர்களுக்கு இணையாக சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய பெருமை ரவிவர்மாவைச் சேரும்.

கிளிமானூர்

கேரளாவின் பழமையான அரச குடும்பங்களுக்கே உரித்தான சமூக, பொருளாதார, கலாச்சார பிரதிபலிப்புகள் கிளிமானூர் இல்லத்திலும் படிந்திருந்ததில் வியப்பில்லை. 

இலக்கியத்தின் மீதான இயல்பான ஆர்வம், கதகளி மற்றும் துள்ளல் போன்ற கலைகள் மீது ரவிவர்மாவின் குடும்பத்தாருக்குப் பெரும் ஈடுபாடும், திறனும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரவிவர்மா ஒரு கலைஞனாக மிளிர்ந்ததில் அவரது தாயின் பங்கு மிகப் பெரியது. கதகளியில் ரவிவர்மாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. 

முறையான பயிற்சியில்லை 

ரவிவர்மாவின் ஓவியங்களை, அவற்றின் அழகியல் உணர்வு வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்பவர்கள் – புதிய முறையான, துணிகளின் மீது தைல வண்ண ஓவியங்களை வரைவதில் நிறுவன ரீதியான, முறையான பயிற்சி எதையும் ரவிவர்மா பெற்றதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ரவி வர்மா வரைந்த ஊர்வசி ஓவியம்
ரவி வர்மா வரைந்த ஊர்வசி ஓவியம்

இளம் வயதிலேயே பொதுமக்களின் ஆதரவையும், பாராட்டுகளையும் பெறுவதில் ரவிவர்மா குறிப்பிடத்தக்க சிறப்பான வெற்றியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த வெற்றியின் பின்னே, ரவிவர்மாவின் உயர்வான சமூக அந்தஸ்து இருந்ததை மறுக்க முடியாது. 

அதே நேரத்தில் அந்த வெற்றிகளுக்கான அடிப்படைத் திறமை அளவிட முடியாத அளவு அவரிடம் குவிந்திருந்தது என்பதையும் மறைக்க முடியாது.

தங்கப் பதக்கங்கள்

ரவிவர்மா பெற்ற பட்டங்களும் பதக்கங்களும் கணக்கற்றவை. 1873, 1874 மற்றும் 1876 ஆம் ஆண்டுகளில் சென்னை ஓவியக் கண்காட்சியில் முதலிடம் மற்றும் தங்கப் பதக்கங்கள்.

1893 – வேர்ல்டு கொலம்பியன் கமிஷன் நடத்திய சிகாகோ சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பட்டயங்கள் மற்றும் இரண்டு பதக்கங்கள்.

1880 – பூனா கண்காட்சியில் கெயிக்வாட் தங்கப் பதக்கம். இங்கிலாந்து இளவரசரின் (பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்) இந்திய விஜயத்தின் போது அவரது பயணக் குழுவின் அங்கத்தினராக அங்கீகாரம். 

ரவி வர்மா வரைந்த சரஸ்வதி ஓவியம்
ரவி வர்மா வரைந்த சரஸ்வதி ஓவியம்

இப்படி பொருள், புகழ், பட்டம், பதவி, பதக்கங்கள் என அனைத்தையும் தனது வாழ்நாளிலேயே கிடைக்கப் பெற்ற கலைஞன் என்ற வகையில் ரவிவர்மா மிக வெற்றிகரமான ஓவியராக வரலாற்றில் பதிவு பெறுகிறார்.

ரவிவர்மாவின் புகழ் மிக்க ஓவியங்களில் ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும், சமுத்திரத்தை வெற்றி கண்ட ராமன், பீஷ்மனின் சபதம், சகுந்தலா, கிருஷ்ணனின் தூது, இந்திரஜித்தின் வெற்றி மற்றும் காய்கறி விற்கும் பெண்மணி போன்ற ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

‘சமுத்திரத்தை வெற்றி கண்ட ராமன்’ ஓவியத்தில் இலங்கைக்குப் பாலம் கட்டும் தனது முயற்சிக்கு ஒத்துழைக்காத கடலரசன் மீது ராமன் வெகுண்டெழுந்து தாக்குதல் தொடுக்கத் தயாராவதையும் வருண பகவான் தனது துணைவியருடன் விரைந்து வந்து மன்னிப்புக் கோருவதையும் மிகச் சிறப்பான ஓவியமாக வடிவாக்கியுள்ளார்.

கலைக் குடும்பம் 

வேகமான கடற்காற்றை எதிர்த்து ராமன் உறுதியாக நிற்கிறான். ராமனின் ஆடை காற்றில் படபடக்கிறது. பாறைகளின் மீது மோதி அலைகள் நுரையடிக்க, பொங்கிச் சுருளும் அலை மீது வருண பகவான் தனது மனைவியருடன் வருவது, பின்னணியில் கருவானில் கோடு கிழிக்கும் மின்னல் என்று அக் காட்சியை ரவிவர்மா வரைந்திருக்கும் விதம் அற்புதமாக உள்ளது.

ரவிவர்மா மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் பலரும் ஓவியக்கலையில் சிறந்து விளங்கினர். ரவிவர்மாவின் சகோதரி மங்களா பாய், இளைய சகோதரர் ராஜா ராஜவர்மா மற்றும் ரவிவர்மாவின் மகன் ராமவர்மா ஆகியோரும் அற்புதமான ஓவியங்களைப் படைத்துள்ளனர்.

ரவிவர்மாவின் ஓவியங்களில் புராண, இதிகாசக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிகிறது. 

இன்றைய ஓவிய விமர்சகர்கள் பலரும் ரவிவர்மாவின் ஓவியங்களில் சில குறைபாடுகள் உள்ளதாகச் சுட்டிக் காட்டுகின்றனர். எனினும் இந்திய ஓவியக் கலையின் மறுவாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் ரவிவர்மாவின் பணி மகத்தான பங்கு வகித்தது என்பதில் மாற்றுக் கருத்துகள் எழ வாய்ப்பில்லை.

1906 ஆம் ஆண்டு அக்டோபர் 2 -ல் தனது 58 ஆவது வயதில், தான் பிறந்த கிளிமானூர் மண்ணிலேயே ரவிவர்மா உயிர் நீத்தார். 

ஒரு தலைசிறந்த ஓவியக் கலைஞரின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. ரவிவர்மா மறைந்தாலும் அவரது ஓவியங்கள் அழியாப் புகழுடன் அவரது பெயரை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.