தை அமாவாசை - வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்

தை அமாவாசை சிறப்புகள் – வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்

தை அமாவாசை வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும் தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!

அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.

தை  அமாவாசை

சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்தராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது. பித்ரு தோஷத்திலிருந்து விடுபட நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பே இந்த  தை  அமாவாசை.  உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை அதிக பலன் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது..

பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது.

அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள் அமாவாசை தினம் சனிக்கிழமைகளில் வந்தால் சிறப்பிலும் சிறப்பு!

ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, தை அமாவாசை இந்த  மூன்று மிக முக்கிய அமாவாசைகளில் ஒன்றான  தை அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் சிறப்பு.

தை அமாவாசை அன்று அன்னை அபிராமி, அபிராமப் பட்டருக்காக வான மண்டலத்தில் உள்ள  இருளை தன் காதில் அணிந்திருந்த குழையை அனுப்பி இருள் நீக்கி ஒளி சேர்த்தாள். 

அம்பிகையை வழிபட

தை அமாவாசை நாளில் அம்பிகையை வழிபட நம் வாழ்வில் சூழ்ந்திருக்கும் துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி சூழும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் இறைவழிபாட்டோடு பித்ரு வழிபாடும் செய்வது மிகவும் அவசியம்.

தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருகள் நற்கதியை அடைவதும் திருப்தி அடைவதுமட்டுமல்ல… நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். குறிப்பாக, கடன் பிரச்னைகளிலிருந்து வெளியேறலாம்.

ஒருவர் வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல், சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் அதற்கு சனீஸ்வர பகவானின் அருள் நிச்சயம் வேண்டும். இவரை பிதுர்காரகன் என்று சொல்வார்கள்.

சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் துன்பப்படுத்தக் கூடாது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களை அவமதித்தால் சனி பகவானால் நாம் தண்டிக்கப்படுவோம். அவர்களுக்கு உதவி செய்து, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் பரிபூரணமான ஆசி கிடைக்கும்.

அமாவாசை தினத்தின் போது கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிட்டும்.

அன்ன தானம், தண்ணீர் தானம்

தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் செய்யப்படுகின்றது. தண்ணீர் தேவைப்படும் மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது. சிவ பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பான அம்சம்.

எள்ளும் நீரும் இறைத்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தருவதன் மூலம் மிகவும் எளிமையான முறையில் நிறைவாக இந்த சடங்குகளைச் செய்யலாம். துளசி இலைகளைப் பரித்து முன்னோர் படங்களுக்கு சமர்ப்பிக்கலாம். 

வீட்டில் செய்யும் உணவை நாம் உண்பதற்கு முன்பாக மிகச் சிறிய அளவு எடுத்து அதில் எள் சேர்த்து காகத்துக்கு வைக்கலாம். நம்மைவிட எளியவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்யலாம். அதனால் அவர்களின் ஆசி நமக்கு கிடைத்து வாழ்க்கை வளம்பெறும்.

அதோடு ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு அல்லது தீபத்தை பார்த்து வணங்குவது மிகவும் நல்லது. உங்களின் முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், கடவுளிடம் பிரார்த்திப்பதும் உங்களுக்கு மன நிம்மதியையும், ஆசீர்வாதமும் கிடைக்கும்.

பித்ருக்களின் கர்மா

பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 

பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும்.

‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

சனீஸ்வரன் காகத்தை வாகனமாக கொண்டவர். இந்த காகங்கள் எமலோகத்தின் வாசலில் இருந்து நமது முன்னோர்களை கவனித்துக் கொண்டிருக்கும் என்றும், அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்கள் இந்த காகங்களின் வடிவில் நமது வீடுகளை தேடி வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

இதனாலேயே அமாவாசை தினத்தன்று காகத்திற்கு உணவளித்த பிறகே, நாம் உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.

தடைபட்ட திருமணம்

தை அமாவாசை வழிபாடு நம் வாழ்வில் அளவற்ற நன்மைகளை தரும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் நீங்கும். 

உள்ளத்திலும், இல்லத்திலும் படிந்திருக்கும் துயர கருமை, ஆரோக்கிய குறைவு போன்ற இருள் நீங்கிட அமாவாசை வழிபாடு வழி வகுக்கும். 

நம் முன்னோர் ஆசி பெற அமாவாசை வழிபாடை செய்வோம். ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றி அவர்களுக்கு ஆடைதானம் செய்வோம். வளமோடு வாழ்வோம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *