தமிழ் பாடலை கேட்க வேண்டுமென்பதற்காக தன் உயிரையே தந்த நந்திவர்மன்.
பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மன் தமிழ்ப்பற்று மிகுந்தவன். பாடலுக்காகத் தன் உயிரையே விடும் அளவுக்கு தமிழ்ப் பற்றுக் கொண்டவன்.
இவனுக்குத் தம்பி உண்டு. அவன் அண்ணனின் நாட்டைக் கைப்பற்றி அரசனாக விரும்பினான். உடன் பிறப்பு என்னும் பாசத்தை மறந்து எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தும் முடியவில்லை. இறுதியில் தமிழை ஆயுதமாக எடுத்தான்.
‘அறம் பாடுதல்’ என்ற முறையில் பாடப்பெற்ற பாடல்களைப் பாடச் செய்கிறான். இந்தப் பாடல்கள் முழுவதையும் கேட்டால், கேட்டவர் இறந்து விடுவர். அதனால் கேட்க வேண்டாம் என்று அமைச்சர்கள் கூறினார்கள்.
மூன்றாம் நந்திவர்மன்
ஒருநாள் மூன்றாம் நந்திவர்மன் அரசவையில் இருந்தான். அப்போது அவன் தம்பி, ஒரு சுவரில் ஏற்கனவே துளை போட்டு வைத்திருந்தான். ஒரு புலவனை வரவழைத்து அந்தத் துளையின் வழியே தலையை நீட்டி, பாடல் ஒன்றை பாடச் செய்தான். அப்பாடல் மன்னனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
பின்னர் ஒருநாள் இரவு நந்திவர்மன், மாறுவேடத்தில் நகர்வலம் (சோதனைக்கு) சென்றான். அப்போது ஒரு வீட்டில் ஒரு பாடலை வீணையை மீட்டி இசையோடு பாடிக்கொண்டு இருந்தாள் ஒரு தாசிப்பெண்.
இதுவும் மன்னனின் தம்பி ஏற்பாடுதான். அந்தப்பாடலும் நந்தி வர்மனை மகிழ்வில் ஆழ்த்தியது.
மறுநாள் அந்தப் பெண்ணை. வரவழைத்து “முதல்நாள் இரவு நீ பாடிய பாடலை இயற்றியது யார்?” என்று வினவினான் மன்னன்.
உங்கள் தம்பி இயற்றிய பாடல் என்றாள். பாடல் முழுவதையும் கேட்க விரும்பி தம்பியை அரசவைக்கு வரவழைத்தான்.
தமிழுக்காக உயிரை விடவும் தயார்
நந்திவர்மனை வெல்வதற்கும் கொல்வதற்கும் இதுதான் சரியான நேரம் என்றுணர்ந்த அவனின் தம்பி, ‘உடன்பிறப்பில்லா உடல் பாழ்’ என்று அறிந்தானில்லை.
“கலம்பகத்தின் நூறு பாடல்களையும் கேட்டால் இறந்து விடுவீர்கள்” என்கிறான். மன்னனோ தமிழ்மீது கொண்ட காதலால், “தமிழுக்காக உயிரை விடவும் தயார்” என்றான்.
தமிழுக்குக் கூடுதலாக ஓர் இலக்கியம் கிடைத்தால்போதும், என் உயிரைப் பற்றிக் கவலை இல்லை என்றான்.
இதனைத் தொடர்ந்து பாடல்களைக் கேட்க நிபந்தனைகளை விதிக்கிறான் அவனது தம்பி.

நூறு பந்தல்கள்
அதாவது அரண்மனைக்கும் சுடுகாட்டுக்கும் இடையே நூறு பந்தல்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாடலையும், ஒவ்வொரு பந்தலில் நின்று கேட்க வேண்டும்.
அடுத்த பந்தலுக்குச் சென்றவுடன் முதல் பந்தல் தானாகவே தீப்பற்றி எரிந்துவிடும். நூறாவது பந்தல் சுடுகாட்டில் அமைக்கப்பட வேண்டும். அங்கு விறகுக் கட்டைகள் அடுக்கப்பட வேண்டும்.
அந்த விறகின்மீது அமர்ந்து இறுதிப் பாடலைக் கேட்டு உயிர் துறக்க வேண்டும். இதுதான் நிபந்தனைகள்.
நிகழ்ச்சியன்று நந்திவர்மன் ஒவ்வொரு பந்தலில் நின்று ஒவ்வொரு பாடலையும் கேட்டு ரசிக்கிறான். பாடல் முடிந்ததும் மன்னன் அடுத்த பந்தலுக்குச் செல்கிறான். ஏற்கனவே நின்று பாடல் கேட்ட பந்தல் எரிந்து விழுந்து விடுகிறது.
நந்தி கலம்பகம்
இப்படி தொண்ணூற்று ஒன்பது பந்தல்களும் சாம்பலாகி விடுகின்றன.
நூறாவது பாடலை, விறகுக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட சுடுகாட்டுப் பந்தலில் அமர்ந்து கேட்டான். பந்தல் எரிந்தது. மன்னன் நந்தி வர்மனும் தீக்கிரையாகி ஆவி போனான்.
நந்திவர்மனுக்காகப் பாடிய அந்த கலம்பகம் ‘நந்தி கலம்பகம்’ என்ற இலக்கியமானது.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் பிறந்த இவர். அங்குள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் கல்வி பயின்றவர். காந்திய நெறியில் ஈடுபாடு கொண்டவர். தினத்தந்தி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய எழுத்திலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய ‘நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்’ என்ற கவிதை தொகுப்பு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து பல இலக்கிய ஆக்கங்களை எழுதிவருகிறார்.