செயற்கைப் பனிமலைகளை உருவாக்கிய மனிதர்

லடாக்கில் செயற்கைப் பனிமலைகளை உருவாக்கிய மனிதர்

சேவாங் நார்ஃபெல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள லடாக்கில் நீர்ப்பாசனப் பிரச்சனையைத் தீர்க்க உதவும் இந்த மனிதர், உலகமயமாக்கலின் பாதிப்பைச் சமாளிக்க செயற்கைப் பனிமலைகளையும் உருவாக்கியிருக்கிறார். 

இவரை லடாக்கின் ‘ஐஸ் மேன்’ என்று இங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். லடாக்கின் வறண்ட நிலப்பகுதிகளின் காற்றில் இருந்த கடைசி ஈரத்தையும் உலக வெப்பமயம் உறிஞ்சியபோது, 87 வயது சேவாங் நார்ஃபெல் முன் இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருந்தன. 

ஒன்று அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றதும் நிம்மதியாக ஓய்வை அனுபவிப்பது அல்லது பிரச்னையை எதிர்கொள்வது. லடாக்கின் பல கிராமங்களில் பொறியியலாளராக 40 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவத்தில், வர இருக்கும் ஆபத்தை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். 

செயற்கைப் பனிமலை

இப்போது நார்ஃபெல், லடாக்கின் விவசாய நிலங்களுக்கு உயிரூட்டும் 12 பனிமலைகளை செயற்கையாக உருவாக்கி, உலகத்திற்கு ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

1994 – ல் நார்ஃபெல் ஓய்வு பெற்றபோது, லடாக்கின் இயற்கையான பனிமலைகள் அதிகரித்த உலக வெப்பத்தால் சுருங்கி 100 மீட்டர்களை விழுங்கியிருந்தன. சில இடங்களில், பனி மலைகள் 7 லிருந்து 8 கிலோ மீட்டர்கள் வரைகூட சுருங்கியிருந்தன. 

பனிமழையின் அளவும் குறைந்திருந்தது. இதனால், விதைக்கும் பருவமான மார்ச் மாதத்தில் லடாக்கின் விவசாயிகளுக்குப் போதுமான நீர் இருக்கவில்லை.

“பிரச்சனை அவ்வளவு மோசமாக இருந்தது. வேறு எதைப் பற்றியுமே என்னால் யோசிக்க முடியவில்லை.” என்கிறார் நார்பெல்.

சேவாங் நார்ஃபெல்
சேவாங் நார்ஃபெல்

தண்ணீர் பஞ்சம்

வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னால், தண்ணீரை திசைதிருப்பி தடுத்துவைத்து ஐஸ் குவியல்களை உருவாக்குவது எப்படி என்பதை சோதனை செய்து பார்த்திருந்தார். 

குளிர் காலத்தில் இங்கு பனிமலைகள் உருவானாலும், அது உலக வெப்பமயம் காரணமாக வெகு சீக்கிரமே உருகிவிடுகின்றன. இதனால் அங்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

ஆண்டுக்கு 50 மிமீ மழைப்பொழிவு கொண்ட இடத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது.

இந்தநிலையில் ஒரு நாள், நார்ஃபெல் தனது தோட்டத்து குழாயில் இருந்து இரவு முழுவதும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்தது. இரவில் நிலவிய கடுங்குளிர் காரணமாக நீர் தரையில் ஒரு பலகைப்போல் பனிக்கட்டியாக மாறியிருந்தது.

அதை உடைத்து ஒரு வாளியில் போட்டார். சிறிது நேரத்தில் அது உருகி வாளி நிறைய தண்ணீர் கிடைத்தது. இதே தொழில் நுட்பத்தை தனது கிராமத்து தண்ணீர் தேவையை சமாளிக்க உருவாக்கினார்.

“அந்த சமயம் சோதனை முறையில் செயற்கையான சிறு பனிமலையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தேன். அது நல்ல பலன்களைத் தந்தது” என்கிறார் நார்ஃபெல்.

ஓய்வுபெற்றதும் லே பகுதியின் ‘ஊட்டச்சத்து திட்டப்பணி’ என்ற தன்னார்வக் குழுவில் சேர்ந்தார். அவரது நோக்கம் விதைக்கும் பருவத்திற்குத் தேவையான நீரைச் சேமித்து வைக்கும் பனி மலைகளை உருவாக்குவது. 

பாறைத் தடுப்பு

முதலில், தன்னுடைய தொழில் நுட்பத்தை ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். பனிமலைகளில் இருந்து உருகி ஓடும் நீரை கால்வாய்கள் வழியாக திசைதிருப்பி, பிப்ரவரி மாதம் வரை சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களில் பணிக்குவியல்களாக சேகரித்து வைப்பதுதான் திட்டம். 

சேவாங் நார்ஃபெல் உருவாக்கிய செயற்கை பனிமலை
சேவாங் நார்ஃபெல் உருவாக்கிய செயற்கை பனிமலை

இந்தக் கால்வாயில் இருந்து சிறு அளவிலான தண்ணீரை ஒரு பாறைத் தடுப்பு இருக்கும் இடத்திற்கு மெதுவாகச் செலுத்தும் போது, தண்ணீர் பனியாக மாறி மார்ச் மாதம் விதைக்கும் பருவம் வரும் வரை அப்படியே இருந்தது. 

“பாறைகளுக்கு அருகில் நீர் உறைந்து பனியாகிவிடும். அதற்கு அடியில் கசிந்து ஓடும் நீர் அடுத்த பாறைத்தடுப்பில் குறைந்துவிடும். மொத்த நீரும் உறைந்துபோகச் செய்யும்படி இப்படி தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்படிச் செய்யாவிட்டால், தண்ணீர் அதன் இயற்கையான போக்கில் பாய்ந்துவிடும். அப்புறம், விவசாயத்திற்குத் தேவையான நீர் சரியான பருவத்தில் கிடைக்காது” என்று விளக்குகிறார் நார்ஃபெல்.

நார்ஃபெல் தனது செயற்கையான பனிமலைகளை கிராமங்களுக்கு அருகில் அமைக்கிறார். இதனால், இளவேனிற்காலம் ஆரம்பிக்கும்போது, இவை உருகத் தொடங்கி கிராமங்களுக்குச் சரியான நேரத்தில் தண்ணீர் பாய்கிறது. 


நார்ஃபெல் உருவாக்கிய செயற்கைப் பனிமலைகளில் மிகவும் பெரியது, ஃபுச்கே கிராமத்தில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கும் மேலாக படர்ந்திருக்கும் பனிமலை. 


மொத்தமாக, 1300 குடும்பங்களுக்குப் பலன்தரும் வகையில் விவசாய நிலங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கூடுதலாக 30 நாட்கள் தண்ணீரைத் தரும் ஐந்து பெரிய பனிமலைகளை உருவாக்கியிருக்கிறார்.
இவை நிலத்தடி நீரூற்றுகளுக்கும் நீர் தந்து உயிரூட்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 

இயற்கைப் பேரழிவு


எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் 2006 – ல் ஓர் இயற்கைப் பேரழிவு தாக்கியது. லடாக்கின் இயற்கையான தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டது. 


2002-ல் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட சராசரி குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை (மைனஸ்) – 15.1 ஆக இருந்தது. 2003 ஜனவரியில் இது – 12.2 ஆக அதிகரித்தது. 2004 – ல் இது-10.4ஆக மேலும் அதிகரித்தது. 2006 – ல் வழக்கமாக மார்ச் மாதம் வரை உறைந்திருக்கும் ஸன்ஸ்கார் நதி, வழக்கத்திற்கு மாறாக உருகிப் பாய ஆரம்பித்தது.


உலக வெப்பமாதலின் மோசமான விளைவு நார்ஃபெலுக்கு திடீர் வெள்ளம் வடிந்ததில் வந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் அவர் உருவாக்கிய தடுப்புச் சுவர்கள் அடித்துச் செல்லப்பட்டன. கால்வாய்களும் சேதமடைந்தன. 
ஆனால், அவர் சோர்வடையவில்லை. திரும்பவும் வேலையைத் தொடங்கி, தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டிருந்தார். 

நிதியாதாரம் பிரச்னை


“வாய்க்காலின் பக்கவாட்டில் இருந்து தண்ணீரை இழுத்துக் கொண்டிருந்தோம். இனி ஒவ்வொரு துளி நீரையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வாய்க்காலின் அடிநீரோட்டத்தில் இருந்து நீரை இழுக்கப் போகிறோம்” என்று விளக்குகிறார் நார்ஃபெல். 


ஆனால், இதுபோன்ற பெரும் திட்டங்களுக்கு அவசியமான நிதியாதாரம் பிரச்னையாக உள்ளது. இதற்கு முன்பாக மக்களே முன்வந்து உதவி செய்தார்கள். ஆனால் இப்போது முன்வருவதில்லை என்கிறார் நார்ஃபெல். 


“சலுகை விலையில் கிடைக்கும் உணவு தானியங்கள் மக்களுடைய பழக்கங்களை மாற்றிவிட்டன. பணம் கொடுத்தாலொழிய வேலை செய்ய அவர்கள் இப்போது முன்வருவதில்லை. எனது வேலையின் நல்ல பலன்களை அவர்கள் உணரவில்லை” என்று புலம்புகிறார் நார்ஃபெல். 


இதனால் நார்ஃபெல், இந்திய அரசின் நீர்வளத் திட்டப்பணி, இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சத்பவனா, பாலைவன அபிவிருத்தித் திட்டம், தனியார் நிறுவனங்கள் என்று எல்லா இடங்களிலும் ஏறி இறங்கிப் பார்த்துவிட்டார். 


ஸ்டாக்மோ, சபூ, நாங்க் ஆகிய மூன்று கிராமங்களுக்கான திட்டத்தை இவர் வைத்திருக்கிறார். மொத்தத்தில் இவற்றிற்கு 22 லட்சங்கள் தேவைப்படும். இவற்றின் நீளம் ஒன்று முதல் இரண்டு கிலோ மீட்டர்கள் வரை. 


ஆனால், இத்திட்டங்கள் குறைந்த செலவு பிடிப்பவை. இதே கொள்ளளவு நீர் பிடிக்கும் ஒரு ஏரியை அமைக்க இதைவிட ஐந்து மடங்கு செலவாகும் என்கிறார் இவர். 


இவரது சேவையை பாராட்டி 2015-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *